கண்ணப்பர் திடல் வீடற்றோர் விடுதி மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு
– மக்கள் போராட்டத்தின் வெற்றி
நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமை கூட்டமைப்பு அறிக்கை
சென்னையின் மையப் பகுதியான ரிப்பன் மாளிகை முதல் சூளை ரவுண்டானா வரையுள்ள சைடனாம்ஸ் ரோட்டில். நடைபாதையில் பல ஆண்டுகாலம் வசித்து வந்த மக்களை நேரு விளையாட்டு அரங்கில் ஆசிய தடகளப் போட்டிகள் நடத்துவதற்காக 22-02-2002 அன்று அன்றைய அதிமுக அரசு அகற்றி, இலங்கை அகதிகள் தங்கவைக்கப் பட்டிருந்த ஆதரவற்றோர்கான வீடற்றோர் விடுதியில் மூன்று மாதங்களுக்குள் மாற்று குடியிருப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன் தற்காலிகமாக தக்கவைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்தும் வீடுகள் வழங்கப்படாமல் அகதிகள் போலேவே தங்க வைக்கப்பட்டிருந்தனர். குடிசை மாற்று வாரியமும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் பெற்று பல விதிமுறைகள் மாற்றப் பட்டிருந்த சூழலில், கண்ணப்பர் திடல் மக்களின் நிலையறிந்து நமது கூட்டமைப்பின் சார்பில் அவர்களுக்கு உடனடியாக வீடுகளை வழங்கவேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை நடத்திட முடிவுசெய்து அம்மக்களிடம் பேசினோம்.
20 ஆண்டுகள் ஆட்சிகள் மாற்றினாலும் காட்சிகள் மாறாத நிலையில், தீவிர போராட்டத்தில் கூட்டமைப்பின் வழிகாட்டுதலில் போராடத் தொடங்கினர்.
அதில் குறிப்பாக 15-12-2022 மற்றும் 26-01-2023 அன்று நடத்திய ரிப்பன் மாளிகை முற்றுகைகள். அந்த இரண்டு முறையும் அப்போதைய மாநகராட்சி ஆணையர்களான ககன் டிப் சிங் பேடி ராதாகிருஷ்ணன் ஆகியோரை கண்ணப்பர் திடல் மக்களுடன் கூட்டமைப்பு தோழர்கள் சந்தித்து இவர்கள் வெளியேற்றப்பட்டது 2002, பங்களிப்புத் தொகை திட்டம் கொண்டுவரப்பட்டது 2021; எனவே இவர்களை அன்றைய விதிமுறைகளின் படி தான், அதாவது 2002ல் குடிசை மாற்று வாரியத்தில் என்ன விதிமுறைகள் இருந்தனவோ அந்த விதி முறையின்படி தான், அணுக வேண்டும் என்றும், அட்டவணை சாதி மக்களே EWS திட்டத்தின் படி அணுக கூடாது என்றும், இவர்களை வீடற்றோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது மாநகராட்சி விதிமுறைகளுக்கு முரணானது, கிட்டத்தட்ட 20 வருடம் சட்டவிரோதமாக இப்படி அடைக்கப்பட்டுள்ள மக்கள் காச நோயினாலும் தற்கொலையினாலும் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்; அதற்கு ஒரு வகையில் அரசுதான் முழு பொறுப்பு, அரசு தான் நியாயப்படி இவர்களுக்கு நட்டயீடு வழங்க வேண்டும் என்று முறையிட்டோம்.
பல்வேறு கட்டங்களில்…..
02-01-2023 அன்று கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட்டு அடையாள அட்டை ஒப்படைப்பு போராட்டம்.
04-01- 2023 அன்று நடத்திய நிலவுரிமை மாநாடு.
14-08-23 அன்று அதே பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம்.
22-08-23 அன்று நடைபெற்ற மறியல் போராட்டம் ஆகியவை அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கை அம்பலப்படுத்தியது.
ஒவ்வொரு போராட்டத்தின் வெற்றியின் இறுதியில் கணக்கெடுப்பு மாநகராட்சியின் சிறப்புக் கூட்டங்கள் நடத்தி வீடுகள் வழங்குவதாக சொல்லி வந்தனர்.
ஆனால் பங்களிப்பு தொகை கேட்டதின் அடிப்படையில் 24-07-2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இறுதி கட்ட போராட்டத்தை தொடர மக்களுடன் கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு தேவைப்பட்டால் சிறைக்கு செல்லவும் தயாராக முடிவு செய்தோம்.
இந்நிலையில் 25-08-2024 தேதி வீடுகள் வழங்கவுள்ளதாக கூறி அதற்கான கூட்டம் 22-8-2024 அன்று காலை நடத்தப்பட்டது.
அதில் பங்களிப்பு தொகை கடன் பற்றி பேச தனியார் வங்கி அதிகாரிகளை அழைத்து வந்த மாநகராட்சி அலுவலர்கள் மக்களின் நிலை உணராமல் லோன் ஏஜன்ட்களை போல் செயல்பட்டனர். இதனால் கடும் சினம் கொண்டு மக்களும் கூட்டமைப்பு தோழரும் அதிகாரிகளின் இந்த செயலை கண்டித்து உடனடியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு நடந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு ஏற்படாததால், மீண்டும் ஒரு மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். அதில் செல்வா உள்ளிட்ட தோழர்களும் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டு மாலை மாநகராட்சி அதிகாரி ஒருவரை அழைத்து வந்து நடத்திய பேச்சு வார்த்தையில் வீடு வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டது. 23/08/24 அன்று கண்ணப்பர் திடல் மக்களுடன் சிபிஎம் மும் பங்களிப்புத் தொகையின்றி மக்களை குடியமர்த்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலும் ஒரு மனுவை அளித்தனர். கடந்த ஒரு வாரங்களாக மாநகராட்சியின் உயர்மட்ட அளவுகளில் நடந்த பேச்சு வார்த்தைகளில், மூன்றில் இரண்டு பங்கு மாநகராட்சியும் மூன்றில் ஒரு பங்கு மக்களும் பங்களிப்பு தொகையை செலுத்த மாநகராட்சி தரப்பில் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனையும் மக்கள் ஏற்கவில்லை. இறுதியாக மக்கள் செலுத்த வேண்டிய மூன்றில் ஒரு பங்குத் தொகையினை தமிழ்நாடு அரசு செலுத்தும் என்று ஒப்புக்கொண்டு பங்களிப்புத் தொகையின்றி மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரில் கண்ணப்பர் திடல் மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு பணிந்தது.
இது கால் நூற்றாண்டுகளாக மக்கள் போராட்டத்தின் மகத்தான வெற்றியாகும். தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த போராட்டத்திற்கு பல்வேறு மக்கள் அமைப்பினரும் கட்சிகளும் தங்களது ஒவ்வொரு போராட்டங்களிலும் மாநாடு மேடைகளிலும் கண்ணப்பர் திடல் மக்களின் கோரிக்கை ஓங்கி ஒலித்தது. இந்த சமயத்தில் அந்த அமைப்புகள் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமை கூட்டமைப்பு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நகர்ப்புற குடியிருப்பு நில உரிமை கூட்டமைப்பு,
80154 72337, 8939136163, 95000 56554.
***
மக்கள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஜனவரி 2023-இல் வெளியிடப்பட்ட காணொளி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram