உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் உள்ள ரஷ்காவனில் என்னும் பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் பள்ளியின் வளர்ச்சிக்காக 10 வயது சிறுவனை பள்ளி நிர்வாகம் நரபலி கொடுத்துள்ளது.
ஹத்ராஸின் ரஷ்காவனி பகுதியில் உள்ள டி.எல் பப்ளிக் ஸ்கூலின் ( DL public school) என்ற தனியார்ப் பள்ளியின் இயக்குநர் தினேஷின் தந்தை ஜஷோதன் பள்ளியின் பெயருக்காகவும் புகழுக்காகவும் யாரோ ஒருவர் சொன்னதை நம்பி சிறுவன் ஒருவரை நரபலி கொடுக்கலாம் என்று தினேஷிடம் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் தினேஷ் மற்றும் அவரின் தந்தை ஜிஷோதன், லக்ஷன் சிங், வீரப்பன் சிங் மற்றும் ராம்பிரகாஷ் சோலன்கி ஆகிய மூன்று ஆசிரியர்கள் என ஐவரும் இணைந்து பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் கிருதார்த்தை நரபலி கொடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் கிருதார்த்தை தூக்கிக் கொண்டு போய் விடுதிக்கு பின்புறம் உள்ள கிணற்றின் அருகே நரபலி கொடுத்துக் கொன்றுவிட்டு மீண்டும் சிறுவனின் உயிரற்ற உடலை விடுதியில் கொண்டு வந்து போட்டுள்ளனர். மறுநாள் (செப்டம்பர் 23) சிறுவன் நினைவற்று கிடப்பதைக் கண்ட சக மாணவர்கள் மற்றும் விடுதி ஊழியர்கள் நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நிர்வாகம் தங்களுக்கு ஏதும் தெரியாதது போல் காட்டிக்கொண்டு சிறுவனின் தந்தைக்கு போன் செய்து உங்கள் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறான் வந்து அழைத்துச் செல்லுங்கள் என்று விடுதிக்கு வரச்சொல்லி உள்ளனர்.
உடனடியாக சிறுவனின் தந்தை விடுதிக்குச் சென்று பார்த்தபோது அங்கு சிறுவன் இல்லை. விசாரித்ததில் பள்ளியின் இயக்குநர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பின்னர் வெகுநேரமாக குழந்தை எங்கே என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த தந்தை போலீசிற்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் தினேஷ் பாகலின் காரில் கழுத்துப் பகுதியில் காயங்களுடன் சடலமாகக் கிடந்த சிறுவனை மீட்டுள்ளனர்.
படிக்க: உ. பி: இஸ்லாமிய உணவகங்கள் மீது வன்முறைக்கு வழிவகுக்கும் யோகி அரசு!
பின்னர் பிரேதப் பரிசோதனையில் சிறுவன் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் போலீஸ் விசாரணையில் பள்ளியின் பெயருக்காகவும், புகழுக்காகவும் சிறுவனை நரபலி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் செப்டம்பர் 6 ஆம் தேதி ஒரு சிறுவனை பலி கொடுக்க முயன்றுள்ளனர். அப்போது சிறுவன் கத்தி கூச்சலிட்டதால் அவனை உயிரோடு விட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் உடம்பில் பல இடங்களில் காயங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது என்பதையும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மற்றுமொரு சிறுவனை நரபலி கொடுக்க திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சிறுவனைக் கொலை செய்த ஐந்து பேர் மீதும் பி.என்.எஸ் 103 (1) பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
21-ஆம் நூற்றாண்டில், நரபலி கொடுப்பதன் மூலம் பள்ளி வளர்ச்சி அடைந்து விடும் என்பதை நம்பும் அளவிற்கு மூடப்பழக்கவழக்கங்கள் புரையோடிப் போயுள்ளன. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலோ மக்களிடம் உள்ள மூடநம்பிக்கைகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அதன்மூலம் ஆதாயம் அடைவதைச் செய்து வருகிறது.
எனவே, மக்கள் மத்தியில் வீச்சான பகுத்தறிவுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு அறிவியல் மனோபாவத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram