34 குடும்பத்திற்கு குடிமனை பட்டா: மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

34 குடும்பத்திற்கு குடிமனை பட்டா:
மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! 

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சி ஆனைத்தென்பாதி கிராமத்தில் வாழும் 34-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீட்டு குடிமனை பட்டா வழங்கவேண்டி அம்மக்கள்  தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஜுலை 2-ஆம் தேதி 34 குடும்பத்திற்கும் குடிமனை பட்டா வழங்கக்கோரி, கிராம மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஒரு மாத காலத்திற்குள் பட்டா வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்து.

ஆனால், ஒரு மாத காலம் ஆகியும் அரசு தரப்பில் பட்டா வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனையடுத்து, மக்கள் அதிகாரம் அமைப்பு மக்களை ஒன்றிணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 5 (05.8.2024) அன்று காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது. அப்பகுதி முழுவதும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 2-ஆம் தேதியன்றே, காத்திருப்பு போராட்டத்தை நடத்த வேண்டாம் என திருவாரூர் கோட்டாட்சியர், நிர்வாக நீதிபதி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அழைத்தது.

அப்பேச்சுவார்த்தையில் இ-பட்டா மூலமாக பட்டாவை வழங்க சென்னை பட்டா உயர் அலுவலகத்தில் அதற்கான வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும் அதற்கு இரண்டு மாத காலம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இ-பட்டாவாக  பெற்றுக்கொள்வது மக்களுக்கு சுலபமாகவும் இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மக்கள் மற்றும் சக தோழர்களின் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 34 குடும்பத்திற்கும் இரண்டு மாதத்திற்குள் பட்டா வழங்குவதாக அரசு சார்பில் மீண்டும் உத்திராவாதம் அளிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் காத்திருப்பு போராட்டத்தை மக்கள் அதிகாரம் தோழர்களும் மக்களும் தற்காலிகமாக ஒத்திவைத்தனர். ஆனால், இரண்டு மாதகாலம் ஆகியும் பட்டா வழங்காமல் கிடப்பில் போட்ட மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து டிசம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது, மக்கள் அதிகாரம். ஆர்ப்பாட்டத்திற்காக திருவாரூர் தாலுக்கா போலீசு நிலையத்தில் அனுமதி வேண்டி கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், போராட்டத்தை நடத்த விடாமல் தடுக்கும் வகையில், ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கும் தேதிக்கு 15 நாட்கள் முன்பாகவே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற வேண்டும் எனக்கூறி  போலீசுதுறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து கடிதம் கொடுத்தது.

அதன் பிறகு அப்பகுதி மக்களும் தோழர்களும் சேர்ந்து திருவாரூர் போலீசுதுறையிடம் அனுமதி கேட்க சென்றனர். அப்போது ஒன்று எங்களுக்கு போராட்டத்திற்கு அனுமதி கொடுங்கள், இல்லையென்றால் உடனடியாக பட்டா வழங்குங்கள் என கேட்டுக் கொண்டனர். அதனடிப்படையில், மாவட்டத் துணை கண்காணிப்பாளருக்கும் ஊர் பொறுப்பாளர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆசாத், பொருளாளர் தோழர் முரளி, இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் லெனின் ஆகியோருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாள் அன்று கண்டிப்பாக 34 குடும்பத்திற்கு குடிமனை பட்டா வழங்குவதாகவும் அதனால் போராட்டத்தை கைவிடுமாறும் தெரிவிக்கபட்டது.

இந்நிலையில்தான், டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாளன்று 34 குடும்பத்திற்கும் வீட்டு குடிமனை பட்டா வழங்கப்பட்டது. இது தங்களது உரிமைக்காக தொடர்ச்சியாக போராடிவந்த மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.



தகவல்
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க