பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்த தந்தை பெரியார் அவர்களின் 50-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (24.12.23). ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் பாசிசத் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கார்ப்பரேட் சேவையுடன் இணைந்த “இந்துராஷ்டிரத்தை” நிலைநிறுத்துவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் ஒரு அங்கமான பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு கருத்துக்களை உயர்த்திப்பிடிப்போம். காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை முறியடிப்போம்; பார்ப்பனியம் – சனாதனம் – ஒழிப்போம்!
கடந்த 2023 அக்டோபர் மாத புதிய ஜனநாயகம் இதழில் வெளியான “சனாதனம் ஒழிப்போம்” என்ற சிறப்புக்கட்டுரையை தற்போது வாசகர்களுக்கு மீள்பதிவு செய்கிறோம்.
– வினவு
***
சனாதனம் ஒழிப்போம்!
ஓட்டம் பிடித்தப் பார்ப்பன கும்பல்
தமிழ்நாடு மாடலை தேசியமயமாக்குவோம்!
“சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும்”. கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் இவை.
ஒரு மாதம் கடந்தும் தற்போதுவரை பத்திரிகைகளில் இதுதான் பேசுபொருளாக உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியல் தலைவர்கள், திரைப்பட இயக்குநர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் உதயநிதிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால், காவிக் கும்பல் உதயநிதியின் சனாதான எதிர்ப்பு பேச்சை இந்துமக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சாக திரித்துப் பிரச்சாரம் செய்தது. வட இந்தியாவில் ஓரிரு இடங்களில் உதயநிதியின் படத்தை எரித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.
பார்ப்பன எதிர்ப்பு தேனிகூட்டைக் கலைத்துவிட்ட காவி கும்பல்!
செப்டம்பர் 2-ஆம் தேதி சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பா.ஜ.க.வின் தேசிய ஐ.டி.விங் பொறுப்பாளர் அமித் மால்வியா, “இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80% மக்களை ஒழிப்பதற்கு அழைப்பு விடுக்கின்றனர்” என குறிப்பிட்டு பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டார். அதைத்தொடர்ந்து அமித்ஷா, மோடி, ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்கள், சாமியர்கள் என ஒட்டுமொத்த சங்கப் பரிவார கும்பலும் உதயநிதியின் பேச்சை இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சாக திரித்துப் பிரச்சாரம் செய்து உதயநிதியைத் தாக்கத் தொடங்கியது.
அயோத்தியைச் சேர்ந்த பரமஹன்ஸ ஆச்சார்யா என்ற சாமியார் உதயநிதி ஸ்டாலின் தலையைக் கொண்டுவருவோருக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தான். உதயநிதியின் படத்தை அவன் கத்தியால் குத்தி கிழிக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாயின.
மேலும், உதயநிதி ஸ்டாலின் மகாராஷ்டிர மாநிலத்தில் கால் வைக்க முடியாது என மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரான மங்கள் பிரபாத் லோதா பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
படிக்க: பி.எம். விஸ்வகர்மா பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான சதித்திட்டம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்தியா கூட்டணியின் இரண்டு மிகப் பெரிய கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்களின் மகன்கள் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். சனாதன தர்மத்தை முடிவுக்குக் கொண்டுவர நீங்கள் தயாரா?” என்று “இந்தியா” கூட்டணிக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா கூட்டணியினர் இந்தியாவின் கலாச்சாரத்தைத் தாக்கும் மறைமுக நிகழ்ச்சி நிரலையும் கொண்டுள்ளார்கள். சனாதன கலாச்சாரத்தை ஒழிக்கும் தீர்மானத்துடன் இந்தியா கூட்டணி வந்துள்ளது” என்றார். மேலும், “சனாதனம் குறித்து யார் பேசினாலும் விடாதீர்கள், தக்க பதிலடி கொடுங்கள்” என தனது அமைச்சர்களை முடுக்கிவிட்டார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார் எனவும் நாடுமுழுவதும் ஆங்காங்கே சங்கிகளால் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த விவகாரத்தில், சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது தொடர்பாக அமைச்சர் உதயநிதி பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றமும் தன்பங்கிற்கும் உதயநிதிக்கு ‘அறிவுரை’ வழங்கியது.
உதயநிதிக்கு எதிராகவும் “இந்தியா” கூட்டணியில் இருக்கும் மிதவாத பார்ப்பன சித்தாந்தம் கொண்ட கட்சிகளைப் பிரித்து தி.மு.க.வைத் தனிமைப்படுத்துவதற்காகவும் பார்ப்பன கும்பல் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் அவர்களுக்கே எதிராகத் திரும்பத் தொடங்கின.
உதயநிதி ஸ்டாலின், தனது கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று கூறியதும் வடநாட்டு கொலைகார சாமியார்களுக்கு எதிராக நக்கலாக பதிலடி கொடுத்ததும் தேசிய அளவில் விவாதத்திற்குள்ளாகி உதயநிதியின் கருத்துக்கு வரவேற்பை உருவாக்கியது.
தேசிய அளவிலும் ஊடகங்களிலும் சனாதனம் என்ன சொல்கிறது என்பது பற்றி விவாதிக்கப்படுவதைப் பார்த்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பல் அதிர்ச்சியடைந்துவிட்டது. இதுநாள் வரை தாம் உருவாக்கிவைத்திருந்த இந்துமத போதை கலைந்துவிடும் என அஞ்சிய இக்கும்பல் ஒரு கட்டத்தில் தற்காப்பு நிலைக்குச் சென்றுவிட்டது.
“சனாதனத்தை ஒழிப்போம்” என்ற முழக்கம், அவர்கள் இதுநாள்வரைக் கட்டிக்காத்துவந்த, ‘இந்து ஒற்றுமை’யைக் கேள்விக்குள்ளாக்கியதைப் பார்த்து அஞ்சியது. விரைவாக இந்தப் பிரச்சினையில் இருந்து மக்களைத் திசைத்திருப்ப வேறு வாய்ப்புகளைத் தேடத் தொடங்கியது. மோடியின் கர்ஜனையெல்லாம் புஸ்வானமாகிப் போனது.
தமிழ்நாட்டில் திருமாறன் ஜி, கிருஷ்ணசாமி, தினமலர், பா.ஜ.க. போன்ற சங்கிகளைத் தவிர இந்த கும்பலை சீண்டுவாரில்லை. அண்ணாமலை சனாதனத்திற்கு என்னதான் முட்டுக்கொடுத்து பேசினாலும் அவை அனைத்தும் தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகளாலும், இயக்கங்களாலும் அம்பலப்படுத்தப்பட்டன.
நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடத் திறப்புவிழாவில், இந்தியாவின் குடியரசுத் தலைவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் அனுமதிக்கப்படாதது போன்ற அண்மைகால நிகழ்வுகள் மூலமாகவும் சனாதனத்தின் உண்மை முகம் அம்பலப்படுத்தப்பட்டது. சமூக ஊடகங்களின் இண்டு இடுக்குகள், கேலிக்கை நிகழ்ச்சிகள் என எல்லா இடங்களிலும் சனாதனம் தோலுரிக்கப்பட்டது. அம்பேத்கரும் பெரியாரும் மீண்டும் வாசிக்கப்பட்டனர். இவையெல்லாம், பார்ப்பன கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
மிதவாத பார்ப்பன கட்சிகளின் பதுங்கல்
நிலைமை இவ்வாறு சென்று கொண்டிருக்க, “இந்தியா” கூட்டணியில் காவிக்கும்பலின் பொய் பிரச்சாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன். ஆனால், ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி உணர்வுகள் இருப்பதால் அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்… நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன், வேதங்களில் இருந்து கற்றுக்கொள்கிறேன்” என்றார். மேலும், “உதயநிதி ஸ்டாலின் ஒரு ஜூனியர், அவர் எந்த அடிப்படையில் கருத்து தெரிவித்தார் என்பது குறித்து எனக்கு தெளிவாக தெரியவில்லை” என்று கூறினார்.
“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, உதயநிதியின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்தார். “சனாதன தர்மம் நித்திய உண்மை – வாழ்க்கையை வாழ்வதற்கான வழி – மனசாட்சி மற்றும் இருப்பைக் குறிக்கிறது… சனாதன தர்மத்துடன் இணைக்கப்பட்டுள்ள நாட்டின் அடித்தளம், அனைத்து நம்பிக்கைகள் மற்றும் அடையாளங்களை உள்ளடக்கியதாக உள்ளது. அதற்கு எதிராக இழிவான கருத்துகளை வெளியிடும் எவரும் அது எதைக் குறிக்கிறது என்பதை அறியாதவர்” என்று சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டார்.
படிக்க: இந்துராஷ்டிர தர்பார்!
ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், “இந்தியாவில் பல்வேறு மதங்கள், சாதிகள் மற்றும் மொழிகள் உள்ளன. இருந்தாலும் நாங்கள் ஒன்றாக வாழ்வதுதான் எங்களின் அழகு… உதயநிதி அல்லது யாராக இருந்தாலும் சனாதனம் குறித்து கருத்து சொல்லக்கூடாது” என்றார்.
காங்கிரசு தலைவர் ப.சிதம்பரம், சனாதனம் என்பதற்கு தமிழ்நாட்டில் சாதி அடிமைத்தனம், பெண் அடிமைத்தனம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. வடமாநிலங்களில் இந்துமதம் என்றே இதற்கு பொருள் கொள்ளப்படுகிறது. ஆதலால், வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற பொருளில் தனது அறிவுரையை வழங்கினார். காங்கிரசு கட்சி இவ்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எம். சனாதனத்தை அம்பலப்படுத்திப் பேசினாலும், தினந்தோறும் அறிக்கை விடும் அதன் தேசியத் தலைவர்கள், தாமாக முன்வைந்து பார்ப்பன கும்பலை அம்பலப்படுத்தவில்லை. சடங்குத்தனமாக சில கண்டனங்களைத் தெரிவித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.
மொத்தத்தில், பா.ஜ.க. எதிர்ப்புப் பேசும் பல கட்சிகளிடம் பார்ப்பனிய சித்தாந்தம் உள்ளூர ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால்தான் பா.ஜ.க.விற்கு எதிராக சனாதனம் என்பது இழிவானது என்று சொல்வதற்குப் பதிலாக, பா.ஜ.க.வின் கருத்துக்கு பலியாகி, வட இந்திய மக்கள் சனாதனம் என்றால் இந்து என்றுதான் கருதுவதாகக் கூறி ‘தற்காப்பு’ நிலைக்குச் சென்றுவிட்டனர்.
இது, சித்தாந்தப் போர்!
சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசிய உதயநிதிக்கு எதிராக காவிக்கும்பல் தொடுத்த தாக்குதல் என்பது உதயநிதி அல்லது தி.மு.க.-வின் மீதான தனிப்பட்ட தாக்குதல் என்று மட்டுமே பார்க்க முடியாது. உண்மையில், தமிழ்நாட்டிற்கு எதிராக சங்கப் பரிவார கும்பல் மேற்கொள்ளும் பொய் பிரச்சாரத்தின் பரிமாணம் முற்றிலும் வேறானது.
கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை ஒட்டி, தற்போது “இந்தியா” கூட்டணியில் இருக்கும் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் சென்னையில் நடந்தது.
அப்பொதுக்கூட்டத்திற்கு அடுத்தநாள், தமிழ்நாட்டில் இந்தியில் பேசியதற்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் 12 பேர் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பா.ஜ.க கும்பலால் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டது. “தி.மு.க. ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்பு பிரச்சாரம், தற்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது” என்று அறிக்கை விட்டார் அண்ணாமலை.
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பா.ஜ.க. கும்பல் பொய் பிரச்சாரம் செய்தது, ஏதோ தி.மு.க. என்ற தனிப்பட்ட கட்சி மீதான தாக்குதல் அல்ல. தமிழ்நாட்டின் இந்தி திணிப்பு எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு சித்தாந்தம், அரசியலுக்கு எதிரான தாக்குதலாகும்.
அதைப்போல, கடந்த ஜூலை மாதம் வடலூரில் வள்ளலாரின் 200-ஆவது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “பத்தாயிரம் ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்” என்று அயோக்கியத்தனமாக பேசினார்.
“சாதியிலே, மதங்களிலே, சமயநெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே, கோத்திரச் சண்டையிலே, ஆதியிலே அபிமானித்து அலைகின்றீர் உலகீர், அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகல்லவே” என 200 ஆண்டுகளுக்கு முன்னரே பார்ப்பனியத்தையும் அதன் சித்தாந்தத்தையும் தோலுரித்துக்காட்டிய வள்ளலாருக்கே காவிசாயம் பூசப் பார்த்தார், ரவி.
மேலும், பார்ப்பன எதிர்ப்பு மரபு கொண்ட தமிழ்நாட்டில்தான் சனாதன தர்மம் உருவானது என்றும் இங்கிருந்துதான் சனாதனம் பாரதம் முழுவதும் பரவியது என்றும் பச்சையாக பொய் பேசினார்.
ஏறித்தாக்கித்தான் பாசிசத்தை வீழ்த்த வேண்டும்!
இந்துராஷ்டிரத்தை நிறுவத்துடிக்கும் பார்ப்பன பாசிச பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு சித்தாந்தமும் அதன் மரபும் சிம்ம சொப்பனமாக உள்ளது. எனவே, தனது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்ற தமிழ்நாட்டின் சித்தாந்தத்தை ஒழிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு வேலை செய்துவருகிறது காவிக்கும்பல். அதற்காக தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு வரலாற்றை திரித்து புரட்டுவது, தமிழ்நாட்டிற்கு எதிராக பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவது போன்ற வழிமுறைகளை கையாண்டு வருகிறது.
ஆகவே, உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சை காவி கும்பல் விஷமத்தனமாக “இந்துக்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுக்கிறார்கள்” என திரித்துப் பிரச்சாரம் செய்தது என்பது வெறும் திசைத்திருப்பல் நடவடிக்கையோ அல்லது திமுக என்ற கட்சியின் மீதான தாக்குதலோ கிடையாது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு சித்தாந்ததைத் இழிவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்ட தாக்குதலாகும்.
சனாதனம் என்பது வர்ணாசிரம அடிப்படையில் சாதிக் கட்டமைப்பை கட்டிக்காக்கும் பார்ப்பனிய சித்தாந்தம் தான் என்பது வரலாற்று உண்மை. அதை என்ன செய்தாலும் காவிக்கும்பலால் மூடிமறைக்க முடியாது. பா.ஜ.க முன்னெடுக்கும் பார்ப்பனிய இந்துத்துவ அரசியல் என்பது பெரும்பான்மையான மக்களுக்கு எதிரானது. இந்துராஷ்டிரத்தை கட்டியமைக்க வேண்டுமானால் சாதிய வருணாசிரமத்தை மீட்டமைக்க வேண்டும். ஆரம்பத்தில் நேரடியாக இதை செய்தால் இடைநிலை சாதியினரின் ஓட்டுக்களை பெற முடியாது என்பதால், “நாமெல்லாம் இந்து, நமக்கு இஸ்லாமியர்கள்தான் எதிரி” எனக் கூறி இஸ்லாமிய வெறுப்பு அரசியலை முன்னெடுத்துவந்தது காவிக்கும்பல்.
ஆனால், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, சமூக அரசியல் கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஊடுருவியிருக்கும் இன்றைய சூழலில், விஸ்வகர்மா போன்ற திட்டங்களின் மூலம் நேரடியாகவே வர்ணாசிரமம் அடிப்படையிலான சாதிக்கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. முன்பை விட, தனது பார்ப்பனிய சாதிவெறி சித்தாந்ததைத் மூர்க்கமாக கையிலெடுக்க தொடங்கியுள்ள இந்த நேரத்தில்தான் பார்ப்பன எதிர்ப்பு சித்தாந்தத்தை வீச்சாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
அவ்வாறு தற்போது உறுதியாக நின்றதன் மூலம்தான், பார்ப்பன கும்பல் பின்வாங்கியது என்பது அனுபவமாகும். இந்த வகையில், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வை சித்தாந்த ரீதியாக எதிர்க்காமல், தேர்தலில் நின்று வீழ்த்திவிடலாம் என்று கருதுவதைவிட முட்டாள்தனம் வேறில்லை.
பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பலை எதிர்க்கும் தமிழ்நாட்டின் சித்தாந்தம் என்பது, தமிழ்மொழியின் தொன்மை, சாதி-மத மறுப்பு பண்பாடு, தமிழ்மொழியின் இலக்கண வளம் மற்றும் சித்தர்கள், வள்ளலார், பெரியார் போன்றவர்களால் பலநூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட பார்ப்பன எதிர்ப்பு சித்தாந்தமாகும். இந்த சித்தாந்தம்தான் காவிக்கும்பலை தொடைநடுங்கச் செய்கிறது. எனவே, தமிழ்நாட்டைப் போன்று அந்தந்த மாநிலங்களின் பார்ப்பன எதிர்ப்பு, ஜனநாயக மரபை ஜனநாயக சக்திகளும், இயக்கங்களும் உயர்த்திப்பிடிப்பதன் மூலம்தான் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பலை வீழ்த்த முடியும்.
தலையங்கம்,
புதிய ஜனநாயகம்
(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube