சென்னை வெள்ளம்: யார்தான் குற்றவாளி?

தி.மு.க. அரசின் கார்ப்பரேட் நல சேவைகளும் அலட்சியமும்தான் இப்பெருவெள்ளத்தின்போது மக்கள் துயரத்தில் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாகும். எனவே இப்பேரிடருக்கும் தி.மு.க-விற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று பேசுவது மக்கள் விரோதமானதாகும்.

டந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கியது. இதனால் சென்னையின் பெருவாரியான இடங்களில் மழைவெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளையும் வீடுகளையும் இழந்து அகதிகளாக்கப்பட்டனர். இருபதுக்கும் மேற்பட்டோர் இந்த வெள்ளத்திற்கு பலியாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல், உணவு, குடிநீர் கூட இல்லாமல் இரண்டு நாட்களுக்கு மேலாக வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். தொலைத்தொடர்பு சேவை, மின்சாரம் இல்லாத காரணத்தால் யாரையும் தொடர்புகொள்ளவும் முடியாமல் செய்வதறியாது நிற்கதியாகினர் சென்னையின் உழைக்கும் மக்கள்.

ஆனால், புயல் கடந்த மறுநாளே தி.மு.க. அரசும் அதன் ஜால்ரா ஊடகங்களும் 95 சதவிகித மீட்புப்பணிகள் முடிந்துவிட்டன என்றும் அண்ணாசாலை, மவுன்ட்ரோடு, ஜி.எஸ்.டி. சாலை போன்ற இடங்களை மட்டும் ஒளிப்பரப்பி வெள்ளம் வடிந்துவிட்டது என்றும் பொய்யான பிம்பத்தை கட்டமைக்க ஆரம்பித்தன. இதனால், பெருவெள்ளத்தில் மூழ்கிய உழைக்கும் மக்களின் அவலநிலையும் பாதிப்புகளும் வெளிஉலகிற்கே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு அவர்களை கூடுதல் துயரத்தில் ஆழ்த்தியது.

துயரத்தில் தள்ளப்பட்ட உழைக்கும் மக்கள்:

மிக்ஜாம் புயல் வெள்ளத்தினால் சென்னையில் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்தது தென்சென்னை, வடசென்னை பகுதிகள்தான். புயல் கரையைக் கடந்து, மழை நின்று மூன்று நாட்களுக்கு மேலாகியும் சென்னையின் பல பகுதிகளில் மீட்புப்பணிகள் தொடங்கப்படவில்லை. குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி, பெருங்குடி, கொடுங்கையூர், சைதாப்பேட்டை, சூளைமேடு, பட்டாளம், புளியந்தோப்பு, பழைய வண்ணாரப்பேட்டை, திரு.வி.க.நகர், வியாசர்பாடி, திருவொற்றியூர் உள்ளிட்ட அடித்தட்டு உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள தி.மு.க. அரசு அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.

முதல்நாளிலிருந்து களத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்ட தோழர்கள் சொன்ன அனுபவமே, இப்பகுதிகளில் சீரூடை அணிந்த ஒரு மாநகராட்சி ஊழியரைக்கூட பார்க்கமுடியவில்லை என்பதுதான். புயல் கடந்த மறுநாளே  சென்னையை மீட்ட தி.மு.க.” என்ற பிம்பத்தை உருவாக்கியதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு தன்னார்வலர்களும் வரவில்லை, களத்திலிருந்த தோழர்களாலும் மீட்புப்பணிக்கான நிதியை திரட்ட முடியவில்லை. இதனால் மக்கள் உதவிகள் ஏதும் பெறமுடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டனர்.


படிக்க: சென்னையின் துயரம் – பெருவெள்ளம் : யார் காரணம் ?


வெள்ளநீர் சூழ்ந்ததால், மூன்று, நான்கு நாட்களுக்கு வெளியே வரமுடியாமல் உணவு, குடிநீர், மின்சாரம் ஏதுமின்றி குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் மார்பளவு நீரில் தவித்தனர். வீடுகளைவிட்டு வெளியேற முடியாத முதியவர்களும், ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்திருந்த மக்களும் வெள்ளநீரிலேயே மலம் கழிக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.

