நான் அவசர வேலையாக சென்னையில் இருந்து குடும்பத்துடன் மதுரை சென்றேன். ‘முகூர்த்தம்’, பண்டிகை காலம் என்பதாலும் உரிய நேரத்தில் திரும்பி வர வேண்டும் என்பதாலும் அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்ய வாய்ப்பு இல்லை என்பதாலும் தனியார் பேருந்தில் முன்பதிவு செய்து கொண்டோம்.
நாங்கள் சென்றது ஆம்னி பேருந்து. இந்த குளிரூட்டப் படாத சொகுசுப் பேருந்தில் படுக்கை வசதி கொண்ட ஒரு இருக்கையின் விலை 1500 ரூபாய். மூன்று டிக்கெட் புக் செய்தோம். ரெட் பஸ் என்ற செயலி மூலமாக புக் செய்தோம்.
ஜூன் 16 ஆம் தேதி இரவு மதுரையில் பேருந்து ஏறி, 17ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் பல்லாவரத்தில் இறக்கி விடும் வகையில் டிக்கெட் புக் செய்தோம். இறங்கும் இடம் பல்லாவரம் என்று டிக்கெட்டில் போடப்பட்டிருந்தது. இந்த டிராவல்ஸ் இன் பெயர் ஐங்கரன்.
பல்லாவரத்தில் இறக்கி விட வேண்டும் என்று ஏஜென்டிடம் சொன்னபோது அதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. “பெருங்களத்தூர் அல்லது வண்டலூரில் இறங்கிக் கொள்ளுங்கள் பல்லாவரம் செல்லாது” என்று கூறினார். “டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது; டிக்கெட்டில் பல்லாவரம் என்று எழுதப்பட்டுள்ளது” என்று கூறி டிக்கெட்டை எடுத்துக்காட்டிய பின்பும் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
“இந்த டிக்கெட் புக் செய்ததற்கும் எங்கள் ட்ராவல்சுக்கும் சம்பந்தமில்லை. எங்களுக்கு அங்கு ஸ்டாப் இல்லை. எனவே நீங்கள் ரெட் பஸ் செயலியில் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறி நிராகரித்து விட்டு காலியாக இருந்த ஐங்கரன் பேருந்தை நிரப்புகின்ற வேலையில் ஈடுபட்டிருந்தார்.
ஆம்னி பஸ் பேருந்து நிலையத்திற்கு வெளியே சென்னை செல்லும் பயணிகளைப் பிடித்து வந்து அவர்கள் எந்த அளவிற்கு ஏமாறுகின்றார்களோ அந்த அளவிற்கு அவர்களிடம் பணத்தைப் பறித்துக் கொண்டு பேருந்தை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் டிக்கெட் புக் செய்யும் போது பெரும் பகுதியான டிக்கெட் புக் செய்யப்பட்டு விட்டதாக காட்டியது செயலி. ஆனால் நேரில் பார்க்கும்போது பெரும் பகுதியான இருக்கைகள் காலியாகவே இருந்தது. செயலி மூலமாக டிக்கெட் அதிகம் இல்லாதது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டிக்கெட் கிடைத்தால் போதும் என்ற மனநிலையை பயணிகள் மத்தியில் உருவாக்குகின்றார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.
படிக்க: போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் சதியை முறியடிப்போம்!
பேருந்து உரிய நேரத்தில் புறப்படவில்லை. ஏஜென்ட்கள் பேருந்தில் உள்ள சீட்டை நிரப்புவதிலே கவனம் செலுத்தி வந்தார்கள். ஒரு பயணி எழுந்து வந்து “நான் உரிய நேரத்தில் சென்னை செல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த பேருந்தில் ஏறினேன். ஏன் பேருந்தை கிளப்பாமல் இருக்கின்றீர்கள்” என்று கேட்டவுடன் பேருந்தை மெதுவாக நகர்த்தி டிக்கெட் போட்டுக் கொண்டே சாலையைச் சுற்றி வந்து டீசல் பங்கில் டீசல் போட்டுக் கொண்டே இருந்தார்கள். அதே நேரத்தில் டிக்கெட் போடுவதையும் நிறுத்தவில்லை. நானும் எனது பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்ற யோசனையிலேயே இருந்தேன்.
அந்த நேரம் பார்த்து பேருந்துக்குள் இரண்டு பயணிகள் “எங்களை ஏ.சி பஸ் என்று ஏமாற்றி காசை வாங்கி விட்டார்கள்” என்று பிரச்சனை செய்து கொண்டிருந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு எனது மகள் மற்றும் அவர்கள் இருவர் என மொத்தம் நான்கு பேர் பேருந்தின் கீழே இறங்கி பேருந்தின் முன்பாக சாலையில் அமர்ந்து கொண்டோம். எங்கள் பிரச்சனையை தீர்க்காமல் பேருந்தை ஒரு அடி கூட நகர்த்த முடியாது என்று உறுதியாக அமர்ந்தோம்.
ஏஜென்ட்களும் டிரைவரும் எங்களை மிரட்டிப் பார்த்தார்கள். இங்கு பிரச்சனை நடந்து கொண்டிருப்பதை உணர்ந்த சக பயணிகள் இறங்கி எங்களிடம் வந்து விட்டார்கள். அவர்களிடம் பிரச்சனையை சொன்ன பிறகு எங்கள் நியாயத்தை ஆதரித்து நின்றார்கள். சாலையில் சென்ற மக்களும் நின்றார்கள். கூட்டம் கூடிவிட்டது.
நான் அருகில் இருந்த போலீஸ் பூத்திற்கு சென்றேன். அங்கு யாரும் இல்லை. அந்த வழியாக போலீஸ் ரோந்து வாகனம் வந்தது. அதை மறித்து நடந்ததை சொன்னேன். உடனே அவர்கள் அங்கு வந்து விட்டார்கள். மக்கள் கூடியது போலீஸ் வந்தது இதைப் பார்த்து பீதி அடைந்த ஏஜென்ட்கள் அனைவரும் ஓடி விட்டார்கள். உடனே அங்கு பேருந்தின் ஓனர் வந்தார். எங்களை பல்லாவரத்தில் இறக்கி விடுவதாக உறுதி கூறினார். ஏ.சி பஸ் என்று ஏமாற்றப்பட்டவர்களுக்கு அவர்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார். எங்கள் போராட்டம் வென்றது.
அங்கு வந்த போலீஸ் எங்களிடம் புகார் எழுதி கேட்டார்கள். “பிரச்சனை முடிந்ததால் புகார் கொடுக்க விரும்பவில்லை. நீங்கள் வந்ததற்கு நன்றி” என்று சொல்லி நாங்கள் பேருந்தில் ஏறி விட்டோம். போராட்டம் தான் தீர்வு என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறு சான்று. போராட்டத்தின் வீரியம் என்பது பிரச்சனையின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும்.
படிக்க: வந்தே பாரத் ; வர்க்கத் தீண்டாமை ! | தோழர் வெற்றிவேல்செழியன்
அரசு பேருந்து அழகாக சொகுசாக இல்லாவிட்டாலும் தனியார் ஆம்னி பேருந்துகளை விட டிக்கெட் விலை இரண்டு மூன்று மடங்கு குறைவு. சீசன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைத்து இருக்கைகளும் நிரம்பினாலும் நிரம்பா விட்டாலும் புதிய பேருந்தாக இருந்தாலும் பழைய பேருந்தாக இருந்தாலும் டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இருக்காது. பேருந்து இடையில் பழுதாகி நின்று விட்டாலும் பயணிகளை அடுத்த பேருந்தில் ஏற்றிவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே மக்களுக்கு அனைத்து வகையிலும் பயன்படக்கூடியது அரசு பேருந்து மட்டுமே. அரசு பேருந்துகள் படிப்படியாக குறைக்கப்பட்டு போக்குவரத்து துறையே திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகின்றது.
மதுரையில் மாட்டுத்தாவணி அரசு பேருந்து நிலையத்தை விட தனியார் ஆம்னி பேருந்து நிலையம் இரண்டு மடங்கு பெரியது. இதை அரசே அவர்களுக்கு ஏற்பாடு செய்து தந்திருக்கின்றது. தொலைதூரத்திற்கு செல்லும் அரசு பேருந்துகளை விட ஆம்னி பேருந்துகள் மூன்று மடங்கு அதிகம். அனைத்து மக்களும் மலிவாக பயன்படுத்தக்கூடிய அரசு பொது போக்குவரத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி தனியார் பேருந்துகள் வளர்ந்து வருகின்றன.
ஆம்னி பேருந்துகளுக்கு டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல அவர்கள் நிலைமைக்கு தக்கவாறு டிக்கெட் விலையை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக் கொள்ளலாம் என்று மக்களை கொள்ளை அடிப்பதற்கு வழிப்பறி செய்வதற்கு சட்டப்படி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அரசு பேருந்து இல்லை என்ற நிலை வரும்போது தனியார் பேருந்தின் கொள்ளையடிக்கும் கொடூரம் எப்படி இருக்கும் என்பதை சற்று நினைத்துப் பாருங்கள்.
இன்று கூட அவர்கள் நினைத்தால் தொலைதூரப் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்க முடியும். நெருக்கடிக்கு உள்ளாக்க முடியும். அப்படி செய்தால் அரசால் அந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள முடியாது. இன்று கூட வெளி மாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை ஆம்னி பஸ்களாக இயக்கக் கூடாது என்று அரசு போட்ட உத்தரவை அவர்கள் மதிப்பதில்லை. அதை எதிர்த்து பிரச்சனை செய்கின்றார்கள். அவர்கள் அந்த அளவிற்கு போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக வளர்ந்து வருகின்றார்கள்.
வந்தே பாரத் என்ற பெயரால் சாமானிய மக்களின், நடுத்தர மக்களின் ரயில் பயணத்திற்கும் முடிவு கட்டும் வேலை விரைவாக நடந்து வருகின்றது. நாட்டின் பெருமையாக கருதப்படும் வந்தே பாரத் ரயில் நவீனமாக உள்ளது. குளிரூட்டப்பட்டுள்ளது; விரைவாக செல்கின்றது. பல வசதிகள் உள்ளது. ஆனால் டிக்கெட் விலை சாதாரண ரயிலை விட நான்கு மடங்கு அதிகம். நாட்டின் எத்தனை சதவீத மக்கள் இந்த விலை உயர்ந்த ரயிலை பயன்படுத்த முடியும். இந்த ரயிலில் முன்பதிவு இல்லாமல் பயணிக்கும் பெட்டி கிடையாது.
இதுதான் ரயில் போக்குவரத்தின் எதிர்காலம். இந்த எதிர்காலம் என்ன சொல்கிறது? பிறந்த ஊரில் வாழ வழி அற்றவன் ஊர் ஊராக சென்று, மாநிலம் வீட்டு மாநிலம் சென்று பிழைப்பவனுக்கு இருந்த ஒரே போக்குவரத்து மிக மலிவான போக்குவரத்து ரயிலில் உள்ள முன்பதிவில்லா பெட்டி மட்டுமே. எனவே, சாமானிய மக்களுக்கு இனி ரயில் போக்குவரத்து கிடையாது. பல ரயில்கள் தனியாருக்கு விற்கப்பட்டு விட்டன. அவற்றின் டிக்கெட் விலைகளும் பல மடங்கு ஏற்றப்பட்டு விட்டன. ரயிலின் இருப்புப் பாதைகள் தனியாருக்கு விற்கப்பட்டு விட்டன. பல ரயில் நிலையங்கள் தனியாருக்கு விற்கப்பட்டு விட்டன.
தமிழ்நாட்டின் கல்விக் கொள்ளையன் பச்சமுத்து ரயில் வாங்க இருக்கின்றான். லாட்டரி வியாபாரி மார்ட்டின் கோவையில் இருந்து சீரடிக்கு ரயில் விட்டுக் கொண்டிருக்கின்றான். நமது வரிப்பணத்தில் நமது தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட ரயில்கள், தண்டவாளங்கள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு தனியாருக்கு கூறு போட்டு கூவி கூவி விற்கப்படுகின்றன. இனி இருப்புப் பாதை வழியாகவும் சரி, சாலை வழியாகவும் சரி, நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பயணிக்க முடியாது என்ற நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.
இதுதான் நாட்டின் கொள்கையாகவும் சட்டமாகவும் உள்ளது. மக்களாகிய நாம் போக்குவரத்து என்ற உரிமையை சட்டப்படி கேட்பதற்கும் வழிமுறை இல்லை. இறுதியில் போராட்டம் தான் நமக்கு இருக்கும் ஒரே வழி. ஒரு தனியார் பேருந்துக்கு எதிராக நான்கு பேர் போராடலாம்; வெற்றி பெறலாம். ஆனால் தனியார்மயம் என்ற அரசின் கொள்கைக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. தனியார்மயத்திற்கு எதிரான நாடு தழுவிய அளவிலான மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டுமே நமக்கு நிரந்தர தீர்வு கிட்டும்.
தோழர் சி. வெற்றிவேல் செழியன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
தனியார்மயத்தை தடுப்போம், போராடுவோம்