பள்ளி சிறுவர்கள் சண்டை

சாதாரணமானவையாகத் தெரியும்
சம்பவங்களுக்குப் பின் இருக்கும் அரசியல்!

னது மகள் இலக்கியா அரசு உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அப்பள்ளி அந்த வட்டாரத்தில் மக்களிடம் நற்பெயர் பெற்ற பள்ளி. அடித்தட்டு உழைக்கும் மக்களின் பிள்ளைகள் மட்டும்மல்ல ஓரளவு நடுத்தர வர்க்கத்தினர் பிள்ளைகளும் அங்கு படிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் எனது மகளின் வகுப்பில் நடந்த சம்பவம் என்னை பல நாட்கள் இரவில் தூக்கம் இழக்கச் செய்தது. மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கொலை வெறியுடன் மோதிக் கொண்ட நிகழ்வுதான் அது.

ராமுவின் புத்தக பை மீது சோமு படுத்து ‌ உறங்கியிருக்கிறான் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இதனால் ஆத்திரம் அடைந்த ராமு கூரான பென்சிலால் சோமுவின் வலது கண்ணில் தாக்கியிருக்கிறான். நல்வாய்ப்பாக, புருவத்தின் கீழ் பகுதியில் தான் அது பட்டது.

தாக்குதலுக்கு உள்ளானதும், வலியால் ராமு சத்தமிட்டு கத்தினான். அருகில் இருக்கும் மாணவர்கள் தடுப்பதற்குள் ராமு தாக்குதலைத் தொடர்ந்தான். கண்ணைப் பதம் பார்த்தவன் சோமுவின் இடது கையின் முழங்கை மீது தனது கால்களால் அதுவும் இரண்டு கால்களால் தனது முழு பலத்தையும் சேர்த்து மிதி மிதியென மிதித்தான். இதற்குள் அருகில் இருக்கும் மாணவர்கள் கூடி ராமுவின் தாக்குதலை நிறுத்தி சோமுவை மீட்டனர். கையின் எலும்புகள் முறியும் வகையில் தாக்கியிருக்கிறான் ராமு.

”மதிய உணவு இடைவேளை நேரம் ஆசிரியர் வகுப்பில் இல்லை. மாணவர்களும் அங்கும் இங்குமாக சென்றிருந்த நேரம். சண்டை அப்போது நடந்ததால் தடுக்க முடியாமல் போய்விட்டது” என எனது மகள் சொன்னார்.

ஆனால், நேரத்தின் மீது பழி சுமத்திவிட்டு நாம் இதைக் கடந்து சென்றுவிட முடியாது. பிரச்சினையின் வேரை புரிந்து கொள்ள வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நேரத்தின் மீது பழி போட்டுக்கொண்டு இருந்தால் போதாது.


படிக்க: பிக்பாஸ் நிகழ்ச்சி பெறும் கவன ஈர்ப்பை எப்படிப் பார்ப்பது?


இங்கு அரசுப் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதை அரசியல், சமூக – பொருளாதார நோக்கில் அணுகாமல் தனிப்பட்ட தவறாகக் கருதினால் பிரச்சினையை புரிந்து கொள்ள முடியாது.

அமெரிக்காவில் வெறி தலைக்கேறிய ஒரு மாணவர் சக மாணவர்களை, ஆசிரியரைத் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடுவது போன்ற சம்பவங்களை செய்திகளில் பார்க்கிறோம். காரணம், மறுகாலனியாக்கம் தோற்றுவித்துள்ள பொருளாதார நெருக்கடியும் அது நிறுவியுள்ள நுகர்வு கலாச்சாரமும் சமூக வாழ்வில் தீராத மன அழுத்தை ஏற்படுத்தி மக்களை மன நோயாளிகளாக, வெறியர்களாக மாற்றுகிறது.

சினிமா முதல் சமூக வலைத்தளங்கள் வரை நுகர்வு கலாச்சாரத்தை ஊக்குவிப்பவையாக உள்ளன. அதில் தோன்றுபவர்கள் நுகர்வதைக் காணும் குழந்தைகள் அவர்களைத் தாமாகப் பாவித்துக் கொள்கின்றனர். திரையில் காணும் பொருட்களை எல்லாம் தானும் நுகர வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதில் சிலர், அவற்றை அடைய தாங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்குச் செல்கின்றனர். மற்றவர்களை, ஏன் சக நண்பர்களையே போட்டியாகக் கருதுகின்றனர். இங்குதான் வெறித்தனமான நடவடிக்கைக்கான செயல்பாடு ‌ கரு வடிவில் வளரத் துவங்குகிறது.

ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையானது, எப்படி அந்த சுற்றுவட்டாரப் பகுதியில் குழந்தைகள் – பெரியவர்கள், இயற்கையின் தாவரங்கள், காற்று உள்ளிட்ட அனைத்தையும் மாசுபடுத்துவதைப் போல், மறுகாலனியாக்கம் உருவாக்கும் பண்பாடானது, பொருட்களை உடைமையாக்கும் கண்ணோட்டத்துடன் மற்ற மனிதர்களின் மீதான வெறுப்பையும் வெறியையும் அனைவரிடமும் ஊட்டுகிறது. கலை மற்றும் கருத்து வடிவிலான சாதனங்கள் வழியே மேற்கண்ட கருத்துகள் ஓயாத அலையைப் போல சமூகத்தை திணறடிக்கும் வகையில் மனிதர்களின் சிந்தனையில் புகுத்தப்படுகிறது. இதில் உழைக்கும் வர்க்கமும் அவர்களின் பிள்ளைகளும் பலிகடாவாக மாற்றப்படுகின்றனர் என்பதுதான் கவனிக்க வேண்டிய விசயம்.

இதுதான் நாம் மேற்கூறிய மாணவனிடமும் வெளிப்பட்டிருக்கிறது.

மகத்தான ரஷ்ய சோசலிச புரட்சிக்குப் பின்னர் அமைந்த பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான சோவியத் சோசலிச அரசில், பள்ளிகளும் அதில் பயின்ற மாணவர்களும் எப்படி இருந்தனர் என்பது குறித்துத் தனது சோவியத் பயணத்தை முடித்த ரவீந்திரநாத் தாகூர் கூறியது நினைவிற்கு வருகிறது. சோவியத்தில் மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வை கண்டு ஆச்சரியப்பட்டார் தாகூர்.

சோவியத் சோசலிச ரஷ்யாவின் மாணவர்களின் விழிப்புணர்வுக்கு அடித்தளமாக அமைந்தது, ஆளும் வர்க்கத்தை வீழ்த்திய மகத்தான நவம்பர் புரட்சி !

எனவே சமூக பொருளாதார அரசியல் துறையில் நாட்டின் கோடிக் கணக்கான உழைக்கும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் சமூக மாற்றமே, அதாவது புரட்சியே, மக்களுக்கும், மாணவர்களுக்கும் உண்மையான விடுதலையைத் தரும். மறுகாலனியாக்கம் உருவாக்கியுள்ள நுகர்வு வெறி உள்ளிட்ட கேடுகெட்ட பண்பாடுகளையும் உடைத்தெறியும்.


ஆ.கா.சிவா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க