சாம்சங் தொழிலாளர்கள், தொழிற்சங்க உரிமைக்காக செப்டம்பர் 16 அன்று 8- ஆவது நாளாக தங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் நடத்த முயன்றனர். இந்நிலையில், தமிழ்நாடு போலீசு அராஜகமான முறையில் அவர்களை முன் கூட்டியே கைதுசெய்தது.

பெரும்பான்மை தொழிலாளர்கள் இடம் பெற்றுள்ள தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும்; “சாம்சங் இந்தியா” தொழிலாளர் சங்க கோரிக்கைகள் மீது  பேச்சுவார்த்தை நடத்த  ஒப்புக்கொள்ள வேண்டும்; ஆலைக்குள் நிறுவனத்திற்கு ஆதரவான கமிட்டியில் கையெழுத்து பெறும்  நடவடிக்கைகளை நிர்வாகம் கைவிட வேண்டும்; வேலை நிறுத்த போராட்டத்தில் சுமூக தீர்வுகாண மாவட்ட ஆட்சியர் நேரடியாகத் தலையிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 16 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி  ஊர்வலமாகச் செல்ல முயன்றபோது, தொழிலாளர்கள் அனைவரையும் போலீசு கைது செய்தது.

காஞ்சிபுரம் நகரம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகில் உள்ள சி.ஐ.டி.யு அலுவலகத்திலிருந்த சி.ஐ.டி.யு மாநிலச் செயலாளர் முத்துக்குமாரையும் போலீசார் கைது செய்தனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகளில் வந்த சாம்சங் தொழிலாளர்களை போலீசார் ஆங்காங்கே, பேருந்தை மடக்கி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

போராட்டத்திற்காக வந்த 120-க்கும் மேற்பட்டவர்களைப் போலீசு கைது செய்தது. மேலும், காலையில் கைது செய்யப்பட்ட முத்துக்குமாரை மாலை வரை எங்கு வைத்துள்ளார்கள் என்பதைப் போலீசு தெரிவிக்கவில்லை. இரவு 8 மணியளவில் முத்துக்குமார், சசி, ரவி ஆகிய மூவரையும் ரிமாண்ட் செய்தது போலீசு. பின்னர், அனைவரும் இரவில் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.


படிக்க: சங்கம் அமைப்பதைத் தடுக்கும் சாம்சங் இந்தியா: காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் துவக்கிய தொழிலாளர்கள்


சாம்சங் தொழிலாளர்கள் கைது  செய்யப்பட்ட பின்னணியில்,  சி.ஐ.டி.யு  மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து, தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து மனு ஒன்றினை வழங்கினார். பின்னர் காஞ்சிபுரம் பத்திரிகையாளர் அரங்கில் செய்தியாளர்களையும் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: “சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் கடந்த இரண்டரை மாதத்துக்கு முன்பு தொழிலாளர் உரிமைகளுக்காக அமைக்கப்பட்ட சங்கத்தைக் கலைக்க வேண்டும் அல்லது கடுமையாக அதை உடைக்க வேண்டும் என்று நிர்வாகம் பெரும் முயற்சிகளைச் செய்து வருகிறது. தொழிலாளர்களை மிரட்டி இடமாற்றம், பணியிட மாற்றம் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதை எதிர்க்கும் தொழிலாளர்களைத் தனி அறையில் வைத்து கொடும் சித்ரவதை செய்கிறது. நிர்வாகம் அமைக்கும் கமிட்டியில் சேர நிர்ப்பந்திக்கின்றனர்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் தமிழகத்தில், காஞ்சிபுரத்தில் தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கத்தை அமைப்பதற்கு உரிமை உண்டா? இல்லையா? என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். சட்டத்தில் இடம் இல்லை என்கிறது நிர்வாகம். இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. தொழிலாளர்களுக்காகப் போராடிய இ. முத்துக்குமாரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது  செய்தோம் என்கின்றனர் போலீசார். ஆனால் அவரை எங்கு வைத்துள்ளனர் என்று அவரது குடும்பத்திற்கே தெரியப்படுத்த மறுக்கின்றனர். தெரியப்படுத்தவும் இல்லை. இதெல்லாம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எட்டு மணி நேர வேலைச் சட்டத்தை  மீறி, 11 மணி நேரம் வேலை செய்யத் தொழிலாளர்களை நிர்வாகம் கட்டாயப்படுத்துகின்றது. ஆனால் அப்படிச் செய்தால் 2 மடங்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதையும் அவர்கள் நடைமுறைப்படுத்தத் தயாராக இல்லை. மொத்தத்தில் இது தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையாக இருப்பதால் சம்பந்தப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளைக் கூட சந்தித்து நாங்கள் முறையிட உள்ளோம். தேவைப்பட்டால் இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சரைக் கூட நாங்கள் நேரில் சந்தித்துப் பேசத் தயாராக உள்ளோம். அரசியல் கட்சி ஆதரவையும் கூட நாங்கள் கோரவுள்ளோம்” என்றார்.


படிக்க: கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான சாம்சங் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!


“அடுத்தகட்டமாக மாநிலம் முழுவதும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இதர பகுதி  தொழிலாளர்கள் ஆதரவு இயக்கத்தில் ஈடுபடவுள்ளனர். சி.ஐ.டி.யு அகில  இந்திய பொதுச்செயலாளர் தபன் சென் காலையில் என்னிடம் தொலைப்பேசியில் பேசினார். சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய அளவில் சி.ஐ.டி.யு சங்கங்கள் சார்பில் இயக்கங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நிர்வாகம் தயாராக இல்லை. பேசுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய மாநில அரசும் தொழிலாளர் துறையும் நிர்வாகத்திற்குச் சார்பாக நடந்து கொண்டிருக்கின்றன. திமுக அரசின் தொழிலாளர்கள் மீதான இந்த அடக்குமுறைக்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.


தினேஷ்

செய்தி ஆதாரம்: தீக்கதிர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க