ஜெர்மனி தேர்தலும் பாசிஸ்டுகளின் வளர்ச்சியும்

"1949க்கு பிறகு ஒரு வெளிப்படையான தீவிர வலதுசாரி கட்சி மாநிலத் தேர்தல்களில் பலமான சக்தியாக இருப்பது இதுவே முதல்முறையாகும். இது பெரும்பாலான மக்களை அச்சத்தில் தள்ளியுள்ளது" என்று கிரீன்ஸ் கட்சியின் தலைவர் ஓமிட் தெரிவித்தார்.

டந்த ஞாயிறு அன்று (01/09/24) கிழக்கு ஜெர்மனியின் இரண்டு மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில், துரிங்கியா (Thuringia) மாநிலத்தில் ஜெர்மனிக்கான மாற்று (Alternative for German, AfD) என்கிற தீவிர வலதுசாரி கட்சி 32.8 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஜெர்மனியின் தேசிய எதிர்க்கட்சியான கிரிஸ்டியன் டெமாக்ரட்டிக் யூனியன் (CDU) கட்சி 23.6 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும், புதிதாகத் தோன்றிய ‘இடதுசாரி’க் கட்சியான சஹ்ரா வேகன்நெக்ட் அலையன்ஸ் (BSW), 15.8 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு தீவிர வலதுசாரிகள் தேர்தலில் வென்றிருப்பது இதுவே முதல்முறையாகும். ஜெர்மனிக்கான மாற்று (AfD) கட்சி புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராகப் பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.

மற்றுமொரு மாநிலமான சாக்ஸ்சனி (Saxony) மாநிலத்தில், கிரிஸ்டியன் டெமாக்ரட்டிக் யூனியன் 31.9 சதவீத வாக்குகளைப் பெற்று தேர்தலில் வென்றிருந்தாலும் ஜெர்மனிக்கான மாற்று (AfD) 30.6 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகள் 1990-களில் இணைந்ததிலிருந்தே கிரிஸ்டியன் டெமாக்ரட்டிக் யூனியன் (CDU) தான் ஆட்சி செய்துவருகிறது. சஹ்ரா வேகன்நெக்ட் அலையன்ஸ் (BSW) 11.8 சதவீத வாக்குகளைப் பெற்று இதிலும் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது.

ஆனால், ஜெர்மனியில் தற்போது ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் மத்திய-இடது கூட்டணி அரசு இந்த தேர்தலில் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. இக்கூட்டணியில் உள்ள அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஷின் சோசியல் டெமாக்ரட்ஸ் கட்சி மட்டும் தான் தேர்தலில் 5 சதவீத வாக்குகள் பெறவேண்டும் என்ற தகுதியைக் கடந்துள்ளது. அதனுடன் கூட்டணியில் உள்ள கிரீன்ஸ் மற்றும் ஃப்ரீ டொமக்ரட்ஸ் கட்சிகள் அதைக்கூடப் பெறவில்லை. தற்போது வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளால் அரசாங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


படிக்க: ஜெர்மனியை உலுக்கிய இரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!


இவ்வெற்றிகளைத் தீவிர வலதுசாரிகள் கொண்டாடுகின்றனர். அக்கட்சியின் முக்கியமான தலைவரான ஜோர்ன் ஹோக்கே,”இது ஒரு வரலாற்று வெற்றி, பெருமையாக உணர்கிறோம், அரசை நடத்துவதற்கான பொறுப்பை எடுத்து கொள்வதற்குத் தயாராக உள்ளோம்” என்று ஞாயிறன்று கூறினார். இவர் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராகவும் பலமுறை பேசியுள்ளார். ஆனால், துரிங்கியாவின் சட்டமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஜெர்மனிக்கான மாற்று (AfD) கட்சி தேர்தலில் வென்றிருந்தாலும் அரசமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறவில்லை. தீவிர வலதுசாரிகளுடன் சேர்ந்து அரசமைப்பாதற்குப் பிற கட்சிகள் மறுத்துவிட்டனர்.

மேலும், புதிதாகத் தோன்றிய இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் சஹ்ரா வேகன்நெக்ட் அலையன்ஸ் (BSW) கட்சி AfD யின் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான கொள்கையோடு ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஜெர்மனியில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான மனநிலை வளர்க்கப்பட்டு வருகிறது என்ற அபாயத்தை வெளிப்படுத்துகிறது.

இன்னும் மூன்று வாரங்களில் மற்றொரு கிழக்கு மாநிலமான பிராண்டன்பர்க்கிற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அதிலும் ஏ.ஃப்.டி தான் முன்னிலை பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், ஒருவருடத்தில் நடைபெறவுள்ள ஜெர்மனியின் கூட்டாட்சி தேர்தலிலும் ஏ.ஃப.டி தேசியளவில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது தீவிர வலதுசாரிகளின் செல்வாக்கு வளர்ந்து வருவதை உணர்த்துகிறது.


படிக்க: பெர்லின் நகரை ஸ்தம்பிக்க வைத்த ஜெர்மன் விவசாயிகள்!


“1949க்கு பிறகு ஒரு வெளிப்படையான தீவிர வலதுசாரி கட்சி மாநிலத் தேர்தல்களில் பலமான சக்தியாக இருப்பது இதுவே முதல்முறையாகும். இது பெரும்பாலான மக்களை அச்சத்தில் தள்ளியுள்ளது” என்று கிரீன்ஸ் கட்சியின் தலைவர் ஓமிட் தெரிவித்தார்.

“இந்த தேர்தல் முடிவுகள் கசப்பானதாக உள்ளது. ஏ.ஃப்.டி ஜெர்மனியைச் சேதப்படுத்துகிறது; பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்துகிறது; சமூகத்தைத் துண்டாடுகிறது மற்றும் நாட்டின் மரியாதையைக் கெடுக்கிறது. வலதுசாரிகள் இல்லாத அரசைப் பிற கட்சிகள் உருவாக்க வேண்டும்” என்று அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஷ் தெரிவித்தார்.

ஒருபுறம் ஏ.ஃப்.டி கட்சி வளர்ந்து வந்தாலும், இன்னொருபுறம் இந்த தீவிர வலது கும்பலுக்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. மக்களின் போராட்டங்களும் பாசிச சக்திகளுக்கு எதிரான சித்தாந்த ரீதியான அணிதிரட்டலும் தான் பாசிசத்தைத் தடுப்பதற்கு ஒரே வழி. வரலாறு நமக்குப் படிப்பித்த பாடமும் அதுதான்!


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க