கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில், வரியை பல மடங்கு உயர்த்தக் கூடிய “நிதி மசோதா 2024” என்ற மக்கள் விரோத சட்டம், கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்தது; மசோதா நிறைவேற்றப்படுவதற்கு எதிராக #நாடாளுமன்றத்தை_கைப்பற்று (#OccupyParliament) என்ற ஹாஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்ட அன்று, நாடாளுமன்றம் முற்றுகையிடப்பட்டு தீ வைக்கப்பட்டது.
ஏற்கெனவே, 2022-ஆம் ஆண்டு அதிபர் வில்லியம் ரூட்டோ பதவிக்கு வந்தது முதல் பலமுறை வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இம்மசோதா நடைமுறைக்கு வந்தால் ரொட்டிக்கு 16 சதவிகிதம், சமையல் எண்ணெய்க்கு 25 சதவிகிதம் என நாப்கின் முதற்கொண்டு அத்தியாவசிய பொருட்களின் வரி பல மடங்கு உயரும்.
எனவே, இம்மசோதாவிற்கு எதிராக லட்சக்கணக்கான கென்ய மக்களும் குறிப்பாக இளைஞர்களும் தெருக்களில் இறங்கிப் போராட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கினர். ஆனால், அதிபர் வில்லியம் ரூட்டோ தலைமையிலான கென்ய அரசு போராடும் மக்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளையும், அரசு ஆதரவாளர்கள் என்ற பெயரில் குண்டர் படையை இறக்கிவிட்டு வன்முறையையும் கட்டவிழ்த்துவிட்டது. தடியடி நடத்துவது, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என போராடும் மக்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டனர்.
இதனை அம்பலப்படுத்தும் விதமாக, போராடுபவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடும் போலீஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள், தொலைபேசி எண்கள், அடையாள எண்கள், குடும்ப விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை போராடும் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனையடுத்து, கென்ய மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் போலீசின் வன்முறைக்கு எதிராகவும் உலகம் முழுவதிலுமிருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.
மேலும், “ஜென் சி தலைமுறை” என்று அழைக்கப்படுகிற 1990-களின் பிற்பகுதியிலிருந்து 2010-களின் முற்பகுதி வரை பிறந்த இளைஞர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துவருவதால் இதை “ஜென் சி போராட்டம்” (Gen Z protests) என்று குறிப்பிட்டு பத்திரிகைகள் கட்டுரைகள் எழுதத் தொடங்கின. இணைய உலகில் வாழும் இந்த இளைஞர்கள் எக்ஸ் (X), டிக் டாக் (TikTok), இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் மே – ஜூன் மாதங்களில் ஆயிரக்கணக்கானோரை இம்மசோதாவிற்கு எதிராக ஒன்றிணைத்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு(AI) கருவியான சாட் ஜி.பி.டி-யைப் (ChatGPT) பயன்படுத்தி “நிதி மசோதாவை” பல உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்த்து இணையத்தில் பரப்பி பிரச்சாரம் செய்துள்ளனர். அதேபோல், ‘செல்லோ’ (zello) என்ற செயலியை போராட்டக் களத்தில் பயன்படுத்தியுள்ளனர். போலீஸ் எங்கு உள்ளனர் என்பது குறித்து முன்னெச்சரிக்கை தகவல்களை பரிமாறிக் கொள்ள வாக்கி டாக்கி (Walkie-Talkie)போல் இதைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஒடுக்குமுறைகளால், இளைஞர்களின் போராட்டத்தை தடுக்க முடியாத கென்ய அரசு அமைச்சரவையை கலைப்பதாக அறிவித்தது. மேலும், ஜூன் 28 அன்று “மக்களின் உரத்த குரலை ஒப்புக்கொள்கிறேன்” என்றுக் கூறி அதிபர் ரூட்டோ சட்டத்தைத் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தார்.
ஆனால், இவற்றையெல்லாம் கண்டு ஏமாற மக்கள் துளியும் தயாராக இல்லை என்பதையே ஒரு மாதத்திற்கும் மேலாக கென்யாவில் தீவிரமாக நடத்துவரும் மக்கள் போராட்டங்கள் காட்டுகிறது. அமைச்சரவையைக் கலைப்பதாக நாடகமாடிவிட்டு, சரிபாதி அமைச்சர்களுக்கு மீண்டும் பதவி வழங்கிய அதிபர் ரூட்டோவின் நடவடிக்கை அம்மக்களுக்கு மேலும் ஆத்திரமூட்டும் விதமாக அமைந்தது. இதன் காரணமாக, அதிபர் ரூட்டோ பதவி விலகும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்று கென்ய மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். தற்போதுவரை 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 350-க்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். பலர் போலீசால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
ஆளும் வர்க்கத்தின் எந்த தகிடுதத்தத்திற்கும் பணியாமல், அடுத்தடுத்த கோரிக்கைகளை முன்வைத்து கென்ய மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருவதானது, “நிதி மசோதா 2024”-க்கு எதிராக தொடங்கிய போராட்டம் ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பிற்கு எதிரான போராட்டமாக வளர்ச்சியடைந்துள்ளது என்பதையேக் காட்டுகிறது. அதே சமயம், போராடும் மக்கள் மத்தியில் சரியான மாற்றை முன்வைத்து அவர்களை அமைப்பாக்குவது முன் நிபந்தனையாக உள்ளது. இலங்கை மக்களின் பேரெழுச்சியை தொடர்ந்து, மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவது ஆளும் வர்க்கத்தை நடுங்க வைக்கிறது.
பானு
(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube