வரி பகிர்வு – தென்னிந்திய மாநிலங்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தை முன்னெடுக்கலாம்தானே?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: தென்மாநிலங்களுக்கான வரி பகிர்வு தொகையை குறைந்த சதவிகிதத்திலேயே விடுவித்தது ஒன்றிய அரசு. அதேசமயம் பசுவளைய மாநிலங்களுக்கும் பா.ஜ.க. செல்வாக்குள்ள மாநிலங்களுக்கும் அதிக அளவில் நிதியைத் திருப்பி கொடுக்கிறது. இதை எதிர்த்து தென்னிந்திய மாநிலங்கள் ஒருங்கிணைந்து தங்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கலாம்தானே?

ந்த எதிர்பார்ப்பே எதார்த்தத்தை மீறியதாக உள்ளது. இங்கு தென்மாநிலங்களுக்கிடையே ஒரு சமநிலை கிடையாது. வடகிழக்கு மாநிலங்களில் கூட சில பொதுக்கோரிக்கைகள் இருக்கின்றன. தென்மாநிலங்களில் அவ்வாறான பொதுக்கோரிக்கைகள் எதுவும் கிடையாது. பூகோள ரீதியான ஒற்றுமையும் கிடையாது. திராவிட மொழிகள் பேசும் மாநிலங்கள் என்ற அடிப்படையிலும் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாடு, கேரளா என்ற வகையிலான ஒருங்கிணைப்பெல்லாம் கிடையாது. இவர்களுக்கிடையில் அப்படிப்பட்ட திட்டமும் இல்லை. இது ஒரு பின்தங்கிய நிலையாகும்.

அதேபோல், தென்மாநிலங்களை பா.ஜ.க. புறக்கணிப்பதற்கு, அவை எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்கள் என்பதையும் கடந்து மற்றொரு காரணமும் உள்ளது. இது பார்ப்பன வர்ணாசிரம அடிப்படையில், உரிமைகளோ ஜனநாயகமோ கேட்பதற்கு இடமற்ற குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள இந்துத்துவ-கார்ப்பரேட் அரசு அதிகார அமைப்பு போன்றதொரு சர்வாதிகார அமைப்பை நாடு முழுவதும் கொண்டுவரும் நோக்கத்துடன் இணைந்தது.

பார்ப்பன பாசிசக் கும்பலின் இயல்பான எதிர்ப்பு என்பது கல்வி கற்றவர்களின் அறிவாற்றல் மீது எப்போதும் இருக்கும். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களின் மீது அந்த எரிச்சல் அதிகமாகவே இருக்கும். “இவர்களெல்லாம் மேற்கத்திய கல்வி கற்றவர்கள்” என்பது பார்ப்பன பாசிசக் கும்பலின் கண்ணோட்டம்.

மேலும், பார்ப்பன பாசிசக் கும்பல் ஜனநாயகத்தையும் கல்வி, பொருளாதாரத்தில் மாநிலங்கள் முன்னேறுவதையும் விரும்புவதில்லை. மார்வாடி – சிந்தி – பனியா கார்ப்பரேட் கும்பலின் வளர்ச்சிக்கு தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சி தேவையற்றது என்பது பார்ப்பன பாசிசக் கும்பலின் கருத்து. இவையெல்லாம்தான் தென்மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பதற்கு காரணம்.

அதேசமயம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரை அதானி, அம்பானியின் இலாப நோக்கத்திற்கு உட்பட்டு தங்களுடைய பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றிக்கொள்ளும் அளவிற்கு இழிவான நிலையில்தான் உள்ளன. எனவே, மக்களிடம் எழும் எதிர்ப்பை எதிர்க்கட்சியினர் பயன்படுத்திக் கொள்கிறார்களே ஒழிய, இவ்விவகாரத்தில் பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என்று எதிர்கட்சிகளிடம் சொந்தமுறையில் திட்டமில்லை. இதுதான் வரலாற்றில் திரும்ப திரும்ப நிரூபிக்கப்படுகின்ற விசயமாக உள்ளது.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க