டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அவருக்கு ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் ஜூன் 20 அன்று ஜாமீன் வழங்கியது. ஆனால், டெல்லி உயர் நீதிமன்றம் அந்த ஜாமீனுக்கு நேற்று (ஜூன் 21) இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு மே 10 அன்று உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த நிபந்தனையின் படி நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த மறுநாளான ஜூன் 2 அன்று திகார் சிறையில் கெஜ்ரிவால் சரணடைந்தார்.

இந்நிலையில் தான் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் விடுமுறைக்கால நீதிபதி நியாய் பிந்து (Niyay Bindu), கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20 அன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஆனால், இதை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜூன் 25 ஆம் தேதி இந்த மேல்முறையீட்டு மனுவில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


படிக்க: கெஜ்ரிவாலை விசாரிக்க என்.ஐ.ஏ – மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்


கெஜ்ரிவால் சிறையை விட்டு வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் பாசிச மோடி அரசு காட்டிய உறுதி இங்கு வெளிப்படுகிறது. அதை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலின் வார்த்தைகள் தெளிவாக உணர்த்துகிறது.

அமலாக்கத்துறை சார்பாக வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் “(கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதற்கு) உடனடியாக தடை விதிக்க வேண்டும். ஜூன் 20 அன்று இரவு 8 மணிக்கு தான் (ஜாமீன் வழங்குவதற்கான) உத்தரவு வழங்கப்பட்டது. அந்த உத்தரவு இன்னும் இணையத்தில் பதிவேற்றப்படவில்லை. ஜாமீனை எதிர்ப்பதற்கு எங்களுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை” என்று தனது வாதத்தை முன்வைத்துள்ளார். இதை உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.

ஆனால், ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை பாராபட்சமாக நடந்து கொண்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், கெஜ்ரிவாலை நேரடியாக தொடர்புப்படுத்தும் விதத்திலான ஆதாரம் எதையும் அமலாக்கத்துறை வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் தான் பாசிச மோடி அரசு எதிர்பார்த்த தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.


படிக்க: அரவிந்த் கெஜ்ரிவால் கைது – களப்போராட்டங்களுக்குத் தயங்கும் எதிர்க்கட்சிகள்


முன்னதாக கௌதம் நவ்லாகா, முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போதும், பாசிச மோடி அரசு அதிவிரைவாக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியதும், உச்ச நீதிமன்றமும் ஜாமீனுக்குத் தடை விதித்து உத்தரவிட்டதும் நம் நினைவிற்கு வருகிறது. நீதிமன்றங்களின் இதுபோன்ற அதிவேக செயல்பாடுகளானது நீதித்துறை யாருக்குச் சார்பாகச் செயல்படுகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பாசிச பா.ஜ.க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறவில்லை என்று புளகாங்கிதம் அடைந்து உட்கார நமக்கு நேரமில்லை. சிறுபான்மை (மைனாரிட்டி) அரசு என்றாலும் பாசிஸ்டுகளின் கைகளில் தான் அதிகாரம் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மோடி 2.0 என்றாலும், மோடி 3.0 என்றாலும் அது ஒரு பாசிச ஆட்சி தான்.

அரசின் அனைத்து துறைகளிலும் பாசிச சக்திகள் ஊடுருவி இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பாசிஸ்டுகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே நமது ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள முடியும்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க