18.09.2024
செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக சங்கி சுதாசேஷய்யன் நியமனம்
கண்டன அறிக்கை
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”, “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்பது போன்ற பல்வேறு அறநெறி கருத்துக்களை கூறும் தமிழ் மரபின் மீது சங்க காலம் முதல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது வேத-வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட வைதீக பார்ப்பனியம். அதாவது, பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை அழிப்பது போன்ற நடவடிக்கைகளைச் செய்தது.
தற்போது, தமிழ்நாட்டைப் பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு அடிபணிய வைக்கப் பல்வேறு சதிவேலைகளில் 2014-ல் ஆட்சி அரியணையேறியது முதல் இன்று வரை ஈடுபட்டு வருகிறது மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல்.
“தமிழ் மொழி ஆய்விற்கான நிதியை குறைப்பது, திருவள்ளுவருக்குக் காவி சாயம் பூசுவது, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை மறுப்பது, தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் கூறும் கீழடி அகழ்வாய்வை நிறுத்தியது, தொல்லியல் ஆய்வாளரான அமர்நாத் ராமகிருஷ்ணனை கீழடியிலிருந்து பணி மாற்றம் செய்தது, கீழடி தொடங்கி ஆதிச்சநல்லூர் வரையிலான பல்வேறு பகுதிகளின் அகழ்வாய்வு அறிக்கைகளை வெளியிட மறுப்பது” என்பது போன்று பல்வேறு வழிகளில் பாசிச மோடி அரசு தமிழ்நாட்டின் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அதன் ஒரு அங்கமாக, தற்போது புராண-இதிகாச புகழ்பாடும் மேடைப் பேச்சாளரான சுதா சேஷய்யனை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமித்துள்ளது பாசிச மோடி அரசு.
சென்னை பெரும்பாக்கத்தில் இயங்கிவரும் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் கடந்த 2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தமிழின் தொன்மை, தமிழர் பண்பாடு, பண்டைய தமிழ் இலக்கிய நூல்களை ஆய்வு செய்வது வருகிறது இவ்வாய்வு நிறுவனம். தமிழ்நாடு முதலமைச்சரே இவ்வாய்வு நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார். தற்போது துணைத் தலைவராக சங்கி சுதா சேஷய்யனை நியமித்துள்ளது ஒன்றிய மோடி அரசு.
யார் இந்த சுதா சேஷய்யன். தனது சிறுவயது முதலே பல்வேறு மேடைகளில் கம்பராமாயணத்தின் புகழைப் பேசியவர். மருத்துவம் படித்த இவர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பேராசிரியையாகப் பணியாற்றிய காலத்தில் முறையாகக் கல்லூரிக்குச் செல்லாதவர் என்ற புகழைப் பெற்றவர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய காலத்திலும் பல்கலைக்கழகத்தைத் தொலைப்பேசி மூலம் வழிநடத்திய ‘பெருமைக்குரியவர்’.
அதேவேளை, மகா பெரியவா ஆராதனை, காசி தமிழ்ச்சங்கமம், புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா, ஆன்மீக பட்டிமன்றங்கள், ஆன்மீக கதாகலாட்சேபங்கள் ஆகிய பல்வேறு இந்துத்துவ நிகழ்ச்சிகளில் புராண-இதிகாச புகழ்பாடுவதற்கு ஓடோடிச் செல்பவர்.
இந்த ஆன்மீகச் சேவைக்காகவே, துணைத்தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற சங்கி சுதாவை உடனே மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமித்துள்ளது பாசிச மோடி அரசு.
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் இந்துத்துவ சித்தாந்தத்தில் ஊறித் திளைத்த சங்கி சுதாவிற்கு என்ன வேலை என்று கேள்வியெழக்கூடும். தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் அழிக்க ஆய்வு நிறுவனத்திற்குள் திட்டமிட்டு நுழைக்கப்பட்டிருக்கும் விஷச்செடிதான் சங்கி சுதா.
படிக்க : நேற்று முருகன் மாநாடு, அடுத்து அம்மன் மாநாடு? – பு.மா.இ.மு கண்டன அறிக்கை!
தமிழ்நாட்டில் இருக்கும் தமிழறிஞர்கள், தமிழ் ஆய்வாளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் ஆகியோரில் ஒருவரை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்குத் துணைத்தலைவராக நியமிக்காமல், ஆன்மிகப் பேச்சாளரான சங்கி சுதாவை நியமித்து தமிழ் மொழியையும், தமிழறிஞர்களையும், தமிழ் ஆய்வாளர்களையும், தமிழ்ப்பற்றாளர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் இழிவுபடுத்திய பாசிச மோடி அரசை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
சுதா சேஷய்யனின் துணைத்தலைவர் நியமனத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று ஒன்றிய மோடி அரசை எமது புமாஇமு தமிழ்நாட்டு மக்களின் சார்பாகக் கண்டன முழக்கமிடுகிறது.
பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் பார்ப்பனியமாக்கலிலிருந்து, “தமிழ்மொழியையும், தமிழ் மரபையும் பாதுகாக்க ஒன்றிணைவோம்” என்று முழங்குவது மட்டுமல்லாமல், களப்போராட்டங்களைக் கட்டியமைக்கத் தமிழறிஞர்களையும், தமிழக மாணவர்-இளைஞர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் அறைகூவி அழைக்கிறது புமாஇமு.
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. 9444836642
rsyftamilnadu@gmail.com