உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்குப் பிறகும் தொடரும் புல்டோசர் பயங்கரவாதம்!

புல்டோசர் பயங்கரவாத நடவடிக்கை மூலம், குஜராத் மாநில அரசானது முஸ்லீம் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களைச் சொந்த மாநிலத்திற்குள்ளேயே அகதிகளாக்கியுள்ளது.

டந்த செப்டம்பர் 28-ஆம் தேதி, குஜராத் மாநிலத்தின் கிர்சோம்நாத் மாவட்டத்தில் உள்ள பிரபாஸ் படான் பகுதியில் உள்ள தர்காக்கள் மற்றும் முஸ்லீம் மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று கூறி அம்மாவட்டத்தின் ஆட்சியர் திக்விஜய்சிங் ஜடேஜா தலைமையிலான போலீசும் அதிகாரிகளும் புல்டோசர்களைக் கொண்டு இடித்துள்ளனர். இந்த இடிப்பு நடவடிக்கையில் மக்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் வழங்கப்படாதது மட்டுமின்றி, 1,200 ஆண்டுகள் பழமையான ஷா சிலார் தர்கா,கரீப் ஷா தர்கா, ஜாபர் மூசாபர் தர்கா    உள்ளிட்ட ஒன்பது தர்காக்களும்  47 வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளன.

இந்த இடிப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமானது 50 புல்டோசர்கள், 50 டிராக்டர்கள், பல ஹைட்ராலிக் கிரேன்கள் மற்றும் 1,400 போலீசின் துணையுடன் மேற்கொண்டுள்ளது. இடிப்பு நடவடிக்கையைத் தடுக்க வந்த மக்களில் 150 பேரையும் கைது செய்துள்ளது.

இந்த இடிப்பு நடவடிக்கையானது குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீசோம்நாத் கோவில் அறக்கட்டளைக்குச் சொந்த நிலத்தை ஆக்கிரமித்து தர்காக்களும் வீடுகளும் கட்டப்பட்டுள்ளதாகக் கூறியே மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில்  செயல்பட்டுவரும்  ஸ்ரீசோம்நாத் கோவில் அறக்கட்டளைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல். கே. அத்வானி ஆகியோர் அறங்காவலர்களாக  உள்ளனர்.

மக்களிடம் இந்துமதவெறியைத் தூண்டிவிடுவதற்காகக் கோயிலுக்கு அருகில் மசூதிகளும் தர்காக்களும் உள்ளதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த காவிக் கும்பல், பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கோயில்களுக்கு அருகில் மசூதிகளும் தர்காக்களும் எப்படி இருக்கலாம் என்று முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறது. தற்போது அதன் தொடர்ச்சியாகவே முஸ்லீம் மக்களின் வீடுகளையும் வழிபாட்டுத் தலங்களையும் காவிக் கும்பல் அதிகார வர்க்கத்தின் துணையுடன் இடித்துத் தள்ளியுள்ளது.

1,200 ஆண்டுகள் பழமையான மசூதிகள் இடிக்கப்பட்டதற்கு எதிரான மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக மசூதிகளை இடித்தவுடன் குஜராத் பா.ஜ.க. அரசானது மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை விதித்ததுடன் மக்களின்  வாட்ஸ்அப், முகநூல் போன்ற  சமூக வலைத்தளங்களையும் கண்காணித்துள்ளது.


படிக்க: ஹரியானா: புல்டோசரைக் கொண்டு முஸ்லீம்கள் மீது அரசு நடத்தும் மதவெறி தாக்குதல்


மசூதிகள்  இடிக்கப்பட்டது பற்றி  ஹமித் கூறுகையில், “நாங்கள் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த போது  காலை 6 மணிக்கு  எந்த முன்னறிவிப்புமின்றி எங்கள் வீடுகளை இடிக்கத் தொடங்கினார்கள். ஒரு செட் துணியைக்  கூட எங்களால் பேக் செய்யக் கூட நேரம் கிடைக்கவில்லை. சம்பாதித்த அனைத்தும் வீடோடு சேர்ந்து இடிக்கப்பட்டுவிட்டது. வீட்டை இழந்ததால் பிளாஸ்டிக் வீட்டில் வாழ்ந்து வருகிறேன்” என்று வேதனையுடன் கூறுகிறார்.

ஏழை மீனவரான ரிஷ்வானின் வீடும் இடிக்கப்பட்டதால் தற்போது குச்சிகள் மற்றும் பிளாஸ்டிக் தாள்களால் செய்யப்பட்ட வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் நாங்கள் எங்கள் வேலையைச் செய்து  கொண்டிருந்தோம் சோம்நாத்  கோவில் அருகில் உள்ள  நிலத்தைக்  கைப்பற்றுவதற்கு எங்கள்  அனைவரது வீடுகளையும் இடித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டுகிறார்.

வேராவல் பகுதியைச்  சேர்ந்த  குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் நுஸ்ரத் பஞ்சா   கூறுகையில்  முஸ்லீம்களைப்  பயமுறுத்துவதற்காக அவர்களின் வீடுகள்  இடிக்கப்படுகின்றன என்றும் மசூதிகள் ஜூனாகத் நவாப் காலத்தில்  கட்டப்பட்டதற்கான சட்ட ஆவணங்கள் உள்ள நிலையில் மசூதிகளை இடிப்பது நியாயமற்றது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் மாவட்ட ஆட்சியர் திக்விஜய் சிங் ஜடேஜா, 20 நாட்களுக்கு முன்பாகவே ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் இடங்களை காலி செய்யத் தயாராக இல்லாததால் இடிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று அப்பட்டமாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பொய்யுரைத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், அரசானது இதனைச் சட்ட நடவடிக்கை என்று கூறினாலும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த  மக்களின் சொத்துக்கள் மட்டுமே அரசால் குறிவைத்துத் தாக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். ஆகவே, மேற்கூறிய புல்டோசர் பயங்கரவாத நடவடிக்கை மூலம், குஜராத் மாநில அரசானது முஸ்லீம் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களைச் சொந்த மாநிலத்திற்குள்ளேயே அகதிகளாக்கியுள்ளது.

குஜராத்தில் மட்டுமின்றி, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் முஸ்லீம் மக்களின் வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் ஆக்கிரமிப்பு என்ற பெயரிலும் முஸ்லீம் மக்கள் மீது காவிகள் குற்றஞ்சுமத்தினாலே அதற்கான தண்டனையாகவும் அம்மக்களின் வீடுகளும் வழிபாட்டுத்தலங்களும் இடிக்கப்படுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்தன. அன்றாடம் ஏதோ ஒரு மாநிலத்தில் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தன.


படிக்க: ம.பி: அரசை விமர்சித்த கவிஞர் மகேஷ் கட்டாரே மீது பாயும் புல்டோசர் நீதி!


காவிகளின் இத்தகைய புல்டோசர் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தானாக முன்வந்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், குற்றத்தண்டனைகளாக முஸ்லீம் மக்களின் வீடுகளை இடிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்குச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தியிருந்தது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வந்த போதே பல பத்திரிகையாளர்களும் ஜனநாயக சக்திகளும் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் முஸ்லீம் மக்களின் வீடுகளையும் வழிபாட்டுத் தலங்களையும் பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளால் இடிக்க முடியும் என்று தெரிவித்திருந்தனர். அதன்படியே நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் நாட்டின் சில இடங்களில் குற்றத்தண்டனையாக முஸ்லீம் மக்களின் வீடுகளை இடிக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியும் முஸ்லீம் மக்களின் சொத்துகள் இடிக்கப்பட்டுள்ளன. தன்னுடைய உத்தரவை மீறும் காவிகளின் நடவடிக்கை குறித்தும் உச்சநீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. உச்சநீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு ஆதரவாகச் செயல்படுவதையே அதன் நடவடிக்கையானது நமக்கு உணர்த்துகிறது.

மேலும், இந்த அரசுக் கட்டமைப்பால் காவிகளின் புல்டோசர் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் செயல்படுவதற்கே தடை விதிக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசால் தான் தடுத்து நிறுத்த முடியும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க