ராமர் கோவிலால் வாழ்வாதாரத்தை இழந்த ராமர் ஆதரவு அயோத்தி வியாபாரிகள்!

ராமர் கோவிலைக் கட்டுவதற்கு ரூபாய் 1800 கோடி மதிப்பிடப்பட்டது. ஆனால், இதற்கு மறைமுகமாக நிறைய விலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அயோத்தி நகரத்தின் வியாபாரிகளின் வாழ்வாதாரம் முக்கியமானது.

யோத்தியில் “ராமர் கோவில்” ஜனவரி 1, 2024 அன்று திறக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 5, 2023 அன்று அறிவித்தபோது, அந்நகரத்தின் வியாபாரிகள், குறிப்பாக கோவிலைச் சுற்றி வேலை செய்பவர்கள், தங்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் வீடுகளை பாதுகாக்க ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ளதை உணரத் தொடங்கினர்.

ராமர் கோவிலைக் கட்டுவதற்கு ரூபாய் 1800 கோடி மதிப்பிடப்பட்டது. ஆனால், இதற்கு மறைமுகமாக நிறைய விலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அயோத்தி நகரத்தின் வியாபாரிகளின் வாழ்வாதாரம் முக்கியமானது. ராமர் கோவில் வளாகத்தைச் சுற்றியுள்ள சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 13 கிமீ நீளமுள்ள ராம் பாதை, 800 மீட்டர் நீளமுள்ள ஸ்ரீ ராம் ஜென்ம பூமி பாதை, 800 மீட்டர் நீளமுள்ள பக்தி பாதை மற்றும் பல முக்கிய வர்த்தக வழிகள் அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவ்விடங்களில் இருந்த பல வியாபாரிகளின் கடைகள் இடிக்கப்பட்டு வாழ்வாதாரம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.

இவ்வியாபாரிகளில் பலர் 1980-ஆம் ஆண்டு பா.ஜ.க தொடங்கப்பட்டதிலிருந்தே அதன் ஆதரவாளர்கள்; அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதைக் கொண்டாடியவர்கள். ஆனால் இப்போது அதே பா.ஜ.க-வால், ராமர் கோவிலால் அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது.

“அடுத்த ஆண்டு, முதல் நாளில் கோவிலை திறப்பது பற்றி அமித் ஷா எளிதாகப் பேசுகிறார், ஆனால் அயோத்தியின்  வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்கு என்ன பதில்? கோவில் கட்டுமானத்தால் எங்கள் சமூகத்தில் ஏற்படும் தாக்கத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்களா என்ன?” என அயோத்தியில் வழிபாட்டுப் பொருட்களை விற்கும் வியாபாரி ஒருவர் கேட்கிறார்.

“ராம் பாதையில்” மதம் சார்ந்த புத்தகங்களை விற்றுவந்த லக்ஷ்மிகாந்த் திவாரி என்ற வியாபாரி, தற்போது புகையிலை விற்கிறார். முன்பு 20 அடிக்கு 10 அடியாக இருந்த இவரது கடை, சாலை விரிவாக்கப் பணியால் இடிக்கப்பட்டு தற்போது வெறும் 10 அடிக்கு 10 அடியாகிவிட்டது.

“முன்பு, நான் ஒரு நாளைக்கு 1,000-1,500 ரூபாய் சம்பாதித்தேன், ஆனால் இப்போது முதல் போணி செய்வது கூட  கடினமாக உள்ளது. அரசாங்கம் எங்களுக்கு உதவாவிட்டால், நாங்கள் பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்கிறார் திவாரி.


படிக்க: உழைக்கும் மக்களை அழித்து ராமன் கோயில் திட்டம்!


வழிபாட்டுப் பொருட்களை விற்கும் மற்றொரு வியாபாரியான பிரிஜ் கிஷோர் பாண்டே, “எங்கள் வியாபாரம் கடவுளுடன் தொடர்புடையது, ஆனால் அது பறிக்கப்பட்டுள்ளது, மோடிஜி மற்றும் யோகிஜி  ஆகியோருக்கு ஆதரவாக இங்கு வசிக்கும் எனது குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை நான், ஆனால் புல்டோசர் என் வீட்டிற்கு வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. எனது கடை இடிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிறது” என்று புலம்புகிறார்.

இவர்களைப்போன்றே பல வியாபாரிகள் தங்கள் கடைகளை பறிக்கொடுத்துவிட்டு, தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கும், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கும் முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். சிலர் தங்கள் தொழிலுக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். சான்றாக, மேலே குறிப்பிட்ட பிரிஜ் கிஷோர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு “பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவின்” கீழ் கடன் வாங்கி தனது கடையில் முதலீடு செய்திருந்தார், ஆனால் தற்போது அந்த கடையை யோகி அரசு இடித்து விட்டதால் கடனைத் திருப்பித்தர வழியில்லாமல் நிற்கிறார்.

நவம்பர் 27, 2022 அன்று, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தியில் பேசிய போது, வியாபாரிகளின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால், இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனர் வியாபாரிகள்.

அயோத்தி தொகுதியின்  சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தேஜ் நரேன் பாண்டே, “சாலை விரிவாக்கம் மற்றும் வியாபாரிகளின் இடமாற்றம் ஆகியவை அயோத்தியில் குஜராத்திகளை குடியேற்றுவதற்கான பா.ஜ.க-வின் சதித் திட்டத்தின் ஒரு பகுதி” என்கிறார்.

மேலும், “இது அவர்களின் மாஸ்டர் பிளான்” என்றும் வலியுறுத்துகிறார். “இங்கு குஜராத்தி மக்கள் பணிபுரிந்து ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள், ஆனால் அவர்களின் எந்தப் பெயரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை. எந்தவொரு அரசாங்கத்தின் வேலையும் மக்களைப் பாதுகாப்பாக உணர வைப்பதுதான், ஆனால் இங்கே அயோத்தியில், அரசாங்கத்தைக் கண்டு மக்கள் அனைவரும் பயப்படுகிறார்கள்” என்கிறார்.


படிக்க: ராமர் கோவிலும் உ.பி. உழைக்கும் மக்களும்


வியாபாரிகளின் மீது இன்னும் சுமையை அதிகரிக்கும் வகையில், நகரில், குறிப்பாக ராமர் கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நில மற்றும் வீட்டு வாடகை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதேபோல், 2022-ஆம் ஆண்டிலிருந்தே நில உரிமையாளர்கள் குத்தகை ஒப்பந்தங்களின் கால அளவை குறைத்து வருகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு இருந்த குத்தகை ஒப்பந்தத்தை 11 மாதங்களாக குறைத்துள்ளனர்.

வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் நந்த் குமார் குப்தா, வாடகை உயர்வு மற்றும் குறுகிய கால குத்தகைகள் ஆகியவை யோகி அரசு,‘ராஜா’ பிம்லேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா போன்ற நில உரிமையாளர்கள் மற்றும் ‘ராமர் கோவில் மகான்கள்’ போன்றோரின் சதி என்கிறார். அவர்கள் அயோத்தியிலிருந்து வணிகர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற விரும்புகிறார்கள் என்கிறார்.

“எனது குடும்பம் ஏறக்குறைய 70 ஆண்டுகளாக இந்த இடத்திற்கு வாடகை செலுத்தி வருகிறது, முன்பு ஐந்தாண்டுக் காலத்திற்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. ஒவ்வொரு காலத்திற்குப் பிறகும் வாடகை 25 சதவிகிதம் அதிகரிக்கப்படும்” என்று லக்ஷ்மிகாந்த் திவாரி கூறுகிறார். “என் தாத்தா மாதம் 20 ரூபாய் வாடகை கொடுத்தார். இப்போது அயோத்தியின் ‘ராஜா’ என்ற எனது வீட்டு உரிமையாளர், நாங்கள் வைத்திருந்த இடத்திற்கு வாடகையாக மாதம் 2,000 ரூபாய் மற்றும் 11 மாதங்கள் நீடிக்கும் ஒப்பந்தம் கேட்கிறார். ஒரு குறுகிய ஒப்பந்தத்திற்குப் பிறகு என்னை காலி செய்யும்படி கேட்பார் என்று பயப்படுகிறேன்” என்கிறார்.

யோகேஷ் மிஸ்ரா என்ற வியாபாரி தனது சொத்துக்களை அழித்ததற்கு ‘ராஜா’ பிம்லேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா என்ற நில உரிமையாளரைக் குற்றம் சாட்டுகிறார்.

“எனது கடையின் 10 அடியை நான் இழந்தேன், மீதமுள்ள பகுதியை நான் மீண்டும் கட்டத் தொடங்கியபோது, ​​அரசு அதிகாரிகளிடமிருந்து எனக்கு அனுமதி கிடைக்கவில்லை, என்னுடன் சேர்த்து 15 வியாபாரிகள் மீது டிசம்பர் 14, 2022 அன்று ‘ராஜா’ மூலம் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது என்று யோகேஷ் மிஸ்ரா குற்றம் சாட்டுகிறார்.

வியாபாரிகளின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 447, 504, 352 மற்றும் 34 பிரிவுகளின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது, எஃப்.ஐ.ஆரில் அவர்கள் நில உரிமையாளருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் “நில உரிமையாளருடன் மற்றொரு ஒப்பந்தம் செய்த பின்னரே கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், வழக்குப் போடப்பட்டுள்ள வியாபாரிகள் தாங்கள் அப்படி எந்த ஒப்பந்தமும் போட வில்லை என்கிறார்கள். இவையெல்லாம், காவிக்கும்பல் அயோத்தியிலிருந்து சாதாரண வியாபாரிகளைத் திட்டமிட்டு அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதையே காட்டுகிறது.

முன்னர், ராமர் கோவில் அரசியலின் அபாயத்தை உணராமல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஆதரித்தவர்கள், கோவில் கட்டப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடன் கொண்டாடியவர்கள், இவ்வியாபாரிகள். இன்று தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


ரித்திக்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க