தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் டிச 12 அன்று மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. கடந்த ஜூலை 1, 2023 அன்று தமிழக அரசு சிறு, குறு தொழில்துறை நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின் படி மின் கட்டண உயர்வு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தபட்டு வருகிறது.
இதன்படி, வழக்கமான மின்கட்டண தொகை என்பது 50 % – 70% வரை உயர்ந்துள்ளது. மேலும், புதியதாக உச்ச பயன்பாட்டு நேர (Peak hours) மின்கட்டணம் என்கிற பெயரில் 15% வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதுபோக மாதாந்திர நிலைக்கட்டணம் 150% வரை உயர்த்தப்பட்டுள்ளது. சொந்தமாக சூரிய ஒளி மின்சார வசதி செய்துகொள்பவர்களிடமும் நெட்வொர்க் கட்டணம் என்கிற பெயரில் வசூலிக்கப்படுகிறது. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே கொரோனா நெருக்கடியாலும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையாலும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வரும் வேலையில் தி.மு.க அரசின் இந்த மின்கட்டண உயர்வு தொழில்முனைவோர்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது.
உதாரணமாக, இந்த மின்கட்டண உயர்வுக்கு முன்பு ஒரு தொழில் நிறுவனம் தோராயமாக 1720 யூனிட் பயன்படுத்தினால் செலுத்தி வந்த கட்டணம் ரூ. 16,148. மின் கட்டண உயர்வுக்கு பின், அதே அளவு பயன்பாட்டுக்கு தற்போது ரூ. 24,234 கட்ட வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் தொழிலை நடத்த முடியாத அவலநிலைக்கு தொழில்முனைவோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒன்றிய மோடி அரசு கொண்டுவந்துள்ள மின்சார ஒழுங்கு முறை சட்டம் 2022-இன் படி மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியங்களை ஒழித்துக்கட்டி ஒட்டுமொத்தமாக மின்துறையையே தனியாருக்கு தாரை வார்ப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. மின்துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தின் படியே இந்த மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது திராவிட மாடல் தி.மு.க அரசு.
படிக்க: மின்சார சட்டத் திருத்தம் 2022 : மின் துறையை மொத்தமாக விழுங்கவரும் கார்ப்பரேட் மலைப்பாம்பு!
தமிழ்நாடு மின்சார வாரியம் கடுமையான கடன் சுமையால் நட்டத்தில் இயங்குவதால் இந்த மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று தமிழ்நாடு அரசு கூறுகிறது. ஆனால், உதய் (UDAI) மின் திட்ட ஒப்பந்தத்தின் படி அதிக விலை கொடுத்து அதானி போன்ற கார்ப்பரேட் கும்பலிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதால் தான் மின்சார வாரியம் கடன் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது.
ஆளும் தி.மு.க அரசு இதுபோன்ற திட்டங்களை ரத்து செய்யவோ அல்லது ஒன்றிய அரசு திணித்துவரும் மின்துறை தனியார்மய திட்டங்களை எதிர்க்காமல் மக்களின் தலையில் கட்டண சுமையை ஏற்றுகிறது. உண்மையில் இந்த கட்டண உயர்வு என்பது கார்ப்பரேட் நிறுவனங்களை கொழுக்க வைப்பதற்கே உதவும். இவர்கள் சொல்லிவரும் கடன் நெருக்கடியை தீர்க்கவோ அல்லது மின் விநியோகத்தை தனியார்மயமாக்குவதை தடுக்கவோ போவதில்லை.
இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், மின்கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரியும் மூன்று கட்ட போராட்டங்களை சிறு, குறு தொழில்துறை கூட்டமைப்பினர் நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 12 அன்று மனித சங்கிலி போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த மூன்று கட்ட போராட்டங்களில் வலியுறுத்தப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளில் ஒன்றான, 12KV கீழுள்ள மின் இணைப்புள்ளவர்களை 3B பிரிவிலிருந்து 3A1 பிரிவுக்கு மாற்றி கட்டணம் வசூலிக்கும் முறையினை மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளது தமிழ்நாடு அரசு. மற்ற நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்த உள்ளது தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு. இதனை அனைத்து ஜனநாயக சக்திகளும் இயக்கங்களும் ஆதரித்து அவர்களுடன் கைகோர்த்து களத்தில் நிற்க வேண்டியது நமது கடமையாகும்.
கோரிக்கைகள்:
- நிலைக்கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும்
- உச்சப்பயன்பாட்டு நேர (Peak hours) மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்
- மேற்கூரை சூரிய ஒளி ஆற்றல் மின் உற்பத்திக்கு விதிக்கப்படும் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
- இரண்டு ஆண்டுகளுக்கு, இதற்குமேல் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube