கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதிலுமிருந்து உதவிக்கரங்கள் நீட்டப்பட்டன. நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் இளைஞர்களும் சென்னையை நோக்கி படையெடுத்தனர். நேரடியாக களத்திற்கு வர முடியாதவர்கள் களத்தில் நிவாரணப்பணி மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கும் தன்னார்வ குழுக்களுக்கும் பணம் அனுப்பி உதவினர். ஆயிரக்கணக்கான லாரிகளில் நிவாரணப் பொருட்கள் வந்து குவிந்தன.
ஆனால், இன்று மிக்ஜாம் புயலால் ஏறக்குறைய அதே அளவிற்கு சென்னை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளபோதும் களநிலவரமோ தலைகீழாக உள்ளது.
மிக்ஜாம் புயல் பெரும்பாலான சென்னையின் உழைக்கும் மக்கள் வாழ்க்கையை புரட்டிப்போட்டிருந்தும், ஒருசிலரை தவிர வெளி மாவட்டங்களிலிருந்தும் சென்னை உள்ளிருந்தும் தன்னார்வலர்கள் யாரும் களத்திற்கு வரவில்லை. இதனை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நேர்க்காணல் கொடுக்கவரும் தி.மு.க. கட்சியினரே ஒப்புகொள்கின்றனர்.
ஆனால், இதற்கு காரணம் என்ன? மிக்ஜாம் புயல் பாதிப்பு மீட்புபணிக்கு தன்னார்வலர்கள் வராததை எப்படி பரிசீலிப்பது. தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு மக்கள் மத்தியில், தமிழ்நாட்டு இளைஞர்களிடத்தில் மனிதம் செத்துவிட்டது என்று பரிசீலிப்பதா? அப்படி பரிசீலிப்பது சரியாக இருக்குமா?
புயல் பாதிப்பு மீட்புபணிக்கு தன்னார்வலர்கள் வராததற்கான காரணத்தை விளக்காமல், வெறுமனே “தன்னார்வலர்கள் களத்திற்கு வரவில்லை” என்று சொல்லிவிட்டுச் செல்லும் பலரும் மக்கள் மத்தியில் மனிதம் செத்துவிட்டது என்பதுபோன்ற கருத்தைத் தான் கேட்போர் மனதில் பதியவைக்கின்றனர்.
ஆனால், மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்குத் தன்னார்வலர்கள் வராததற்குப் பின்னால் தி.மு.க-வின் நயவஞ்சகமான அரசியல் ஒளிந்துள்ளது!
படிக்க: பெருமுதலாளிகளின் பேராசை! அரசின் அலட்சியம்! மிதக்கும் சென்னை | தோழர் மருது
மிக்ஜாம் புயல் சென்னையை மோசமாக பாதித்ததற்கு மறுநாளே தொலைகாட்சிகளுக்கு பேட்டியளித்த ஸ்டாலினும் சென்னை மேயர் பிரியாவும் பிற தி.மு.க. கட்சியினரும் மீட்பு பணி 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது, 95 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது, சென்னையில் எங்குமே தண்ணீர் நிற்கவில்லை, 80 சதவிகித இடங்களில் மின்சாரம் வந்துவிட்டது, தி.மு.க-வின் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் களத்தில் மக்களுடன் உள்ளனர் என்று ஆட்சிக்கு ‘களங்கம்’ வந்துவிடக் கூடாது என்பதற்காக தங்கள் விருப்பத்திற்கேற்ப அளந்துவிட்டனர். ஆனால், எதார்த்தத்தில் சேகர்பாபு போன்ற தி.மு.க-வின் அமைச்சர்கள் வீடுகள் உள்ள பகுதிகளிலேயே நான்கு நாட்களுக்கு மேலாக தண்ணீர் நின்றது, ஒரு பால் பாக்கெட் கூட கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதியுற்றனர் என்பதே உண்மை நிலையாக இருந்தது.
புயலடித்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் பல இடங்களில் இன்னும் தண்ணீர் வற்றவில்லை. மக்கள் பலர் உணவும் குடிநீரும் பாலும் இல்லாமல் தவித்து வருகின்றனர். பல இடங்களில் இன்றளவும் மின்சாரம் வரவில்லை. ஐந்து நாட்களுக்கும் மேலாக கழிவறைக்கு செல்ல முடியாமல் தவித்த மக்களின் எண்ணிக்கை ஏராளம். வீடுகள் இடிந்தும் நிலச்சரிவு விபத்துகளில் சிக்கியும் குளிர் தாங்காமல் சாலையோரத்தில் அனாதையாகவும் சிலர் செத்துப்போயினர். சோறும் குடிநீரும் பாலும் கிடைக்காமல் பட்டினியில் கிடந்தாலும் தனியார் படகுகளுக்கு ரூ.1500, ரூ.2000 தரமுடியாததால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் ஆயிரக்கணக்கானோர். பாதிக்கப்பட்ட மக்கள் உணவும் மின்சாரமும் கோரி ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தினர்.
