பாசிசத்திற்கு எதிரான போராட்டம், ஒரு சித்தாந்தப் போராட்டமாகும். அது, சாதி ஒழிப்புடன் இணைந்ததாகும். சாதியை ஒழிக்க வேண்டுமென்று பலரும் விரும்பினாலும், அதற்கான சரியான சித்தாந்தப் புரிதல் வேண்டும். அதற்கு இந்திய துணைக்கண்டத்தில் பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தையும் அதற்கெதிரான போராட்டத்தின் பரப்பையும் புரிந்துகொள்வது அவசியமாகும்.
தலித்திய சிந்தனையாளரும் செயல்பாட்டாளருமான காஞ்சா அய்லய்யா ஷெப்பர்ட் அவர்கள் எழுதிய “சூத்திரக் கலகம்” (The Shudra Rebellion) என்ற நூலுக்கான அறிமுகம், இந்தப் பிரச்சினையை புரிந்து கொள்வதற்கு, ஒரு தூண்டுகோலாக அமையும். “பண்டைய இந்தியாவில் விவசாயவாதம்” என்ற தலைப்பிட்ட அந்த கட்டுரை, “கவுண்டர் கரண்ட்ஸ்” (Countercurrents) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையானது, விவசாயம், சாதி, உற்பத்தி, பார்ப்பனியத்திற்கு இடையிலான உறவை புதிய கோணத்தில் விளக்குகிறது. பார்ப்பனிய எதிர்ப்புணர்வு கொண்ட அனைவருக்கும் இந்த நூலைப் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.
மூவாயிரம் ஆண்டுகளாக, பார்ப்பனியம் விவசாயத்தையும் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளையும் சூத்திரர்களாக ஒடுக்கி வைத்தது; அது மட்டுமின்றி, கைவினைஞர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளிகள் என உழைக்கும் மக்கள் அனைவரையும் சூத்திரர்களாக ஒடுக்கி வருகிறது. அந்த ஒடுக்குமுறையின் முக்கியமான அம்சம், அவர்களுக்கு கல்வி உரிமையை மறுப்பதாகும்.
உற்பத்தியுடன் நேரடி தொடர்புடைய உழைக்கும் மக்களுக்கு கல்வி வழங்கப்படாமல் போனதால், உழைக்கும் மக்களின் பண்பாடு, கலை, சித்தாந்தம் போன்றவை எழுத்தில் அரங்கேறாமல் போய், வளர்ச்சிப் பெறாமல் போய்விட்டது. அதன் பாதிப்புகளில் ஒன்று, “விவசாய இயல்” (விவசாயவாதம்) வளர்ச்சிப் பெறாமல் போனதாகும்.
அந்தவகையில், இந்தப் பிரச்சினையின் பல புதிய பரிமாணங்களை இந்தக் கட்டுரை எடுத்துரைக்கிறது. ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் இந்த நூல், அனைவரும் படிக்க வேண்டிய நூலாகும். அதனை புதிய ஜனநாயகம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வகையில், இந்நூல் குறித்த அவரது அறிமுகக் கட்டுரையை சாரம் குலையாமல் மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளோம்.
000
பண்டைய இந்தியாவில் விவசாயவாதம்
(Philosophy of agriculturism)
“சூத்திரக் கலகம்” எனும் என்னுடைய சமீபத்திய நூலுக்கான ஆராய்ச்சியின் போது புராதன இந்தியாவில் வேத காலத்திலோ அல்லது அதற்கும் முந்தைய காலத்திலோ விவசாயவாதத்திற்கானத் (agriculturism என்ற ஆங்கிலச் சொல்லை விவசாயத்தை ஒரு சித்தாந்தமாக குறிப்பிடும் வகையில், உழவியல்வாதம், விவசாயவாதம் என்று மொழிபெயர்த்துள்ளோம்) தத்துவப் பள்ளிகள் ஏதேனும் இருந்தனவா என்று பண்டைய இலக்கியங்களில் தேடிப் பார்த்தேன். அப்படிப்பட்ட பள்ளிகள் இருந்ததற்கான எழுத்துப்பூர்வ ஆதாரம் எதுவும் எனக்குக் கிட்டவில்லை. இந்தியாவைத் தவிர பண்டைக்கால சீனா, கிரீஸ், இஸ்ரேல், எகிப்து ஆகிய நாடுகள் பழங்காலத்திலேயே தத்துவப் பள்ளிகளைக் கட்டி வளர்த்தன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
எனவே, இப்படிப்பட்ட விவசாயவாத பள்ளிகளும் அந்நாடுகளில் இருந்திருப்பதற்கான வாய்ப்புள்ளதென உணர்ந்தேன். பின்னர் நான் முன்னுணர்ந்தவாறே கி.மு. 770 முதல் கி.மு. 221-க்கு இடைப்பட்ட காலத்தில் பண்டைய சீனாவில் உழவியலுக்கான மிகச் சிறந்த தத்துவப் பள்ளிகள் இருந்திருப்பதைக் கண்டறிந்தேன். விவசாயவாதம் குறித்து எழுதிப் பரப்புரை செய்த தத்துவ ஆசிரியர் “சூ சிங்” (Xu Xing) ஆவார். இவை பேசப்பட்டது கி.மு. 372 முதல் கி.மு. 289 வரையிலான காலம். இவை சீன வரலாற்றின் பகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்தியாவில் உழவுத் தொழில் வளர்ந்த நாகரீகம் சீனாவுக்கு முந்தையதாகும். ஆரியர்களுக்கு முந்தைய இந்திய பழங்குடிகள் உருவாக்கி வளர்த்திருந்த ஹரப்பா நாகரீகத்தில் விவசாய உற்பத்தி நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. ஆனால், அக்காலத்தில் சீன விவசாயம் அவ்வளவு முன்னேறி இருக்கவில்லை. சீனாவில் ஹூனான் பிராந்தியத்தில் இருக்கும் “சாங் சௌ” (Chang – Zhou) நகரம் கி.மு. 2,600-இல் நிறுவப்பட்டது. அதுவே, சீனத்தின் மிகப் பழமையான நகரமாகும். சீனத்தின் ஆகப் பழமையான “சாங் சௌ” நகரத்தில் சுட்ட செங்கற்கள், முன்னேறிய கைவினைப் பொருட்கள், வெண்கலத்தாலான கருவிகள் என்று தொல்லியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை. மேலும், அது மிகச் சிறிய நகரமாகும்.
ஹரப்பா நாகரிகத்தில் உலகின் வேறு எந்த நகர நாகரிகத்திலும் இல்லாத அளவிற்கு முதிர்ந்த அறிவுப் பணிகள் காணப்படுகின்றன. முறையான முன்னேறிய விவசாயவாதத் தத்துவ வளர்ச்சி இல்லாமல் முன்னேறிய அறிவியல் கருவிகளை வடிவமைப்பது சாத்தியமில்லை. தத்துவமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய அறிவு வளர்ச்சி செயல்பாடுகளாகும். வேத காலத்திற்கு முற்பட்ட இந்தியாவில் அவ்வாறான தத்துவமும் அறிவியலும் இணைந்ததொரு சிந்தனைச் செயல்பாடு இருந்திருக்கின்றது.
விவசாயவாதமும் வேதங்களும்
வேதங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தால் எழுதப்பட்ட பிறகு மெல்ல மெல்ல விவசாயவாதம் ஒரு தத்துவம் என்கிற வகையில் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் தகுதியற்றதாகக் கருதப்படலாயிற்று. ஆகவே, மிகவும் வருந்தத்தக்க வகையில் அப்பள்ளிகள் காணாமல் மறைந்து போயின. அதனால் பண்டைய மற்றும் மத்திய கால இந்தியாவில் விவசாயம் மற்றும் கைவினைத் தொழில் சார்ந்த உற்பத்தியும் அறிவியலும் வளர்ச்சி குன்றி பெருமளவில் தேக்கமடைந்தன.
தோல் தொழில்நுட்பம் அதன் உற்பத்தியாளனோடு சேர்த்து தீண்டத்தகாததாகக் கருதப்பட்டதும், விவசாய உற்பத்தியின் மண்வெட்டியும் கலப்பையும் எக்காலத்திலும் நாகரீக வளர்ச்சியின் அடையாளமாகக் கொள்ளப்படாததும் உற்பத்தியின் முன்னேற்றத்தை பலவீனப்படுத்தியது. அந்தச் சூழ்நிலை மாற்றம் காண்பதற்காக யாரோ சிலரின் வரவுக்காக காத்திருந்தது.
வேறு தத்துவங்களுடன் முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்தியாவுக்குள் வந்தனர். ஆனால், இங்கிருந்த ஆரிய பார்ப்பன பண்டிதர்கள் உடனடியாகவே ஆட்சியாளர்களை சூழ்ந்து அவர்களைச் சுற்றிலுமாகத் தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டனர். இந்தியாவில் தங்களின் பரம்பரைச் சாதி புனிதமானது என்றும் தங்களைத் தவிர சூத்திரர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு இறைவனின் கட்டளையால் கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது என்றும் அரசர்களுக்கு எடுத்துச் சொல்லி ஏற்கச் செய்தனர்.
ஆக, இந்திய விவசாயவாதம் என்பது சீனாவினுடையதை விட மிகவும் முன்னேறியதாகும். வேதங்கள் அல்ல, மாறாக விவசாயவாதமே நம் தேசத்தின் அடிப்படைத் தத்துவமாகும். ஆனாலும் வாழ்வியல் பற்றி எழுதவும் அவற்றை பாதுகாக்கவும் இந்திய சாதியக் கலாச்சாரம் அனுமதிக்கவில்லை என்பதனால் விவசாயவாதத் தத்துவம் அழிந்துபோனது. ஏனெனில், ஆரியர்களுக்கு முந்தைய ஹரப்பா மக்களிடம் எழுத்துமுறை வளர்ந்திருக்கவில்லை. ஆதலால் அவர்கள் எதையும் எழுதி வைக்க வாய்ப்பில்லை. அதேசமயம், வேதகாலத்திற்குப் பிந்தைய விவசாயிகள் சூத்திர அடிமைகள் எனும் நான்காவது வர்ணத்தவராக அறிவிக்கப்பட்டு விட்டனர். அந்த சூத்திர வர்ணத்தில் ரெட்டிகள், கம்மாளர்கள், காப்புகள், மராத்தாக்கள், பட்டேல்கள், ஜாட்கள், முதலியார்கள், சக்கலியர்கள் (துணி வெளுப்பவர்கள்) மற்றும் நாவிதர்கள் ஆகிய ஜாதிகள் அனைத்தும் அடக்கம். ஆகையினால், ஆங்கிலேயர்கள் வந்து கல்விக்கூடங்கள் திறக்கும் வரையில் அவர்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை.
பின்னாளில் அக்பர் போன்ற முஸ்லீம் அரசர்கள் வந்த போதும் அவர்களும் பார்ப்பன பண்டிதர்களின் ஆலோசனைகளின்படி பெர்சிய கல்வியில் இருந்தும் சூத்திர ஜாதியினர் விலக்கி வைக்கப்பட்டனர். வரலாற்று வழியிலான இந்த எழுத்தறிவின்மையின் தாக்கத்தை சூத்திர, தலித் மற்றும் பழங்குடி மக்களிடையே இன்றளவும் காண முடிகின்றது.
ஏராளம் பணம் படைத்த செல்வந்தர்களாக இருக்கின்ற சூத்திர சாதியினர், தலித் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் கூட இன்றளவும் தங்களை தத்துவக் கல்வியில் ஈடுபடுத்திக் கொள்வதில்லை என்பதையும் அதற்கான தடைகளைப் பற்றியும் “சூத்திரக் கலகம்” என்னும் இந்நூல் ஆய்வு செய்கின்றது. அதுபோலவே, சமகால இரு பிறப்பாளர்களான பார்ப்பனர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்.எஸ்.எஸ். பள்ளியினால் வழிநடத்தப்படுவதால் விவசாயவாதத் தத்துவத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில்லை என்பதுடன் வேதங்கள்தான் இந்திய தத்துவ ஞானத்தின் ஊற்று மூலம் என்று தொடர்ந்து ஓயாமல் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அந்த வேத புத்தகங்கள் எதிலும் விவசாயவாதம் பற்றி எதுவுமே சொல்லப்பட்டிருக்கவில்லை. இவ்வுலகத்தில் வேறு எங்குமே புத்தகங்களை அறிவின் ஊற்று மூலம் என்று பார்ப்பதில்லை. வயல்களில் உழைக்கும் மக்களின் தத்துவ அறிவின் பிரதிபலிப்பாக மட்டுமே புத்தகங்கள் இருக்க முடியும். மேலும் வேதங்கள் விவசாய உற்பத்தி சார்ந்த தத்துவத்தை எப்போதும் பிரதிபலிப்பதில்லை.
சூத்திரர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் தத்துவம் சார்ந்த கருத்துகளை உருவாக்கும் ஆற்றல் படைத்தவர்கள் என்று, இன்றளவும் இரு பிறப்பாளர் எனப்படும் பார்ப்பனச் சிந்தனையாளர்கள் ஏற்பதில்லை. வேதங்களுக்கும் விவசாயவாதத்திற்கும் இடையே அவர்கள் பெரும் சுவரை கட்டியெழுப்பி இருக்கிறார்கள். பார்ப்பனியம் என்னும் இந்த தடைச்சுவர் விவசாய உற்பத்தியில் படைப்பாற்றலை அழித்ததுடன் சீனம் மற்றும் ஐரோப்பாவைப் போல கைவினைத் தொழில் உற்பத்தி வளர்வதையும் அனுமதிக்கவில்லை.
நமது கிராமங்களில் விவசாயச் சமூகத்தினர் இடையே சிறந்த உற்பத்தி முறைகள் பற்றியும், நிலம் மற்றும் விதைகளுக்கிடையிலான உறவுகள் பற்றியும், மண்ணின் தன்மை, மண்ணுடன் விதைக்குள்ள உறவு மற்றும் கால்நடைகள், வனவிலங்குகள் இன்னும் மனிதர்கள் பற்றி எல்லாம் பல பல கண்ணோட்டங்களும் தொலைநோக்குப் பார்வையும் இருப்பது உண்மை இல்லையா? நமது கிராமங்களில் தத்துவம் சார்ந்த கருத்துகள் இன்னமும் மக்கள் வாழ்வில் ஒரு நுட்பமான பாத்திரம் வகிக்கின்றனவா, இல்லையா? ஆமாம். அவை யாவும் கிராம வாழ்வில் முக்கிய பாத்திரமாற்றுகின்றன.
தாவரங்கள், தானியங்கள், பழங்கள் மற்றும் நீர் குறித்த கிராம மக்களின் பொதுவான தத்துவப் பார்வைதான் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல் ஆகியன போதுமான உணவளிக்காத போது வயல்களில் இருந்து உணவை உற்பத்தி செய்ய வைத்தது, அந்தத் தொடர்ச்சி இப்போதும் இருக்கிறது.
இந்தியாவில் விவசாயம் அல்லாத இரு பிறப்பாளர் எனப்படும் பார்ப்பனக் குடும்பங்களில் இருந்து வந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வைச் சேர்ந்த அறிவுஜீவிகள் இந்திய குழந்தைகளும் இளைஞர்களும் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் வேதம் மற்றும் புராணங்களை மட்டுமே படிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், இந்த நூல்களில் விவசாயம் மற்றும் கைவினைத் தொழில் குறித்து எந்த கருத்தாடலும் இல்லை. மேலும், அத்தொழில்களின் அடிப்படையில் உற்பத்தி மற்றும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வெற்றிகண்ட சமூகப் பிரிவினர் குறித்தும் எந்தத் தகவலும் இந்த நூல்களில் கிடையாது. பிறகு, உணவு உற்பத்தியாளர்களும் கைவினை நுட்பத் தொழிலாளர்களும் இல்லாமல் வேதபுராணங்களை பாராயணம் செய்த அந்த சமூகம் எப்படி உயிர் பிழைக்க முடிந்தது?
மாற்று முறைகள் (Alternative Method)
எனக்கு எஞ்சியிருக்கும் ஒரே மாற்று, மறைந்து அழிந்து போன இந்திய விவசாயவாதத் தத்துவத்தை மீண்டும் முறையாகக் கட்டி எழுப்புவதற்கும் அதனூடாக ஹரப்பா விவசாயவாதத்தின் மூல வேர்களை தேடிக் கண்டடைவதற்கும் இன்றைய கிராமங்களில் வாழும் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வை பொறுப்புடன் ஆய்வு செய்வதாகும்.
மேற்குறிப்பிட்ட நூலில், “சூத்திரர்களின் விவசாயவாதம் மற்றும் இந்திய நாகரீகம்” என்றோர் அத்தியாயம் உள்ளது. உண்மையில், சீனாவுடன் ஒப்பிடும்போது, இது இந்திய விவசாயவாதத் தத்துவத்தின் தொடக்க நிலை (Preliminary) ஆய்வேயாகும். அது இந்திய விவசாய செயல்பாடுகள் எவ்வாறு பொருள் முதல்வாதத்துடன் இணைந்த தத்துவார்த்தக் கருத்துகளைக் கொண்டிருக்கிறது என்பதை விளக்குகிறது. மதம் மட்டுமே தத்துவத்துடன் தொடர்புடையது என்பதே இந்துத்துவக் கண்ணோட்டம். உண்மையில், ரிக் வேதம் இயற்றப்படுவதற்கு முன்பே, ராமாயணமும் மகாபாரதமும் எழுதப்படுவதற்கும் முன்பே, விவசாயவாதம் ஆன்மீக தத்துவத்துடன் ஆழப் பதிந்துள்ளது (ஆசிரியர் ஆன்மீக தத்துவத்தையும் இந்துத்துவத்தையும் வேறுபடுத்துகிறார்-மொ.பெ.).
விவசாயிகளை சூத்திர அடிமைகள் என்று ஒடுக்கியதன் மூலம் வேத பார்ப்பனர்கள் விவசாயவாதத் தத்துவத்தையும் ஒதுக்கினார்கள். அதாவது இழிவுப்படுத்தி இருட்டடிப்பு செய்தார்கள். விவசாயவாதத் தத்துவத்திற்கு எதிரான அந்த கோணல் புத்திதான் இன்றும் தொடர்கிறது.
இருப்பினும், இந்திய விவசாயவாதம் குறித்து ஏராளமான புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும், வேதவியல் (Vedhism), வேதாந்தம், துவைதம், அத்வைதம் ஆகிய அனைத்துக்கும் மேலான தகுதியை, கௌரவத்தை விவசாயவாதத்திற்கு வழங்க வேண்டும். ஏனெனில், விவசாயவாதம் மனித வாழ்வின் இருத்தலையும் வாழ்வியலையும் தீர்மானிக்கும் அதன் ரத்த ஓட்டமாகும். உற்பத்தியின் தத்துவத்திலிருந்து முழுவதுமாக விலகி, மதம் ஒருமுறை, சுயேச்சையான தத்துவப் பள்ளியாக உருவெடுத்தவுடன், மதத் தத்துவவாதிகள் அறிவுக் கட்டமைப்பின் மீது தமது ஆதிக்கத்தை நிறுவிக்கொண்டார்கள்.
இருந்தபோதும், ஒரு படைப்பாற்றல் கொண்ட தேசமாக இருப்பதற்கு, நாம், மகத்தான விவசாயவாதம் போன்ற பள்ளிகளை மீட்டுருவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டும். முன்னொரு காலத்தில், இன்று நாம் காண்கின்ற சீராக ஒழுங்கமைக்கப்பட்ட மதங்கள் எவையும் இருந்ததில்லை. இனிவரும் சில பல நூற்றாண்டுகளுக்கு பிறகு அவை இருக்கப் போவதுமில்லை.
காஞ்சா அய்லய்யா ஷெப்பார்ட்
(கவுண்டர் கரண்ட்ஸ் இணையத்தில்)
தமிழில்: சுந்தரம்
(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram