28.08.2024

நேற்று முருகன் மாநாடு, அடுத்து அம்மன் மாநாடு?
ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்குக் கருத்தியல் அடியாள் வேலை பார்க்கும் திமுக அரசு!

பு.மா.இ.மு கண்டனம்!

ழனியில், முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த ஆகஸ்ட் 24 – 25 தேதிகளில் திமுக அரசின் இந்து அறநிலையத் துறையின் சார்பாக ஏற்பாடு செய்து நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டிற்கான அறிவிப்பு வெளியிடும் போதே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் “ஒரு சமய சார்பற்ற அரசு என்பது எந்த மத விவகாரங்களிலும் தலையிடக் கூடாது” என்று விமர்சித்திருந்தார். இந்துத்துவ கும்பலோ உடனடியாக இந்த மாநாட்டை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டது.


படிக்க : “மக்களைத் தேடி மருத்துவ” ஊழியர்களை அராஜகமாகக் கைதுசெய்த திமுக அரசு


இம்மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில்,

“5. முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.”

“9. கந்தசஷ்டி விழா காலங்களில் அருள்மிகு முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.”

“12. முருகப்பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகையின்கீழ் உள்ள திருக்கோயிலின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மீக பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.”

என முருகன் பெயரை வைத்துக்கொண்டு, கல்விக் கூடங்களில் காவிச்சாயம் பூசும் நோக்கிலான தீர்மானங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் இயங்கிவரும் நிலையில், எந்த அடிப்படையில் இவ்வாறு கல்வி நிறுவனங்கள் நடத்த கோயில்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன? என்ற கேள்வி எழுகிறது. இந்நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் கல்வியைக் காவிமயமாக்கும் நடவடிக்கை என விமர்சித்து வி.சி.க., எம்.பி. ரவிக்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் பல்வேறு ஜனநாயக சக்திகளும், திமுக கூட்டணிக் கட்சிகளும் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

முத்தமிழ் முருகன் மாநாட்டில் இந்துஅறநிலையத் துறை அமைச்சருடன் சங்கி அர்ஜுன் சம்பத்

இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் அர்ஜுன் சம்பத் நேரடியாக வந்து முருகன் மாநாட்டில் கலந்து கொண்டார். பாஜகவின் வானதி சீனிவாசனோ, இத்தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்வாங்கக் கூடாது என அரசுக்கு அறிவுத்துகிறார்.


படிக்க : போராடும் மாற்றுத்திறனாளிகள், ஒடுக்கும் திமுக அரசு!


தீர்மானங்களை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில், மேற்சொன்ன கல்வி நிறுவனங்களுக்குள் புகுந்து கொண்டு, தமது இந்துமதவெறிப் பிரச்சாரத்திற்கான அடித்தளத்தை மாணவர் மத்தியில் அதிகாரப்பூர்வமாகவே உருவாக்கிக் கொள்ள இயலும் என்பதால்தான் சங்கிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியேற்படுகிறது.

ஆனால், திராவிட மாடல் – பகுத்தறிவுப் பகலவன் பெரியார் நெறி என்றெல்லாம் வாய் வீச்சடித்த திமுக, தன்னை இந்துக்களின் காவலன் என்று காட்டிக்கொள்ளும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத்தேர்தல் அறிக்கை துவங்கி, கடந்த மூன்றாண்டுகளில், இந்துசமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளே இதற்கு சாட்சி.

இந்து சமய அறநிலையத்துறை என்பது கோவில்களை நிர்வாகம் செய்வதற்கான துறையே ஆகும். மாணவர்களிடையே மதப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது அதன் வேலை அல்ல என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஆனால். இத்துறையின் அமைச்சர் சேகர்பாபுவோ முழுநேர சங்கிக்குரிய வகையிலேயே செயல்பட்டு வருகிறார். இத்துறையையும் அவ்வாறே இயக்கி வருகிறார்.

“முருகன் மாநாடு முடிந்துவிட்டது, பெண்கள் பெரும்பாலும் வழிபடும் அம்மன் மாநாடு நடத்தப்படுமா?” என பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டதற்கு, அதற்கான முயற்சிகளை முழுமூச்சில் மேற்கொள்வோம் என பதிலளிக்கிறார். இதுதான் திராவிட மாடல் அரசின் வேலையா?

திமுக ஆட்சி அமையாவிட்டால் பாசிசம் உள்ளே வந்துவிடும் என்று பா.ஜ.க எதிர்ப்பை முன்வைத்து, கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு வாங்கிய திமுக, இப்போது தமது கட்சிக்குள்ளேயே பாசிச கும்பலை அனுமதித்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

பெரியாரின் வழிவந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் திமுகவினர், அவரது இலக்கான பகுத்தறிவு – அறிவியல்பூர்வக் கருத்துப் பிரச்சாரத்தை முன்னெடுக்க என்ன செய்திருக்கிறார்கள்? இந்துசமய அறநிலையத்துறையின் பெயரில் தமிழ்நாட்டை சங்கிகளின் அடிநிலமாக்கும் வகையில் செயல்படுவதில் பத்தில் ஒரு பங்கு கூட பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு பங்களிப்பு செய்துள்ளனரா? நாட்டையே பாசிச – இந்துமதவெறி பிற்போக்கில் ஆழ்த்தும் வெறியோடு ஆர்.எஸ்.எஸ் கும்பல் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், ஜனநாயக – முற்போக்கு சிந்தனைகளை மக்களிடையே கொண்டுசெல்வது மட்டுமே, பெரியாரின் வழியில் நடப்பதாக கூறுவோர் செய்ய வேண்டிய செயலாக இருக்க முடியும்.

கல்வியில் இந்துத்துவ கருத்துகளை புகுத்த எத்தனிக்கும் திராவிட மாடல் அரசை எமது பு.மா.இ.மு வன்மையாகக் கண்டிக்கிறது.


படிக்க : தொடக்கக் கல்வி ஆசிரியர்களை போராடவிடாமல் கைது செய்யும் திமுக அரசு


மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வக்கற்று, ‘ஜெய் ஜெகநாத்’ என முழக்கமெழுப்பி ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலுக்கு பின்வாசல் கதவை திறந்து வைத்திருந்தார் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக். இந்நடவடிக்கையை பயன்படுத்திக் கொண்டு ஒடிசாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல். தற்போது திமுக அரசின் நடவடிக்கையும் அதை ஒத்ததாகவே இருக்கிறது.

பெயரளவிற்குக்கூட ஜனநாயகம் – முற்போக்கு சித்தாந்தம் என எதையும் பேச அனுமதிக்காத ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி காவி கும்பலிடம் அடிபணிவது என்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான பார்ப்பனிய எதிர்ப்பு மரபிற்கும் செய்யும் துரோகம் ஆகும். திராவிடம் என்ற கருத்தாக்கத்தையே ஒழிப்போம் என்று கொக்கரிக்கிறது பாசிசக் கும்பல். அதற்கு அடிபணிந்து, பாசிசக் கும்பலுக்கு வழியமைத்துக் கொடுக்கும் திமுக அரசின் – இந்துசமய அறநிலையத்துறையின் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.

தமிழ்நாடு அரசே!,
• முத்தமிழ் முருகன் மாநாட்டில் வெளியிடப்பட்ட தீர்மானங்களைத் திரும்பப் பெறு!
• இந்துசமய அறநிலையத்துறை என்பது மதப் பிரச்சாரம் செய்யும் அமைப்பு அல்ல!
• பாசிசத்திற்கு கொல்லைப்புற வழியமைத்துக் கொடுக்காதே!
என அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைத்து குரல் எழுப்புவோம்.

மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க