தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாபெரும் தேசத் துரோகம்:
அடிக்கொள்ளி ஒன்றிய சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் உள்ள 605 மருத்துவக் கல்லூரிகளில் சரி பாதிக்கும் மேலாக, அதாவது 320 தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப் படிப்புக்கு 40,000-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு இடத்திற்கும் பல பத்து லட்சங்கள் அல்லது கோடிகள் கட்டணம் எனக் கொண்டால் இதில் புழங்கும் தொகை என்பது பல ஆயிரம் கோடிகளாகும்.
ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி நடத்துவதற்கு முன்நிபந்தனையான அடிப்படை கட்டுமானங்களும், நோயாளிகளுக்கான தங்குமிடம் – படுக்கை வசதிகள் மற்றும் சுகாதார நிலைமைகள் என்று பல தேவைகள் மிகவும் விசாலமாக வரையறுக்கப்பட்டுள்ளன. பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்ன பிற ஊழியர்கள் என்று பல நூறு பேர் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவற்றுடன் உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல மருத்துவக் கட்டுப்பாட்டு நிறுவனங்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் தரக்கட்டுப்பாடுகளைக் கறாராகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கிற நிபந்தனைகளும் உள்ளன.
மருத்துவக் கல்லூரி என்பது பிற கலை அறிவியல் கல்லூரிகள் போல மாணவர்களின் கல்வி பற்றியது மட்டுமானதல்ல. ஒரு கல்லூரி தரமற்ற மருத்துவரை சான்றிதழ் கொடுத்து அனுப்பிவிடும் என்றால் அதன் பிறகு எந்த கேள்விக்கும் இடமில்லாமல் சமூகத்தில் அவர் ஒரு மருத்துவராக அங்கீகரிக்கப்பட்டு விடுகிறார். எனில் மருத்துவருக்குரிய தகுதி என்பது அவ்வளவு முக்கியத்துவம் உடையதாகும்.
எனவேதான் அரசே முன்னின்று துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகள் ஆலோசனைகளின் படி மருத்துவக் கல்லூரிகளை ஓரளவிற்கு முறையாக நடத்தி வந்தது. 1992 இல் கொண்டுவரப்பட்ட அரசின் தனியார்மய கொள்கைகளைத் தொடர்ந்து ஏனைய கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளைப் போலவே மருத்துவக் கல்லூரிகளும் தனியார்கள் தொடங்கி நடத்த அனுமதிக்கப்பட்டன.
அவ்வகையில் இப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தரச்சான்றளிப்பதற்கான சோதனை முறைகள் பலவற்றையும் ஏய்த்து, சான்றளிக்கும் அதிகாரம் படைத்த ஒன்றன் மேல் ஒன்றான பல அதிகார அடுக்குகளைக் கொண்ட ஆய்வு நிறுவனங்களையும் ஊழல் படுத்தி சரிக்கட்டும் வகையில் கூட்டுச் சதித் திட்டங்களைத் தீட்டியதாகவும் சோதனை முறைகளைச் சீரழித்து முறியடித்ததாகவும் ஒன்றிய அரசின் மையப்புலனாய்வுத்துறை (CBI) பல துறைகளைச் சேர்ந்த உயர்நிலை அதிகாரிகள் மீது குற்றப் பத்திரிகை பதிவு செய்திருக்கிறது.
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், தேசிய மருத்துவ கமிஷன், ஆகிய இரண்டுமே முதன்மை குற்றவாளிகள். அதைத் தொடர்ந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம், அது நியமிக்கும் ஆய்வுக் குழுக்கள், இடைத்தரகர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் ஆகியோரின் கூட்டணிதான் இந்த தேசத் துரோக குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறது.
மையப்புலனாய்வுத் துறை மேற்கொண்ட புலனாய்வில் பல்வேறு உயர்நிலை கல்வியாளர்கள் (Educationalists), ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் (Health Ministry Of India) மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் (National Health Authority) உயர்மட்ட அதிகாரிகள், தேசிய மருத்துவக் கமிஷன் (National Health Commission) உறுப்பினர்கள், நேரடி சோதனை குழுக்கள் (Inspection Team) உறுப்பினர்கள் ஆகிய பலர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. பல தனியார் கல்லூரிகளுக்கு தரச் சான்றிதழ் அளிக்கும் சோதனை நிறுவனங்களை அதன் உறுப்பினர்களைக் கூட்டுச் சதி மூலம் ஊழல்படுத்தி சீரழித்த குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருக்கிறது.
புதிய தனியார் மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரம், இருக்கின்ற அங்கீகாரத்தைப் புதுப்பிப்பது மற்றும் தனியார் பட்டப் படிப்புகளில் மற்றும் பட்ட மேற்படிப்புகளில் புதிய பிரிவுகளைத் தொடங்குவது, குறிப்பிட்ட பட்ட படிப்பில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது வேறு பல பட்டய படிப்புகளைத் தொடங்கி நடத்துவது போன்றவற்றுக்கான அங்கீகாரங்கள் இவ்வாறான மோசடியான வழிமுறைகளின் மூலம் பெறப்பட்டுள்ளன.
படிக்க: காவிக் கும்பலும் போலி மருத்துவமும்
முதன்மை குற்றவாளிகள் யார்?
அப்படி தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்குத் துணை நின்று ஊழலில் ஈடுபட்டவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களில் கவனத்திற்குரியவர்கள் பின்வருமாறு.
- டாட்டாவின் சமூக ஆய்வு நிறுவனத்தின் (Tata Institute of Social Studies – TISS) தற்போதைய துணைவேந்தரும் மேனாள் பல்கலைக்கழக மானிய குழுவின் (University Grants Commission) தலைவருமான டி.பி. சிங்,
- சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ராவத்புறா மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனத்தின் (Shri Rawatpura Sarkar Institute of Medical Science and Research – SRSIMSR) தலைவர் ரவிசங்கர்ஜி மகராஜ். இவர் அரசியல் செல்வாக்குடன் கூடிய பன்முகம் கொண்ட ஆன்மீகத் தலைவரும் ஆவார்.
- ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள கீதாஞ்சலி பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மயூர் ராவல்,
- மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியின் (Index Medical College) தலைவர் சுரேஷ் சிங் பட்டோரியா,
- மருத்துவ தர மதிப்பீடு மற்றும் நிர்ணய வாரியத்தின் (Medical Assessment and Rating Board) வாழ்நாள் உறுப்பினர் மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் இணை ஆணையர் ஜித்து லால் மீனா,
- ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் பல மட்ட அதிகாரிகள் பூனம் மீனா, தரம் வீர், பியூஸ் மல்யான், அனூப் ஜஸ்வால், ராகுல் சிரீவத்சவா, சந்தன் குமார், தீபக், மனிஷா ஆகிய 8 முக்கிய அதிகாரிகள். (இவர்கள்தான் இந்த மொத்த ஊழலின் அடிக்கொள்ளியாய் இருந்து தொடங்கி வைக்கிறவர்கள்)
- தேசிய மருத்துவ கமிஷன் உறுப்பினர்களான எம்.எஸ். சித்ரா, ரஜினி ரெட்டி, சி.என். மஞ்சப்பா, அசோக் செல்கே, மற்றும் வெங்கட் ஆகிய 5 அதிகாரிகள்,
- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காயத்ரி மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் பெயர் தெரியவில்லை
- தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள தந்தை கொழும்பு மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (Father Colombu Institute of Medical Science) தலைவர்,
- உத்தரபிரதேசம் மீரட் நகரில் உள்ள தேசிய தலைநகர் பிராந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (National Capital Regional Institute of Medical Science) தலைவர் ஷிவானி அகர்வால்,
- குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள சுவாமி நாராயண மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் சுவாமி பக்தவத்சல தாஸ் ஜி
ஆகிய 34 பேர் மீது குற்றச்சாட்டியிருக்கிறது ஒன்றிய அரசின் மையப் புலனாய்வுத் துறை.
படிக்க: உ.பி: குடியிருப்பிற்குள் இஸ்லாமிய மருத்துவரை அனுமதிக்காத இந்துமதவெறி
செய்த குற்றம் என்ன?
மேற்சொன்ன அனைவரும் அதாவது ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், தேசிய மருத்துவக் கமிஷன் மற்றும் அதன் சோதனைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் மற்றும் இடைநிலை தரகர்களுடன் ஒத்துழைத்து, நடைமுறையில் இருக்கின்ற தரச் சான்று வழங்கும் முறைகளை கட்டுப்பாடுகளை வரையறைகளை ஊழல்படுத்திச் சீரழித்து மோசடியான முறையில் தரச் சான்று வழங்கி, தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களுக்குச் சேவை செய்தனர் என்பதே குற்றச்சாட்டு.
இதன் மூலம் நாட்டு மக்களின் மருத்துவ நலனுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளனர்.
மருத்துவம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் அனைத்து முடிவுகளையும் கல்லூரி நிர்வாகங்களுக்கு இடைத்தரகர்கள் மூலமாக முன்கூட்டியே தெரிவித்து விடுவது; உரிய பொறுப்பான நபர்களை அடையாளம் காட்டுவது, இவற்றின் மூலம் தரச் சான்றுகளுக்கான சோதனைகளின் தேவைகளைத் தற்காலிகமாக போலியான மற்றும் மோசடியான முறைகளில் நிறைவு செய்து காட்டி குழுவை ‘ஏமாற்றி’ காரியம் சாதித்துக் கொள்வது.
உதாரணமாக ஒரு மருத்துவக் கல்லூரி என்பது இவ்வளவு பேராசிரியர்களை மருத்துவர்களை செவிலியர்களை தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களை இன்ன பிற ஊழியர்களைக் கொண்டிருக்க வேண்டும் அதற்கும் மேலாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படுக்கை வசதிகளைக் கொண்டிருப்பதுடன் அவ்வளவு எண்ணிக்கையிலான நோயாளிகள் சிகிச்சை பெற்று வர வேண்டும் என்பதும் நிபந்தனையாகும்.
அதற்காக ஆய்வுக் குழுவின் சோதனை நடக்கும் ஓரிரண்டு நாட்களுக்கு மட்டும் ஏஜெண்டுகள் மூலம் மக்களைத் திரட்டி தலைக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் மற்றும் சாப்பாடு சப்ளை என்று அழைத்து வந்து நோயாளிகளாக நாள் முழுவதும் படுக்கையில் போர்த்திக் கொண்டு படுத்திருக்கச் செய்வது. இந்த கேலிக்கூத்து அவ்வளவு வெளிப்படையாக தமிழ்நாட்டில் உள்ள எஸ்.ஆர்.எம். மற்றும் தனலட்சுமி சீனிவாசன் போன்ற மருத்துவக் கல்லூரிகளில் நடந்தேறியது.
இதேபோன்று மருத்துவமனை ஊழியர்கள் பேராசிரியர்கள் செவிலியர்கள் போன்ற அனைத்து தரப்பினரின் எண்ணிக்கையைக் காட்ட இதே போன்ற ஆள்மாறாட்ட மோசடிகள் தான் எல்லா இடங்களிலும் நடந்திருக்கின்றன. சில இடங்களில் பயோமெட்ரிக் முறையில் ரேகை வைப்பதாக ஏற்பாடு செய்து அதன் மூலம் அவர்கள் நிரந்தரமான ஊழியர்கள் என்று கணக்குக் காட்டுவதும் நடந்திருக்கிறது. இதே போன்று அத்தியாவசியமான உட்கட்டுமானங்கள், ஆய்வுக் கூடங்கள் மற்றும் மருத்துவத்துறை உபகரணங்கள் போன்றவற்றிலும் மோசடியான ஏற்பாடுகளைச் செய்து சரிக்கட்டுவதும் நடந்திருக்கின்றன.
மாயாவி பேராசிரியர்கள் (Ghost Faculty, Dummy Faculty) என்று அழைக்கப்படும் இந்த மருத்துவ பேராசிரியர்களில் அன்றாட வருகை பதிவேடுகள் போலியாகத் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன மற்றும் நோயாளிகளின் பதிவேடுகளும் போலியாகத் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன அதாவது ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள் நோயாளிகளாக படுக்கையில் தங்கியிருந்து குணம் பெற்றுச் சென்றிருப்பது போல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன. அதைப் போலி என்று தெரிந்தே தான் ஆய்வுக் குழுவும் அங்கீகரித்து சான்றிதழ் வழங்குவதற்குப் பரிந்துரை செய்துள்ளது.
இத்தனைக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரிகள் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மூத்த பேராசிரியர்கள் ஆகியோரைக் கொண்டு தான் மருத்துவ ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அரசின் ஆய்வுக்குழு உறுப்பினர்களை பணத்தாலும் இன்னும் பல வழிகளிலும் கவனிக்கும் முறைகளை பல திரைப்படங்களில் பார்த்திருக்க முடியும். பல சமயம் லஞ்ச பணங்கள் ஹவாலா முறையில் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் வலைப்பின்னலையும் மைய புலனாய்வுத்துறை இப்பொழுது கண்டறிந்து உள்ளது.
தென் மாநிலங்களுக்காக முக்கிய இடைத்தரகராக வேலை செய்த நபர் டெல்லி குருகிராமைச் சேர்ந்த வீரேந்திர குமார் என்பவர் ஆவார். மேலும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டெக்னிஃபை சொல்யூஷன்ஸ் (Technify Solutions) எனும் நிறுவனத்தைச் சேர்ந்த ரஞ்சித் நாயர் என்பவர் சுவாமி நாராயணன் மருத்துவக் கல்லூரி, ஷ்யாம்லால் சந்திரசேகர் மருத்துவக் கல்லூரி போன்ற பீகார் மாநிலத்து தனியார் கல்லூரிகளுக்கு இடைத்தரகராகச் செயல்பட்டிருக்கிறார். தரச் சான்றிதழ் வழங்குவதற்கான ஆய்வின்போது டம்மி பேராசிரியர்களை ஏற்பாடு செய்து கொடுக்கின்றவர்களாக ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் சேர்ந்த ஹரி பிரசாத் என்கிற ஏஜெண்டும் அவரின் கூட்டாளிகளாக கிருஷ்ணா கிஷோர் மற்றும் அங்கம் ராம் பாபு போன்றவர்களும் கும்பலாக இயங்கி வந்திருக்கிறார்கள்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மகராஜ் என்பவர் ராவத்புரா சர்கார் என்றே பரவலாக அழைக்கப்படுகிறார். இவர் ராவத் புரா சர்க்கார் லோக் கல்யாண் டிரஸ்ட் என்கிற நிறுவனத்தை 2000 இல் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்கு இப்பொழுது பல ஆசிரமங்கள், ரத்த வங்கிகள், முதியோர் இல்லங்கள் தவிரவும் இன்னும் பல கல்வி நிறுவனங்கள், (பள்ளிகள் பொறியியல் கல்லூரிகள் நிர்வாக மேலாண்மை கல்லூரிகள் நர்சிங் மற்றும் பார்மசி கல்லூரிகள் விடுதி நிர்வாக மேலாண்மை கல்லூரிகள்) பல உள்ளன. 57 வயதான கடவுளின் தூதராக ‘அறியப்படுகின்ற’ இந்த மகராஜ் நாடு முழுவதிலும் பெரும் அரசியல் தலைவர்களை மூத்த சிவில் அதிகாரிகளைத் தனது பக்தர்களாகப் பெற்றிருக்கிறார் என்பது முக்கியமானதாகும். இப்போது அவரும் இந்த மருத்துவக் கல்லூரி அங்கீகார ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச் செயல்கள் நாட்டு மக்களின் மருத்துவ சுகாதாரத் தேவைகளை சீர்குலைப்பதாகவும் மருத்துவத்துறையின் தரத்தை மட்டறுப்பதாகவும் மக்களின் நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.
ஆனால் இவற்றுக்கெல்லாம் மேலே அமைச்சர் என்று ஒருவர் எந்த ஊழலிலும் ஈடுபடாமல் அமைதியாக உட்கார்ந்திருந்ததாகக் கருதி அமைச்சர் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தகுந்ததாகும். எனில் இவ்வளவு உயர்நிலை அதிகாரம் படைத்த இவ்வளவு பெரிய கும்பலை எந்த நீதிமன்றமும் தண்டிக்கப் போவதில்லை என்பதை எதிர்காலத்தில் மக்கள் தெரிந்து கொள்ளக் கூடும்.
கேப்டன் தேசாய் என்கிற முன்னாள் அகில இந்திய மருத்துவ கமிஷனின் தலைவர் மூட்டை மூட்டையாக பணமும் டன் கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருந்த வழக்கை இத்துடன் தொடர்புப்படுத்திப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்தடுத்த பல தேசாய்கள் பிடிபடாமல் இருந்து வருகிறார்கள் என்பதைத்தான் இந்த சி.பி.ஐ-யின் வழக்கின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
ஊழல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தரக்குறைவான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தரச் சான்றிதழ் பெற்ற தனியார் மருத்துவக் கல்லூரிகள் ராஜஸ்தான், பீகார், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா என்று இந்தியாவின் பல மாநிலங்களிலும் தரமற்ற கல்லூரிகள் ‘சிறப்பாக’ நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மட்டும் இதற்கு விதிவிலக்கு என்று புரிந்து கொண்டால் அது நமது அறிவீனம் மட்டுமே ஆகும்.
100 சதவீதம் அயோக்கியத்தனம் என்றால் அதை எப்படித் தான் கண்டறிய முடியும்; இப்படி ஒரு கூட்டணி விரிவாக உருவாகிவிட்டால் யாரைத்தான் குற்றம் சுமத்த முடியும்; எப்படித்தான் குற்றம் நடப்பதைத் தடுக்க முடியும். இந்த மருத்துவ கட்டமைப்பையே கலைத்துத் தூக்கி எரிந்து விட்டு மக்கள் நலன் காக்கும் வகையிலான, நேரடியாக மக்கள் குழுக்களே சோதித்தறியும் அதிகாரம் கொண்டதான ஒரு மாற்று அமைப்பை ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை.
ஆதி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram