உடன்குடி: விண்வெளி பூங்காவுக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு

விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் இத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உடன்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீசு கைது செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அருகே தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை (Tamil Nadu Industrial Development Corporation Limited) சார்பில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்காக ஆதியாகுறிச்சி, மாதவன் குறிச்சி, வெங்கட் ராமானுஜபுரம், சிறுநாடார் குடியிருப்பு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1,200 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இந்த பணிக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் அரசின் முடிவிற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த ஜனவரி 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில், நிலங்களைக் கையகப்படுத்து முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதியாகுறிச்சி விவசாயிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், விண்வெளி பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி காலை உடன்குடி பஜார் பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் இத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து அங்கு வந்த போலீசு, பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அனுமதியின்றியும் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 111 பெண்கள் உட்பட 203 பேரைக் கைது செய்துள்ளது.

காஞ்சிபுரத்தில் பரந்தூர், ஓசூர், மேல்மா, திருவண்ணாமலை சிப்காட் என தொடர்ச்சியாக ‘வளர்ச்சி’, ‘சுற்றுலா’ என்ற பெயர்களில் விவசாய நிலங்களை அழித்து மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது ‘திராவிட மாடல்’ என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தி.மு.க. அரசாங்கம். அமைதியான முறையில் தங்களது வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்களை போலீசைக் கொண்டு கைது செய்யும் தி.மு.க. அரசை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறிஞ்சிக் கொண்டுவரப்படும் இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று உழைக்கும் மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாகக் குரலெழுப்ப வேண்டும்.

மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க