கென்யாவில் புதிய அமைச்சரவை: அதிபரின் நாடகத்தை நிராகரித்த மக்கள்

அதிபர் ரூடோவின் நாடகத்தை நம்ப மக்கள் தயாராக இல்லை. அவர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

கென்யாவில் புதிய அமைச்சரவை தற்போது பதவியேற்றுள்ள நிலையில், அதிபர் பதவி விலகக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 8 அன்று தலைநகர் நைரோபியில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் போராடும் மக்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

அதிபர் வில்லியம் ரூடோ தனது அனைத்து அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்டு “பரந்த அடிப்படையிலான” அரசாங்கம் என்ற ஒன்றை அவர் அமைத்தார். ஆனால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

நகரத்தில் வணிகங்கள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன மற்றும் பொது போக்குவரத்தும் முடங்கியிருந்தது. நகரத்திற்கு செல்லும் பாதைகளிலும் போலீசார் சாலைத் தடைகளை ஏற்படுத்தினர். ஆகஸ்ட் 8 காலை புதிய அமைச்சர்கள் பதவியேற்ற அதிபர் அலுவலகமும் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டது.

சிவில் சமூக குழுக்கள், கென்யாவின் சட்ட சங்கத்துடன் சேர்ந்து, ஆர்ப்பாட்டங்களின் போது மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. மேலும் சீருடை அணியாத போலீசாரை நிறுத்துவதையும், அடையாளமிடப்படாத வாகனங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு போலீசை வலியுறுத்தின.

கென்யாவில் ஜூன் 18 அன்று ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. வரிகளை உயர்த்தியிருக்கும் ஒரு சர்ச்சைக்குரிய நிதி மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து ஆரம்பத்தில் போராட்டங்கள் தொடங்கின.

ஜூன் 25 அன்று, நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் மக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கென்ய மனித உரிமைகளுக்கான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது.

போராட்டம் வீரியமாக நடைபெற்றதால், கென்ய மக்களின் உணர்வை மதித்து இந்த மசோதாவில் கையெழுத்திடப் போவதில்லை என்று அதிபர் ரூடோ கூறி மீண்டும் அந்த மசோதாவை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார்.

ஆனால், அதிபர் ரூடோவின் நாடகத்தை நம்ப மக்கள் தயாராக இல்லை. அவர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். ஒரு அமைச்சரைத் தவிர மற்ற அனைவரையும் பதவி நீக்கம் செய்தார் ரூடோ. ஆனால் போராட்டங்கள் புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னரும் தொடர்ந்து வருகிறது.


ராஜேஷ்

நன்றி: அல் ஜசீரா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க