அமெரிக்கா: 40 நாட்களைக் கடந்து தொடரும் போயிங் விமானத் தொழிலாளர்கள் போராட்டம்!

“எவ்வளவு காலமானாலும் போராட்டத்தைத் தொடர நாங்கள் தயார், இத்தருணத்தில் எங்கள் கோரிக்கைகளை நிறைவேறாமல் போராட்டத்தை முடித்துக் கொள்ளப் போவதில்லை” என்று தொழிலாளர்கள் பலரும் தெளிவுபடக் கூறுகின்றனர்.

40 நாட்களைக் கடந்து தொடரும்
அமெரிக்க போயிங் விமானத் தொழிலாளர்கள்
வேலை நிறுத்தப் போராட்டம்!

மெரிக்காவின் ‘புகழ்பெற்ற’ போயிங் விமானத் தயாரிப்புத் தொழில் நிறுவனத்தில் மொத்தம் 1.7 லட்சம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். விமான தயாரிப்பில் முக்கிய தொழில் பிரிவுகள் பலவும் வாஷிங்டன் மாநிலத்தின் சியாட்டில் நகரில் இயங்கி வருகின்றன. சியாட்டிலில் உள்ள இயந்திர இயக்குநர்கள் மற்றும் விண்வெளி தொழிலாளர்களின் சர்வதேச கழகம் (IAMAW – International Association of Machinists and Aerospace Workers) என்னும் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 33 ஆயிரம் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த செப்டம்பர் 13 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் போயிங் விமானத் தொழிற்சாலையில் நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்த போராட்டம் 40 நாட்களைக் கடந்து தொடர்வது போயிங் நிறுவனத்திற்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தி இருப்பதுடன் தவிர்க்கவியலாமல் அமெரிக்க அரசின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது. தொழில் உற்பத்திக் கட்டமைப்பிலும் அறிவியல் தொழில்நுட்பத்திலும் மிகவும் வளர்ந்த ஒரு ஏகாதிபத்திய நாட்டில் 33,000 தொழிலாளர்கள் ஒன்று திரண்டு 40 நாட்களுக்கும் மேலாக ஒரு வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறதென்றால் இந்தியத் தொழிலாளி வர்க்கம் அந்தப் போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்தேற்பதுடன் அதிலிருந்து கற்றுக் கொள்வதும் அவசியமாகும்.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் மூன்று.

  • மூன்றாண்டுக் காலத்திற்கு 40% ஊதிய உயர்வு. (அதாவது 20+10+10 என்று மூன்றாவது ஆண்டிறுதியில் 40% உயர்வு)
  • பத்தாண்டுகளுக்கு முன்னர் கைவிடப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும்.
  • விமான உற்பத்தியின் முக்கிய பிரிவுகள் சிலவற்றை சியாட்டிலிலிருந்து தெற்கு கரோலினாவுக்கு இடம் மாற்றம் செய்யும் நிர்வாகத்தின் திட்டம் கைவிடப்பட வேண்டும்.

ஆகியனவாகும்.


படிக்க: அமெரிக்காவில் போயிங் விமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!


செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடந்து முடிந்த கூட்டுப் பேர பேச்சுவார்த்தையில் நிர்வாகமும் தொழிற்சங்கமும் ஒரு ஒப்பந்தத்தை எட்டின.  ஊதிய உயர்வு நான்கு ஆண்டுகளில் 25 சதவீதம் அதாவது ஒவ்வொரு ஆண்டிலும் 6.5% என்று உயர்ந்து நான்காவது ஆண்டில் 25 சதவிகிதம் என்பதில் மட்டும்.

மற்ற இரண்டு கோரிக்கைகள் பற்றி எந்த கருத்தும் பேசப்படவில்லை. மாறாக தொழிலாளர்கள் கேட்டிராத ஊக்கத் தொகையாக 7000 டாலர் தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்க உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 33 ஆயிரம் தொழிலாளர்களில் 95% பேர் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்து வேலை நிறுத்த போராட்டமே தீர்வு என்று மேலும் ஒரு சதவீதத்தினர் சேர்ந்து 96% பேர் வாக்களித்தனர்.

அந்தத் தொழிற்சங்கத் துணைவிதிகளின்படி தலைமைக்குழு நிர்வாகத்துடன் சுதந்திரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்கள் போடலாம். ஆனால் பொதுக்குழு வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்றால் மட்டுமே அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். சிறுபான்மையினர் பொது முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். அதன் அடிப்படையில் தொழிற்சங்க தலைமை செப்டம்பர் 13 முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது.

வேலைநிறுத்தம் நூறு சதவீதம் கட்டுக்கோப்பாக நடந்ததைக் கண்டு நிர்வாகம் முதல் வார முடிவில் தானே முன்வந்து ஊதிய உயர்வை நான்கு ஆண்டுகளுக்கு 30 சதவீதம் என்று உயர்த்தி அறிவித்தது. ஆனால் நிர்வாகம் இப்படி தன்னிச்சையாக அறிவிப்பதைத் தொழிலாளர்கள் வன்மையாகக் கண்டித்ததுடன் வாக்கெடுப்பு எதுவும் நடத்தாமலேயே அதை நிராகரித்தது. முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தித் தான் ஒப்பந்தம் போட வேண்டும் என்பதை நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்துப் போராட்டம் தொடர்ந்தது.


படிக்க: கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான சாம்சங் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!


பின்னர் நிர்வாகம் அக்டோபர் 1 அன்று தொழிலாளர்களின் மருத்துவ உதவி திட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தது. அதன் பின்னர் அக்டோபர் 11 அன்று தலைமை அலுவலர் கெல்லி ஓர்ட் பெர்க் போயிங் நிறுவனம் தொடர்ந்து பல நட்டங்களையும் பின்னடைவுகளையும் சந்தித்து வருவதால் தமது தொழிலாளர்களின் 10 சதவீதம் பேரை பணியிலிருந்து விடுவிக்க அதாவது ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். அதன்மூலம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களிடையே ஒற்றுமையைக் குறைத்து பீதியைப் பரப்ப முயன்றார்.

அமெரிக்காவின் தொழிலாளர் நலச் சட்டத்தின்படி தொழிற்சங்கத்திற்கு அதன் உறுப்பினர் ஒவ்வொருவரும் பொதுக்குழு நிர்ணயிக்கும் மாதாந்திர / ஆண்டு உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும். உறுப்பினர் கட்டணத்தை நிர்வாகமே ஊழியர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து தொழிற்சங்கத்திடம் ஒப்படைத்து விடும். அதேபோன்று பெரும்பான்மை தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கு, உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அச்சங்கத்தின் பராமரிப்புக்கென்று நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும்.

அவ்வகையில் போயிங் நிர்வாகம் ஒரு தொழிலாளிக்கு ஒரு ஆண்டுக்கு 4000 டாலர் என்கிற அளவில் வழங்குகிறது. 33 ஆயிரம் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் IAMAW. சங்கம் ஆண்டுக்கு 13.2 கோடி டாலர் பெறுகிறது. இத்துடன் உறுப்பினர் சந்தா தொகையை மற்ற பிற நன்கொடைகளையும் கொண்டு தொழிற்சங்கம் தொழிலாளர் நிதி ஒன்றைப் பராமரிக்கிறது. இது தொழிலாளர்களுக்கு விபத்துகள் மற்றும் புயல் வெள்ளம் போன்ற ஆபத்துக் காலங்களிலும் இன்னும் குறிப்பாக வேலை நிறுத்த காலங்களில் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்கவும் பயன்படுத்தப்படுகின்றது. இது வேலை நிறுத்த போராட்ட நிதி (Strike Fund) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தப் போராட்டம் இரண்டு வாரங்களைக் கடந்த பிறகு குறைந்த ஊதியம் பெறும் பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு வாரம் 250 டாலர் வீதம் ஊதியமாக வழங்குகிறது தொழிற்சங்கம். கூடுதல் ஊதியம் பெறும் மூத்த தொழிலாளர்களுக்கு இன்னும் கூடுதலாக வழங்கப்படுகிறது. அதன் பிறகு தொழிலாளர்கள் பல்வேறு தற்காலிக அன்றாட வேலைகளில் ஈடுபட்டு தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர்.

இந்நிலையில் நிர்வாகம் செப்டம்பர் மாதம் முடிவடைந்த காலாண்டில் 6.2 பில்லியன் டாலர் (ரூ.52,000 கோடி) நட்ட கணக்கைக் காட்டியது.

போராட்டம் ஒரு மாதத்தை நெருங்கிய நிலையில் வெள்ளை மாளிகை போராட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் நியமித்திருந்த தொழில்துறைச் செயலாளர் ஜூலி சூ நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் முடிவில் நிர்வாகம் அக்டோபர் 19 அன்று ஒரு முன்மொழிதலை அறிவித்தது.

அதில் நான்கு ஆண்டுகளுக்கு 35 சதவீதம் ஊதிய உயர்வு. லாப பங்கிட்டு போனஸ் தொகையுடன் கூடுதல் ஊக்கத்தொகையாக 7,000 டாலர் என்று கூறியது.

மேலும் ஓய்வூதியத்தை பொருத்தமட்டில் இப்பொழுது ஊழியர் ஊதியத்தில் சேமநல நிதியாகப் பிடிக்கப்படும் 4% நிதியுடன் நிர்வாகம் தற்போது வழங்கி வரும் 3% தொகையை 100% ஈடுசெய்யும் வகையில் 4% சதவீதமாக உயர்த்தி தருவதாகவும், மேலும் அந்த சேமநல நிதியில் மொத்த தொகையாக 5000 டாலர் போடுவதாகவும் கூறியது.

மேலும் நிறுத்தப்பட்ட மருத்துவ உதவிகளை (health care benefits) மீண்டும் மேம்படுத்தி வழங்குவதாகவும் முன்வைத்தது.


படிக்க: அமெரிக்கா: கிழக்குக் கடற்கரை துறைமுகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்


நிர்வாகத்தின் இந்த முன்மொழிதலின் மீது தொழிற்சங்கம் வாக்கெடுப்பை நடத்தியது. இந்தத் திட்டத்தை 64 சதவீதம் பேர் நிராகரித்து வாக்களித்தனர். தொழிலாளர்கள் ஊதிய உயர்வில் ஓரளவுக்குச் சமரசத்திற்குத் தயாராக இருந்தாலும் இழந்துவிட்ட ஓய்வூதிய திட்டம் மீண்டும் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். எனவே தொழிலாளர்கள் முடிவின்படி வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்க தலைமை அறிவித்துவிட்டது.

முன்பிருந்த ஓய்வூதிய திட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியரின் வாழ்நாள் முழுமைக்கும் வழங்குவதாகவும் இறப்புக்குப் பிறகு பாதி தொகையை இணையருக்கு வழங்கும் வகையிலும் இருந்தது. இது உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய பலன் (Defined Benefit Plan) என்ற வகையைச் சேர்ந்ததாகும்.

ஆனால் அமெரிக்காவில் அது போன்ற பழைய ஓய்வூதிய திட்டங்கள் பலவும் கடந்த 45 ஆண்டுகளில் பெரும்பாலான தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களால் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இன்றைய நிலையில் அமெரிக்காவில் 8% தொழிலாளர்கள் மட்டுமே அந்த பலனைப் பெறுகின்றனர். ஆனாலும் போராடும் தொழிற்சங்க தலைமையோ தொழிலாளர்களோ இதை அறியாமல் இல்லை.

மூன்றாவது கோரிக்கையான இடமாற்றம் குறித்து எந்த கருத்தும் பேசப்படவில்லை.

தெற்கு கரோலினாவில் அமைக்கப்பட்டிருக்கும் தொழிற்சாலை அமெரிக்க அரசின் புதிய சட்ட திருத்தங்களின் படியான தொழிற்சங்கம் இல்லாத (Non Unionised) தொழிற்சாலை ஆகும். பெரும்பாலும் கான்ட்ராக்ட் ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டதாகும். அதனால்தான் உற்பத்தியின் முக்கிய பிரிவை அங்கு கொண்டு சென்று விட முயற்சி செய்கிறது நிர்வாகம்.

எனினும், தொழிலாளர் ஒற்றுமையில் எந்த பங்கமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். “எவ்வளவு காலமானாலும் போராட்டத்தைத் தொடர நாங்கள் தயார், இத்தருணத்தில் எங்கள் கோரிக்கைகளை நிறைவேறாமல் போராட்டத்தை முடித்துக் கொள்ளப் போவதில்லை” என்று தொழிலாளர்கள் பலரும் தெளிவுபடக் கூறுகின்றனர். தொழிற்சங்க தலைவர் ஜான் ஹோல்டன் “ஓய்வூதிய திட்டம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கான கோரிக்கையாகும். எனவே அதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள முடியாது” என்றே கூறியிருக்கிறார்.

போயிங் நிறுவனத்திடம் இன்றும்கூட 500 பில்லியன் டாலர் அளவுக்கு ஆர்டர்கள் உள்ளன. ஒரு விமான தயாரிப்புக்கான காலம் 38 மாதங்கள் மட்டுமே. காலக்கெடு தவறினால் அதற்கு ஈடாக தண்டத்தொகை செலுத்த வேண்டி வரும். காலக்கெடு தள்ளிப் போய்க் கொண்டேதான் இருக்கிறது. மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் “ஏர்போர்ஸ் ஒன்” விமானம் தயாரித்துக் கொடுக்க வேண்டி இருக்கிறது. அதற்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதில் தாமதம் ஏற்படும் நிலையில் பெருந்தொகையை அரசுக்குத் தண்டமாகச் செலுத்த வேண்டி நேரும்.

எனவே போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தில் தான் நிர்வாகம் இருக்கிறது. இத்தருணத்தில் போராட்டத்தில் உறுதியாக நிற்கும் தொழிலாளர்களின் நிலைப்பாடு தான் மிகச் சரியானதாகும். எனவே இப்போராட்டத்தைத் தொழிலாளர்களுக்கான எதிர்காலத்திற்கான வர்க்கப்போராட்டம் என்கிற கண்ணோட்டத்தில் உலகத் தொழிலாளி வர்க்கம் வர்க்க ஒற்றுமையுடன் ஆதரித்து நிற்க வேண்டும்.


சுந்தரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க