நெல்லை சி.பி.ஐ(எம்) அலுவலகம் சூறையாடல்:
சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக ஆதிக்கச் சாதி வெறியர்கள் அடாவடித்தனம்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மாநகராட்சியின் நம்பிக்கை நகரை சேர்ந்தவர் மதன்குமார். இவர் பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர். பாளையங்கோட்டை, பெருமாள்புரத்தில் பிள்ளை சமூகத்தை சேர்ந்தவர் உதய தாட்சாயினி. இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டிலும் சம்மதிக்கவில்லை.
எனவே, மதன்குமார், உதய தாட்சாயினி இருவரும் திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி, வினோபா நகரில் அமைந்துள்ள சி.பி.ஐ(எம்) மாவட்டக் குழு அலுவலகத்திற்கு சென்று தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி கோரியுள்ளனர். அதன்படி ஜூன் 13 அன்று மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் லெனின் சிலைக்கு முன்பாக இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. மேலும், மறுநாளான ஜூன் 14 அன்று சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்காக முன்பதிவும் செய்யப்பட்டிருந்தது.
படிக்க : நீட் முறைகேடு: மாணவர்களுக்கு துரோகமிழைக்கும் தேசிய தேர்வு முகமை
இதனை தெரிந்துக்கொண்ட பெண் வீட்டை சேர்ந்த ஆதிக்கச் சாதி வெறியர்கள், பந்தல் ராஜா மற்றும் ஜெயகுமார் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட ஆதிக்கச் சாதிவெறி குண்டர்களுடன் சி.பி.ஐ(எம்) அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து போலீஸ் முன்னிலையிலேயே அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். மேலும், சி.பி.ஐ(எம்) தோழர்களையும் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த தோழர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு பெரும் பேசுபொருளானது. இதனையடுத்து பெண்ணின் தாய், தந்தை, சகோதரன், பந்தல் ராஜா உள்பட 15 பேரை போலீசு கைது செய்துள்ளது.
தென் மாவட்டமான நெல்லையில் இத்தகைய சாதிய தாக்குதல்கள் நடத்தப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே தென் மாவட்டங்களில் சாதிய வன்முறைகளும், சாதிய படுகொலைகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை மட்டும் மதுரையில் 84 சாதிய வன்முறைகளும், தேனியில் 66 சாதிய வன்முறைகளும், நெல்லையில் மட்டும் 50 சாதிய வன்முறைகளும் பதிவாகியுள்ளன. சாதிய வன்முறைகள் நடந்து அது பேசுபொருளாகும்போது மட்டும் அதில் ஈடுபட்டவர்களை கைது செய்து அச்செய்தியை பரபரப்பாக்குவது, அதன்பிறகு சாதிவெறிக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாதது வழக்கமாக உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த சின்னதுரையை அவருடன் படிக்கும் ஆதிக்கச் சாதிவெறி கொண்ட மாணவர்கள் கொடூரமாக வெட்டிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. ஆனால், அதன் பிறகும் சாதிய வன்முறைக்கு எதிராக தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவுதான், இன்று எந்த பயமுமின்றி சி.பி.ஐ(எம்) அலுவலகத்தை ஆதிக்கச் சாதி வெறியர்கள் அடித்துக் நொறுக்கியுள்ளனர்.
என்னதான் அரசு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சலுகைகள் வழங்கி வந்தாலும், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசு முறையாக பாதுகாப்பு வழங்க முன்வருவதில்லை. போலீஸ் துறையிலேயே ஆதிக்கச் சாதி வெறிக்கொண்ட நபர்கள் இருப்பதால், சாதி மறுப்பு திருமணம் என்றாலே அது உயிரை பணையம் வைத்து நடைபெறக் கூடிய ஒன்றாக இங்கு மாறியுள்ளது. சாதி மறுப்பு திருமணங்களை அரசே பொறுப்பேற்று நடத்தி வைப்பதோடு திருமணம் முடிந்த பிறகும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.
படிக்க : தமிழ்நாடு: பாசிசக் கும்பலை வீழ்த்திய பார்ப்பனிய எதிர்ப்பு மரபை வளர்த்தெடுப்போம்!
தமிழ்நாட்டில் வடமாநிலங்களை போல் மத ரீதியான பிளவை ஏற்படுத்தி காலூன்ற முடியாத ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பல், ஆதிக்கச் சாதி சங்கங்களுடன் கைகோர்த்துள்ளது. இதன் விளைவுதான் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சாதிய ஆவணப் படுகொலைகளும் சாதியக் கலவரங்களும் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளன. ஆனால், ஆர்.எஸ்.எஸ். மீதும் அதனுடன் கூட்டு சேர்ந்துள்ள சாதி சங்கங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசு தயாராக இல்லை. எனவே, தென் மாவட்டங்களில் அதிகரித்துவரும் சாதிய வன்முறைக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதோடு ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனுடன் தொடர்புள்ள சங்கங்களை தடை செய்ய வேண்டும்.
மேலும், தற்போது சி.பி.ஐ(எம்) அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் என்பது சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும் சமத்துவத்திற்கு ஆதரவாகவும் போராடி வருகின்ற ஜனநாயக சக்திகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஆகும். ஆகையால் இத்தாக்குதலுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
தமிழ்பிரியன்