கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மூகாம்பிகை இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ். டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இக்கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவர்கள், மருத்துவப் படிப்பிற்காக (MBBS) அனுமதிக்கப்படுகின்றனர்.
எல்லா தனியார் கல்லூரிகளைப் போலவே இக்கல்லூரியிலும் கட்டண வசூல் வேட்டை நடக்கிறது. மேலும் இக்கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் கட்டாய சுழற்சி முறைப்படி இங்கு பயிற்சி மருத்துவர்களாக ( CRRI – Compulsory Rotatory Residential Internship ) பணிபுரிய வேண்டும்.
பொதுவாக பயிற்சி மாணவர்களுக்கு மாதமாதம் ஊக்கத்தொகை நிர்வாகத்தால் வழங்கப்படுவது தான் முறை. ஆனால் மூகாம்பிகை கல்லூரியிலோ மாணவர்களே தங்கள் பயிற்சி காலத்திற்கான ஊக்கத்தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும். பின்னர் அவர்கள் செலுத்திய பணத்தை மாத ஊக்கத் தொகையாக கல்லூரி நிர்வாகம் பிரித்துத் தரும். இந்த மோசடி பரவலாக பல தனியார் கல்லூரிகளிலும் நடைபெறுகிறது.
அவ்வாறு மாணவர்கள் பயிற்சிக் காலத்திற்கான பணம் கட்ட மறுத்தால் அவர்களின் மருத்துவக் கனவை கருக்கிவிடுவோம் என அச்சுறுத்துகிறது நிர்வாகம். மாணவர்களும் தங்கள் கடைசி ஆண்டில் நிர்வாகத்தைப் பகைத்துக் கொண்டு சான்றிதழ்களை இழக்க விரும்புவதில்லை. இதை தனக்குச் சாதகமாகப் பயண்படுத்திக் கொள்கின்றன கல்லூரி நிர்வாகம்.
அந்த வகையில் 2013 –ஆம் ஆண்டு கல்லூரி சேர்ந்த மாணவர்களை CRRI – பயிற்சிக் காலத்திற்கான கட்டணமாக 1,75,000 ரூபாயை பெற்றுள்ளது மூகாம்பிகை கல்லூரி நிர்வாகம். அதில் இருந்து மாதம் 13,000 ரூபாயை ஊக்கத் தொகையாக பிரித்து வழங்கி வந்துள்ளது. அதைக்கூட 11 மாதங்களுக்கு மட்டும் தான் வழங்குவோம். கடைசி மாதத்துக்கு வழங்க முடியாது எனக்கூறியுள்ளது நிர்வாகம்.
அதுமட்டுமில்லாது மாணவர்களின் ஊக்கத் தொகையை நிறுத்த; “ஸ்டெதஸ்கோப்பை ஏன் தோளில் போட்டு இருக்க… எனக்கு ஏன் வணக்கம் வைக்கல…” என பல்வேறு சில்லரைக் காரணங்களைக் கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளது மூகாம்பிகைக் கல்லூரி நிர்வாகம்.
இவ்வாறு பல மாணவர்களின் ஊக்கத்தொகையைத் திருடும் வேலையைச் செய்கிறது.
அத்துடன் நிற்காத கல்லூரி நிர்வாகம் தற்போது தங்களது பயிற்சிக் காலம் நிறைவடையக் காத்திருக்கும் மாணவர்களிடம் ஹாஸ்டல் கட்டணம் என கூடுதலாக 50,000/- ரூபாய் கேட்டு மிரட்டுகின்றது.
மாணவர்கள் ஏற்கனவே தங்களது விடுதி கட்டணத்தை செலுத்தியுள்ளதால் கூடுதல் பணம் கொடுக்க முடியாது என தெரிவித்து இருந்தனர். மேலும் கல்லூரியின் தொடர் கட்டணக் கொள்ளையை சகித்துக் கொள்ள முடியாது என்பதால் தங்கள் எதிர்ப்பை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தெரிவித்துள்ளனர். அச்சமயத்தில் இரண்டு CRRI – மாணவர்களை அழைத்துப் பேசியுள்ளது நிர்வாகம்.
தற்போது மீண்டும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு கூடுதல் கட்டணம் செலுத்தவில்லை எனில் ஒரு அறையில் இரண்டு மாணவர்களாக சேர்ந்து தங்கவேண்டும் எனவும் கூறியுள்ளனர். இது மட்டுமல்லாது பயிற்சி மாணவர்களை சுழற்சி முறையில் சிறப்பு மருத்துவப் பிரிவுகளில் (கார்டியோ பிரிவு, சிறுநீரகப் பிரிவு போன்ற பிரிவுகளில்) பணியாற்ற நியமிக்கும் போது அவர்களை இடைவேளை இல்லாமல் 36 மணி நேரம் மற்றும் அதற்கு மேலும் பணி செய்ய நிர்ப்பந்திக்கிறது கல்லூரி நிர்வாகம்.
இவற்றை இனியும் பொறுக்க முடியாது என மாணவர்கள் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும்;
- விடுதிக்கு கூடுதல் கட்டணமாக சொல்லப்படும் ரூபாய் 50,000 –த்தை செலுத்த மாட்டோம்.
- விடுதியில் பயிற்சி மருத்துவருக்கான தனித் தனி அறைகளில்தான் தங்குவோம். சேர்ந்து தங்க வேண்டும் என்பதை ஏற்க மாட்டோம்.
- தேவையற்ற பயிற்சி நீட்டிப்பு மற்றும் ஊக்கத் தொகை நிறுத்தப்படுவதை ஏற்க மறுப்போம்.
- ஸ்டெதஸ்கோப் – மருத்துவர்களாகிய எங்களின் அடிப்படை உரிமை.
- தனி நபர்களாக தேர்ந்தெடுத்து அவர்களை உளவியல் சித்திரவதை செய்யக்கூடாது.
- கீழ் உள்ளவை கிடைக்க உத்திரவாதம் செய்!
அ) ஊக்கத்தொகை
ஆ) நடத்தைச் சான்று
இ) வருகைப் பதிவு
ஈ) சான்றிதழ்கள்
உ) செல்பேசி பேச அனுமதி
ஊ) எங்கள் முதுகுப் பை எடுத்துவர அனுமதி
எ) நேரடி மற்றும் மறைமுக மிரட்டல்கள் தவிர்க்கப்பட வேண்டும்
ஏ) மீதமுள்ள 8 மாதம் எங்களின் கல்வி பாதிக்கப்படாது என்பதற்கான உத்திரவாதம். - மருத்துவர்களுக்கு உரிய மரியாதையுடன் நாங்கள் நடத்தப்பட வேண்டும். குறிப்பாக நிர்வாக ஊழியர்கள் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
- நாங்கள் மருத்துவர்கள்; அடிமைகள் அல்ல.
- பணி இல்லாத நேரங்களில் வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மாணவர்களின் போராட்டம் குறித்த செய்திகள் வெளியில் செல்லாத வகையில் மூகாம்பிகை கல்லூரி நிர்வாகம் தற்போதுவரை செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
போராடும் மாணவர்களை ஆதரிப்போம். அவர்களுக்கு நாம் துணை நிற்போம்.
– வினவு செய்திப்பிரிவு.
இது முற்றிலும் உண்மையே… மருத்துவ மேல் படிப்பு மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுவதில்லை… பதிலாக மாணவர்களை கட்டாயப்படுத்தி ஊக்கத்தொகை பெற்றுக்கொண்டதாக கையொப்பம் பெறப்பட்டதும் மறுக்க முடியாது உண்மையே….