நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 14-ம் தேதி கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக பழங்குடியினப் பெண் எம்.பி யான ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி (Hana-Rawhiti Kareariki Maipi-Clarke), ஹக்கா (Haka) முழக்கத்தோடு மசோதாவை கிழித்துப் போட்டது உலகம் முழுவதிலும் பேசுபொருளானது. (ஹக்கா என்பது மவோரிகளின் போர் முழக்குமாகும்)
இந்த மசோதாவை எதிர்த்து மவோரி எம்.பி-க்களும், பழங்குடி மக்களும் எதற்காகப் போராடுகின்றனர் என்ற கேள்விக்கு அவர்களுக்கு பின்னால் இருக்கக் கூடிய ஒடுக்குமுறைகளும், அதற்கு எதிரான அவர்களின் உறுதியான போராட்டங்களுமே பதிலாக அமையும்.
மவோரிகள் நியூசிலாந்து நாட்டின் பழங்குடிகள். மத்திய ஆசியாவிலிருந்த பாலினிசிரியர்கள் கடல் வழியாகக் கப்பலில் பயணம் செய்து, 1250 – 1300 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நியூசிலாந்து நாட்டை உருவாக்கினர். அங்கே தங்களுக்கென கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உருவாக்கி வாழ்ந்து வரும் பூர்வகுடிகளே இந்த மவோரி மக்கள்.
பின்னர் வந்த பிரிட்டிஷ் அரசு நியூசிலாந்தை தன்னுடைய காலனியாக மாற்றுவதற்காகப் படையெடுத்து வந்த போது, அதற்கு எதிராக வீரம் செறிந்த போர்களையும் நடத்தியுள்ளனர் இம்மவோரி மக்கள். பின்பு பிரிட்டிஷ் அரசின் ஆட்சி அமைந்த பிறகு பிரிட்டிஷ் அரசுக்கும் மவோரி மக்களுக்கும் இடையே 1840 ஆம் ஆண்டில் வைத்தாங்கி ஒப்பந்தம் (Treaty of Waitangi) கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தமானது மவோரி மக்களின் கலாச்சாரத்தையும், நிலங்கள் மீதான அவர்களின் உரிமைகளையும் அங்கீகரித்தது. மேலும் ஆட்சி அதிகாரத்தில் நியூசிலாந்து மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளும் மவோரி மக்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்தது.
ஆனால் ஒப்பந்தத்தின்படி உரிமைகளைப் பெற்றிருந்தாலும் பிரிட்டிஷ் அரசானது ஒப்பந்தத்தில் உள்ளவற்றை மறுத்து மவோரி பழங்குடி மக்களின் நிலங்கள் மீதான உரிமைகளைப் பறித்தது. இதற்கு எதிராகவும், மவோரி இனத்தையே அழிக்கும் நோக்கத்தில் அவர்களின் கலாச்சாரம் பண்பாட்டை அழிக்க பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் மவோரி மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வந்துள்ளனர்.
தொடர் போராட்டங்களின் விளைவாக 1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை அடைந்த பிறகு, மவோரி மக்களின் உரிமைகளுக்காக அக்குழுத் தலைவர்களின் தொடர் போராட்டங்களால் 1975-ம் ஆண்டு அமைக்கப்பட்ட வைத்தாங்கி ஆணையமானது அழியும் நிலையிலிருந்த மவோரி மக்களின் இனத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதுடன் அவர்களுக்கான அரசியல் அதிகாரத்தையும் வழங்கியது.
இந்நிலையில் தான் கடந்த வியாழனன்று (நவம்பர் 19 அன்று) நாடாளுமன்றத்தில் 1840-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சியான ஏ.சி.டி (ACT) கட்சியின் தலைவர் டேவிட் சீமோர் என்பவரால் புதிய சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. இதனை எதிர்த்து மவோரி எம்.பி-க்கள் அனைவரும் ஹக்கா முழக்கத்தில் ஈடுபட்டனர். இளம் எம்.பி-யான ஹனா அம்மசோதா நகலை கிழித்தெறிந்து எதிர்ப்பை தெரிவித்தார்.
நியூசிலாந்து மக்களுக்கும் மவோரி பழங்குடிகளுக்கும் தனித்தனியாக இருக்கின்ற சட்டத்தை (அதாவது மவோரி மக்களுக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து) அனைவருக்கும் பொதுவாக்க வேண்டும் என்று மசோதாவில் முன்மொழியப்பட்டதற்கு மவோரி எம்.பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படும் என்று தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மவோரி தலைவர்கள் கூறுகையில் “நாட்டில் உள்ள 5 லட்சம் மக்களில், நாங்கள் 20 சதவிகிதம் உள்ள போதிலும் ஆளும் அரசானது எங்களை இன ரீதியாக ஒடுக்கும் விதமாகத் திட்டங்களைக் கொண்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் தற்போது இம்மசோதா நிறைவேற்றப்படாது என்கின்ற போதிலும், தங்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக நவம்பர் 19-ம் தேதியன்று 42,000-க்கும் மேற்பட்ட மவோரி பழங்குடி மக்கள் தங்கள் இன கொடி மற்றும் ஆயுதங்களுடன் தலைநகர் வெலிங்டனை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram