மாநகராட்சி விரிவாக்கம்: கார்ப்பரேட் நகர உருவாக்கமும் உழைக்கும் மக்கள் வெளியேற்றமும்

சேவைத் துறையிலிருந்து அரசு விலகல், வரிச் சுரண்டல், விலைவாசி-கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்ட இந்த நகரமயமாக்கலால் மக்களின் வாழ்க்கை செலவினம் அதிகரிக்கும். இதனால் சமூக நெருக்கடி தீவிரமடைவதோடு உழைக்கும் மக்கள் புலம்பெயர்வதும் அகதிகளாவதும் தீவிரமடையும்.

ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தும் கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் தி.மு.க. அரசு.

2021-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஊராட்சிகளை பேரூராட்சியாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் ‘தரம்’ உயர்த்துவது, ஊராட்சிகளை நகராட்சிகளுடன் இணைத்து மாநகராட்சியாக்குவது, ஏற்கெனவே உள்ள மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவுபடுத்துவது என நகர விரிவாக்கப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 2024-இல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நகராட்சிகளுடன் அருகிலிருந்த கிராம மற்றும் நகரப் பஞ்சாயத்துகளை இணைத்து மாநகராட்சிகளாக உருவாக்கியது. இப்புதிய மாநகராட்சிகளை உருவாக்கிய ஐந்து மாதத்திற்குள்ளாகவே தற்போது மீண்டும் நகர விரிவாக்கத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தி.மு.க. அரசு.

சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சி, கடலூர், திண்டுக்கல், மதுரை, ஓசூர், சேலம், திருப்பூர், ஆவடி, கும்பகோணம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் சிவகாசி என தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 25 மாநகராட்சிகளில் 16 மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்குவதற்கான அரசாணைகளை அந்தந்த மாநகராட்சிகள் வெளியிட்டுள்ளன. இதற்காக 147 கிராமப் பஞ்சாயத்துகளும், ஒரு நகரப் பஞ்சாயத்தும் மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இத்துடன், புதிதாக சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை, கவுந்தபாடி, போளூர், செங்கம், கன்னியாகுமரி, சூலூர், மோகனூர், நரவரிகுப்பம் மற்றும் வேப்பம்பட்டு ஆகிய 13 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 14 மாவட்டங்களைச் சேர்ந்த 25 கிராமப் பஞ்சாயத்துகள் நகரப் பஞ்சாயத்துகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 12 மாவட்டங்களைச் சார்ந்த 29 கிராமப் பஞ்சாயத்துகள் நகரப் பஞ்சாயத்துகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தரமான அடிப்படை வசதிகளை வழங்குவது – அதாவது சாலைவசதி, பாதாள சாக்கடை, தரமான-பாதுகாப்பான குடிநீர் மற்றும் மின் விளக்குகள், உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் திட்டமிடுவது, இதனூடாக வளங்களைத் திறம்படப் பயன்படுத்துவதே இந்த மாநகர விரிவாக்கத்தின் நோக்கம்” என தெரிவித்துள்ளது.

குடிநீர், சாலை வசதி, சுடுகாடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துத்தரக்கோரி தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராம மக்கள் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர். அரசு நினைத்தால், மக்கள் கோரும் அடிப்படை வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க முடியும். ஆனால், மக்களின் கோரிக்கைகளும் போராட்டங்களும் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பெரும் பேசுப்பொருளாகினால் தவிர, மக்களின் கோரிக்கைகளை அரசு கண்டுகொள்வதில்லை. சமீபத்தில், “ஜி தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சரி-க-ம-பா” ரியாலிட்டி நிகழ்ச்சியில் திண்டிவனத்திலிருந்து கலந்துகொண்ட அரசு பள்ளி மாணவியின் அம்மணம்பக்கம் கிராமத்தில் போக்குவரத்து வசதி இல்லை என்பது வெட்டவெளிச்சமாகியதையடுத்து தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஓடோடிச் சென்று பேருந்து பயணத்தைத் துவக்கி வைத்தது, இதற்கு சிறந்த சான்றாகும்.

இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, ஊராட்சிப் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைத்தால்தான் மக்களுக்கான அடிப்படை வசதிகளையெல்லாம் செய்துத்தர முடியும் என தி.மு.க. அரசு கூறுவது நயவஞ்சகமானதாகும். உண்மையில், தி.மு.க. அரசின் நகர விரிவாக்கத் திட்டத்திற்கு பின்னால் உழைக்கும் மக்கள் விரோத – பிரம்மாண்டமான கார்ப்பரேட் திட்டம் ஒளிந்துள்ளது.

கார்ப்பரேட்மயமாகும் கட்டமைப்புகள்

2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவது என்று இலக்கு நிர்ணயித்துள்ள தி.மு.க. அரசு, அதற்காக பல்வேறு கார்ப்பரேட் நல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் உள்கட்டமைப்பு திட்டங்களில் கார்ப்பரேட்டுகளின் முதலீடுகளை ஊக்குவிப்பது முக்கியமானதாகும். கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களில் சொற்ப அளவிலேயே தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில், அந்த நிலையை முடிவுக்கு கொண்டுவந்து கார்ப்பரேட் முதலீடுகளை தீவிரப்படுத்தும் வகையில் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது தி.மு.க. அரசு.

அதனடிப்படையில், மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படும் உள்கட்டமைப்புக்கான வளர்ச்சித் திட்டங்கள் அரசு-தனியார் கூட்டு (Public-Private Partnership) அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ள தி.மு.க. அரசு, அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக, நகரப் போக்குவரத்து, திடக்கழிவு மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவை அரசு-தனியார் கூட்டு அடிப்படையில் செயல்படுத்தவே திட்டமிட்டிருக்கிறது தி.மு.க. அரசு. இத்திட்டங்கள் யாவும் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே செயல்படுத்தப்படுகின்றன என்பதையும் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

எனவே, அரசு மக்களுக்கு செய்யக்கூடிய சேவைகள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்காகவும், அதன்மூலம் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன என்பது தெளிவாகிறது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நகரங்களின் உள்கட்டமைப்புகளை கார்ப்பரேட்மயமாக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், இதற்குள் பிற பகுதிகளையும் கொண்டுவந்து அதன் எல்லைகளை விரிவுப்படுத்துவதற்காகவே தொடர்ச்சியாக நகர விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

பரந்தூர் விமான நிலையத்திற்காக தங்கள் வாழ்விடங்களையும் விளைநிலங்களையும் கைப்பற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாண்டுகளாகப் போராடிவரும் மக்கள்.

குறிப்பாக, அரசு மக்களுக்கு செய்துத்தர வேண்டிய அடிப்படைக் கடமைகளான குடிநீர்-மின்சாரம் விநியோகத்தை கார்ப்பரேட்மயப்படுத்தி வருகிறது தி.மு.க. அரசு. இதற்காக தமிழ்நாடு முழுவதும் மூன்று தவணைகளில் கிட்டத்தட்ட மூன்று கோடி மின்சாரத்-திறன் மீட்டர்களைப் பொருத்துவதற்கு அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. மின்சாரத்துறை ஒப்பந்தத்திற்காக மாநில அரசுகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததை அமெரிக்க நீதிமன்றம் அம்பலப்படுத்தியதையடுத்து, தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு-அதானி கள்ளக்கூட்டு தோலுரிக்கப்பட்டதால் அதானி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும் திறன் மீட்டர்கள் பொருத்துகிற திட்டம் நடைமுறையில்தான் இருக்கிறது. இந்த திறன் மீட்டர்கள் பொருத்துவதானது சோதனை அடிப்படையில் முதலில் மாநகராட்சிகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் உச்சநேர மின்சாரப் பயன்பாட்டை ஆராய்வதற்காக நேர அடிப்படையிலான திறன் மீட்டர்கள் பொருத்துவதற்கான அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இதனை வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து குடியிருப்புகளுக்கும் அமல்படுத்தப் போவதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது.

மேலும், தரமான-பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்காக ஊராட்சிகளை மாநகராட்சிகளுடன் இணைப்பதாக கதையளக்கும் தி.மு.க. அரசு, கோயம்புத்தூர் மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்தை “சூயஸ்” (SUEZ) என்ற கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. பிற மாநகராட்சிகளிலும் குடிநீர் விநியோகத்தை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்ற பெயரில் விரட்டியடிக்கப்படும் உழைக்கும் மக்கள்.

இதற்காக, பிப்ரவரி-மார்ச் 2025 வரை காலவரையறை முடிவு செய்யப்பட்டு, சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் குடிநீர் விநியோகத்திற்கான திறன் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்றால், ஒரு சொட்டு தண்ணீரைக் கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டும். இது மறுகாலனியாக்கத்தின் உச்சமாகும்.

அதேபோல் நகரப் போக்குவரத்துத்துறையும் தொடர்ந்து கார்ப்பரேட்மயமாகி வருகிறது. அரசு-தனியார் கூட்டில் கட்டப்பட்டு, பராமரிப்பிற்கு கார்ப்பரேட் நிறுவனத்திடம் 15 ஆண்டுகால ஒப்பந்தத்திற்கு விடப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத் திட்டம் இதற்கு துலக்கமான எடுத்துக்காட்டாகும். சமீபத்தில் கூட, சென்னையில் முதன்முதலாக தனியார் சிற்றுந்துகளை (Mini Bus) இயக்க தி.மு.க. அரசு அனுமதியளித்துள்ளது. அதேசமயத்தில், ஏற்கெனவே ஓடிக்கொண்டிருக்கும் அரசு சிற்றுந்துகளின் (Small Bus) கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இவையன்றி, சென்னை மாநகராட்சியில் சுடுகாடு கட்டுவதற்கான ஒப்பந்தம் கார்ப்பரேட்டிற்கு வழங்கப்பட்டிருப்பது; அரசு-கார்ப்பரேட் ஒப்பந்தத்தின் பேரில் ஆற்றங்கரையோரத்து பூர்வக்குடி மக்கள் துரத்தியடிக்கப்பட்டு பூங்காக்கள் கட்டப்படுவது; மருத்துவத்துறையில் கட்டணப் பிரிவு உருவாக்கப்படுவது; மாநகராட்சி வசமிருந்த கழிவு மேலாண்மை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கப்பட்டு தூய்மை பணியாளர்கள் சுரண்டப்படுவது என மருத்துவத்துறை முதல் சுடுகாடு வரை உள்கட்டமைப்புகள் அனைத்தும் கார்ப்பரேட்மயமாகிக் கொண்டிருக்கின்றன.

நகர விரிவாக்க அறிவிப்பின் மூலம் வருங்காலங்களில் இது சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும். நகர விரிவாக்கம் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என தி.மு.க. அரசு தேனொழுகப் பேசுவதற்கு பின்னால் நகர ”உள்கட்டமைப்புகள் கார்ப்பரேட்மயமாக்கம்” எனும் அபாயகரமான, மக்கள் விரோதத் திட்டம் மறைந்துள்ளது.

பறிபோகும் விவசாய நிலங்கள்

நகர உள்கட்டமைப்புகள் கார்ப்பரேட்மயமாக்கம் மட்டுமின்றி நகர விரிவாக்கம் மூலம் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நோக்கமும் தி.மு.க. அரசிற்கு உள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள டைடல் பூங்கா போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கட்டமைப்புகளை 2 மற்றும் 3-ஆம் தர வரிசையில் உள்ள சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் மாதிரி அடிப்படையில் சிறிய டைடல் பூங்காக்களை (நியோ டைடல் பார்க்) உருவாக்கத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது அரசு. சேலம் மாநகராட்சியில் (கருப்பூர்), தூத்துக்குடி, திருச்சி மாவட்டங்களில் நியோ டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவைதவிர ராணிப் பேட்டை மற்றும் தூத்துக்குடியில் மின்சார வாகனத் தயாரிப்பிற்கான தொழிற்சாலைகள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் வெறும் முன்னோட்டம் மட்டுமே. எட்டுவழிச்சாலை, பாரத் மாலா, சாகர் மாலா, துறைமுகங்கள் விரிவாக்கம் போன்ற பல்வேறு ஒன்றிய – மாநில அரசுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தக் காத்திருக்கின்றன.

இந்த கார்ப்பரேட் நலன்களிலிருந்து, விரிவாக்கப்படும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், பொது நிலங்கள் அனைத்தும் கையகப்படுத்தப்படும் பேரபாயம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தீவிரமாகிவரும் நகரமயத்தால் விவசாய நிலங்களின் பரப்பளவு ஆண்டிற்கு ஆண்டு சுருங்கிக் கொண்டே வருகிற சூழலில் மாநகராட்சி விரிவாக்கத்தால், நிலங்களின் மதிப்பு உயர்ந்து விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது தீவிரமாகும், உணவு உற்பத்தியும், விவசாயம் சார்ந்த துணைத் தொழில்களும் பாழாக்கப்படும். பெரும்பான்மை மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிற, வாழ்வாதாரமாக உள்ள இந்தத் தொழில்கள் பாழாக்கப்பட்டால் இத்தொழில்களிலிருந்து பல லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர் தொழிலாளர்களாகத் துரத்தியடிக்கப்படுவார்கள்; விவசாயத்திலிருந்து வெளியேறும் தொழிலாளர்களை உட்கவர்வதற்கான போதிய தொழிற்துறை தமிழ்நாட்டில் கிடையாது. இது, வேலையின்மையைத் தீவிரமாக்கும். மேலும், இது வடமாநிலப் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் மூலைமுடுக்கெங்கும் நிரம்பியுள்ள சூழலில், சமூக நெருக்கடிக்களைத் தீவிரமாக்கும்.

அதுமட்டுமின்றி, விவசாய நிலங்களும், பொதுநிலங்களும், ஏரி, குளங்களும், நீர்வழிப்பாதைகளும் நகரமயத்திற்கு தொடர்ந்து பலியாகி வருகின்றன. குறிப்பாக பாதாள சாக்கடைத் திட்டமும், விரிவாக்கப்படும் சாலைகளும், நீர்நிலைகளையும் நீர்வழிப்பாதைகளையும் அழித்தே உருவாக்கப்படுகின்ற சூழலில் தமிழ்நாடு முழுவதும் சூழலியல் நெருக்கடிகள் தீவிரமாகும். இதற்கு, முறையாகத் திட்டமிடப்படாத நகரமயமாக்கத்தால் சென்னை மாநகரம் ஒவ்வோர் பருவமழைக் காலத்திலும் பேரிடர்களால் பாதிக்கப்படுவதும், மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதே சான்று.

மேலும், மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட முப்பதாண்டு காலத்தில் ரியஸ் எஸ்டேட் மாஃபியாக்கள் புற்றீசல்கள் போல முளைத்திருக்கின்றனர். இந்த மாநகராட்சி விரிவாக்கமானது, இந்த மாஃபியாக்கள் கொழுக்கவே துணைபுரியும்.

ஏற்கெனவே கார்ப்பரேட் நலனுக்காகத் சிப்காட் மூலம் திருவண்ணாமலை, நாமக்கல் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதும் நாமறிந்ததே.

இவ்வாறு நிலம் கையகப்படுத்துவதற்காக மக்கள் போராட்டங்களைத் தடுப்பதற்காக, விவசாயிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் எதிர்ப்புகளையும் மீறி அவசர அவசரமாக நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை அரசிதழில் வெளியிட்டு நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதன்மூலம், கண் துடைப்பிற்குக்கூட மக்களிடம் கருத்துக்கேட்க அவசியமின்றி கார்ப்பரேட்டுகள் விரும்புகிற நிலத்தை, மக்களிடமிருந்து பறித்துக் கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்க முடியும்.

தமிழ்நாட்டை மறுகாலனியாக்குகிற இந்த மக்கள் விரோத- கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களை ‘மக்கள் நலனு’க்காக செய்வதாக நயவஞ்சக நாடகமாடுகிறது தி.மு.க. அரசு. ஆக, மனித முகம் கொண்ட மறுகாலனியாக்கம்தான் திராவிட மாடல்.

ஒட்டச் சுரண்டும் திராவிட மாடல்!

மக்களை ஒட்டச் சுரண்டி கார்ப்பரேட்டுகளின் லாபவெறிபிடித்த தொந்தியை நிரப்புவதற்காகவும், மாநிலங்களை ஒன்றிய அரசின் சிற்றரசுகளாக மாற்றுவதற்காகவும் ஒன்றிய பாசிச மோடி அரசு ஜி.எஸ்.டி. என்ற வரி பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனை எதிர்ப்பதாக சொல்லும் தி.மு.க. அரசோ, மோடி அரசிடமிருந்து முறையாக வரிப்பகிர்வை பெறுவதற்கும் ஜி.எஸ்.டி-ஐ ரத்து செய்வதற்கும் போராடாமல் தமிழ்நாடு மக்கள் மீது வரி உயர்வையும், கட்டண உயர்வையும் சுமத்தி வருகிறது.

மாநிலத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை, அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றால் சொத்துவரி, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்திப்பதாக கண்ணீர் வடிக்கும் தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை இரண்டு முறை சொத்துவரியையும் மூன்று முறை மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில், தமிழ்நாடு முழுவதும் 25 முதல் 150 சதவிகிதம் வரை சொத்துவரியை உயர்த்தியது. கடந்த 2024 அக்டோபர் மாதம் மாநகராட்சிகளில் சொத்துவரியை ஆண்டுக்கு ஆறு சதவிகிதம் உயர்த்துவதற்கான தீர்மானம் மாநகராட்சிகளின் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சிகளில் மட்டுமின்றி உள்ளாட்சிகளிலும் ஆண்டுக்கு ஆறு சதவிகிதம் சொத்து வரியை உயர்த்திக்கொள்ளவும் அனுமதியளித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

திருச்சி மாநகராட்சியில் ஏற்கெனவே இருந்த 65 வார்டுகளிலிருந்து ரூ.148 கோடி வரி வருவாய் கிடைத்தது. ஆண்டுதோறும் ஆறு சதவிகித வரி உயர்வால் திருச்சி மாநகராட்சியின் வருவாய் ரூ.160 கோடியாக உயரும் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், திருச்சியில் மட்டும் புதிதாக 35 வார்டுகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் இந்த வருவாய் இன்னும் பல கோடி ரூபாய் வரை அதிகரிக்கும். இதேபோல மீதமுள்ள 24 மாநகராட்சிகளின் வரி வருவாயும் அதிகரிக்கும்.

அதுமட்டுமின்றி, சொத்துவரி உயர்வால் குடிநீர் வரி, கழிவுநீர் அகற்று வரி, குப்பை வரி என பல வரிகள் உயரும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த சொத்துவரி உயர்வால் மாதந்தோறும் குடிநீர், கழிவு நீர், குப்பை ஆகியவற்றிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இவற்றுடன், தொழில்வரி, தொழில் உரிமக் கட்டணம், கல்வி செஸ் வரி (ஆண்டு சொத்து மதிப்பில் ஐந்து சதவிகித உயர்வு), நூலக செஸ் வரி என இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டால், தமிழ்நாடு மக்களிடமிருந்து பல கோடி ரூபாயை சொத்துவரியாக பகற்கொள்ளையடிக்கிறது தி.மு.க. அரசு.

இந்த சொத்து வரியிலிருந்து யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக புவிசார் தகவல் அமைப்பு தொழில்நுட்பம் மூலம் வரைபடம் உருவாக்கப்பட்டு மாநகர-நகர-உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள சொத்துகளின் விவரங்கள் திரட்டப்படுகிறது. இதன் முதல் மாதிரியை பொன்னேரியில் செயல்படுத்தியது தமிழ்நாடு அரசு. கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை பெருநகரத்தில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால், டிஜிட்டல் வரைபடத்தில் உள்ள சொத்திற்கேற்ப வரியைக் கட்ட வேண்டும். அதாவது, மாநகராட்சிகளின் சொந்த வருவாயைப் பெருக்க வேண்டும் என்ற இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரையின்பேரில் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது.

இந்த சொத்துவரி உயர்வுக்கு முன்பாக, கடந்த ஜூலையில் மின்சாரக் கட்டணமும் (யூனிட்டிற்கு 25 பைசா முதல் 55 பைசா வரை) உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவித்துள்ளபடி ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து குடியிருப்புகளுக்கு உச்சநேர மின்கட்டணத்தை அமல்படுத்தினால், மக்களை ஒட்டச்சுரண்டுவதாக இருக்கும். குறிப்பாக இந்த உச்சநேரக் கட்டணத்தை அமல்படுத்தினால், மின்சாரக் கட்டணம் சுமார் 10 முதல் 20 சதவிகிதம் வரை உயரும் என்று கடந்த 2023-ஆம் ஆண்டில் கூறியிருக்கிறார் அன்றைய ஒன்றிய மின்சாரத் துறை அமைச்சாரான ஆர்.கே. சிங்.

மேலும், தமிழ்நாட்டில் ஒரு கோடி மக்கள் 100 யூனிட் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்துகிற சூழலில் திறன்மீட்டர் பொருத்துவதே தேவையற்றது என்கிறார், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரான திரு.எஸ்.நாகல்சாமி. அனைத்துக் குடியிருப்புகளுக்கும் திறன் மீட்டர் பொருத்தப்பட்டால் 100 யூனிட் இலவச மின்சாரம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் கேள்விக்குறியே!

இவையெல்லாம், மாநகராட்சி விரிவாக்கத்தால் ஏற்படும் நேரடி பாதிப்புகளாகும். மறைமுகமாக வாடகை உயர்வு, மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம், காய்கறி-மளிகை விலை உயர்வு என அனைத்து விலை உயர்வுகளும் மக்கள் மீதுதான் விழும். கல்வி மற்றும் மருத்துவ செலவினங்கள், எகிறும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி நிற்கும் நிலையில், அவர்களிடம் மேலும் வழிப்பறி செய்வதாகவே இந்த வரி உயர்வு அமையும்.

போராட்டமே தீர்வு:

இத்துணை மக்கள்விரோத தன்மை கொண்ட நகர விரிவாக்கத்தைத்தான் உள்கட்டமைப்பு வளர்ச்சி, நகரமயமாக்கல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறது தி.மு.க. அரசு. ஆனால், சமூகப் பொறுப்பற்ற சிறு கும்பலிடம் உற்பத்தி சக்திகளை குவித்து மேற்கொள்ளப்படும் இந்த உள்கட்டமைப்பு திட்டங்களும் நகரமயமாக்கலும் மக்களுக்கு பயனளிப்பதாக அல்லாமல், உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது.

1990-களில் விவசாய நெருக்கடியால் மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறியது அன்றைய சூழலில் நகரமயமாக்கலுக்கான முக்கிய அம்சமாக இருந்தது. அப்போது மக்களை உள்வாங்கி கொள்ளும் கட்டமைப்பு இல்லாதது நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மேற்கொள்ளப்படும் நகரமயமாக்கலும் உற்பத்தியின் விளைவாகவோ புதிய வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவோ அல்லாமல் வெறும் குவிதலாக மட்டுமே உள்ளது. வேலைவாய்ப்பு, சுகாதாரம், ஆரோக்கியம் என எதையும் கணக்கில் கொள்ளாத, கேடுகளின் மையமாகவும் மேலிருந்து திணிக்கப்படுவதாகவும் உள்ளது. மேலிருந்து திணிக்கப்படுகின்ற-கார்ப்பரேட் சேவையை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ள இந்த நகரமயமாக்கலை உழைக்கும் மக்களால் உள்வாங்கிக்கொள்ள முடியாது.

மேலும், சேவைத் துறையிலிருந்து அரசு விலகல், வரிச் சுரண்டல், விலைவாசி-கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்ட இந்த நகரமயமாக்கலால் மக்களின் வாழ்க்கை செலவினம் அதிகரிக்கும். இந்திய பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் குறைந்த வாழ்க்கை செலவினத்தை கொண்டுள்ள தமிழ்நாட்டின் சென்னை போன்ற நகரங்கள் உழைக்கும் மக்கள் வாழ முடியாத அதிக வாழ்க்கை செலவினத்தை கோருகின்ற நகரங்களாக மாற்றப்படும். இதனால் சமூக நெருக்கடி தீவிரமடைவதோடு உழைக்கும் மக்கள் புலம்பெயர்வதும் அகதிகளாவதும் தீவிரமடையும். பாசிச மோடி அரசின் கார்ப்பரேட்மயமாக்கத்தையும் பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதையும் எதிர்ப்பதாக கூறிக்கொண்டே அதனை வேறு வழிகளில் நடைமுறைப்படுத்துகிறது தி.மு.க. அரசு.

அம்மையப்பன் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களை திருவாரூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து போராடிவரும் மக்கள்

இந்நிலையில்தான், தி.மு.க. அரசின் மாநகராட்சி – நகராட்சி விரிவாக்க அறிவிப்பு வெளியான உடனே, தங்களது கிராமங்களை மாநகராட்சி – நகராட்சியுடன் இணைக்கூடாது என்று திருச்சி, மதுரை, கும்பகோணம், கரூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், சேலம், கடலூர், விழுப்புரம் என தமிழ்நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் வெடித்தன. சாலைமறியல், கடையடைப்புப் போராட்டம், கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை என பலவழிகளில் மக்கள் போராடி வருகின்றனர். ஊராட்சிப் பகுதிகளை மாநகராட்சி – நகராட்சியுடன் இணைப்பதால் வரி உயரும், 100 நாள் வேலை கிடைக்காது, தொகுப்பு வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படாது போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைத்து மக்கள் போராடி வருகின்றனர். உயர்த்தப்படும் வரி உயர்வுக்கு ஏற்ப மக்களின் சம்பளம் உயர்கிறதா? என்பதே போராடும் மக்களின் உள்ளுணர்வாக இருக்கிறது. பல்வேறு ஜனநாயக சக்திகளும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். சி.பி.ஐ(எம்) கட்சி தனது மாநில மாநாட்டில் மாநகராட்சி விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறது.

தங்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள தன்னெழுச்சியாகப் போராடும் மக்களுக்கு ஆதரவளிப்பது புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் தார்மீகக் கடமை எனினும், போராடும் மக்களுக்கு பிரச்சினையின் முழுப்பரிமாணத்தைப் புரிய வைப்பதும், அரசியல்-சித்தாந்த-அமைப்பு ரீதியாக மக்கள் போராட்டங்களுக்குத் தலைமையளிப்பதும், மக்கள் போராட்டத்தை மறுகாலனியாக்கம் – பாசிசத்திற்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுப்பதும் புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் வரலாற்றுக் கடமையாகும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க