ஏப்ரல் 7, ஏப்ரல் 9 விவசாயிகள் போராட்டத்திற்கு துணை நிற்போம்!
எதிர்க்கட்சிகளே! தேர்தல் வரம்பைத் தாண்டி விவசாயிகளோடு களமிறங்குங்கள்!
பாசிசத்தை வீழ்த்தும் பாதை அதுதான்!
பஞ்சாபில் தனியார் கிடங்குகளை கோதுமை கொள்முதல் நிலையங்களாக அம்மாநில அரசு அறிவித்ததைக் கண்டித்து விவசாய சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளன.
ஏப்ரல் 1 ம் தேதி தொடங்கியுள்ள “ரபி” சந்தைப்படுத்துதல் பருவத்தைக் கணக்கில் கொண்டு தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் 11 கிடங்குகளை கொள்முதல் மையங்களாக பஞ்சாப் மாநில அரசு மார்ச் 15 ஆம் தேதியன்று அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவான இந்த நடவடிக்கையை கண்டித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது), கிசான் மஸ்தூர் மோர்ச்சா (KMM) ஆகிய விவசாய சங்கங்களும், 2020-21 விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) விவசாய சங்கமும் ஏப்ரல் 9 ஆம் தேதி போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
SKM (அரசியல் சார்பற்றது), KMM ஆகிய சங்கங்கள் ஏப்ரல் 7 அன்று ஒன்றிய, பஞ்சாப் மாநில அரசாங்கங்களின் உருவ பொம்மைகளை எரிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
படிக்க: இந்திய விவசாயிகளின் நெருக்கடி வாழ்வு: மேலும் துயரத்தை நோக்கி!
மேலும் பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி சலோ போராட்டத்தின் போது ஹரியானா போலீசால் கைது செய்யப்பட்ட ஐந்து விவசாயிகளையும் விடுவிக்கக் கோரியுள்ளனர்.
ஏப்ரல் 2, செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய SKM (அரசியல் சார்பற்றது) தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், பஞ்சாபில் கோதுமை சேமிப்புக்கான கொள்முதல் மையங்களாக கார்ப்பரேட் கிடங்குகளை அறிவிக்கும் முடிவைக் கண்டித்துப் பேசினார்.
மேலும் அவர், பஞ்சாப் மாநில அரசாங்கம் ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் செயல்படுகிறது எனவும், இந்த உத்தரவு மண்டிகளை (தானிய சந்தைகளை) தேவையற்றதாக மாற்றும் முயற்சி எனவும் கூறினார்.
KMM தலைவர் சர்வான் சிங் பாந்தர், AAP அரசாங்கம் தனியார் கிடங்குகளில் கோதுமை விற்பனை, கொள்முதல் மற்றும் சேமிப்பை அனுமதிப்பதன் மூலம் கார்ப்பரேட் பெருநிறுவனங்களை மகிழ்விக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் இது ஒன்றிய அரசின் கொள்கை முடிவு என்பதில் தனக்கு சந்தேகமில்லை எனவும் இதை மாநில அரசு செயல்படுத்துவதை நிறுத்தியிருக்கலாம் எனவும் கூறினார். விவசாயிகள் தங்கள் தானியங்களை தனியார் கிடங்குகளுக்கு கொண்டு வர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கார்ப்பரேட் கிடங்குகள் குறித்தான முடிவை திரும்பப் பெறுதல், கைது செய்யப்பட்ட ஐந்து விவசாயிகளை விடுவித்தல் ஆகிய கோரிக்கைகள் ஏப்ரல் 7 ம் தேதிக்குள் நிறைவேற்றப்படாவிட்டால் ஏப்ரல் 9 ம் தேதி ஷம்பு எல்லையில் ரயில் மறியல் போராட்டங்களை நடத்தப்போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
படிக்க: வெல்லட்டும் விவசாயி போராட்டம் | ம.க.இ.க ”சிவப்பு அலை” கலைக்குழு | புதிய பாடல்
குறைந்தபட்ச ஆதாரவிலை, உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து வெளியேறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டங்கள் பாசிச மோடி அரசை நிலைகுலைய வைத்து தோல்வி முகத்திற்கு தள்ளியுள்ள நிலையிலும், கார்ப்பரேட்டுகளுக்கு தன் அடிமை விசுவாசத்தை காட்டுவதில் ஒன்றிய பி.ஜே.பி அரசு தீவிரமாக உள்ளது. அதானி, அம்பானி வகையறா கார்ப்பரேட் கும்பல் விவசாயத்தைக் கைப்பற்றி கொள்ளையடிப்பதற்காக விவசாயிகள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவி வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு பஞ்சாப் மாநில ஆம்ஆத்மி அரசாங்கம் துணை போகிறது.
அதே சமயம் போராட்டங்கள் மட்டுமே தங்களுக்கு விடிவைத் தரும் என்பதை விவசாயிகள் தெளிவாக உணர்ந்துள்ளனர். எந்த வாக்குறுதிகளுக்கும் அவர்கள் மயங்கவில்லை. அடக்குமுறைகள் எதற்கும் அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கவுமில்லை. மிகச்சரியான கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டக் களத்தை உருவாக்குகின்றனர். ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு எதிராக களத்தில் நிற்கின்றனர்.
தேர்தல் வரம்புகளைத் தாண்டி, விவசாயிகள் போராட்டங்களுக்கு உறுதுணையாக எதிர்க்கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் களத்தில் இறங்க வேண்டும். அதுதான் பாசிச மோடி கும்பலை அடியோடு வீழ்த்துவதற்கான பாதையைக் காட்டும்.
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube