டக்கில் பிறந்த அவனையும்,
தெற்கில் பிறந்த என்னையும்
ஏனோ இணைக்கிறது
இந்த இரக்கமில்லா
இரு தண்டவாளங்கள்.

இந்த தண்டவாளத்தில் பயணிக்கும்
ஒரு ரயிலில், இரு வேறு வர்க்கங்களாய்
பயணம் நீள்கிறது.
பணம் இருப்பவனுக்கு
குளிர்சாதன அறையில் உயர் ரக உணவுகளுடன் உறக்கம் நீள்கிறது

மற்றொரு பெட்டியோ

ஆட்டையும், மாட்டையும்
அடைத்து சந்தையில் விற்க
கூட்டிச்செல்வது போல

நிரம்பி வலியும் மக்கள் கூட்டத்தில்
நிற்கக்கூட இடம் இல்லாமல்
நிற்கதியாய் பயணிக்கும்
ஒர் மனிதக் கூட்டம்
அவசரத்திற்க்கு மூத்திரம் வந்தாலும் அடக்கித் தான் வைக்க வேண்டும்
விடியும் வரை.
அவ்வப்போது கடந்து போகும்
உணவு பொட்டலங்களை
ஏக்கத்தோடு பார்க்கும் போது
மனித நேயத்தை மரணிக்கவே செய்கிறது
பலமுறை பார்த்திருக்க முடிந்தது
முன்பதிவு செய்யப்படாத ரயில் பயணங்களின் போது .

உழைப்பின் களைப்பில்
உறங்கும் விழிகளும்,
உழைப்பு சுரண்டலினால்
உருக்குழைந்த அவர்களின்
வாழ்க்கை நிலையையும்.

தமிழ்நாட்டினனோ
வெளிநாடுகளில்
கூலி அடிமைகளாய்,

தமிழ்நாட்டிலோ
வடமாநில இளம் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாய்!

உண்பதற்கோ சப்பாத்தியும்,உருளைக்கிழங்கும்
மட்டுமே பிரதானம்

இரவு பகல் உழைத்து
உடல் களைத்து தஞ்சம் அடைவதற்கோ
பத்துக்கு பத்து தகர கூடுகளே.
பகலில் உள் இருந்தால்
நெருப்பில் உருக்கிய இரும்பை உடல் முழுவதும் பூசியது போன்று இருக்கும்

இரவோ உறைய வைக்கும் குளிர்
உடல் எல்லாம் வெடவெடக்கும்
மழைக்காலம் வந்தால்
மண்டைக்குள் மச மசக்கும்
மழை சத்தம் வேறு ,
மருந்துக்கும் மருத்துவருக்கும்
செய்யும் செலவு வேறு

காதல், நட்பு என
மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய
இளமைப் பருவம் முழுவதும் சிதைக்கப்பட்ட இளைஞர் கூட்டங்களாய்,
புத்தகங்களையும் கனவுகளையும்
பேரம் பேசி சந்தையில் பிடித்து வந்த அடிமைகளாய் கடக்கும் சிறார் கூட்டம்

தினமும் ஒரு வேளை
உணவு மட்டுமே உண்ணும்
தன் குழந்தைகளுக்கும், மனைவிக்கும்
ஒருவேளை உணவுக்காக
உயிரையே பனையம் வைக்கும்
எத்தனை தந்தைகளின் மனக்குமுறல்கள்
மௌனித்து, மரணிக்கிறது.

எங்களின் இரத்தத்தையும் உழைப்பையும் புசித்து, ருசித்த
முதலாளிகளின் அகோர பசி அடங்கவில்லையே இன்னும்.
இன்னும் , இன்னும் என கேட்கிறது
முதலாளிகளின் அடங்காத ரத்தவெறி.

ஆனால் இவர்களோ
நம் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்
போலி தமிழ் தேசியவாதிகளால்.

இந்த இனவாதிகள் மக்களிடம் ஓட்டுப் பொறுக்கவே இனவெறியை தூண்டுகிறார்கள்

இந்த இனவெறியாளர்கள் ஒருபோதும் அம்பானி, அதானியின் சுரண்டலை பற்றி பேசுவதே கிடையாது
இவர்களுக்கு அந்த
நோக்கமும் கிடையாது

இவர்களா தமிழர்களுக்கு எதிரி
இவர்களா திருடர்கள்
இவர்களா நம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்

ஆம் என்றால்,
எவ்வளவு இழிவான பிறவிகள் நாம்.

’வடக்கனோ’, தமிழனோ
உழைப்பாளிகள் எனில்
யாவரும் ஒன்றாவோம்!

இந்தச் சுரண்டல்வாதிகளை
ஒழித்துக் கட்டுவோம்!!!


செந்தாழன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க