“ராமர் கோவில் திறப்பின்போது போராடக்கூடாது”: மிரட்டிய கல்லூரி நிர்வாகம்

ஒருபுறம் ராமர் கோவில் திறப்பின் அயோக்கியத்தனத்தைக் கேள்வியெழுப்பும் வகையிலான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மற்றொருபுறம் ராமர் கோவில் திறப்பை ஆதரித்து மதவெறியூட்டும் வகையிலான நிகழ்வுகளுக்குத் தாராள அனுமதி வழங்கப்படுகிறது.

மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டியூட் ஆப் சோஷியல் சயின்சஸ் (Tata Institute of Social Sciences) என்ற கல்லூரி, ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு எதிராக வளாகத்தில் போராட்டம் ஏதும் நடத்தக்கூடாது என்று மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மீறி போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் நிர்வாகம் மிரட்டியுள்ளது.

மேலும், கல்லூரி வளாகத்தில் நடக்கவிருந்த விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அவற்றை நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மறுவடிமைக்கப்படப்போகிறது என்றும் மற்றொரு அறிவிப்பை அதே நாளில் வெளியிட்டுள்ளது.

ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு எதிராக அதிகாரப்பூர்வமாக  மாணவர் சங்கங்கள் எந்தப் போராட்டத்தையும் அறிவிக்கவில்லை. இந்த அறிவிப்பு தன்னிச்சையானது என சகோதரத்துவ டி.ஐ.எஸ்.எஸ் (Fraternity TISS) என்ற மாணவர் அமைப்பு கருத்து மட்டும் தெரிவித்துள்ளது.

“ராமர் கோவில் திறப்பு விழா என்பது மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசுக்கும், உ.பி.யில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசுக்கும், பல்வேறு இந்துத்துவவாதிகளுக்குமான நிகழ்வாக விளங்குகிறது. எனவே இதில் பல்கலைக்கழக அதிகாரிகள் ஊதுகுழலாகச் செயல்படக்கூடாது” என்று அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், “பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டுவது கவலைக்குரியது, ஜனவரி 22 நிகழ்வு ஒரு கோவில் திறப்பு விழா மட்டுமல்ல, இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் மற்றும் வன்முறைகளின்  ‘வெற்றி நிகழ்வு’ ” என்றும் கூறியுள்ளது.

அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், வளாகத்தில் எந்த நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது என்ற அறிவிப்பைச் சுட்டிக்காட்டி, தற்போதுள்ள வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு யு.ஜி.சி-யால் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர, மற்ற நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டுதல்களை நிர்வாகம் மறுசீரமைக்கப் போகிறது என்கிறார். ஏனெனில் அறிவிப்பில்  “அனைவரும் பங்கேற்பதற்கான ஒரு சூழலை உருவாக்க, வளாகத்தில் நடக்கும் அனைத்து உரையாடல்கள் மற்றும் விவாதங்கள், நிகழ்வுகள், கருத்தரங்குகள், விரிவுரைகள், திரையிடல்கள் ஆகியவற்றிற்கான தற்போதைய வழிகாட்டுதல்களை மறுவடிவமைக்க முடிவு செய்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. “அதுவரை, அத்தகைய நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


படிக்க: இராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதில் நீதித்துறையின் கரசேவை – ஓர் வரலாற்று பார்வை


ஒருபுறம் ராமர் கோவில் திறப்பின் அயோக்கியத்தனத்தைக் கேள்வியெழுப்பும் வகையிலான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மற்றொருபுறம் ராமர் கோவில் திறப்பை ஆதரித்து மதவெறியூட்டும் வகையிலான நிகழ்வுகளுக்குத் தாராள அனுமதி வழங்கப்படுகிறது.

வருகின்ற ஜனவரி 22-ஆம் தேதி மும்பை ஐ.ஐ.டி-யில் நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்கு “அம்பேத்கர் பெரியார் புலே ஆய்வு வட்டம்” (APPSC)  எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. வரும் ஜனவரி 20-ஆம் தேதி (இன்று) ‘ராம்தூன்’ என்ற இசை நிகழ்ச்சியும், 21-ஆம் தேதி  ‘ஸ்ரீராம் தர்பார் ஷோபா யாத்திரை’ என்ற ஊர்வலமும், 22-ஆம் தேதி ஐ.ஐ.டி இயக்குநரால் ஒரு கோசாலை திறப்பு நிகழ்ச்சியையும் நடத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஆனால் மிக சமீபத்தில்தான் ஐ.ஐ.டி நிர்வாகம், வளாகத்தில் அரசியலற்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான  வழிகாட்டுதல்களை உருவாக்கியிருந்தது. ஆனால், அவர்களே அதை மீறுகிறார்கள் என குற்றம் சாட்டுகின்றனர் மாணவர்கள். ஆனால் நிர்வாகமோ, வழிகாட்டுதல்கள் இடைக்காலத்திற்குத்தான் என்று தன் கரசேவைக்கு நியாயம் கற்பிக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான கல்வி நிலையங்களின் நிலை இதுதான். மோடி பாசிச கும்பலுக்கு எதிராக குரல் எழுப்புபவர்களின் குரல் தொடர்ந்து நசுக்கப்பட்டு, ஒட்டுமொத்த கல்வி நிலையங்களும் காவிக்கும்பலின் கூடாரங்களாக மாற்றப்பட்டு வருகிறது.


ரித்திக்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க