திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளம் பகுதியில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில்  “டி” பிளாக்கில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி அதிகாலையில் வீடுகள் விரிசல் விடுவதை கண்ட மக்கள் வீட்டைவிட்டு வெளியேறினர். காலை 10:30 மணியளவில் கட்டிடம் முழுமையாக இடித்து விழுந்தது. இக்கட்டிடத்தில் குடியிருந்த 24 குடும்பங்கள் தங்கள் உடைமைகளைக் கூட எடுக்க முடியாத நிலையில் அனைத்தும் மொத்தமாக இடிபாடுகளில் சிக்கிவிட்டது என்று கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.
தன் வீடு, உடைமைகளை இழந்த பிரேம் குமார், இரண்டு நாட்களுக்கு முன்பே கட்டிடத்தில் விரிசல் இருப்பதைக் கண்டதாகக் கூறினார்.
“கதவு பழுதானதால் திறக்க முடியவில்லை. அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம். இரண்டு நாட்கள் கழித்து டிசம்பர் 27 காலைதான் அதிகாரிகள் கட்டிடத்தை ஆய்வுசெய்ய வந்தனர். திடீரென குடியிருப்பில் இருந்த அனைவரையும் வெளியே வருமாறு கூறினர். வீட்டிலிருந்த உடமைகளைக் கூட எடுக்க எங்களுக்கு நேரமில்லை. நாங்கள் வெளியே வந்த சிறிது நேரத்தில் “டி” பிளாக் கட்டிடம் முழுவதுமாக இடித்து விழுந்தது. நான் இங்கு 20 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எங்கள் குடுப்பத்தினரின் நகை, பணம், ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் என அனைத்தும் தற்போது இடிபாடுகளின் சிக்கிக்கொண்டது. மாற்று துணிக்கூட இல்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல் என் குழந்தைகள் மனைவியுடன் நடுத்தெருவில் நிற்கிறேன்” என்று கண்கலங்கிக் கூறினார்.
படிக்க :
திருவாரூர் கட்டிடம் இடிந்து 5 பேர் பலி – விபத்தா படுகொலையா ?
சென்னை போரூர் கட்டிட விபத்து – புகைப்படங்கள்
இதற்கிடையே பக்கத்தில் இருந்த “சி” பிளாக்கில் நான்கு வீடுகள் சேதமடைந்தன. விபத்து நடந்த இடத்திற்கு வந்த அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிவாரணத் தொகையாக ரூ. 1 லட்சம் பணமும், நிவாரணப் பொருட்களும் உடனே வழங்கப்படும் என்றார். “மாற்று இடத்தில் 28 குடும்பங்களையும் தங்க வைக்க ஏற்பாடு செய்கிறோம்; இதே இடத்தில் புதிய குடியிருப்புகள் கட்டித் தருகிறோம்” என்று உறுதியளித்தார். 1993-ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் தற்போது சேதமடைந்திருப்பதாகவும், சென்னையில் 23,000 குடிசைமாற்று வாரிய வீடுகள் இருப்பதாகவும் அதை இடித்து மீண்டும் கட்டவேண்டும். அதில் முதல் கட்டமாக 7000 வீடுகள் கட்டப்படும்” என்றார்.
000
கடந்த ஆகஸ்டு மாதம் சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கட்டிடங்கள் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கையால் தொட்டாலே சிமெண்டுகள் சரிவது, படிக்கட்டுகள், அலமாரிகள் உடைவது போன்றவை வீடுகள் இடிந்துவிழும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும்; தண்ணீர், மின்விளக்குகள் போன்ற அடைப்படை வசதிகள்கூட செய்துதரவில்லை என்றும் அங்கு வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவற்றை சரி செய்ய வேண்டும் என்றால் வாரியத்திற்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பணம் தரவேண்டும் என்று அதிகாரிகள், அதிமுக மற்றும் திமுக அமைச்சர்கள் கூறியதாகவும் மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
எனவே புளியந்தோப்பாக இருக்கட்டும், தற்போது இடிந்து விழுந்த திருவொற்றியூராக இருக்கட்டும் இரண்டுமே தரமற்ற வகையில் கட்டப்பட்ட அரசு குடியிருப்புகள் தான். அரசு அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனங்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் கூட்டுசேர்ந்து ஊழல் செய்ததன் விளைவே இந்தக் கட்டிட விபத்துகள்.
திருவொற்றியூர் கட்டிடங்கள் கட்டப்பட்ட வெறும் 23 ஆண்டுகளில் சேதமடைந்து, இடிந்து விழுகின்றன. புளியந்தோப்பு கட்டிடங்கள் கட்டப்பட்ட ஒரு வருடத்திலேயே தரமற்ற கட்டிடங்களாக மாறி நிற்கிறது. கட்டிடங்கள் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு விடப்படும் டெண்டர்களில், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தனியார் முதலாளிகள் என அனைவரும் இணைந்து நடத்தும் பெரும் கொள்ளையின் காரணமாகவே இத்தகைய தரமற்ற கட்டிடங்கள் கட்டப்படுகின்றன, என்பதை திருவொற்றியூர் கட்டிட விபத்து நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இவ்வகை டெண்டர் ஊழல்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதி, போலீசு ஆகிய அதிகார வர்க்கத்தினரின் குடியிருப்புக்கள் கட்டும்போது நிகழ்வது இல்லை. அவை அனைத்தும் தரமான கட்டிடங்களாகவே கட்டப்படுகின்றன. ஆனால் உழைக்கும் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மிகவும் தரம் குறைவானதாக இருக்கின்றன.  உழைக்கும் மக்களுக்கான அரசு அமையாதவரை மக்களின் உடைமைகளை, உயிர்களை இது போன்ற தரமற்ற கட்டிட இடிபாடுகளின் மூலம் இழப்பதை தடுக்க முடியாது.
வினவு செய்திப் பிரிவு
சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க