“கடந்த 3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கித் தவித்தோம். எங்களை மீட்க அரசுத்தரப்பில் யாரும் வரவில்லை எங்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர்களே மார்பளவு நீரில் இறங்கிச்சென்று எங்களுக்கு குடிநீர் கொண்டு வந்தனர். ஒரு கட்டத்தில், குடிநீர் இல்லாமல் வெள்ளநீரையே காய்ச்சி குழந்தைகளுக்குக் கொடுத்தோம்” என தங்களின் அவலநிலையை விவரிக்கிறார் வேளச்சேரியை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்.

சில கி.மீ. தூரம்வரை வெள்ளநீரில் நடந்தே சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கிவர வேண்டிய பரிதாபகரமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதிலும், பால் தட்டுப்பாடு காரணமாக அரை லிட்டர் பால் ரூ.60-70-க்கும், ஒரு கேன் குடிநீர் ரூ.300-க்கும் விற்கப்பட்டது.

“மழை நின்னு மூன்று நாட்களுக்கு மேலாகிவிட்டது; குடிநீர் இல்லை, கரண்ட் இல்லை; பால்கூட வெள்ளநீரில் சென்றுதான் வாங்கிவர வேண்டும். கால்வாய் நீரெல்லாம் கலந்திருக்கிறது. இதுவரைக்கும் எந்த கவுன்சிலரோ, எம்.எல்.ஏ-வோ யாருமே வந்து எங்களை எட்டிப் பார்க்கல. நாங்கெல்லாம் ஓட்டுப் போடலயா, இல்ல நாங்களாம் மக்கள் இல்லையா” என்று கேள்வியெழுப்புகின்றனர் ‘சிங்காரச் சென்னைக்காக’ சென்னையிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட செம்மஞ்சேரி மக்கள்.

“எல்லா மழைக் காலத்திலும் வடசென்னை பகுதிகளில் தண்ணீர் தேங்குது. ஆனா, கடைசியாத்தான் இந்த பகுதிக்கு அதிகாரிகள் வராங்க” என்கிறார் வியாசர்பாடியைச் சேர்ந்த மீனா. அவர் சொன்னதுபோலவே இம்முறையும், வியாசர்பாடி சுரங்கப்பாதையில் தேங்கிய நீரையும், வடசென்னையில் குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்திருந்த நீரையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை கடைசியாகத்தான் மேற்கொண்டது அரசு.

புளியந்தோப்பு பகுதியில் உரிய நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காததால் கர்ப்பிணி பெண் ஒருவர் சிசுவை பறிக்கொடுத்த துயரச் சம்பவமும் அரங்கேறியது. உயிர்பிழைக்க வீடுகளிலிருந்து தாங்களாகவே ஆபத்தான முறையில் வெளியேற வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அப்படி வெளியேறியவர்களில் சிலர் நீரில் மூழ்கி உயிரிழக்கவும் நேரிட்டது. பலர் ரூ.3,000 வரை கொடுத்து தனியார் படகுகள், பொக்லைன் எந்திரங்கள் மூலம் வெளியேறினர். பணம் இல்லாதவர்கள் கடைசிவரை வெளியேற முடியாமல் தவித்தனர்.

வேளச்சேரியில் தனியார் நிறுவனத்தின் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த 60 அடி பள்ளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதில் தி.மு.க. அரசு மிகவும் அலட்சியமாக நடந்துக்கொண்டது. மூன்று பேர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் ஐந்து நாட்களுக்குப் பிறகே இருவரை சடலமாக மீட்டது.  முதலில் எட்டு பேர் பள்ளத்தில் விழுந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன, ஆனால் ஐந்து பேர் என்கிறது அரசு. இன்றுவரை பள்ளத்தில் விழுந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை. அமீர்கான், விஷ்ணு விஷால், நமீதா ஆகியோர் மீட்கப்பட்டதை லூப்-இல் (LOOP) போட்டுக் காட்டிக்கொண்டிருந்த ஊடகங்கள் இத்தொழிலாளர்கள் மாட்டிக்கொண்டதைப் பற்றி வாயையே திறக்கவில்லை.

சில பகுதிகளில், வெள்ளநீரில் பிணங்கள் கேட்பாரற்று மிதந்த அவலமும் அரங்கேறியது. ஆனால், அந்த உடல்களை மீட்கக்கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் தவித்த மக்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியாக போராட ஆரம்பித்தனர். சென்னை முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராடிய பெரும்பாலான மக்களின் கோரிக்கை தங்களை எந்த கவுன்சிலரோ, அமைச்சரோ வந்து பார்க்கவில்லை என்பதுதான். அமைச்சர் சேகர்பாபு வடசென்னை மக்களை பார்வையிட சென்றபோது “இப்போதான் நாங்க உங்க கண்ணுக்கு தெரிந்தோமா?” என கேள்வியெழுப்பி முற்றுகையிட்டனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா என தி.மு.க-வினர் ஒவ்வொருவரையும் மக்கள் முற்றுகையிட்டு கேள்வியெழுப்பினர்.

சென்னை மக்களின் இந்த கோபத்திற்கு முக்கிய காரணம் தி.மு.க. அரசு இந்த வெள்ளப்பாதிப்பை கையாண்ட விதம்தான். ஆரம்பத்திலிருந்தே இந்த பேரிடரை மூடிமறைக்கும் வேலையில்தான் தி.மு.க. அரசு முனைப்புக்காட்டி வந்தது. மீட்புப்பணிகளில் அலட்சியம் காட்டியதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் வெள்ளப்பாதிப்பு மேலும் மோசமடைந்தது.

“எப்பவுமே பெரிய மழை வருதுன்னா போலீஸ்காரங்க இந்த ஏரியாக்குள்ள ஒவ்வொரு சந்துக்குள்ளேயும் வந்து எச்சரிக்கை பண்ணிட்டுப் போவாங்க. இந்தத் தடவ அப்படி ஒண்ணுமே பண்ணல. மழை வந்து தண்ணி மேலே எழும்ப ஆரம்பிக்கும்போதுதான் நாங்களே சுதாரிச்சிக்கிட்டு கையில அள்ள முடிஞ்சத அள்ளிக்கிட்டு ஓடினோம்” என்பதே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெருவாரியான மக்களின் கருத்தாக இருந்தது.

2015 வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்களும் பிற மாவட்ட மக்களும் உதவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது சமூக ஊடகங்களும், செய்தி ஊடகங்களும்தான். ஆனால், தி.மு.க. அரசும் அதன் இணைய குண்டர் படையும் இம்முறை அதற்கான வாய்ப்பை முற்றிலும் அடைத்துவிட்டது.

மூன்று நாட்களுக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே தன்னார்வலர்கள் உதவிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தப் பிறகுதான் இது கவனத்திற்குரிய விஷயமானது. அதுவரை “இது ஒரு பேரிடர், அதை தயவுசெய்து ஒப்புக்கொள்ளுங்கள்” என்று தி.மு.க-விடம் போராடும் நிலைமைதான் இருந்தது.

2015 vs 2023 ஒப்பீடும் தி.மு.க. இணையக் குண்டர் படையின் அட்டூழியமும்

புயல்கடந்த மறுநாளே “சென்னையை மீட்ட தி.மு.க.” என்ற பிம்பத்தை கட்டமைக்க தொடங்கியது தி.மு.க-வின் ஐ.டி.விங். ஒரு இணையக் குண்டர்படையைப் போல செயல்பட்டு தி.மு.க-விற்கு எதிராக பேசியவர்களையெல்லாம், அதாவது வெள்ளப்பாதிப்பை பற்றிப் பேசிய சாமானிய மக்கள், பத்திரிகையாளர்களையெல்லாம் கடித்துக் குதறிக் கொண்டிருந்தது. சமூக ஊடகங்களில் பால் இல்லை, உணவு இல்லை என்று பதிவு போட்டவர்களுக்கு, “உணவு இல்லாமல் இத்தனை நாள் வாழலாம். பால் எல்லாம் அத்தியாவசியம் இல்லை” என்றெல்லாம் அருவருக்கத்தக்க வகையில் கமெண்ட்களை பதிவிட்டு வந்தது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மைநிலையை அம்பலப்படுத்திய நியூஸ்மினிட் ஊடகவியலாளர் சபீர் அகமதுக்கு தி.மு.க. அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதி, டிவிட்டர் ஸ்பேஸில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

குறிப்பாக, சென்னை வெள்ளத்தில் மக்களின் பாதிப்பு அதிகம் பேசப்பட்டதைவிட “2015Vs2023” என்ற ஒப்பீடுதான் அதிகம் விவாதிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தி.மு.க-வை பாசிசத்திற்கு எதிரான அரணாக முன்னிறுத்தும் ‘தி.மு.க-வின் பாதுகாவலர்கள்’. ஆரம்பத்திலிருந்தே பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேசுவதை விட்டுவிட்டு தி.மு.க. அரசிற்கு ‘நற்சான்றிதழ்’ கொடுப்பதிலேயே முனைப்பாக இருந்த இவர்கள், “எல்லோரும் குறை சொன்னால் யார்தான் அரசின் நடவடிக்கைகளை பாராட்டுவது” என அதற்கு நியாயவாதம் கற்பித்தனர்.

வெள்ளத்தின்போது “4000 கோடி எங்கே போனது?”, “2015 மேல்” என்ற வகையில் சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பல் தி.மு.க-விற்கு எதிராக விவாதத்தை கட்டமைக்கத் தொடங்கியது. அதுவரை மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல் வாய் மூடிக்கொண்டிருந்த ‘தி.மு.க-வின் பாதுகாவலர்கள்’ சங்கிகளின் நிகழ்ச்சிநிரலுக்கு சென்று 2015Vs2023 என்ற அடிப்படையில் யார் சிறந்தவர்கள் என்ற விவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர். “2015-இல் ஏற்பட்டது செயற்கை பேரிடர், தற்போது ஏற்பட்டிருப்பது இயற்கை பேரிடர்; அப்போது 200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். தற்போது உயிரிழப்புகள் அதைவிட குறைவு; அப்போது மழை அளவு குறைவு, தற்போது வரலாறு காணாத மழை” என கண்மூடித்தனமாக தி.மு.க-விற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தனர்.

என்ன கேள்வி கேட்டாலும், “அ.தி.மு.க-வை விட சிறப்பாக செய்துள்ளோம்” என்ற பதிலையே திரும்ப திரும்ப ஒப்பித்துக்கொண்டிருந்தனர். கடைசிவரை மக்களின் பாதிப்பை பற்றி வாய்திறக்கவில்லை. மற்ற பத்திரிகையாளர்கள், களத்திலிருந்தவர்கள் மக்களுக்காக தி.மு.க. அரசை விமர்சித்தாலும்  அவர்களையும் சங்கி, பா.ஜ.க. ஆதரவாளர்கள் என தாக்கினர். இது மோடியையோ பா.ஜ.க-வையோ விமர்சித்தால் “ஆண்டி இந்தியன்” என்று சங்கிகள் முத்திரை குத்துவதற்கு ஒத்ததாகவே இருந்தது.

மொத்தத்தில், தி.மு.க. அரசு சிப்காட் தொழிற்பேட்டை, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு உழைக்கும் மக்களிடமிருந்து நிலங்களை அபகரித்தபோதும் வேங்கைவயல் போன்ற சாதியத் தாக்குதல்களை மூடிமறைத்தபோதும் எவ்வாறு “தி.மு.க-வை விமர்சித்தால் பாசிசம் வந்துவிடும்” என தி.மு.க-வின் அயோக்கியத்தனங்களை மூடி மறைத்தனரோ அவ்வாறே இந்த புயல் வெள்ளத்தின்போதும், ‘அரணாக’ இருந்து தி.மு.க-வை காத்தனர். ஆனால், வழக்கம்போல இது பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்குதான் சாதகமாகியது.

