தி.மு.க. அரசுதான் முதன்மைக் குற்றவாளி!

பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்குகளில் தமிழ்நாடு அரசின் இந்த அலட்சியமான அணுகுமுறையும் குற்றவாளிகளை பாதுகாக்கும் போக்கும்தான் இதுபோன்ற குற்றங்கள் அதிகரிப்பதற்கு முதன்மைக் காரணங்களாகும்.

ண்ணா பல்கலைக்கழக மாணவி, பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியாகி மாணவி குறித்த தகவல்கள் கசியவிடப்பட்டது அனைவரையும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட மாணவிகள் இனி புகாரளிக்க முன்வராத வகையில் தடுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலாகவே இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்துள்ளன.

கேட்கும்போதே கோபமூட்டும் இச்செய்திகளுடன் தி.மு.க. அரசு, தமிழ்நாடு போலீசு, தி.மு.க. ஐ.டி. ஊடகங்களின் அணுகுமுறைகள் மேலும் மேலும் ஆத்திரங்கொள்ளச் செய்கின்றன.

மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே வெளியாள் ஒருவனால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட இச்சம்பவத்தை, “ஒரு மாணவியின் தனிப்பட்ட பிரச்சினை, அதனை ஏன் அரசியலாக்குகிறீர்கள்” என்றார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன். “பல்கலைக்கழகத்தில் இருக்கும் முட்புதர்களை அகற்றப் போகிறோம்” என்று திமிரடியாகப் பேசி பிரச்சினையை திசைத்திருப்ப முயற்சித்தார். தி.மு.க-வின் ஐ.டி. அணியும் இதை அப்படியே வாந்தியெடுத்துப் பிரச்சாரம் செய்தது.

காவல்துறை ஆணையர் அருணோ, அமைச்சரைவிட இன்னும் ஒருபடி மேலே சென்று, ‘தொழில்நுட்பக் கோளாறு’ காரணமாகவே முதல் தகவல் அறிக்கை வெளியானது என்று அதிகாரத் திமிரில் பேசினார்.

பல்கலைக்கழக நிர்வாகமோ இச்சம்பவம் குறித்து தற்போதுவரை வாய்திறக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் இருக்கும் 80 சதவிகித சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்படவில்லை என்ற செய்தி, இந்த அரசுக் கட்டமைப்பு எந்த அளவிற்கு செயலிழந்து போயுள்ளது என்பதைக் காட்டுகின்றது.

மற்றொருபுறம், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஞானசேகரன், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினுடனும் தி.மு.க-வின் முக்கிய அமைச்சர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்து நாறியது. அதன்பிறகு அந்த குற்றவாளி ஞானசேகரனுக்கும் தி.மு.க-விற்கும் தொடர்பில்லை என்ற மழுப்பலான பதிலே தி.மு.க. தரப்பிலிருந்து அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், பிரபலமான அண்ணா பல்கலைக்கழகத்தில் இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அனைத்து ஊடகங்களும் இங்கு உள்ளது. எனவே பிரச்சினை பெரிதாகிறது, வேறு வழியின்றி சென்னை உயர்நீதிமன்றமும் இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது.

தலைநகரில் மாணவி தாமாக முன்வந்து பதிவுசெய்த வழக்கிலேயே தி.மு.க. அரசின் அணுகுமுறை இதுதான் என்றால், கிராமப்புறங்களில் ஆதிக்கச் சக்திகளுடன் நெருக்கமாக இருக்கும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

சான்றாக, விருத்தாச்சலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் மனவளம் குன்றிய பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி 130 நாட்கள் கழித்து கடும் போராட்டங்களுக்குப் பிறகுதான் கைது செய்யப்பட்டான். பாதிக்கப்பட்டப் பெண்ணை 130 நாட்கள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாமலும் பாலியல் வன்புணர்வு பிரிவுகளை முதல் தகவல் அறிக்கையில் பதியாமலும் இருந்த காவல் ஆய்வாளர் முருகேசன், தலைமைக் காவலர் வேல்முருகன் மீது இப்போதுவரை தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்பாக, தமிழ்நாடு எஸ்.சி.-எஸ்.டி. ஆணையம், மாற்றுத்திறனாளிகள் ஆணையம், மகளிர் ஆணையம் என எத்தனை ஆணையங்களுக்கு அறிக்கை அனுப்பினாலும், குற்றவாளிக்கு துணைபோன போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசும் போலீசும் தயாராக இல்லை.

பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்குகளில் தமிழ்நாடு அரசின் இந்த அலட்சியமான அணுகுமுறையும் குற்றவாளிகளை பாதுகாக்கும் போக்கும்தான் இதுபோன்ற குற்றங்கள் அதிகரிப்பதற்கு முதன்மைக் காரணங்களாகும்.

ஆனால், பாலியல் வன்முறைக் குற்றவாளிகளின் கூடாரமான பா.ஜ.க – அண்ணாமலை கும்பலானது இப்பிரச்சினையில் இருந்து மக்களை திசைத்திருப்பும் வகையிலும் உண்மையான காரணங்களை மறைக்கும் வகையிலும் “சாட்டையால் அடித்துக்கொள்ளும்” கேலிக்கூத்துகளை அரங்கேற்றி வருகிறது. அடிமை அ.தி.மு.க-வும் பினாமி விஜயும் இப்பிரச்சினையைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நிகழ்வானது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்புணர்வு, கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஒத்ததாக உள்ளது. இதில் தமிழ்நாட்டின் தி.மு.க. அரசும் மேற்கு வங்கத்தின் மம்தா அரசும் ஒரே மாதிரியான அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கின்றன. இயன்றவரை குற்றத்தின் முழுப் பரிமாணத்தையும் மறைப்பது, பிரச்சினையை திசைத்திருப்ப முயற்சிப்பது போன்றவை அனைத்தும் ஒரே வகையில்தான் அமைந்துள்ளன.

இரண்டு சம்பவங்களிலுமே மக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்புக் குரல்கள் மட்டுமே ஓரளவிற்கேனும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் காரணமாக அமைந்துள்ளது. இப்போராட்டங்களை வளர்த்தெடுப்பதும் பெண்களுக்கான அனைத்து வகையிலான பாதுகாப்புகளையும் உறுதி செய்வதும் ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் அனைவரது கடமையாகும்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



1 மறுமொழி

  1. இந்த விஷயத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்
    கடந்த அதிமுக ஆட்சியில் இது போன்ற குற்ற சம்பவங்களுக்கு வீதியில் போராடிய போராளிகள் எல்லாம் எங்கே சத்தத்தையே காணோம் ..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க