தென்கொரியா: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும்!

ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், போனஸ்க்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும், லாபத்தில் 15 சதவீத பங்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

0

தென்கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நினைவக சிப்பு (memory chips) உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உள்ளது. எஸ்.கே ஹினிக்ஸ் (SK Hynix) நிறுவனத்துடன் இணைந்து உலகளவில் மூன்றில் இரண்டு பங்கு சிப் உற்பத்தி செய்து வருகிறது.

சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் டேட்டா சென்டர்கள் உள்ளிட்ட ஏ.ஐ கட்டமைப்புகளில் அதிக அளவிலான முதலீடுகள் காரணமாக உலகளவில் நினைவக சிப்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் சாம்சங் நிறுவனம் அதிகளவிலான லாபத்தைக் குவித்து வருகிறது.

ஆனால் நிறுவனத்திற்கு எத்தனை லட்சம் கோடிகள் லாபம் வந்தாலும் ரத்தம் சிந்தி உழைத்த தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் மட்டுமே போனசாக வழங்கப்படும். இதனால் லாபம் முழுவதையும் முதலாளிகளே அனுபவிக்கின்றனர். தொழிலாளர்களுக்குப் பல ஆண்டுகளாக ஊதியமும் உயர்த்தப்படவில்லை.

குறிப்பாக கடந்த காலாண்டில் மட்டும் சாம்சங் நிறுவனத்தின் லாபம் 57.2 டிரில்லியன் வான் அதிகரித்துள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்படவில்லை. ஆனால் அதே வேலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எஸ்.கே ஹினிஸ் நிறுவனம் போனஸ்க்கான உச்சவரம்பை நீக்கியும், அடிப்படை ஊதியத்தை உயர்த்தியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் ஏப்ரல் 23- ஆம் தேதி அன்று ப்யோங்டேக் (Pyeongtaek) நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய சிப் உற்பத்தி தொழிற்சாலை வளாகத்தில் ஒன்றுகூடி மாபெரும் பேரணி நடத்தியுள்ளனர். இப்பேரணியில் பங்கேற்ற சுமார் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்துக்கே உரித்தான கட்டுக்கோப்பான ஒழுங்குடன் கருப்பு மேலாடை (Black vest) அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், போனஸ்க்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும், லாபத்தில் 15 சதவீத பங்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் சாம்சங் நிறுவனத்தின் தலைவர் ஜே ஒய் லீ (Jay Y Lee) மற்றும் மற்ற மேலாளர்களின் உருவங்கள் அடங்கிய பேனரில் தொழிலாளர்கள் நடந்து சென்று தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த பேனரில் அவர்களை “கஞ்சர்கள்”, “அகந்தை உடையவர்கள்”, “தவறு செய்தவர்கள்” என்று எழுதி தொழிலாளர்கள் கேலி செய்தனர்.

போராட்டத்தை முன்னின்று நடத்திய தொழிற்சங்க தலைவர்களில் ஒருவரான சோய் ஸ்யுங் – ஹோ (Choi Seung-ho) உயரமான கட்டிடத்தின் மேல் நின்று “எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டத்தை நிறுத்தமாட்டோம்,” என்று லவுட்ஸ்பீக்கர் மூலம் தெரிவித்தார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மே 21-ஆம் தேதி முதல் 18 நாட்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

இதனால் அச்சத்திற்கு உள்ளான சாம்சங் நிறுவனம் பேச்சுவார்த்தைகள் மூலம், லாபத்தில் 10 சதவீதம் பங்கு தருவதாகவும், கூடுதல் பணம் தருவதாகவும் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளில் உறுதியாக உள்ளனர்.

உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான தங்களது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுகின்ற சாம்சங் நிறுவனத் தொழிலாளர்களுக்கு உழைக்கும் மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க