டெல்லியில் விவசாய விளை பொருள்களுக்கு ஆதார விலை கேட்டுப் போராடும் விவசாயிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலைக் கண்டித்து 22.02.2024 அன்று மாலை 5 மணிக்கு திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மக்கள் அதிகாரம் நெல்லை மண்டல செயலாளர் தோழர் செல்வம் தலைமையேற்று நடத்தினார். திராவிட தமிழர் கட்சியின் மாநில செயலாளர் தோழர் கதிரவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் தோழர் முத்துவளவன், சி.பி.ஐ (எம் எல்) தோழர் சுந்தர்ராஜ், சி.பி.ஜ(எம்) மேலப்பாளையம் பகுதி செயலாளர் தோழர் குழந்தைவேலு, ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் இளையராஜா, பாரத் முக்தி மோர்ஷாவின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலகிருஷ்ணன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் தமிழரசு ஆகியோருடன் ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
மக்கள் அதிகாரத்தின் நெல்லை மண்டல இணைச் செயலாளர் தோழர் கின்ஷன் சிறப்புரையாற்றினார்.
தோழர் செல்வம் தன்னுடைய தலைமை உரையில் 2020 -2021 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் தீவிரமாக களத்தில் இறங்கி போராடியபோது, பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களை ஏமாற்றிய மோடி அரசின் முகத்திரையை கிழித்தும், தற்போதைய போராட்டத்தின் நோக்கத்தையும் இந்த போராட்டத்தை நாம் நெல்லையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொண்டு போய் பாசிச மோடி அரசை வீழ்த்தும் வகையில் இதை நகர்த்த வேண்டும் என்றும் தனது கருத்தை பதிவு செய்தார்.
வி.சி.க தோழர் முத்துவளவன் பேசிய போது, ஸ்டெர்லைட் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களுக்கும் அடிப்படை கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக செயல்படும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் தான் என்பதையும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து காவி, கார்ப்பரேட் கும்பலை வீழ்த்தியது போல விவசாயிகளோடு துணை நின்று பாசிச கும்பலை வீழ்த்துவோம் என்று பேசினார்.
மேலும் பேசிய பிற தோழமை அமைப்புத் தோழர்கள் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், விவசாயிகள் மீது கொடூரத் தாக்குதல்களை தொடுக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலைக் கண்டித்தும் தங்களது கண்டன உரைகளைப் பதிவு செய்தனர். திராவிட தமிழர் கட்சி மாநில செயலாளர் தோழர் கதிரவன் மக்கள் அதிகாரம் எடுக்கும் அனைத்து போராட்டத்திற்கும் எப்போதும் நாங்கள் துணை நிற்போம் என்று பதிவு செய்தார்.
இறுதியாக தோழர் கின்ஷன் தன்னுடைய உரையில், விவசாயிகளின் 12 அம்ச கோரிக்கைகளில் மிக முக்கியமானது உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்பது. காவிக்கும், கார்ப்பரேட்டுக்கும் எதிரான இந்த போராட்டம் உழைக்கும் வர்க்கத்துக்கும், சுரண்டும் கூட்டத்துக்கும் இடையே நடக்கும் போராகும். இந்த போரானது நாடாளுமன்றத் தேர்தல் வரம்பிற்குள் நிற்கவில்லை. இது போராட்டக்களத்தை நோக்கி திரும்பியுள்ளது. இந்த போராட்ட களத்தில் உழைக்கும் வர்கத்தோடு இணைந்து நாமும் களத்தில் இறங்கி ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச கும்பலை வீழ்த்த வேண்டும். பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை அமைத்து, பாசிச சக்திகள் மீண்டும் எழாத வண்ணம் அதை முறியடிக்க வேண்டும் என்று பதிவு செய்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் முடிவிலும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சுற்றியுள்ள பகுதி வாழ் மக்களுக்கும், கடைக்காரர்களுக்கும் டெல்லி சலோ 2.0 என்ற தலைப்பிலான துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
எங்களை எதிர்க்க எவரும் இல்லை என்று இறுமாப்புடன் மார் தட்டிக் கொண்டிருந்த பாசிச கும்பலின் கனவை கலைக்கும் விதமாக விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டம் போராடும் விவசாயிகளுக்கு உறுதுணையாக நாம் களத்தில் இறங்க வேண்டிய அவசியத்தை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருந்தது.
தகவல்
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube