சென்னை பாரீஸ் கார்னர் ஆண்டர்சன் மற்றும் மலையபெருமாள் வீதியின் உள்ளே நுழைந்தால் பெண்கள் கூடையிலும், தரையிலும் மலைபோல் அடுக்கிய பழங்களை கூவிக்கூவி விற்றுக் கொண்டிருப்பார்கள்… கடுமையான நெரிசல்.. அந்த நேரத்தில் ஏதெனும் வாகனம் வந்து விட்டால் கூடையில் உள்ள பழங்களை எல்லாம் கையில் தூக்கி வைத்துக் கொண்டு வாகனங்களுக்கு வழிவிட வேண்டும். தப்பித்தவறி அந்தச் சூழலை புகைப்படம் எடுத்தால் அவர்கள் தடுமாறி விடுகிறார்கள்.

“ஏற்கனவே இந்த இடத்தில் கடை போட்டு பிழைப்பது இங்கே இருப்பவர்களுக்கும் போலிசுக்கும் பிடிக்க வில்லை… நீங்கள் எதாவது எழுதி விட்டால் நாங்கள் வேறு எங்கு செல்வது?” என்று உடன் கேட்கிறார்கள். ஏற்கனவே சாலையோர கடைகளை எல்லாம் தூக்கி வீசியிருக்கிறது அரசு. அவர்களெல்லாம் என்ன ஆனார்கள் என்பது நமக்கு தெரியாது.

இந்த பாதை வியாபாரிகளை கடந்து உள்ளே சென்றால் கடைகளுக்கு செல்ல முடியாதவாறு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருப்பார்கள். மற்றொருபுறம் கடைகளே தெரியாத வண்ணம் பல பொருட்களை மாட்டியும், கீழே கொட்டியும்  வைத்திருக்கிறார்கள்.

படிக்க :
♦ சென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு தான் எங்க வீடு !
♦ கண்ணாடி பாக்க நல்லாருக்கும் தூக்குற வேலைக்கு யாரும் வர மாட்டாங்க !

திருமண அழைப்பிதழ் கார்டுகள், எழுதுபொருட்கள், ப்ளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், பைகள், கட்சிக்கொடிகள், திருமண பைகள், அலங்கார  பிளாஸ்டிக் பூக்கள் என்று விதவிதமாக கண்ணில்படும். மொத்த விற்பனையிலிருந்து சில்லரை விற்பனை வரை உண்டு. இன்றைக்கு 3டி ப்ரிண்டிங் வளர்ச்சி, சமூக வளைதளங்கள் மூலம் அழைப்பு விடுப்பது, பிளாஸ்டிக் மீதான தமிழக அரசின் தடை, ஜி.எஸ்.டி என்று பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்தச்சூழலில் இதனையெல்லாம் எப்படி சமாளிக்கிறார்கள்…?

ஜேம்ஸ், ஹிந்துஸ்தான் பேப்பர் ஸ்டேசனரி.

நாங்க இங்க 1964-இல் இருந்து கடை வைத்துள்ளோம். அப்பொழுதிருந்தே ஒலிம்பிக் மற்றும் ஸ்டார் போன்ற கடைகள் இங்கு பிரபலம்தான். ஆரம்பத்தில் இங்கே ஸ்டேசனரி பொருட்கள்தான் பிரபலம். இப்பொழுதுதான் பிளாஸ்டிக் பொருட்கள் கடைகள் அதிகரித்துள்ளன. ஆரம்பத்தில் பாக்கிஸ்தான் மற்றும் சிந்தி ஆட்கள் வந்து கடை வைத்திருந்தார்கள் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.

இப்பொழுது எல்லாம் மாறி விட்டது. ஸ்டேசனரி கடைகள் அதிகம் இருப்பதால் விற்பனை மந்தமாக இருந்ததால் 1988 -க்கு பிறகு நானும் தொழிலை மாத்தி விட்டேன். பேக்கிங் மெட்டிரியல் அயிட்டதிற்கு மாறிவிட்டேன். இங்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்த 1500 பொருட்களுக்கு மேல் உள்ளது. இதனை எல்லாம் திருச்சி, செங்கல்பட்டு, வேலூர், போன்ற ஊர்களில் இருந்து வந்து மொத்தமாக வாங்குவார்கள். ஆனால் முன்புபோல் இப்பொழுது யாரும் வருவதில்லை. ஜி.எஸ்.டி. பணமதிப்பு நீக்கம் வந்த பிறகு தொழில் பாதிப்படைந்துள்ளது.

முன்பு ரூ.15,000 வரும் என்றால் இப்பொழுது ரூ.10,000 மட்டுமே வருகிறது. ஒரு காலத்தில் இங்கே மட்டுமே கிடைத்த பொருட்கள் இப்பொழுது எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. அதற்காக பாரீஸின் மதிப்பு குறைந்து விடவில்லை…

சித்திக், வெட்டிங் கார்டு. (புகைப்படம் தவிர்த்தார்)

“வெட்டிங் கார்ட் ஒரு பாரம்பரிய வியாபரம். இது வருஷத்துல ஒரு முறை பன்னுற செலவு. எல்லோரும் பாத்துபாத்துதான் செய்வாங்க. பழகுன இடத்துக்குதான் வருவாங்க. இங்க வரும்போதே, எங்க அப்பா இங்க தான் கார்டு அடிச்சார்… நானும் வறேன்னு சொல்லுவாங்க. பொண்ணு, பேத்தி, என்று வழி வழியா வரவங்கதான் என் கஸ்டமர். என்கிட்ட 2 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரைக்கும் வெட்டிங் கார்டு இருக்கு. இருந்தாலும் பாக்சு டிசைன் தான் இப்ப லெக்சுரியா வாங்குறாங்க… அதுதான் பேஷன். உலகம் வேற மாதிரி மாறி போயிடுச்சி..

டிஜிட்டல், 3டி ப்ரிண்டிங்’னு வேகமா முன்னேறி கிட்டே போகுது. அதுக்கு ஏத்த மாதிரி நாங்களும் அப்டேட் பன்னிக்கிறோம். அடாப்ட் ஆயிடுறோம். பிசினஸ் எப்பவுமே வெளியே போவுதுன்னா அடுத்தவன் சரியா இருக்கான்னு அர்த்தம் இல்ல. நாம சரியா செய்யலன்னுதான் அதுக்கு அர்த்தம். கஸ்டமர் சர்விஸ் தான் இந்த பிசினசுக்கு ரொம்ப முக்கியம். சமூக வலைத்தளம் வந்தாலும் இதனோட மதிப்பு குறைவதில்லை. அதன் மூலம் அழைப்பு கொடுக்கிறவங்களோட நிகழ்ச்சிக்கு யாரும் போக மாட்டாங்க. இதுதான் உண்மை. அதேமாதிரி, அமேசான். பிளிப் கார்டு எது வந்தாலும்  இந்த பிசினசை எதுவும் பன்ன முடியாது.” என்கிறார்.

ராம்நாத்

“திருமண அழைப்பிதழை எங்கயோ வாங்குற சாதாரண பொருள் இல்ல. ஒரு மரியாதைக்குறிய பொருள்…. இது மரியாதைக்குறியவங்களுக்கு கொடுக்கிற அயிட்டம். அதால இந்த பிசினஸ் நிக்கிது. எங்களுக்கு தமிழ்நாடு முழுக்க கஸ்டமர் இருக்காங்க. இங்க இருந்து மதுரை, திருவனந்தபுரம் கூட அனுப்புறோம். வெட்டிங் கார்டுல நாங்க ஸ்பெசலிஸ்ட். எங்க டிசைன நீங்க வேற எங்கயும் பார்க்க முடியது.”

வசந்த் மாலே, பிளாஸ்டிக் தட்டுகப் விற்பனை.

“இங்க பிளாஸ்டிக் அயிட்டமான கப், பிளேட், டிஸ்யு பேப்பர், கல்யாணம், பார்ட்டி எல்லாத்துக்கும் தேவையானது கிடைக்கும். ஆனா, பிசினஸ்தான் டல்லா இருக்குது, காரணம் இந்த அமேசான், பிளிப் கார்ட் இவனுங்க தான். இவனுங்களை அடக்கி வைக்கனும். இவனுங்க நேரா கஸ்டமருக்கு பொருள் கொடுப்பதை மோடி நிறுத்தனும். எங்களைப் போன்ற டீலர் ஷிப்புக்கு தான் பொருட்கள் தரனும். அப்ப தான் வியாபரிங்க பொழக்க முடியும். நானும் பத்து பேருக்கு வேலை கொடுக்க முடியும். இப்ப என்ன நடக்குது? மொத்தமா அவனே சுருட்டிக்கிறான். குறுக்க எவனும் இல்ல. பணம் இங்க ரொட்டேசன் ஆகவே இல்ல.

வியாபாரிங்ககிட்ட வந்தா, சின்ன வியாபாரில இருந்து பெரிய வியாபாரிங்க வரைக்கும் கை மாறும். பணம் புரளும். எல்லாருக்கும் வேலை கிடைக்கும். ஆனா அதுவா நடக்குது…? அவனோட கொள்ளைதான் நடக்குது. எப்படி இருந்தாலும் அடுத்த வாட்டி மோடிஜி தான் ஆட்சிக்கு வரனும்.

இந்த ஆட்சியில கஸ்டம் இருக்கத்தான் செய்யுது.. ஜி.எஸ்.டி, பணமதிப்பு நீக்கம் இதனால பாதிப்பு இருக்கதான் செய்யுது. அதெல்லாம் மோடி திருத்திக்கனும். திருத்திக்குவாரு. நாட்டுக்கு ஒரு மரியாதை இருக்குன்னா அது மோடியால தான். நம்ம நாட்ட வெளி நாட்டுகாரன்கிட்ட தூக்கி நிறுத்திட்டாரு. இப்ப நம்மளப் பார்த்தாலே எல்லாம் பயப்படுறாங்க.”

மிட்டாலால், பிளாஸ்டிக் தட்டுகப் விற்பனை.

“15 வருஷமா இங்க கடை போட்டிருக்கேன். இப்ப மாதிரி கஸ்டம் எப்பவும் இல்ல. இதுக்கே லைன் பிசினசுக்குத்தான் நான் பொருள் கொடுக்கிறேன். சிறு வியாபாரிங்க தான் என்  கஸ்டமர். அவங்களுக்கு வியாபரம் இல்லன்னு வாங்குறதை குறைக்கிறாங்க.

இன்னொருபக்கம் வேலைக்கு ஆள் பிரச்சனை பெரிசாகி விட்டது. யாரும் வேலைக்கு கிடைக்கிறது இல்ல. எல்லாரும் லைட் வெயிட் வேலைக்கு போயிடுறாங்க. துணிக்கடை, மொபைல் கடைன்னு போறாங்க. மூட்ட தூக்க யாரும் ரெடி இல்ல. இந்த வேலை கொஞ்சம் கஸ்டம்தான். உள்ள நின்னா உடம்பு கொதிக்கும். சூடு… ஆஸ்துமா பிரச்சனை வரும். அதனாலயே பசங்க வந்த பத்து நாள்ல போயிடுறாங்க. பேஜாராக்கீது.”

அப்பாஸ், பை கடை.

“எங்க பிசினஸ் எல்லாம் ரொம்ப சின்ன பிசினஸ் சார். 50,100,150 இந்த ரேஞ்சிக்குதான் விக்கிறோம். வேற எந்த பொருளும் இல்ல. இது கிஃப்டு பேக்… மொத்தமா வாங்கிக் கொடுக்கும் போது, பரிசு பொருள் போட்டு கொடுக்க இந்த பை வாங்குவாங்க. விக்கிற விலைவாசியில உள்ளதையே வாங்க முடியல. இதுல கிஃப்டு எங்க வாங்குறது. ஜனங்க தடு மாறுராங்க. வியாபரிங்க நாங்களே இன்னும் கொஞ்ச நாள்ல பிச்ச எடுக்க தான் போவனும்.

மோடி எங்க கிட்ட எதையும் மிச்சம் வைக்க மாட்டார்போல. நம்மளுக்கு பேங்குல போடுரேன்னு நம்ம பணத்தையே அபராதம்னு கோடி கோடியா வாங்கிக்கிறானுங்க… ஊரெல்லாம் கொள்ளை பெருகி போச்சின்னு சொல்லுறோம். ஆனா இதைவிட மோடி அடிக்கிற கொள்ளைதான் பெரிசா ஆயிடுச்சி. அதுவும் சவுத் இண்டியன்னா சுத்தாமா ஒதுக்குறாங்க…. அதுக்கு இன்னும் எவ்ளோ நாள் தாங்கனும்னு தெரியல. அடுத்த எலக்சன் வரைக்குமா..?”


நீங்களும் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்:

வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை !
தேநீர்க் கடைகளில் தொழிலாளிகள், முதலாளிகள், உணவு பதார்த்தங்கள், வாடிக்கையாளர்கள், கடையின் வடிவமைப்பு, அரட்டை, என பல அம்சங்கள் இருக்கின்றன. அனுப்புங்கள், காத்திருக்கிறோம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க