தி.மு.க. அரசு குற்றவாளியே

“வரலாறு காணாத மழை, புயல் காரணமாக கடல் ஆற்றுநீரை உள்வாங்கவில்லை, 20 செ.மீ. மழைக்குத்தான் மழைநீர் வடிகால் செயல்படும் 40 செ.மீ. மழைக்கு எதுவும் செய்யமுடியாது” என ஒட்டுமொத்தமாக இயற்கையின் மீது பழிபோட்டுவிட்டு தி.மு.க-வை இதிலிருந்து தப்பிக்கவைக்க பலரும் முயற்சித்து வருகின்றனர்.

ஆனால், “இது எல்-நினோ ஆண்டு என்பது உலகத்துக்கே தெரியும், சூப்பர் எல்-நினோவாக மாறலாம் எனப் பல்வேறு வானிலை அமைப்புகளும் சொல்லி வருகின்றன. ஆக, இந்த ஆண்டு பெருமழையும் புயலும் இதர பேரிடரும் வரும் என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். இப்போது வந்து, எதிர்பார்க்கவில்லை என்றால் என்ன அர்த்தம். பிறகெதற்குப் பேரிடர் மேலாண்மைக்கென்று ஒரு துறையை வைத்திருக்கிறார்கள்?’’ என “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.சுந்தர்ராஜன் கேட்கும் கேள்விக்கு தி.மு.க-அரசு பதிலளித்துதான் ஆக வேண்டும்.

அதேபோல, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் முதலமைச்சர் முதல் மேயர் வரை மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது என மாறி மாறி அள்ளிவிட்டுக் கொண்டிருந்தனர். “மழை பெய்தால் ஒரு நாள் கூட தண்ணீர் தேங்காது”, “புயலுக்கு அடுத்த நாள் பள்ளிக்கு விடுமுறை விட வேண்டிய தேவையே இருக்காது” என்றவாறெல்லாம்தான் தி.மு.க. அமைச்சர்கள் பேசி வந்தனர்.. ஆனால், உண்மைநிலை என்ன ஆனது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும், ஏற்கெனவே இருந்த 2,071 கி.மீ. தொலைவு மழைநீர் வடிகால் கட்டமைப்புடன் 1,033 கி.மீ. புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளைத் தொடங்கியது. ஆனால், பல வடிகால்களுக்குக் கால்வாய்களுடன் இணைப்பு ஏற்படுத்தவில்லை.

இதுகுறித்து பேசிய “அறப்போர் இயக்கத்தை” சேர்ந்த ஜெயராமன், “தொடக்கத்தில், 35 சதவிகிதப் பணிகள் முடிந்துவிட்டன என்றார்கள். திடீரென, 90 சதவிகிதப் பணிகள் முடிந்துவிட்டன என்கிறார்கள். எப்படி ஒரு குறுகிய காலத்தில் 45 சதவிகிதப் பணிகளை முடித்தார்கள் என்பதே தெரியவில்லை. பல சாலைகளிலுள்ள வடிகால் கால்வாய்களுக்கு இணைப்புகளே இன்னும் ஏற்படுத்தவில்லை. வடிகால் பணிகள் குறித்த விவரங்களை மாநகராட்சி இதுவரை வெளியிடவே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, புதிதாகப் போடப்பட்ட 40 சதவிகித வடிகால்களின் தரத்தை அதிகாரிகள் பரிசோதனை செய்யவில்லை” என்கிறார்.

2021-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதைப் போன்றதொரு வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, “சென்னை மழைவெள்ளத்திற்கு அ.தி.மு.க-வின் கடந்த பத்தாண்டுகால ஊழலே காரணம். இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்” என உறுதிமொழி அளித்தார் முதல்வர் ஸ்டாலின். அதற்காக, 2022-இல் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதுவரை அந்த அறிக்கையை தி.மு.க. வெளியிடவில்லை. ஊழலில் ஈடுப்பட்ட அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு ஊழல்செய்ய திட்டம்போட்டுக்கொடுத்த அதிகாரிகளை தப்பிக்கவைக்கவேண்டி, அந்த ஊழல்முறைகேடுகளை அப்படியே ஊற்றி மூடிவிட்டு, அவர்களை வைத்து கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது தி.மு.க.


படிக்க: மிக்ஜாம் புயல் நிவாரணப்பணி: மனிதம் செத்துவிட்டதா? தி.மு.க. மறைத்துவிட்டதா?


அதேபோல், கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பரில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் “சென்னைப் பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவை” அமைத்தது தி.மு.க. அரசு. அக்குழு கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிக்கையை சமர்பித்தது.

அந்த அறிக்கை, சென்னையின் ஆறுகள், மழைநீர் வடிகால்களின் வெள்ளத்தை தாங்கும்திறன் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டியதோடு “வெள்ள அபாய வரைபடம்” ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது. இன்று பட்டா நிலங்களாக மாறிப்போன வடிகால் பகுதிகளை அடையாளம் கண்டு மீட்க வேண்டும் என்றும் அரசுத் திட்டங்களுக்கு நிலங்கள் கையகப்படுத்தும்போது நீர்நிலைகள், வெள்ளச் சமவெளிகள் மற்றும் வடிகால் பாதைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவ்வறிக்கை பரிந்துரைத்தது. இப்படியான பல பரிந்துரைகளைக் கொண்ட அந்த அறிக்கையை இதுவரை தி.மு.க. அரசு வெளியிடவில்லை.

ஆனால், திருப்புகழ் கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம் என்று கூறும் ஸ்டாலின், எப்படி அறிக்கையின் பரிந்துரையை மீறி 2,446 ஏக்கர் நீர்நிலைப் பகுதிகளை அழிக்கும் பரந்தூர் விமானநிலையத் திட்டத்திற்கு அனுமதியளித்தார் என்பதையும் சேர்த்து கூற வேண்டும். மேலும், ‘தொழில் வளர்ச்சிக்காக’ எந்தத் தடையுமின்றி கேள்விக்கிடமற்ற வகையில் நீர்நிலைகளை அழிக்கவும் நிலங்களை அபகரிக்கவும் அனுமதியளிக்கும் “தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023”-ஐ தி.மு.க. அரசு எதற்கு கொண்டுவந்தது என்பதையும் விளக்க வேண்டும்.

அதுபோல், சென்னையின் இயற்கை வடிகால்களான நீர்நிலைகளும் கழிமுகத்துவாரங்களும் சதுப்புநிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதுதான் எப்போதும் சென்னை வெள்ளத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆனால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்திவரும் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளால், இருக்கின்ற நீர்நிலைகளும் சதுப்புநிலங்களும் கார்ப்பரேட் நல நாசகர திட்டங்களுக்காக தொடர்ந்து பலிக்கொடுக்கப்பட்டுதான் வருகின்றன. கடந்த 2015-ஆம் ஆண்டிற்குப் பிறகான எட்டு ஆண்டுகளில், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் இத்தகைய ஆக்கிரமிப்பின் வளர்ச்சிவீதம் 300 சதவிகிதமாக இருக்கிறது என்கிறது நியூஸ் 18 செய்தி. இதற்கு தி.மு.க. அரசும் விதிவிலக்கல்ல.

மொத்தத்தில், அதிகாரவர்க்கத்தின் ஊழல்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றாதது, கார்ப்பரேட் நலத்திட்டங்களுக்காக நீர்நிலைகளைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பது, முறையான வடிகால் வசதிகள் செய்யாதது, கழிமுகப் பகுதிகளைத் தூர்வாராதது உள்ளிட்ட தி.மு.க. அரசின் கார்ப்பரேட் நல சேவைகளும் அலட்சியமும்தான் இப்பெருவெள்ளத்தின்போது மக்கள் துயரத்தில் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாகும். எனவே இப்பேரிடருக்கும் தி.மு.க-விற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று பேசுவது மக்கள் விரோதமானதாகும்.

மறுகாலனியாக்கத் திட்டங்களால் அழிக்கப்படும் சென்னை

எண்ணூர் மற்றும் பள்ளிக்கரணை சதுப்புநிலங்கள் சென்னையின் இயற்கை நீர் உறிஞ்சிகளாக உள்ளன. இதில் உப்பு சதுப்புநிலமான எண்ணூர் சிற்றோடையானது கனமழை மற்றும் புயல் அலைகளை உறிஞ்சும் தன்மை கொண்டதாகும். தொழிற்துறைக் கட்டுமானங்களும் எண்ணூர் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளும் இந்த சிற்றோடையை நாசமாக்கி வருவதால், இச்சதுப்புநிலத்தின் ஆற்றுநீரை சுமந்து செல்லும் திறனும் வடிகால் திறனும் குறைந்துள்ளது. எனவேதான் மழைக்காலங்களில் வடசென்னை பகுதிகளில் வெள்ளநீர் உடனே வடியாமல், தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது.

இச்சூழலில், எதிர்வரும் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பணிகளால் இந்த எண்ணூர் சதுப்புநிலம் மேலும் பாதிக்கப்படும் பேரபாயம் இருக்கிறது என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன். கடலில் பல கி.மீ. தொலைவுக்கு மணலைக் கொட்டி நடைபெறவிருக்கும் விரிவாக்கப் பணிகளால் சென்னையின் இயற்கை அரண்களில் ஒன்றான எண்ணூர் சிற்றோடை முற்றிலும் அழிக்கப்படும். அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்தபிறகு துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த முயற்சித்து எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகமாகப் பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

தென்சென்னையில் உள்ள மற்றொரு இயற்கை அரணான பள்ளிக்கரணை சதுப்புநிலம், பல்வேறு ஆக்கிரமிப்புகளால் 13,500 ஏக்கரிலிருந்து  1,500 ஏக்கராக சுருங்கியிருக்கிறது. 2015 பெருவெள்ளத்துக்குப் பிறகும் இந்தச் சதுப்புநிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இந்த மோசடியில் ஈடுபடும் அதிகாரிகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

மேலும், “கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளநீர் எங்கெல்லாம் தேங்கியதோ, அதே பகுதிகளில்தான் தற்போதும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்” என்கிறார், அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன்.

ஆனால், சென்னையில்‘ஆக்கிரமிப்பு’ என்று அப்பாவி உழைக்கும் மக்களின் குடிசைகளைப் பிய்த்து எடுக்கின்ற அரசின் புல்டோசர்கள், பெரிய பெரிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக துரும்பைக்கூட அசைப்பதில்லை. ஏனெனில், சென்னையின் கட்டமைப்பு மறுகாலனியாக்கத் திட்டங்களின் அடிப்படையில் மறுஒழுங்கமைப்பு செய்யப்பட்டு வருகிறது. சென்னையின் மையப்பகுதிகளில் கார்ப்பரேட் மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினரும், செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற புறநகர் பகுதிகளில் சென்னையின் பூர்வகுடி மக்களும் திட்டமிட்டே குடியமர்த்தப்படுகின்றனர். இது முந்தைய ஆட்சிகளில் நடந்ததைக் காட்டிலும் தற்போதைய தி.மு.க. ஆட்சியில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறை வெள்ளப் பாதிப்பின்போது சென்னை இரண்டாக பிரிந்து காட்சியளித்ததற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.

எனவே, சென்னை இதுபோன்ற வெள்ளத்தால் இனியும் பாதிப்படையாமல் தடுக்க வேண்டுமானால், உடனடியாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை, தனியார்-அரசு நிறுவனங்கள் என்ற பேதமின்றி ஒட்டுமொத்தமாக அகற்ற வேண்டும்; நீர்நிலைகளை அழிக்கும் பரந்தூர், அதானி துறைமுக விரிவாக்கம் போன்ற கார்ப்பரேட் நல நாசகரத் திட்டங்களை நிறுத்த வேண்டும்; சென்னை விரிவாக்கத் திட்டம் இனிமேலும் தொடரக்கூடாது; கேள்விக்கிடமற்ற வகையில் நீர்நிலைகளை அழித்து நிலங்களை அபகரிக்க வழிவகுக்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க