பரந்தூர் போராட்டம் 900-வது நாள்: கருணாநிதி நினைவிடம் சென்ற மக்கள் கைது

மனு அளிக்கச் சென்ற 50 பேரை அடாவடித்தனமாகப் போலீசு கைது செய்து, சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தது.

ரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் பரந்தூர் சுற்றுவட்டார கிராம மக்களின் போராட்டம், பல்வேறு அடக்குமுறைகளையும் கடந்து 900-வது போராட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், போராட்டத்தின் 900-வது நாளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மனு அளிக்கச் சென்ற பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை தமிழ்நாடு போலீசு அடாவடியாகக் கைது செய்துள்ளது.

காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஒன்றிய மோடி அரசும் தமிழ்நாடு தி.மு.க. அரசும் முயன்று வருகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் மொத்தமாக இத்திட்டத்துக்காகக் கையகப்படுத்தப்பட உள்ளன. சென்னையைச் சுற்றிலும் பல விவசாயம் அல்லாத நிலப்பகுதிகள் இருக்கும்போது தங்களது கிராமங்களையும் விவசாய நிலங்களையும் அழித்து விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தை மையமாக வைத்து அப்பகுதி மக்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

2024 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணித்தது, ஆந்திராவிற்கு தஞ்சம் புகுவதாக அறிவித்தது என இரண்டாண்டுகளுக்கும் மேலாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில்தான், இப்போராட்டம் 900-மாவது நாளை எட்டியுள்ளது.

போராட்டத்தின் 900-மாவது நாளையொட்டி ஏகனாபுரம் கிராமத்திலிருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று மனு அளித்துவிட்டு வருவது என்று மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கிராம மக்கள் அனைவரும் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு கூடி, அங்கிருந்து கருணாநிதி நினைவிடத்திற்குப் பேருந்தில் புறப்பட்டனர்.


படிக்க: பரந்தூர் விமான நிலையம் கார்ப்பரேட் சேவையில் தீவிரம் காட்டும் திமுக அரசு!


ஆனால், அமைதியான முறையில் புறப்பட்ட மக்களின் பேருந்தை கண்ணன்தாங்கல் கிராமத்தருகே சுங்குவார்சத்திரம் போலீசு தடுத்து நிறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக் குழுவினர், “நாங்கள் அமைதியான முறையில் மனு அளிக்கச் செல்கிறோம். எங்களை அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், போலீசோ கூட்டமாகச் செல்வதற்கு அனுமதி இல்லை என்றது. அதற்கு “முக்கிய நிர்வாகிகள் ஐந்து பேரையாவது அனுமதியுங்கள். நாங்கள் அமைதியாகச் சென்று மனு அளிக்கிறோம்” என்று போராட்டக் குழுவினர் கேட்டுக்கொண்ட போதும் போலீசு அவர்களை அனுமதிக்கவில்லை.

அதுமட்டுமின்றி, மனு அளிக்கச் சென்ற 50 பேரை அடாவடித்தனமாகப் போலீசு கைது செய்து, சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக் குழுவினர் தாங்கள் அடைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திலேயே தாங்கள் கையுடன் கொண்டுவந்திருந்த கருணாநிதி உருவப்படத்திடம் மனு அளித்து முறையிட்டனர்.

இதுகுறித்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல் இளங்கோ கூறுகையில், “இங்கு தி.மு.க. ஆட்சி நடக்கிறது. அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்று அமைதியான முறையில் மனு அளிக்கக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. 900-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இந்த அரசு செவி சாய்க்காத நிலையில், ஏற்கெனவே ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி நினைவிடத்தில் மனு அளிக்க முடிவு செய்தோம். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியைக் கூட இந்த அரசு காப்பாற்றவில்லை. விவசாயிகள் மீது அக்கறையற்ற அரசாக இந்த தி.மு.க. அரசு உள்ளது” தி.மு.க. அரசை  அம்பலப்படுத்தினார்.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என போராடிவரும் கிராம மக்களின் போராட்டம் மூன்றாண்டுகளை எட்ட உள்ளது. ஆனால், தற்போதுவரை மக்களின் கோரிக்கைக்குத் துளியளவேனும் செவிமடுக்காத தி.மு.க. அரசு, போராடும் மக்களைக் கடுமையாக ஒடுக்கி வருகிறது. சொல்லப்போனால், பரந்தூர் கிராமத்திற்குள் வெளியாட்கள் நுழையமுடியாத அளவிற்கு, அப்போராட்டத்தை ஒடுக்கி வருகிறது. தி.மு.க. ஆதரவு ஊடகங்கள் மூலம் இப்போராட்டத்தை இருட்டடிப்பு செய்கிறது. அதன் ஒரு அங்கமாகவே இன்று அமைதி வழியில் போராடிய மக்களைக் கைது செய்து அடைத்துள்ளது.

தி.மு.க. அரசின் இந்த அடாவடித்தனத்திற்கும் மக்கள் விரோத நடவடிக்கைக்கும் தி.மு.க-வை ஆதரித்து வாக்களிக்குமாறு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த ஜனநாயக சக்திகளே பதிலளிக்க வேண்டும்.


தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க