விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் பகுதியில் அருந்ததியர் சாதியை சார்ந்த அழகேந்திரன் என்பவர், அதே பகுதியை சார்ந்த ‘தேவேந்திர குல வேளாளர்’ சாதியை சார்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முயன்றதை பெண்ணின் வீட்டார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 24 -ஆம் தேதி மதுரை கள்ளிக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார் அழகேந்திரன். அப்போது அப்பெண்ணின் உறவினரான பிரபாகரன் என்பவர் “உங்கள் இருவரையும் சேர்த்து வைக்கிறேன்; அது குறித்துப் பேச வேண்டும்” என்று அழகேந்திரனை ஃபோனில் அழைத்துள்ளார். அதை நம்பி அழகேந்திரன் சென்றிருக்கிறார். இதனையடுத்து கடந்த 26ஆம் தேதி காலை கள்ளிக்குடி அருகே வேலாம்பூர் கண்மாயில் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அழகேந்திரன் உடல் கிடைத்தது. இச்சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது.
இதைப் போன்று தமிழ்நாட்டில் மிகக் கொடூரமான ஆணவ படுகொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. குறிப்பாக இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து ஜூன் 26 ஆம் தேதி வரை, 7 ஆணவக் கொலை சம்பவங்கள் நடந்திருப்பதாக மதுரையிலிருந்து செயல்படும் எவிடன்ஸ் அமைப்பு அளிக்கும் புள்ளி விவரங்கள் கூறுகிறது.
சான்றாக பட்டுக்கோட்டையில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்த ஐஸ்வர்யா 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், அந்தப் பெண்ணை ஜனவரி 3 ஆம் தேதி அவரது தந்தையே தூக்கிலிட்டுக் கொலை செய்தார்.
படிக்க: அருப்புக்கோட்டை ஆணவ படுகொலை: சாதி வெறி கட்சிகளை தடைசெய்ய வேண்டும்
அதே போல், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிற்படுத்தப்பட்ட இரு வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் காதலித்துத் திருமணம் செய்தனர். இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர் இருவரையும் ஜனவரி 30 ஆம் தேதியன்று கொலை செய்தார்.
சென்னை சீனிவாசா நகரில் பட்டியலினத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருவர் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் சகோதரர்கள், ஜனவரி 31 ஆம் தேதி அப்பெண்ணின் காதலனை வெட்டிக் கொலை செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரான சுபாஷ், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர், மார்ச் 6 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற சுபாஷை நான்கு சக்கர வாகனத்தை ஏற்றிக் கொல்ல முயன்றனர். இதில் சுபாஷின் சகோதரி கொல்லப்பட்டார்.
மதுரை அவனியாபுரத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அவருடைய உறவினரான இளம்பெண்ணைக் காதலித்து வந்தார். இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர், இந்தாண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி கார்த்திக்கை கொலை செய்தனர்.
சமீபத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு சென்னை பள்ளிக்கரணையில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரான பிரவீன் என்பவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர்கள் பிப்ரவரி 24 ஆம் தேதியன்று பிரவீனை வெட்டிக் கொலை செய்தனர். இந்நிலையில் அந்தப் பெண்ணும் தனது கணவன் பிரவீன் இறந்த சில நாட்களிலே விஷம் குடித்து இறந்து போனது குறிப்பிடத்தக்கது.
படிக்க: அருப்புக்கோட்டை ஆணவ படுகொலை: சாதி வெறி ஊட்டுபவர்களைத் தனிமைப்படுத்துவோம்
இதுவரை நடைபெற்ற சாதிவெறி ஆணவப்படுகொலைகள் யாவும் ஒன்று ஆதிக்கசாதி இளைஞர் தலித் பெண்ணை திருமணம் செய்தாலோ அல்லது ஆதிக்க சாதி பெண்ணை தலித் இளைஞர் திருமணம் செய்தாலோ, ஆதிக்க சாதிவெறியர்களால் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர் மீது அல்லது தம்பதியர் இருவர் மீதும் நடத்தப்பட்ட படுகொலைகள்.
ஆனால் கோவிலாங்குளம் பகுதியில் தற்போது நடைபெற்றுள்ள ஆணவ கொலையானது பட்டியல் சாதியினருக்குள்ளே நடைபெற்றதாகும். ஒடுக்கப்பட்ட மக்களிடையே “நாங்கள் உயர்ந்தவர்கள், நீங்கள் தாழ்ந்தவர்கள்” என்ற சுய சாதி பெருமையை, அதாவது ‘ஆண்ட பரம்பரை’ என்ற உணர்வை, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் இன்று தென் மாவட்டங்களில் ஊட்டி வருகிறது. அதன் விளைவாக பல்வேறு சாதிய தாக்குதல்கள் மற்றும் கொலைகள் நடந்துவருவதை நாம் காண்கிறோம்.
குறிப்பாக தென்மாவட்டங்களில் ‘தேவேந்திரகுல வேளாளர்’ என்று சொல்லக்கூடிய பள்ளர் சாதியினர் மத்தியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றவர்கள் தங்களுடைய பிழைப்புக்காக, ஒட்டுமொத்த பட்டியலின – பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுடன் கை கோர்த்துக் கொண்டு சொந்த சாதி மக்களுக்கு சுய சாதி உணர்வை ஊட்டி வளர்த்து வருகின்றனர். அதன் விளைவாகவே அழகேந்திரன் என்ற அருந்ததியர் சாதி இளைஞன் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனவே, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும், அவர்களுடைய ஏஜெண்டுகளாக செயல்பட்டுக் கொண்டு சொந்த சாதி மக்களிடையே சுயசாதி உணர்வை ஊட்டி வரும் சாதி சங்கங்களையும், கட்சிகளையும் தடை செய்வதன் மூலமாகத்தான், இதைப் போன்ற சாதிய ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube