காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே மின்னணு வீட்டு உபயோக பொருள்கள் தயாரிக்கும் சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 5,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் 1,500 பேர் நிரந்தர பணியாளர்களாக இருந்து வருகின்றனர்.
ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, சிஐடியு (CITU) தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் 17-ஆவது நாளாகத் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் சாம்சங் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சாம்சங் நிர்வாகம் சார்பில், ‘சட்டவிரோத’ வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என போராட்டம் நடத்தும் ஊழியர்களுக்கு “காரணம் கேட்புக் குறிப்பாணை” (Show Cause Notice) வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் உரிமையைக் கோருவது என்பதே சாம்சங் நிறுவனத்திற்குச் சட்டவிரோதமாம்!
“நான்கு நாட்களுக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்; இல்லையெனில் காரணமின்றி நடத்தப்படும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஏழு நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று அதில் கூறி, சாம்சங் நிறுவனம் போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்தியுள்ளது.
முன்னதாக, வேலைக்கு வர இருப்பவரைத் தடுத்து நிறுத்தி போராட்டத்திற்கு அழைத்துச் சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், பணிக்கு ஊழியர்கள் திரும்பாவிட்டால் அடையாள அட்டை முடக்கப்படும், தீபாவளி பரிசு வழங்கப்படாது, போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு போனஸ் தொகை பிடித்தம் செய்து வழங்கப்படும் என்று மொத்தம் இரண்டு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது.
அடையாள அட்டை முடக்கப்படும், தீபாவளி போனஸ் பிடித்தம் செய்யப்படும் என சாம்சங் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்த பின்னரும், தொழிலாளர்கள் பணியவில்லை. அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
படிக்க: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெல்க! | பு.ஜ.தொ.மு
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிமடுக்க மறுக்கும் சாம்சங் நிறுவனம், போராட்டம் நடத்தும் ஊழியர்களுக்கு அளித்துள்ள குறிப்பாணையில், “வேலை செய்தால் மட்டுமே ஊதியம் வழங்கப்படும்” (no work, no pay) என்று அராஜகமாகத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சில ஊழியர்கள் வேலைக்குத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
“ஆரம்பக் கட்டத்தில் கிட்டத்தட்ட 50 சதவீதம் அளவிற்கு உற்பத்தி குறைந்தது. ஆனால், தற்போதைக்கு ஒப்பந்த முறையில் ஊழியர்களை பணிக்கு அமர்த்தி மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. எனவே ஆலையில் தற்போது 100 சதவிகிதம் உற்பத்திப் பணிகள் நடைபெற்று வருகிறது” என சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.
தொழிலாளர்களின் கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் பரிசீலிக்கக் கூட தயாராக இல்லை என்பதையே சாம்சங் நிறுவனத்தின் இந்தக் கூற்று வெளிப்படுத்துகிறது.
தங்களது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள சங்கம் அமைத்துக் கொள்வது என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையாகும். ஆனால், அதைக்கூட அங்கீகரிக்க சாம்சங் நிறுவனம் தயாராக இல்லை. தொழிற்சங்கத்தை அங்கீகரித்தாக வேண்டும் என்று மூன்று சுற்றுப் பேச்சுவார்த்கும் பிறகும் திமுக அரசால் சாம்சங் நிறுவனத்திடம் கூறமுடியவில்லை. தொழிலாளர்கள் பக்கம் நிற்பதற்கு அதன் கார்ப்பரேட் பாசம் தடுக்கிறது. அந்நிய முதலீட்டை ஈர்க்க வேண்டுமல்லவா!
எனவே, வீரியமிக்க தொடர் போராட்டத்தின் மூலம் மட்டுமே தொழிலாளர்களால் தங்களது அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள முடியும். அந்தப் பாதையில் தான் சாம்சங் ஊழியர்கள் தற்போது பயணித்துக் கொண்டுள்ளனர்.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram