சங்கம் அமைப்பதைத் தடுக்கும் சாம்சங் இந்தியா: காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் துவக்கிய தொழிலாளர்கள்

தொழிற்சங்கத்தைப் பதிவுக்கு அனுப்பினால், அதில் காலதாமதம் ஏற்படுத்துவதற்கு எல்லா நடவடிக்கைகளிலும் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

சாம்சங் இந்தியா” தொழிற்சாலை நிர்வாகத்தின் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க விரோத அடாவடித்தனங்களைக் கண்டித்து, செப்டம்பர் 9 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை சாம்சங் தொழிலாளர்கள் துவக்கியுள்ளனர். இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் சிப்காட் பகுதியில் ‘சாம்சங் இந்தியா’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சாம்சங் தயாரிப்புகளான ஏசி, வாஷிங் மெஷின், டிவி, குளிர் சாதனப்பெட்டி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில், 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சங்கம் அமைத்த தொழிலாளர்கள்

இவர்கள், தங்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்காக, கடந்த ஜூன் இரண்டாவது வாரத்தில் சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு சங்கம் துவங்கியுள்ளனர். சங்கம் அமைத்ததற்கான முறைப்படியான அறிமுக கடிதத்தையும் நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், இதனை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. மேலும், ஊதிய உயர்வு மற்றும் பொதுக் கோரிக்கைகள் குறித்து சிஐடியு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தையும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

தொழிற்சங்கத்தை ஏற்க மறுப்பது மட்டுமல்லாது, தொழிற்சங்கத்தை உடைப்பதற்கும், சங்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த 85  நாட்களாக நிர்வாகம் அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் பகிரங்கமாக  ஈடுபட்டு வருகிறது.

நிர்வாகம் அடாவடி!

சிஐடியு சங்கத்தில் இருந்து வெளியேறி, நிர்வாகம் அமைக்கும் கமிட்டியில் இணைந்தால், பரிசுப் பொருட்கள், உடனடி சம்பள உயர்வு; அதேநேரம் பணியாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் என்றெல்லாம் தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நிர்வாகம் விரும்பும் படிவத்தில் கையெழுத்திடுவதற்குத் தனியாகவும் கூட்டாகவும் நிறுவனம் பகிரங்கமாகத் தனது ஆதரவாளர்களைத் தொழிற்சாலைக்குள் இறக்கி வருகிறது. தொழிற்தகராறு சட்டம் அட்டவணை 5-இன் விதிகளுக்கு எதிராக “நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளில்” (Unfair Labour Practices) சாம்சங் நிர்வாகம் பகிரங்கமாக ஈடுபட்டுள்ளது.

தொழிலாளர்கள் விரும்பி அமைக்கும் சங்கத்தை ஏற்க முடியாது என்றும் கமிட்டியாக இருங்கள் என்று மீண்டும் மீண்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சொல்லுவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

தொழிலாளர் துறை அலட்சியம்

தொழிலாளர்களின் சட்டப்பூர்வமான உரிமைகளுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய தொழிலாளர் துறை, பகிரங்கமாக கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆலோசகர் போலவே செயல்பட்டதும், செயல்பட்டு வருவதும் தொழிலாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இருங்காட்டுக்கோட்டை தொழிலாளர் துறையின் செயல்பாடு கவலைக்குரியதாக இருந்து வருகிறது.

தொழிற்சங்கத்தைப் பதிவுக்கு அனுப்பினால், அதில் காலதாமதம் ஏற்படுத்துவதற்கு எல்லா நடவடிக்கைகளிலும் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தொழிற்சாலைக்குள் தொழிலாளர்கள் நிம்மதியாக இருக்கவே முடியாது என்ற  நிலைக்கு சாம்சங் நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொழிலாளர்களைத் தள்ளியுள்ளது.

தொழிற்சாலைச் சட்டப்படி 8 மணி நேரம் வேலை என்பதற்கு மாறாக உணவு, தேநீர் இடைவேளை இல்லாமல் மேலும் 2 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது; வேலை செய்தே ஆக வேண்டும், இல்லை என்றால் பல விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்; மறுபுறத்தில் நிர்வாகம் சொல்வதைக் கேட்பவர்களுக்குப் பரிசும், பொருளும் வழங்கப்படும் என்பது தொழிலாளர்களை மேலும் கோபத்திற்குத் தள்ளியுள்ளது.

லோடிங், அன்லோடிங் என்ற பெயரில் தொழிற்சாலை அதிகாரியிடம் லைசென்ஸ் வாங்கிவிட்டு, நேரடி உற்பத்தியில் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்த ஆலை நிர்வாகம் முயல்கிறது. அவர்களுக்குப் பயிற்சி கொடுக்குமாறு நிரந்தரத் தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இது சட்ட விரோதம் என்று சொன்னால், “ஆம், அதை நாங்கள் செய்வோம்” என்று பேச்சுவார்த்தையின்போதே, நிர்வாகம் பகிரங்கமாக ஆணவத்துடன் கூறுகிறது.

காலவரையற்ற வேலைநிறுத்தம்!

இந்நிலையில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டமும் நிர்வாகிகள் கூட்டம் எடுத்த முடிவின் அடிப்படையில் செப்டம்பர் 9 முதல் “சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க”த்தின் உறுப்பினர்கள் – தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியு)-வை அங்கீகரித்திட வேண்டும்; ஆலைக்குள் பணி செய்யும் தொழிலாளர்களை- சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க (சிஐடியு) உறுப்பினர்களை நிறுவனம் உருவாக்கும் போட்டி தொழிலாளர் கமிட்டியில் இணையுமாறு அச்சுறுத்துவது, கட்டாயப் படுத்துவது, மிரட்டுவது போன்ற வன்முறை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்; போட்டி அமைப்பை  உருவாக்குவதைக் கைவிட வேண்டும்; ஊதிய உயர்வு மற்றும்  பொதுக் கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொள்ள வேண்டும்; சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் அமைத்துள்ள சிஐடியு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யவிடாமல் தொழிற்சங்க பதிவாளர் அலுவலகத்தை நிர்ப்பந்திப்பதைக் கைவிட வேண்டும்; சட்டப்படியான வேலை நேரத்திற்கு மேல் மிகைப்பணி வேலை செய் என்று தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்துவதைக் கைவிட வேண்டும்; லோடிங் – அன்லோடிங் என்ற பெயரில் ஒப்பந்த தொழிலாளர்களை அனுமதி வாங்கி சட்ட விரோத நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்துவதைக் கைவிடவேண்டும்; தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்குமான பேச்சுவார்த்தையைத் தொழிலாளர் சட்டம்- தொழிற்சங்க சட்ட அடிப்படையில் நடத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் துவங்கியுள்ளது.

இந்த காலவரையற்ற போராட்டத்தில், சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். சிஐடியு மாநிலச் செயலாளர் மற்றும் மாவட்டத் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நன்றி: தீக்கதிர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



1 மறுமொழி

  1. ஆம்,இது தொழிளாலர்கள் நலனுக்கு எதிராக உள்ளது.இந்த போக்கு மற்ற நிறுவனங்கள் எல்லாம் இதையே பின்பற்றினாலல என்னவாகும்.நான் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் வேலையில் சேறும் போதே சங்கம் வைத்தாள் அது தெடர்பான சேனலில் ஈடுபட்டாள் பணிக்கும் தான்.நானும் அப்படி ஒரு நிறுவனத்தில் தான் பணி புரிகிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க