அரசாணை 151: மருத்துவத்துறையை கார்ப்பரேட் கையில் ஒப்படைப்பதற்கான சதி!

ஒருபுறம் நீட் எதிர்ப்பு பேசிக்கொண்டே, 50 சதவிகித சேவை இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை நகர்த்துவதன் மூலம் கார்ப்பரேட் சேவையில் தனது உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளது திமுக அரசு.

ரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் சேவை அடிப்படையில், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு சட்டமாக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதில், 8 பாடப் பிரிவுகளைத் தவிர மற்ற பிரிவுகளுக்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வதற்கான அரசாணை 151-ஐ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஜூலை 1 அன்று வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் காது– மூக்கு– தொண்டை, மனநலம், அவசரக்கால சிகிச்சை உள்ளிட்ட துறைகளில் சேர வேண்டும் என்றால், அரசு மருத்துவர்கள் பொதுக் கலந்தாய்வில் பங்கேற்கும் நிலை ஏற்பட்டது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


படிக்க: கோவை அரசு மருத்துவமனையில் கட்டணப்பிரிவு மருத்துவத்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் தி.மு.க.!


இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அகிலன் கூறும்போது, “அரசு மருத்துவர்களுக்கு முதுகலை படிப்புகளில் வழங்கப்படும் 50 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதனால் கிராமப்புறம் மற்றும் மலைப்பகுதியில் சிறப்பு மருத்துவ சேவை பாதிக்கப்படும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட இந்த சேவை ஒதுக்கீட்டை 3 ஆண்டு காலம் நீதிமன்றத்தில் போராடி முதுகலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித ஒதுக்கீடு பெறப்பட்டது.

குறிப்பிட்ட மருத்துவப் பிரிவில் மட்டும் 50 சதவிகித இட ஒதுக்கீடு என்பது நியாயமற்றது. மேலும், இதேநிலை தொடர்ந்தால் சேவை அடிப்படையில் இட ஒதுக்கீடே இருக்காது என்ற நிலை ஏற்படுமோ என்ற அச்சமும் உள்ளது. எனவே, முதுகலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித சேவை இட ஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும்.

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக 21 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி, உச்சநீதிமன்றம் சென்று தீர்ப்பை பெற்றோம். அதன் அடிப்படையில் போடப்பட்ட அரசாணை 463 ஐ சட்டமாக தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.

நீட் தேர்வினை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி எதிர்ப்பை தெரிவிப்பது போல், அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கும் சட்டம் இயற்ற வேண்டும். முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு முன்பே இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது போல, இந்த சேவை ஒதுக்கீடு ரத்தும் சமூக நீதிக்கு எதிரானது. எனவே அரசாணை 151ஐ ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம்” என தெரிவித்தார்.


படிக்க: நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை!


உண்மையில், திமுக அரசின் இந்த நடவடிக்கை ஆபத்தான ஒன்றாகும். அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்வதை நோக்கி நகர்த்தும் ஒரு நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. ஒருபுறம் நீட் எதிர்ப்பு பேசிக்கொண்டே, 50 சதவிகித சேவை இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை நகர்த்துவதன் மூலம் கார்ப்பரேட் சேவையில் தனது உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளது திமுக அரசு.

கட்டமைப்பில் குறைபாடுகள் இருந்தாலும், ஒப்பீட்டளவில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மருத்துவக் கட்டமைப்பில் முதன்மையான மாநிலமாகத் திகழ்கிறது. ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் காரணமாகத்தான் தேவையான அளவு மருத்துவப் பேராசிரியர்கள் உருவாக்கப்பெற்று, அதனடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளும் அதிகளவில் தொடங்கப்பட்டன. இதனால் கிராமங்கள், தாலுகாக்களில் மக்களுக்கு இலவச மருத்துவம் உறுதி செய்யப்பட்டது. கிராமப்புறங்கள் வரை அரசு மருத்துவக் கட்டமைப்பின் இணைப்பு மக்களின் நல்வாழ்வில் முக்கியப் பங்காற்றுகிறது. இதில் அரசு மருத்துவர்களின் பங்களிப்பு முக்கியமானது.

அப்படியிருக்கையில், திமுக அரசின் இந்த நடவடிக்கையானது, அரசு மருத்துவக் கட்டமைப்பைச் சீரழித்து, மருத்துவத்துறையை கார்ப்பரேட் கையில் முழுமையாக ஒப்படைக்கும் சதியின் ஒரு அங்கமாகவே பார்க்க வேண்டியுள்ளது. இது கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்களை மேலும் மோசமான நிலையை நோக்கித் தள்ளும் ஒன்றாகும். அந்த வகையில் அரசு மருத்துவர்களின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டியது நமது கடமையாகும்.


இனியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க