களத்திற்கு சென்ற தோழர்கள் சொன்ன அனுபவத்தின் அடிப்படையில் அடித்தட்டு உழைக்கும் மக்கள் வாழும் நொச்சிக்குப்பம், வியாசர்பாடி, பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகளில் ஆரஞ்சு நிற சீருடை அணிந்த ஒரு மாநகராட்சி ஊழியரை கூட காண முடியவில்லை. மேலும், அரசு சார்பில் படகுகளும் அனுப்பப்படவில்லை. மக்கள் படகுகளிலிருந்து இறங்கும் இடங்களில் காத்திருந்த போலீசு அதிகாரிகள் அப்படகுகளில் வந்திறங்கும் குழந்தைகளை தூக்குவது போலவும் முதியவர்களை இறக்குவது போலவும் நாடகம் செய்து கொண்டிருந்தனர். பக்கத்தில் மற்றொரு போலீசு நின்று இந்த காட்சியை படம் பிடித்துக்கொண்டிருந்தார்.
வேளச்சேரியை அடுத்துள்ள கல்லுக்குட்டை போன்ற பகுதிகளுக்குள் நான்கு நாட்கள் வரை யாருமே செல்லவில்லை. நிவாரணப் பணிக்கு சென்ற தோழர்களாலும் தன்னார்வலர்களாலும் கூட படகுகள் இல்லாததால் அப்பகுதிக்குள் செல்லமுடியவில்லை. நான்கு நாட்களுக்கும் மேலாக எந்தவித அடிப்படைவசதியும் கிடைக்காமல் தண்ணீருக்கு நடுவே அம்மக்கள் தவித்தனர்.
படிக்க: வேளச்சேரியில் பள்ளத்திற்குள் விழுந்த தொழிலாளர்களைத் தவிக்கவிடும் திமுக அரசு!
மற்றொருபுறம் தி.மு.க-வின் ஜால்ரா ஊடகங்களும் பணத்தை வாங்கிக்கொண்டு திட்டமிட்டே புயல் பதிப்பை மறைத்தன. தி.மு.க-வின் ‘சிறந்த நிர்வாகத்திற்கு’ சாட்சியாக மௌண்ட் ரோடையும் ஓ.எம்.ஆர்-யும் படம்பிடித்து காட்டிவிட்டு அடித்தட்டு உழைக்கும் மக்களின் உண்மை நிலையை காட்டாமல் வஞ்சித்தன. கொஞ்சம் கூட ஊடக அறமின்றி, ரஜினி, நமிதா, விஷ்ணு விஷால், அமிர் கான், மன்சூர் அலி கான் போன்ற நடிகர்களின் வீடுகளை மட்டும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. சொல்லப்போனால், இத்தனை ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட இயற்கை பேரிடருக்கு மிகவும் குறுகிய எண்ணிக்கையிலான கழுகுப் பார்வை படங்கள் (Drone Shots) எடுக்கப்பட்டது இதுவே முதன்முறை.
ஊடகங்களின் துணையோடு தி.மு.க. அரசு மேற்கொண்ட இந்நடவடிக்கைகள் காரணமாக, ”பொதுவெளியில் மிக்ஜாம் புயலால் சென்னையில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை” என்ற பொய்யான பிம்பம் உருவாக்கப்பட்டது. சென்னையில் புயல் பாதிப்பு சரிசெய்யப்படாத நிலையிலேயே, மீண்டும் மீண்டும் ”சென்னை மீண்டுவிட்டது” என்ற கருத்து மக்கள் மத்தியில் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது. இதுவே, மீட்பு பணிக்கு தன்னார்வலர்கள் வராததற்கான காரணம். சென்னையில் இப்படி ஒரு நிலை உள்ளது என்பதனை பாதிப்புக்கு உள்ளாகாத சென்னை மக்களுக்கே தெரியாமல் பார்த்துக்கொண்டது தி.மு.க. அரசு.
2015-ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது சமூக வலைத்தளங்களில் வெள்ளத்தின் பாதிப்புகளை பகிர்ந்து அன்றைய அ.தி.மு.க. ஆட்சியை அம்பலப்படுத்திய பலரும் இந்த முறை வாயை திறக்காமல் அமைதியாக இருந்தது இந்த நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
தி.மு.க. அரசின் ஆட்சிக்கு கெட்டப்பெயர் வந்துவிடக் கூடாது என்ற சுயநலமான அரசியல், ஜால்றா ஊடகங்களின் அடிவருடித்தனம், தி.மு.க. ஆதரவாளர்களின் கள்ள மௌனம் ஆகியவை பாதிக்கப்பட்ட அடித்தட்டு உழைக்கும் மக்களின் அவல நிலையைத் திரையிட்டு மறைத்துவிட்டன.
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube