ஸ்பெயின் நாட்டின் வலென்சியா தன்னாட்சிப்பகுதி அரசாங்கத்தின் அலட்சியத்தின் காரணமாக கடந்த அக்டோபர் 29 அன்று ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் அதிக இழப்புகளைச் சந்தித்தனர். இதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வலென்சியா நகரத்தில் கூடி நவம்பர் 9 அன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
அக்டோபர் மாதம் உருவான டானா புயலின் காரணமாக ஏற்பட்ட கனமழை – வெள்ளத்தால் 220க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; பலர் காணாமல் போயினர். இந்நிலையில், வலென்சியா நகரத்தில் ஒன்று கூடிய மக்கள், புயலின் தீவிரத்தை அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டதே அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்படக் காரணம் எனக் குற்றம்சாட்டினர். மேலும் இதற்கு முழு பொறுப்பேற்று வலென்சிய தன்னாட்சிப்பகுதி அரசாங்கத்தின் ஜனாதிபதி கார்லோஸ் மசோன் (Carlos Mazón) பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மக்கள் போராட்டத்திற்குத் தொழிற்சங்கங்களும், சில பிராந்திய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. மேலும் மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு நியாயமானதுதான் எனவும் வலென்சிய தன்னாட்சிப்பகுதி அரசாங்கத்தின் திறமையின்மை காரணமாகத்தான் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும், தொழிற்சங்கங்களும் காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் ஏற்படும் இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் விரைந்து மீட்புப்பணிகளைச் செய்வதற்கும் அரசுத்துறைகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படிக்க: ஸ்பெயின்: மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ள கனமழை – வெள்ளம்
ஸ்பெயின் அரசின் ஒத்துழைப்பு இல்லாததும், அவர்களின் உதவி தாமதமாகக் கிடைத்ததுமே காரணம் என ஜனாதிபதி கார்லோஸ் தெரிவித்தார். ஆனால் 12 மணி நேரத்திற்கு முன்பே ஸ்பெயினின் தேசிய வானிலை அமைப்புகள் எச்சரிக்கைகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கார்லோஸ் நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாகவும், முன்னெச்சரிக்கையாக ஸ்பெயின் அரசிடம் கார்லோஸ் உதவிகளைக் கேட்டிருந்தால் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாதிப்புக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் 3,50,000 மக்களும் தொழிலாளர்களும், சுமார் 35,000 தொழில் நிறுவனங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதுபோன்ற ஒரு பேரழிவு ஏற்படும்போதெல்லாம், பாதிப்பிற்கு ஆளாகும் நபர்களாகத் தொழிலாளர் வர்க்கமே உள்ளது என்று தொழிலாளர் ஆணையங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு (Comisiones Obreras, CCOO) தெரிவித்துள்ளது.
ராஜேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram