டங்ஸ்டன் சுரங்க திட்டம்: மதுரையை உலுக்கிய மக்கள் பேரணி

தங்களுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அரசின் மீது நம்பிக்கை இழக்கும்போது மக்கள் தங்களுடைய வாழ்வை மீட்டெடுப்பதற்காக எப்பேர்ப்பட்ட தடைகளையும் தகர்த்தெறிவார்கள் என்பதை அங்கே காணமுடிந்தது.

டங்ஸ்டன் சுரங்க ஏலத் திட்டத்தை எதிர்த்து மதுரையை உலுக்கிய
பல்லாயிரக்கணக்கான மக்களின் பேரணி!

ங்ஸ்டன் ஏலத்திட்டத்திற்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு கட்டங்களாகக் கண்டன போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் ஜனவரி 7 காலை மேலூர் நரசிங்கப்பட்டியில் இருந்து மதுரை தமுக்கம் வரைக்கும் பொதுமக்கள் அனைவரும் பேரணியாகச் செல்வதாகத் திட்டமிட்டு மேலூர் போலீஸிடம் அனுமதி கேட்கப்பட்டது.

கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று போராட்டத்தில் ஈடுபடாதவாறு மக்களை மிரட்டுவதும் முன்னணியாவார்களுக்கு சம்மன் அனுப்புவதுமான போக்கை போலீசு கடைப்பிடித்தது. இதையும் மீறி ஒவ்வொரு ஊர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுவந்தனர்.

சிட்டம்பட்டி அருகே உள்ள டோல்கேட்டில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். டோல்கேட்டில் இருந்து மதுரை செல்லும் வழியில் 200க்கும் மேற்பட்ட மக்கள் பேரணியுடன் இணைந்து செல்வதற்குக் காத்திருந்தனர். அப்போது டோல்கேட் அருகே பேரணி வருவதை அறிந்த போலீஸ் அவர்களைத் தடுக்கும் விதமாக அவர்களது வாகனங்களைக் குறுக்கே நிறுத்தினர்.

இதனைக் கண்டு பேரணியுடன் இணையக் காத்திருந்த மக்கள் போலீஸை முற்றுகையிட்டு, “நீங்கள் யார் எங்களைத் தடுப்பதற்கு, எங்கள் வாழ்வை அழிக்க வருபவனுக்கு நீங்கள் பாதுகாப்பா? நாங்கள் அமைதியான வழியில் போராடுகிறோம். எங்களைத் தவறான வழிக்குத் தூண்டாதீர்கள்” என ஆவேசத்துடன் கேள்வி கேட்டனர். முற்றுகையிட்ட 200 பேரில் 150 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருபக்கம் பேரணி அணிவகுப்பு நெருங்கிவருவது; இன்னொருபக்கம் முற்றுகை. இதனைச் சமாளிக்க முடியாமல் போலீஸ் தங்களுடைய வாகனங்களை அகற்ற ஆரம்பித்தனர். டோல்கேட் நுழைவாயிலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரை சாரையாக நடைப்பயணமாகவும் வாகனத்திலும் டங்ஸ்டன் சுரங்க ஏலத் திட்டத்திற்கு எதிராகவும், பாசிச பாஜக-வை எச்சரிக்கும் விதமாகவும் முழக்கமிட்டுக் கொண்டே சென்றனர்.

வழிநெடுகிலும் உணவுப்பொட்டலம், குடிதண்ணீர் வண்டி, ஆயிரக்கணக்கான குளிர்பானம் என சகல ஏற்பாடுகளுடன் செல்வதைப் பார்க்கும் போது டெல்லி விவசாயிகள் பேரணியை நினைவுபடுத்தியது.18 கிலோமீட்டர் பயணம் செய்து இறுதியில் மதுரை தமுக்கத்திற்கு வந்தடைந்தபோது தமுக்கத்தை சுற்றியுள்ள தெருக்களிலும் தமிழன்னை சிலை அருகே உள்ள ஆர்ச் பக்கத்திலும் தடையரணை வைத்து ஆயிரக்கணக்கான மக்களை போலீசு தடுத்தது. அதாவது ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று இப்போராட்டம் உருவாகிடக் கூடாது என்பதில் போலீஸார் மிக எச்சரிக்கையாக இருந்தனர்.

இதனால் போலீசுக்கும் மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இறுதியில் தடையரணை தூக்கியெறிந்துவிட்டு மக்கள் ஒன்றுகூடினர். தமுக்கமே அதிரும் வண்ணம், பாசிச பாஜக-வை எச்சரித்து மக்கள் முழக்கமிட்டனர். தங்களுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அரசின் மீது நம்பிக்கை இழக்கும்போது மக்கள் தங்களுடைய வாழ்வை மீட்டெடுப்பதற்காக எப்பேர்ப்பட்ட தடைகளையும் தகர்த்தெறிவார்கள் என்பதை அங்கே காணமுடிந்தது.

தென்மண்டல ஐ.ஜி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, “நாங்கள் தற்போது தற்காலிகமாக எங்களது போராட்டத்தை நிறுத்தி கலைந்து செல்கிறோம். ஆனால் டங்ஸ்டன் சுரங்க ஏல திட்டம் கைவிடவில்லை என்றால் “ஜனவரி 26 குடியரசு தினத்தன்று கருப்புக்கொடி ஏற்றுவது மட்டுமல்ல மீண்டும் எங்கள் போராட்டத்தைத் துவங்குவோம்” என மத்திய அரசை எச்சரித்துச் சென்றனர்.

பாசிச பாஜக டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்கிற அடிப்படையில் மீண்டும் கள ஆய்வு, பரிசீலனை என அணுகுவதற்கு எதிராக மக்கள் பல்வேறு போராட்டங்களைக் கட்டியமைக்கின்றனர். இத்திட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் திமுக அரசு தீர்மானம் இயற்றினாலும் மக்கள் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்காததும் போராடக்கூடியவர்களை போலீசைக் கொண்டு மிரட்டுவதும் அதன் சந்தர்ப்பவாதத்தை அம்பலப்படுத்துகிறது.

நாங்கள் காலம் காலமா வாழ்ந்த எங்கள் நிலம், வீடு, குளம், கண்மாய், மலை தெய்வங்கள், பல்லுயிர் நிறைந்த இயற்கை வளங்களை விட்டு எங்கே செல்வோம். எங்களுடைய பிள்ளைகளுக்காகவும் பேரக்குழந்தைக்காகவும் நாங்கள் எங்களுடைய உயிரைக் கொடுத்தாவது கொலைகார வேதாந்தா நிறுவனத்தை விரட்டியடிப்போம் என உறுதியாக இருக்கிறார்கள். நான் உயிரோடு இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் தமிழ்நாட்டுக்கு வராது என்று கூறிய தமிழக முதலமைச்சர் இதனைப் பரிசீலனை செய்ய வேண்டும்.

களச்செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க