மத்தியப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்றது. டிசம்பர் 13 அன்று அம்மாநிலத்தின் முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்றார். அவர் பதவியேற்ற சில மணி நேரங்களில் மாநில அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதில் சில ’முக்கிய முடிவுகள்’ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களில், அனுமதிக்கப்பட்ட வரம்புகள் மற்றும் நேரத்திற்கு மேல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிப்பதாக அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மோகன் யாதவ், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி தடை விதிக்கப்படும் என்று கூறினார்.
அனுமதியின்றி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதா விதிகள் மீறப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படைகள் அமைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். விதிமீறல் சம்பவங்களை விசாரித்து பறக்கும் படைகள் தங்கள் அறிக்கையை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
மத்தியப்பிரதேச ஒலிக் கட்டுப்பாட்டுச் சட்டம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள மதத் தலங்கள் மற்றும் பிற இடங்களில் ஒலி மாசு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகள் 2000, மற்றும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின்படி தான் மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசாணை கூறுகிறது.
படிக்க: பா.ஜ.க. முதலமைச்சர்கள் நியமனம்: சாதி + ஆர்.எஸ்.எஸ். பின்னணி
அதைபோல், திறந்தவெளியில் இறைச்சி மற்றும் முட்டை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருக்கும் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி, இந்தத் தடை விதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து டிசம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும் என்றும் அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாசிச பா.ஜ.க-விற்கு திடீரென ஒலி மாசு குறித்தும் உணவுப் பாதுகாப்பு குறித்தும் அக்கறை எங்கிருந்து வந்தது?
அனைத்து மதத் தலங்கள் மற்றும் பொது இடங்களில் ஒலி மாசைத் தடுக்கும் பொருட்டு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது என்பது பார்ப்பதற்கு முதலில் ஒரு முற்போக்கு நடவடிக்கை போலத் தோன்றும்.
ஆனால், நாம் இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் மத்தியப்பிரதேசத்தில் இம்முடிவை எடுத்திருப்பது பாசிச பா.ஜ.க. அரசு என்பதைத்தான். பெயரளவில் ”அனைத்து வழிபாட்டுத் தலங்கள்” என்று கூறப்பட்டிருந்தாலும், காவிக் கும்பல் மசூதிகளைத் தான் குறி வைக்கும் என்பது நாம் அறிந்ததே.
ஏற்கெனவே, சங்கப் பரிவார கும்பல் தனது முஸ்லீம் வெறுப்பின் ஒரு அங்கமாக மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக விஷமப் பிரச்சாரங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வருகிறது.
படிக்க: பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது காங்கிரஸ் அல்ல, பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள்!
இந்த வெறுப்புப் பிரச்சாரத்தின் உச்சமாக, பா.ஜ.க-வைச் சேர்ந்த கர்நாடக மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரான கே.எஸ்.ஈஸ்வரப்பா கடந்த மார்ச் 12, 2023-இல் பேசியதைக் கூறலாம். ”எங்கு சென்றாலும் ஆஸான் தலைவலி. உச்சநீதிமன்ற நீதிபதி இருக்கிறார். இன்றோ நாளையோ, இது (மைக்குகளில் ஆஸானை அழைக்கும் வழக்கம்) நிச்சயமாக முடிவுக்கு வரும். மைக்கில் கத்தினால் மட்டும் தான் அல்லாஹ்வால் கேட்க முடியுமா? அல்லாஹ் காது கேளாதவரா?” என்று அவர் வெறுப்புப் பேச்சு பேசியிருந்தார்.
அதைபோல், நவம்பர் 18, 2023 அன்று உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு முஸ்லீம்களைக் குறிவைத்து ஹலால் சான்றிதழ்களுடன் வரும் உணவுப் பொருட்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
அனைத்து மதத் தலங்களிலும் ஒலிபெருக்கிகளுக்குத் தடை, திறந்தவெளியில் இறைச்சி விற்கத் தடை என்ற மத்தியப்பிரதேச பா.ஜ.க. அரசின் உத்தரவுகள் பார்ப்பதற்கு பொதுவானவையாகவே தோன்றினாலும், அவை முஸ்லீம் மக்களைக் குறிவைத்துத் தாக்குவதற்கான பாசிஸ்டுகளின் ஆயுதங்கள் தான் என்பதில் நமக்கு எள்ளளவும் ஐயமில்லை.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube