ஒன்றியத்தில் மோடி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா போன்ற தென்மாநிலங்களிலிருந்து பெரிய முதலீட்டுத் திட்டங்கள் குஜராத்திற்குத் திருப்பி விடப்பட்டதை “தி நியூஸ் மினிட்” செய்தி இணையதளத்தின் விசாரணை அறிக்கை விரிவாக அம்பலப்படுத்தியிருக்கிறது.
கடந்த 2022-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய செமிகண்டக்டர் நிறுவனம் ஒன்று சென்னையில் தனது முதலீட்டைத் தொடங்க ஆர்வமாக இருந்தது. அப்போதைய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் புதுதில்லியில் அந்நிறுவன அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் அந்நிறுவனம் குஜராத்திற்குத் தனது முதலீட்டைக் கொண்டு சென்றது. இதன் பின்னால் ‘ஹெலிகாப்டர் இராஜதந்திரங்கள்’ இருப்பதை நியூஸ்மினிட் அம்பலப்படுத்துகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 6000 கோடி அளவிலான முதலீடுகள் நிர்ப்பந்தமாகக் குஜராத்திற்கு மாற்றப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், தங்களுக்கான முதலீட்டுத் திட்டங்களை நிர்ப்பந்தத்தின் மூலம் குஜராத்திற்கு ஒன்றிய மோடி அரசு மாற்றுவதாக தெலுங்கானாவின் முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். செமி கண்டக்டர் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனமான மைக்ரானுக்கு (Micron) 50 சதவிகிதம் மானியம் தருவதாக ஆசைகாட்டி அதன் முதலீடு தெலுங்கானாவிலிருந்து குஜராத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை அம்பலப்படுத்தியுள்ளார். குறிப்பாக, கடந்த 2023-இல் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு பிறகுதான் மைக்ரான் நிறுவனம் குஜராத்திற்குத் தனது முதலீடுகளை மாற்றிக் கொண்டுள்ளது.
இதேபோல் கர்நாடகாவிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் குஜராத்திற்கு மாற்றப்பட்டதைக் கர்நாடகாவின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே அம்பலப்படுத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவின் மஹா விகாஸ் அகாதி கூட்டணியின் அரசியல் தலைவர்கள், இராணுவ விமானங்களைத் தயாரிக்கும் டாடா ஏர்பஸ் போன்ற பெரிய திட்டங்கள் தங்கள் மாநிலத்திலிருந்து குஜராத்திற்கு வேண்டுமென்றே மாற்றப்பட்டதாக மோடி அரசின் மீது பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மேலும், 3,000 கோடி மதிப்பிலான மருந்துகளுக்கான பூங்கா ஒன்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பூங்கா ஒன்றும் மகாராஷ்டிராவிலிருந்து குஜராத்திற்கு மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் வேதாந்தா – பாக்ஸ்கான் திட்டங்களும் மாற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
படிக்க: வரி பகிர்வு – தென்னிந்திய மாநிலங்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தை முன்னெடுக்கலாம்தானே?
தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் முதலீடுகளுக்கான சிறந்த சூழல்கள் இருந்தும், ஜவுளி மற்றும் மருந்துகள் சார்ந்த மையங்கள் திட்டமிட்டு குஜராத்திற்குத் திருப்பப்பட்டதாக நியூஸ் மினிட் இணையதளம் குற்றஞ்சாட்டுகிறது.
கணிசமான மூலதன மானியங்கள், இறக்குமதி வரிகளைக் குறைப்பதற்கான உறுதிப்பாடுகள், அரசாங்க ஆணைகளின் உத்தரவாதங்கள், முதலீட்டிற்கான இடங்களை ஊக்குவிப்பது (குஜராத்தில் உள்ள தோலேரா, கிஃப்ட் சிட்டி ஆகிய முதலீட்டு மையங்கள்) ஆகிய ஒன்றிய அரசின் தந்திரோபாயங்களின் மூலம் மிகப்பெரும் நிறுவனங்களின் முதலீடுகள் குஜராத்திற்குத் திசை திருப்பப்படுவதாக நியூஸ் மினிட்டின் ஆய்வறிக்கை அம்பலப்படுத்துகிறது. அதாவது குஜராத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளைக் கொண்டு சென்றால் அவர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை அளிப்பதாக ஒன்றிய அரசு உத்தரவாதம் அளிப்பதன் மூலம் (சதி செய்து என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்) இது அரங்கேறி வருகிறது.
“ஒன்றிய அரசானது இந்நிறுவனங்களின் முதலீடுகளைத் தனது ‘எதிரி நாடுகளான’ சீனாவிடமிருந்தோ, பாகிஸ்தானிடமிருந்தோ பறிக்கவில்லை. பதிலாக, தனது நாட்டின் ஒரு பகுதியான தென்னிந்திய மாநிலங்களிலிருந்தே பறித்துள்ளது” என்று கூர்மையான குற்றச்சாட்டை முன்வைக்கிறது, தி நியூஸ் மினிட் இணையதளம். 2014-இல் மோடி பிரதமரான உடனேயே குஜராத்தை இந்தியாவிற்கான சர்வதேச நிதி மையமாக அறிவித்தார் என்பதை இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
ஏற்கெனவே வடக்கின் பெரும்பான்மையைப் பெற்று அரசியலதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும், அதானி – அம்பானி கும்பலின் கொள்ளைக்காகவும் ஜி.எஸ்.டி உள்ளிட்டவற்றின் மூலம் கொடூரச் சுரண்டலை நிகழ்த்தி, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சூறையாடி வருகிறது, பாசிச மோடி கும்பல். இந்நிலையில், முதலீட்டுத் திட்டங்களைத் தட்டிப் பறிப்பதன் மூலம் மேலும் இதனைத் தீவிரப்படுத்தி வருகிறது.
படிக்க: அசாம் தொகுதிகள் மறுவரையறை: வாக்குவங்கியை காவிமயமாக்கும் புதிய மாடல்!
இந்நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன? இந்துராஷ்டிரத்துக்கான தலைநகரமாக குஜராத்தை மாற்றுவதற்கான எத்தனிப்புகள்தான் இவை. இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பைக் குஜராத்தை மையப்படுத்தியதாக மாற்றுவதன் மூலம் அதானி – அம்பானி கும்பலின் பொருளாதார ஆதிக்கத்தை முற்றுமுழுதாக நிலைநிறுத்தும் வேலையைத்தான் பாசிச மோடி கும்பல் மிகத் தெளிவாகச் செய்து வருகிறது.
இந்த அப்பட்டமான அநீதியையே இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டமாகவும் பாசிசக் கும்பல் முன்வைக்கிறது. தொகுதி மறுவரையறை, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவை இந்த பாசிச சதித்திட்டத்திற்குள் உள்ளடங்கியுள்ளது. ஆனால், இதற்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் ஓர் ஒருங்கிணைத்த பொதுத்திட்டத்தை முன்வைக்காமல், மீண்டும் மீண்டும் பாசிசக் கும்பல் முன்வைக்கும் திட்டத்திற்குள்ளேயே சுழல்கின்றன.
அறிக்கைகள் விடுப்பது, அடையாள ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, சட்டமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றுவது, நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பது என்பதைத் தாண்டி, தென்னிந்திய மாநிலங்களின் மீதான இத்தகைய உரிமைப் பறிப்புகளுக்கு எதிராக மாற்றுத் திட்டங்களுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து களப்போராட்டங்களை கட்டியமைப்பதில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் இதனை செய்வதில்லை எனினும், பாசிசக் கும்பலின் அடுத்தடுத்த பயங்கரவாதத் தாக்குதலானது, ஒருங்கிணைத்த பாசிச எதிர்ப்பு பொதுத்திட்டத்தை முன்வைப்பதை நோக்கி இந்தியாவில் உள்ள பாசிச எதிர்ப்பு சக்திகளை முன்தள்ளுகிறது.
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram