மனவளர்ச்சி குறைபாடுடைய பெண் மீதான பாலியல் வன்கொடுமையும்
விருதாச்சலம் போலீசின் செயல்பாடும்
உண்மை அறியும் குழு அறிக்கை
உறுப்பினர்கள்:
- தோழர் மருது (எ) இராமு.நா – வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்
மாநில செய்தித்தொடர்பாளர், மக்கள் அதிகாரம். - தோழர் சி.கலைமதி – வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.
- தோழர் அசோக் குமார், நகரச்செயலாளர், மக்கள் அதிகாரம்.
- தோழர் இரா. கருணாகரன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.
வெளியீடு:
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
பேச : 9962366321
Fb: Makkal Athikaram
Youtube: Makkal Athikaram
***
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பாலி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் மனவளர்ச்சிக் குறைபாடுடைய (Intellectual Disablity 50%) இளம் பெண் ஒருவர் கடந்த 18.05.2024 அன்று காணாமல் போனார். இது தொடர்பாக விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இப்பிரச்சினைத் தொடர்பாக விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் பெண் காணாமல் போனார் என்ற அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை 265/2024 பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அப்பெண் 08.06.2024 அன்று விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் உறவினர் ஒருவரால் கண்டறியப்பட்டார். அன்றைய நாள் மாலையில் விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை ஒப்படைத்தனர். அப்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை அவரது பெற்றோர்கள் கொடுத்த புகாரின் மீது அன்றைய தேதி முதல் தற்போது வரை சுமார் ஐந்து மாதங்கள் கடந்த பின்னரும் முதல் தகவல் அறிக்கை திருத்தம் செய்யப்படாமல் – அதே நேரத்தில் மனவளம் குறைபாடுடைய பெண் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்புணர்வு குற்றத்திற்கு உரிய பிரிவுகள் பதிவு செய்யப்படாமல் – உள்ளது. இது தொடர்பாக உண்மையை அறியும் வகையில் இக்குழு அமைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண், அவரது உறவினர்கள் மற்றும் மனநல மருத்துவர், அரசியல் கட்சி தலைவர், விருத்தாச்சாலம் பகுதி நபர்களின் கருத்துக்களிலிருந்து உண்மையை அறியத் தொடங்குவோம்.
மனநல மருத்துவர் ராதிகா முருகேசன்
ஒரு பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அதிலும் intellectual disability 50% – ஆக இருந்தால் அவரை விசாரிக்கும் போது கட்டாயமாக உளவியல் நிபுணர் ஒருவர் அருகில் இருக்க வேண்டும். விசாரிக்கக் கூடிய நபர்கள் அவர்களிடம் விசாரணை என்ற முறையில் செய்யாமல் ஒரு குழந்தையிடம் பேசும் தோரணை மட்டும் தான் இருக்க வேண்டும். அதிலும் முக்கியமான கேள்விகள் கேட்கும் போது அவருடைய உறவினர்களிடம் மட்டும் தான் கேட்க வேண்டும். அவர் எந்த வயது நபராக இருந்தாலும் intellectual disability என்பது குழந்தைத்தனம் மட்டுமே உடையவராக இருப்பார்.. எனவே அவரைஒரு குழந்தையாக மட்டுமே அணுக வேண்டும்.
பெயர் கூற விரும்பாத உளவியல் நிபுணர்
50 % மன நலம் குறைபாடுடைய (intellectual disability 50%) ஒரு பெண் என்பவர் எவ்வித முடிவையும் எடுக்கத்தெரியாதவர் ஆவார். அவருக்கு சரி, தவறு எதுவும் தெரியாது. அவரை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாகவே கருத வேண்டும். அவர் ஒரு தவறு செய்து விட்டார் என்று அவரைக் குற்றம் சாட்ட முடியாது. இப்படிப்பட்ட வழக்குகளில் அப்பெண்ணை காவலர்கள் ஒரு போதும் விசாரணை செய்யக்கூடாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மனநல மையம் மூலமாகவே விசாரணை செய்ய வேண்டும். மேலும் அப்பெண் பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டதை அறிந்தால் அக்குழுவில் ஒரு பெண் உளவியல் நிபுணரும் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மா – திருமதி ஜெயா
என்னுடைய கணவர் கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்டவர். மாதம் ஒருமுறை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அவரை நான் அழைத்துச் செல்கிறேன். என்னுடைய ஊதியம் மாதம் ரூ 6,500/- ஆகும். எனக்கு இரண்டு மகள்கள், முதல் பெண்ணுக்கு திருமணம் செய்துவிட்டேன். இரண்டாவது பெண் மன வளக்குறைபாடு உள்ளவர். விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பி.ஏ தமிழ் மூன்றாமாண்டு படித்து வருகிறார். நான் துப்புரவுப் பணியாளராக பள்ளி விடுதியில் ஒப்பந்த முறையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். கல்லூரியில் பருவத்தேர்வின் கடைசித் தேர்வு எழுத சென்ற என்னுடைய பெண் தேர்வு எழுதுவதற்கு வரவில்லை என்று அவருக்காகத் தேர்வு எழுதும் நபர் தகவல் கூறினார் (பாதிக்கப்பட்ட பெண்ணால் சொந்தமாக எழுத முடியாது அவர் கூற இன்னொருவர் எழுதுவார்). நாங்கள் எங்காவது வெளியில் சென்று இருப்பார் என்று நினைத்தோம். அதன் பிறகு இரவு வரையும் வராததால் காவல் நிலையத்தில் சென்று என் மகளை காணவில்லை என்று 18.05.2024 – ஆம் தேதியன்று புகார் கொடுத்தோம். அதன் பிறகு பல முறைகள் காவல்துறையிடம் சென்று விசாரித்துக் கொண்டே இருந்தோம். காணாமல் போன என்னுடைய பெண்ணை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்ததா என்று கேட்டுக் கொண்டே இருந்தோம், ஆனால் காவல்துறையிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதன் பின்னர் ஜூன் 8 – ஆம் தேதி தூய்மைப்பணியாளராக பணியாற்றும் என்னுடைய உறவினர் ஒருவர் என்னுடைய பெண்ணையும் இன்னொரு ஆண் நபரையும் விருதாச்சலம் பஸ் ஸ்டாண்டில் பிடித்து வைத்துக்கொண்டு எனக்கு போன் மூலம் தகவல் கூறினார். அவன் (ஆண்டனி ஆகாஷ், அருமை நல்லூர், பூதப்பாண்டி, நாகர்கோயில்) என்னுடைய மகளை வந்து விடும்போது என்னுடைய உறவினர் பார்த்து விட்டதால் உடனடியாக அவனை பிடித்தார். ஆனால் அவன் தப்பிச் செல்ல முயன்று அந்த நேரத்தில் அவனுடைய செல்போனை மட்டும் பிடுங்கி வைத்துக்கொண்டார். அதிலிருந்து தான் அவர்கள் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் எங்களுக்குக் கிடைத்தன. பின்னர் காவல் நிலையம் சென்று எனது மகள் வந்து விட்டாள் என்று அந்தப் பையனைப் பற்றிய தகவலை கொடுத்தோம். உடனடியாக அவன் மீது நடவடிக்கை எடுக்கவும் என்று கூறினோம்.
அதற்கிடையில் அந்த பையன் சித்தப்பா தங்கராஜ் எங்களைத் தொடர்பு கொண்டு உங்கள் பெண்ணை ஏதுக்காக ஹாஸ்டலில் தங்க வச்சீங்க?. கல்யாணம் செய்ய வக்கில்லாமல் யாரையாவது கூட்டிக்கிட்டு போகட்டும்னு நினைச்சீங்களா? என்றும் தகாத முறையில் பல விஷயங்களை பேசினார். நாங்கள் தான் குற்றம் செய்தோம் என்றும் என்னுடைய மகள் தான் குற்றம் செய்தார் என்ற அடிப்படையில் பேசினார்.
அதன் பின்னர் மீண்டும் தொடர்பு கொண்ட அவர் பையனை எதுவும் செய்து விடாதீர்கள். உங்கள் மகளை நாங்கள் எனது அண்ணன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறினார்கள். அதன் பிறகு நான் முதலில் இங்கு வாருங்கள். எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக் கொள்ளலாம் என்று கூறினேன்.
அதன் பின்னர் அவர் மகன் அருமை நல்லூருக்கு சென்ற பிறகு எங்களை எதுவும் பண்ண முடியாது என்று கூறினார். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் காவல்துறையிடம் பேசினோம். காவல்துறையினர் எங்களால் இதுக்கு மேல எதுவும் பண்ண முடியாது. நீங்க வேணா கன்னியாகுமரியில் போய் அங்க உள்ள காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் கொடுங்க என்று கூறினார்கள்.. அதனால நாங்கள் 10 ஆயிரம் பணம் செலவு செய்து விருத்தாச்சலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்களை அழைத்துச் சென்றோம். நாகர்கோயில், பூதப்பாண்டி காவல்துறையினர் ஆண்டனி ஆகாஷ் வீட்டில் சென்று விசாரித்தனர். ஆனால் ஆகாஷ் வீட்டில் இல்லை என்று தெரிவித்த அவனது அம்மா வேறொருநாளில் விருத்தாச்சலம் அழைத்துக்கொண்டு வருகிறோம் என்றும் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்தார்.
சுமார் 20 நாட்கள் கழித்து ஆண்டனி ஆகாஷ், அவரது அப்பா, சித்தப்பா, வழக்குரைஞர்கள் ஆகியோர் விருத்தாச்சலம் காவல் நிலையம் வந்தனர். ஆகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யாமல், விருத்தாச்சலம் போலீசு வேண்டுமென்றே தப்ப வைத்து விட்டனர். ஆகாஷ் விருத்தாச்சலத்தில் அடகு வைத்த நகையை மீட்டுக்கொண்டு சென்றுள்ளார். நான் 20 முறைகளுக்கு மேல் காவல் நிலையத்திற்கு அலைந்து விட்டேன். ஒரு முறை கூட எங்களை மரியாதையாக உட்கார வைத்து பேசவில்லை. முதல் தகவல் அறிக்கையைக் கேட்டுப் பல முறை அலைந்த போது, விருதாச்சலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் வேல்முருகன், முதல் தகவல் அறிக்கையை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்? என்று கிண்டலாகப் பேசினார். காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் எப்போதும் மரியாதையாக நடத்தியதே இல்லை. எந்தக் கட்சிக்காரனையும் கூட்டிட்டு வரக்கூடாது, அவனுங்க பெரிய மயிரா? என்று திட்டினார். ஆனால் இதுவரை பெண் காணாமல் போன முதல் தகவல் அறிக்கையே உள்ளது. அதைத் திருத்தம் செய்யாமல் வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறார்.
இதுவரை மூன்று முறை டி.எஸ்.பி.யிடம் சென்றுள்ளோம். அவர்கள் ஒவ்வொரு முறையும் புதியதாகக் கேட்பது போல கேட்கிறார்கள். (இக்கால கட்டத்தில் இரண்டு துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் பணியாற்றினர். இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்). பெண் டிஎஸ்பி ஒருவரிடம் காவல் ஆய்வாளர் முருகேசன் வேண்டுமென்று ஆண்டனி ஆகாஷை கைது செய்யாமல் உள்ளார் என்று நான் புகார் கூறிய போது, இவ்வழக்கை மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றுவதாகக்கூறினார். மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றால், இவ்வழக்கை நாங்கள் விசாரிக்கவே முடியாது என்கிறார்கள்.
ஆண்டனி ஆகாஷை கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து காவல் நிலையம் செல்வதால் உங்களுக்கு என்னதான் வேணும் என்று பேசுகிறார் ஏட்டு வேல் முருகன். உதவி ஆய்வாளர் ரவிக்குமார் என்பவர் ”உன்னுடைய பெண்ணுக்கு வயது அதிகம், பையனுக்கு வயது குறைவு. இதுக்கு மேல நடவடிக்கை வேண்டுமென்றால் உன் பொண்ணைத்தான் கைது செய்யணும்” என மிரட்டுகிறார். இவை அனைத்தும் காவல் ஆய்வாளர் முருகேசன் முன்னிலையிலேயே நடைபெறுகின்றன.
காவல்துறையினரின் ஒத்துழைப்போடுதான் ஆண்டனி ஆகாஷ் குடும்பத்தினர் இதுவரை பாதுகாப்பாக இருக்கின்றனர். எனவே காவலர்கள் ஜெயக்குமார், வேல்முருகன் மற்றும் காவல் ஆய்வாளர் முருகேசன் மீதும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கையாக இருக்கிறது. புற்று நோயாளியான எனது கணவரையும் பார்த்துக் கொண்டு என் மகளுக்கும் நீதியை தேடி நான் அலைந்து கொண்டிருக்கிறேன்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பா திரு. சுப்பிரமணி
எனக்கு வயது 57. நான் சிபிஎம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பாலிகிராமம் பகுதியில் எட்டாவது மன்ற உறுப்பினராக இருக்கிறேன் .வெளிநாட்டில் மெக்கானிக்காக வேலை செய்தேன். பிறகு இங்கு பெயிண்டராக இருந்தேன். 2019 இல் எனக்கு கேன்சர் கண்டறியப்பட்டது. வெறும் திரவஉணவு மட்டும்தான் உண்ணக்கூடிய நிலையில் உள்ளேன். உடம்பு மிகவும் முடியாமல் போய்விட்டதால் என்னால் எந்த வேலைகளிலும் ஈடுபட முடியவில்லை. என் மனைவி ஆசனூரில் 6,500 ரூபாய் சம்பளத்துக்கு சுகாதாரப் பணியாளராக வேலை செய்து கொண்டிருக்கிறார். நான் கேன்சர் நோயாளி என்பதால் எனக்கு அரசிடம் இருந்து 1000 ரூபாய் நிதி வருகிறது. பாதிக்கப்பட்டப் பெண்ணான என்னுடைய சிறிய மகள் ஒரு மாற்றுத்திறனாளி என்ற காரணத்தினால் ரூபாய் 1200 அரசிடம் இருந்து நிதியாக வருகிறது. என்னுடைய பெரிய பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுத்ததில் அதிகக் கடனாகியது. எங்கள் குடும்பத்தின் மாத வருமானமாக ரூபாய் 8,700 வருகிறது. அந்தத் தொகையில் 4,500 வட்டிக்கே கட்டிக் கொண்டிருக்கிறோம். மீதமுள்ள தொகையில் தான் எங்களது குடும்ப செலவு, மகளின் படிப்பு செலவு, மருத்துவ செலவுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
என் மகள் காணாமல் போனது முதல் இப்போதுவரை 20 முறைக்கு மேல் காவல் நிலையம் சென்றும் எந்த ஒரு முழுமையான நடவடிக்கையும், எந்த ஒரு பதிலும் காவல்துறை தரப்படமிருந்து இல்லை.
நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். என் மகளைக் கட்டாயப்படுத்தியும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் ஆகாஷ். முதலில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது இன்ஸ்பெக்டர் முருகேசன் இருந்தார். அப்பொழுது ஏட்டு வேல்முருகன் தான் முதலில் இதை விசாரித்து நாங்கள் கூறும் புகார்களை எழுதினார். ஏமாற்றிய அந்தப் பையனின் போனை அந்த ஏட்டு கையில் தான் கொடுத்தோம். ஆகாஷ் 50 ஆயிரம் பணத்தை கொடுப்பதாகவும் அதை வாங்கிக் கொண்டு செல்லுபடியும் அவன் கூறியதாக ஏட்டு வேல்முருகன் என்னிடம் கூறினார். திருமணம் செய்து கொள்ள வேண்டும், அல்லது ஜெயிலுக்குப்போக வேண்டும். எனக்குப் பணம் வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அந்த ஆகாஷுக்கு சாதகமாகத்தான் காவல்துறை நடந்து கொண்டதாக தெரிகிறது.
விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட எங்களை உட்கார வைக்கவில்லை, நிற்க வைத்து கொண்டே பேசினார்கள். நாங்கள் கேட்பதெல்லாம் உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதே. இப்பிரச்சினைக்குப் பின்னர் நடத்தை சரியில்லை என்று என் மகளை கல்லூரி விடுதியில் இருந்து நீக்கிவிட்டனர். மன வளர்ச்சி, குன்றிய அவர் இரண்டு பேருந்து மாறி 27 கிலோமீட்டர் பயணம் செய்து இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு வர வேண்டிய சூழல் என்பது ஏற்பட்டுள்ளது.
வேல்முருகன், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மாமா
பெண் காணாமல் போனது தொடர்பான எஃப் ஐ ஆர் போடுவதற்கே நான்கு முதல் ஐந்து முறை போலீஸ் ஸ்டேஷனில் அலைந்திருக்கிறோம் பையனை காணவில்லை என்று பூதப்பாண்டியில் பையன் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவர் எங்களிடம் பேசினார். பெண் கிடைத்த ஜூன் 8-ம் தேதி மாலை விருதாச்சலம் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. அய்யனாரிடம் பெண்ணையும் ஃபோனையும் ஒப்படைத்தோம்.
பாதிக்கப்பட்டப் பெண்ணை அந்த எஸ்.ஐ விசாரித்தார். ஆண்டனி ஆகாஷுக்கு போன் செய்து விசாரித்தார். ஆண்டனி ஆகாஷ் தரப்பினர் ஒரு வாரத்தில் வருவதாகக் கூறி வரவில்லை. 15 நாட்கள் கழித்து நாங்கள் போலீஸ் ஸ்டேஷன் சென்ற பிறகு, அந்தப் பையனின் வீட்டிற்கு செல்ல முடிவு எடுத்து பூதப்பாண்டி சென்றோம். அங்கு உள்ள காவல் நிலையத்தில் தகவல் கூறிவிட்டு அருமைநல்லூரில் உள்ள ஆண்டனி ஆகாஷ் வீட்டிற்கு சென்றோம். சுமார் 20 நிமிடம் கதவை திறக்கவில்லை அதற்குள் ஆண்டனி ஆகாசை அவருடைய அம்மா தப்ப வைத்து விட்டார்.
ஆண்டனி ஆகாஷின் அம்மா இறுதியில் பூதப்பாண்டி போலீஸ் ஸ்டேஷன் வந்து குறிப்பிடுகிற தினத்தில் விருதாச்சலம் போலீஸ் ஸ்டேஷனில் பையனை ஒப்படைக்கிறோம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு போனார்.
அதற்குப் பிறகு 15 நாட்கள் கழித்து போலீஸ் விசாரணைக்கு ஆண்டனி ஆகாஷ் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வருவதாக எனக்கு தகவல் கூறினார்கள். நாங்கள் வருவதற்குள்ளாகவே அவர்கள் உணவு சாப்பிடுவதாக கிளம்பி விட்டு அப்படியே தப்பித்து விட்டார்கள்.
மனவளர்ச்சிக் குறைபாடுடைய பெண்ணை அழைத்துச் சென்றது, அந்தப் பெண்ணை வன்புணர்வு கொண்டது ஆகிய கிரிமினல் குற்றங்களை புரிந்த ஒரு கிரிமினலை போலீஸ் சாப்பிடுவதற்கு வெளியே அனுப்பியது அவரை தப்ப வைப்பதற்கான முயற்சி என்று கருத முடிகிறது.
இதுவரை இரண்டு டிஎஸ்பி- களிடம் மனு கொடுத்து விட்டோம் .ஏற்கனவே இரண்டு முறை விருதாச்சலம் காவல் நிலையத்தில் மனு கொடுத்திருக்கிறோம். நான்கு முறை புகார் மனுவை கேட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போல அந்தப் பெண்ணை விசாரணை செய்கிறார்கள்.
பெயர் குறிப்பிட விரும்பாத நபர் -1
இந்தப் பிரச்சனையில் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கம் போலீசுக்கு கொஞ்சமும் இல்லை. பெண்ணை ஏமாற்றிய நபர் கன்னியாகுமரியில் இருந்து வந்த போதும் அந்த நபரிடம் விருத்தாச்சலம் போலீசு முழுமையாக விசாரணை நடத்தி அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை .
விருதாச்சலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் என்பவர், பெண்ணுக்கு வயது அதிகம், பையனுக்கு வயது குறைவு ஆகவே நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றும் பெண்தான் அந்தப் பையனை அழைத்துக் கொண்டு சென்றார் என்றும் மனவளர்ச்சி குறைபாடுடைய பெண்ணை குற்றம் சுமத்தினார்.
இப்பிரச்சனை தொடர்பாக விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆரோக்கியராஜ், கிரியா சக்தி ஆகிய இரு டி.எஸ்.பி.-க்களிடமும் புகார் கொடுத்தும் எவ்விதத்தீர்வும் இல்லை
எத்தனை மேல் அதிகாரியிடம் புகார் கொடுத்தாலும் நாங்கள் குற்றம் சாட்டக்கூடிய விருத்தாச்சலம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம்தான் மீண்டும் விசாரணைக்கு என்று நாங்கள் நிற்க வேண்டி உள்ளது.
இந்தப் பெண்ணுக்கு ஆதரவாக மற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் செல்லும்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் கண்டவனை எல்லாம் அழைத்து வராதே என்று பெற்றோர்களை கடுமையாக மிரட்டுகிறார்.
இந்த பிரச்சனை நடந்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. இத்தனை நாட்களில் போலீஸ் ஒழுங்காக வழக்கு நடத்தி இருந்தால் மற்ற அமைப்பினர் கட்சியினர் வரவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. காவல் ஆய்வாளர் முருகேசன் அதையும் செய்யாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு ஆதரவாக எந்த கட்சிகளும் வரக்கூடாது என்று மிரட்டுவது தவறு.
பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினரையும் பாதிப்பு ஏற்படுத்திய நபரையும் முதல் சுற்றிலேயே பேசி நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக வேண்டுமென்றே இந்த வழக்கை தொய்வாகவே விருத்தாச்சலம் போலீசார் நடத்தியுள்ளனர். விருத்தாச்சலம் காவல் நிலையத்தை பொறுத்தவரை மக்கள் பிரச்சினைகளில் எதையும் கண்டுகொள்ளாமல் செயல்படும் போக்கே நீடிக்கிறது. அதுவும் பட்டியலின மக்கள் என்றால் அவர்களுக்கு வழக்கினை நடத்துவதே மிகப்பெரிய சுமையாக இருக்கிறது.
திரு.அய்யாத்துரை,விடுதலை சிறுத்தைகள் கட்சி
விருதாச்சலம் காவல் நிலையத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பிசிஆர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எந்த ஒரு வழக்கிலும் இதுவரை குற்ற பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை.
தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் இழிவாகப் பேசிய ஒரு ஊடகவியலாளரின் ஆடியோ வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மீது நான் அளித்த புகார் இதுவரை ஏற்கப்படவில்லை. அவர் மீது பிசிஆர் வழக்குப் பதிவு செய்யப்படவுமில்லை.
கணபதி குறிச்சி ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். ஆதிக்கச் சாதியை சேர்ந்த ஒருவரிடம் அவரின் மகன் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியப் பிரச்சினையில் அந்த ஊராட்சி மன்றத் தலைவரின் வீட்டைப் பூட்டி விட்டார்கள். செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த இப்பிரச்சனைத் தொடர்பாக இன்று வரை (08.10.2024) எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .
கடந்த ஆண்டு சாத்துக்குடல் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்கச் சாதியினர் மீது நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நான்கு பேர் உட்பட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். விருத்தாச்சலம் காவல் நிலைய அதிகாரிகள் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சிந்தனையில் செயல்படுகின்றனர்.
பெயர் கூற விரும்பாத நபர் 2
விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் முருகேசன் காவல் நிலையத்திற்கு வரக்கூடிய பல வழக்குகளையும் கிடப்பில் போடுகிறார். பாதிக்கப்பட்ட நபர்களையே குற்றவாளியாக்கும் வேலையைச் செய்கிறார். பாதிப்பை ஏற்படுத்திய நபர்கள் பணக்காரனாகவோ முதலாளியாகவோ இருந்தால் அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு சாதகமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருப்பது போன்ற வேலைகளையும் தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
காவல்துறை அதிகாரிகளே ஆதிக்கச் சாதி வெறியில் இருக்கும்போது தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிப்பு என்று வந்தால் கண்டு கொள்வது இல்லை. கஞ்சா போதை கலாச்சாரம் மிகவும் அதிகமாக இந்த பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் டாஸ்மாக் மது எந்த தடையும் இல்லாமல் விற்பனையாகிறது. இதன்மீதும் விருத்தாச்சலம் காவல் ஆய்வாளார் முருகேசன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாடு மாநில எஸ்.சி / எஸ்.டி ஆணையம்
இப்பிரச்சினை குறித்து ஏற்கனவே மாநில எஸ்.சி / எஸ்.டி ஆணையத்திற்கு பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் புகார் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக ஆணைய அலுவலர்களைச் சந்தித்தோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்தப் புகார் மீது ஆணையத்தின் சார்பில் விசாரணை மேற்கொள்ள 18.10.2024 அன்று பாதிக்கப்பட்டப் பெண்ணையும் அவரது தாயையும் அழைத்திருப்பதாகத் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்
இப்பிரச்சினை குறித்து ஏற்கனவே மாநில மகளிர் ஆணையத்திற்கு பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் புகார் அனுப்பியுள்ளார். தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் திருமதி. குமாரி அவர்கள் அலுவலகத்தில் இல்லாததால் (09.10.2024 காலை 11 மணி) அங்கு இருக்கும் உதவியாளர்களிடம் இது பற்றி விசாரித்தோம்.
”நாங்கள் மேற்கொண்டு கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளோம் என்றும், சம்பந்தப்பட்டக் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு இது பற்றி விசாரிப்பார் என்றும், நாங்கள் அனுப்பிய கடிதம் உங்களுக்கு இன்று முதல் இரண்டு நாட்களில் வந்து சேரும் என்று பதில் அளித்தனர்.
தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள்,
மாநிலச்செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை
மனவளர்ச்சி குன்றிய 21 வயது பெண் காணாமல் போனதாக கொடுக்கப்பட்டப் புகாரின் அடிப்படையில் விருதாச்சலம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்டது. 5 மாதங்கள் நெருங்கும் நிலையில் இது நாள் வரை திருத்தப்படவில்லை என்பதுதான் இப்பிரச்சினையின் மையம் ஆகும் .
அந்தப் பெண் காணாமல் போகவில்லை. ஆண்டனி ஆகாஷ் என்பவரால் மேற்படி தேதியில் திருமண ஆசைக் காட்டி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் மேற்கண்ட குற்றத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண் பிறவியிலேயே மனநலம் குன்றியவர் என்பதால் அதற்கேற்ற வகையில் விசாரித்து வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என புகார் கொடுத்தும் புகார் மீது எந்த நடவடிக்கையையும் விருத்தாச்சலம் போலீஸ் இன்றுவரை எடுக்கவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட நபரை தப்பிக்க வைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்துள்ளது. குற்றவாளிகளைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பதில் தனக்கு வழங்கப்பட்ட சட்டப்படியான அதிகாரத்தை வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்ணையும் அவர் குடும்பத்தாரையும் மிரட்டி வருகிறது விருதாச்சலம் போலீசு.
ஒரு பெண் பாலியல் உறவுக்கு அல்லது வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதை உறுதி செய்யும் மருத்துவப்பரிசோதனையை மேற்கொள்ளாமல் தடயங்களை அழிக்கும் வேலையில் விருதாச்சலம் காவல் ஆய்வாளர் முருகேசன் ஈடுபட்டுள்ளார். அதன் அடிப்படையில் இந்த குற்ற சம்பவத்தில் விருதாச்சலம் காவல் ஆய்வாளரே இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளியாக கருதி அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனவளர்ச்சிக் குன்றிய பெண்ணை ஏமாற்றி திருமண ஆசைக் காட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆண்டனி ஆகாஷ் என்ற நபர் மீது மேற்படி புகாரின் அடிப்படையில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்தாடும் இச்சூழலில் மனவளம் குன்றிய இப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகள் அதிர்ச்சியடைய வைக்கிறன. இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறையின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு எதிராகப் செயல்படும் காவல் துறையினரையும் அதே வழக்கில் குற்றவாளியாக சேர்த்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்டப் பெண் 21 வயது நிறைவடைந்தாலும் அவர் எதிலும் முடிவெடுக்கும் திறன் அற்றவராக உள்ளார். தனக்கு என்ன நேர்ந்தது என்பதைக்கூட அறியாதவராகவே உள்ளார். தற்போதுவரை தனக்கு நேர்ந்த கொடுமைகள் புரியாமல் கல்லூரிக்கு சென்று வருகிறார். அவருடன் இயல்பாகப் பேசி அப்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதை அறிய முடிகின்றது.
ஒரு தாய் மனவளர்ச்சி குன்றிய தன்னுடைய பெண் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடுகிறார். அவரின் கோரிக்கை மிகச்சிறியதுதான். உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதே. ஆனால் ஆணாதிக்க, ஆதிக்கச் சாதி வெறிபிடித்த காவல் துறையில் உழைக்கும் மக்களின் மிகச்சிறிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கூட முட்பாதைகளின் வழியே பல்லாயிரக்கணக்கான மைல்கள் நடக்கவேண்டியுள்ளது.
உண்மை அறியும் குழு வந்தடைந்த முடிவுகள்
- பாதிக்கப்பட்ட பெண் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராவார். அவர் தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளார்.
- இப்பெண் மனவளக்குறைபாடு உடையவராவார் ((Intellectual Disablity 50%)). அதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளார். எந்த முடிவையும் எடுக்க இயலாத நிலையில் உள்ளார்.
- பாதிக்கப்பட்டப்பெண் 18.05.2024 காணாமல் போன நிலையில் அன்றே பெற்றோரால் புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டதே முதல் தகவல் அறிக்கை FIR265/2024 ஆகும். பாதிக்கப்பட்டப் பெண் காணாமல் போய் 21 நாட்கள் கழித்து கிடைத்தார். பின்னர் 8.06.2024 அன்று பெற்றோரால் தன்னுடைய பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கொடுக்கப்பட்டப் புகாரின் அடிப்படையில் இது நாள் வரை முதல் தகவல் அறிக்கை திருத்தப்படவில்லை. இதற்கு விருத்தாச்சலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகேசன் மற்றும் ஏட்டு வேல் முருகன் ஆகியோரே முதல் பொறுப்பாகும்.
- பாதிக்கப்பட்டப் பெண் மனவளக்குறைபாடு உடையவராவார் ((Intellectual Disablity 50%)) என்பதை அறிந்தும் கூட மாவட்ட மனநல அலுவலருக்கு எவ்விதத் தகவலும் கொடுக்காமல் விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் திரு. முருகேசன் செயல்பட்டுள்ளார்.
- மனவளக்குறைபாடு உடைய ((Intellectual Disablity 50%)) பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட தகவலை பெற்றோர் கூறிய பின்னரும் அப்பெண்ணை மனநல மருத்துவர் மற்றும் பெண் மருத்துவரிடம் ஒப்படைத்து மருத்துவப் பரிசோதனை செய்யாமல் இருந்ததன் மூலம் திட்டமிட்டே அப்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதற்கான தடயத்தை அழிக்கும் செயலில் விருத்தாச்சலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகேசன் ஈடுபட்டுள்ளார்.
- பாதிக்கப்பட்டப் பெண் மனவளக்குறைபாடு உடையவராவார் ((Intellectual Disablity 50%)) மேலும் அவர் பட்டியலினச் சாதியைச் சேர்ந்தவராவார். ஐந்து மாதங்கள் நெருங்கும் போதும் அவர் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்புணர்வு, கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படவில்லை என்பது கண்டிக்கத்தக்கதாகும். இதற்கு முழு முதல் பொறுப்பு விருத்தாச்சலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு முருகேசன் ஆவார்.
- பாதிக்கப்பட்டப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த ஆண்டனி ஆகாஷ் மீது இதுவரை பி.சிஆர் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதற்கும் முழு காரணம் விருத்தாச்சலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகேசன் ஆவார்.
- பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் மிகவும் வறியது. இந்நிலையில் அவர்களை ரூபாய் 10000/- வரை செலவு செய்ய வைத்து நாகர்கோயிலில் உள்ள குற்றவாளியின் வீட்டுக்கு சென்ற விருத்தாச்சலம் போலீசின் நடவடிக்கைகள் மிகவும் கண்டனத்திற்குரியது. குற்றவாளியைப் பிடிப்பதற்கு பாதிக்கப்பட்டவர்களே பணம் செலவு செய்ய வேண்டும் என்று எந்த விதியும் இல்லாத போது, விருத்தாச்சலம் போலீசு மேற்கொண்ட நடவடிக்கை மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
- தூய்மைப்பணியாளரான தாய், புற்று நோய் பாதிக்கப்பட்ட தந்தை, பாதிக்கப்பட்ட பெண் ஆகியோரை கடந்த ஐந்து மாதங்களாக விருத்தாச்சலம் காவல் நிலைய அதிகாரிகள், மாவட்ட துணைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் அலைக்கழித்து மனரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.
- 08.2024 தேதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் வழக்கை சரியாக நடத்த வில்லை என்று மனு அளித்த பின்னரும், புகார் மீண்டும் விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் ஆளுகைக்குக்கீழேயே இருந்துளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
- காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களை அமர வைத்து பேசாமல் நிற்க வைத்துப்பேசுவது தவறானது.
- காவல் நிலையத்தில் புகார் அளிப்பவர்களுக்கு சி.எஸ்.ஆர் மற்றும் முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றைத் தரவேண்டியது புகாரைப்பெற்ற காவலர் மற்றும் காவல் ஆய்வாளரின் பொறுப்பு ஆகும். அதைக்கொடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களை இழிவுப்படுத்திப் பேசிய ஏட்டு வேல் முருகன் அவர்கள் தவறிழைத்துள்ளார்.
பரிந்துரைகள்
- பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் கிடைத்தப்பின்னர் அப்பெண்ணின் தாய் 08.06.2024 அன்று கொடுத்த புகாரை பதிவு செய்யவில்லை. ஐந்து மாதங்களாக பெண் கடத்தப்பட்டார் என்ற முதல் தகவல் அறிக்கை FIR 265/2024 திருத்தப்படவில்லை. இதற்கு முழு முக்கியக்காரணமான விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் மீது உடனே நடவடிக்கையை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்கொள்ள வேண்டும்.
- முதல் தகவல் அறிக்கையானது FIR 265/2024, 08.06.2024 அன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் மன வளர்ச்சி குன்றிய பெண்ணை கடத்தியது, பாலியல் வன்புணர்வு செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் திருத்தப்பட வேண்டும்.
- பாதிக்கப்பட்டபெண் குடும்பத்தினரின் அறியாமையை சாதகமாக்கிக்கொண்டு மனவளக்குறைபாடு உடைய பெண்ணை (Intellectual Disablity 50%) மாவட்ட மனநல மையத்தில் ஒப்படைக்காமல் அப்பெண்ணை காவல் நிலையத்தில் ஆண் காவலர் மூலம் இரு முறையும் பெண்காவலர் மூலம் ஒரு முறையும் விசாரித்தது குற்றமாகும். மேலும் மன வளர்ச்சி குறைபாடுடைய பெண்ணை உதவியாளர் உடனின்றி திட்டமிட்டே விசாரித்ததும் குற்றமாகும். அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்ற தகவல் தெரிந்தும் உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளாத விருத்தாச்சாலம் காவல் ஆய்வாளர் திரு. முருகேசன் திட்டமிட்டே மனவளக்குறைபாடு உடைய பெண்ணை ((Intellectual Disablity 50%)) பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதற்கான தடயங்களை அழித்துள்ளார். ஆகவே விருத்தாச்சாலம் காவல் ஆய்வாளர் திரு. முருகேசன் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பெண்ணைக்கடத்தி பாலியல் வன்புணார்வு செய்த வழக்கில் ஆண்டனி ஆகாஷ் உடனே கைது செய்யப்பட வேண்டும், மேலும் குற்றவாளிக்கு சாதகமாக பாதிக்கப்பட்டப் பெண்ணை மனநல மருத்துவர் மற்றும் பெண் மருத்துவரிடம் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாமல் தடயங்களை அழித்த விருத்தாச்சாலம் காவல் ஆய்வாளர் திரு. முருகேசன் அவர்கள் இவ்வழக்கிலேயே குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும். மேலும் விருத்தாச்சாலம் காவல் ஆய்வாளர் திரு. முருகேசன் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறைப் படுத்தப்பட வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்டப் பெண்ணுக்கு வேண்டுமென்றே அநீதி இழைத்தும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆண்டனி ஆகாசுக்கு ஆதரவாக இருந்த விருத்தாச்சாலம் காவல் ஆய்வாளர் திரு. முருகேசன் அவர்கள் மீது பி.சி.ஆர் வழக்கும் பதிவு செய்யப்பட வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தூய்மைப்பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் 6500 ரூபாய் மாத ஊதியம் பெறுகிறார். பாதிக்கப்பட்டப் பெண்ணின் தந்தையோ கடுமையானப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களின் வறிய நிலையை கணக்கில் கொண்டு தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்டப் பெண்ணின் தாயாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
- பாதிக்கப்பட்டப் பெண்ணின் குடும்ப நிலையைக் கணக்கில் கொண்டும் விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் திரு. முருகேசன் அவர்களின் திட்ட மிட்ட தடயங்கள் அழிப்பு போன்ற குற்றச்செயல்கள் காரணமாகவும் பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் 20 லட்சம் உதவித்தொகையாக வழங்கிட வேண்டும்.
- பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு சாதகமாக இருந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருப்பது, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாமல் இருப்பது, குற்றவாளிக்கு ஆதரவாக சமரசமாக இருக்கச் சொல்லி மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் காவலர்கள் தொடர்புடைய வழக்குகளிலேயே குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்..

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram