சென்னை: திருவொற்றியூர் எம்.ஆர்.எஃப் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்! | பு.ஜ.தொ.மு

சென்னை திருவொற்றியூர் MRF நிறுவனத்தின் தொழிலாளர்கள் கடந்த 13.09.2025 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அன்பார்ந்த தொழிலாளர்களே! உழைக்கும் மக்களே!

சென்னை திருவொற்றியூர் MRF நிறுவனத்தின் தொழிலாளர்கள் கடந்த 13.09.2025 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏன் இந்த போராட்டம்? தொழிற்சங்கமும் நிர்வாகமும் சேர்ந்து போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை நிர்வாகம் மதிக்காமல், ஒப்பந்த சரத்துக்களை மீறி செயல்படுகிறது. இதுகுறித்து தொழிற்சங்கம் கேள்வி எழுப்பியது. ஒப்பந்தப்படி நிர்வாகம் நடந்து கொள்வதுதான் நேர்மையான செயல் என தொழிற்சங்கம் பலமுறை சுட்டிக்காட்டியும் பலனில்லை.

மாறாக, ஒப்பந்தப்படி தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த பல்வேறு சலுகைகளை பறித்து நிர்வாகம் தொழிலாளர்கள் மீது அடக்கு முறையை செலுத்தியது. தொழிற்சங்கமானது நிரந்தரத் தொழிலாளர்களது உரிமைக்கான குரலோடு நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் பயிற்சி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையையும் இணைத்துக் கொண்டு போராடி வருகிறது.

இந்த சூழ்நிலையில் நிர்வாகம் திடீரென கதவடைப்பு செய்து கொண்டு தொழிலாளர்களை மிரட்டி வருகிறது. தொழிலாளர்களின் உரிமை பறிப்புக்கு எதிராகப் போராடி வருகின்ற தொழிலாளர்களை எப்படியாவது நசுக்கி ஒடுக்க வேண்டும் என்கிற நோக்கம் கொண்ட MRF நிர்வாகம், தனது ஆலையிலிருந்து 500 மீட்டர் வரை போராட்டம் நடத்தக்கூடாது என தடை ஆணை வாங்கியது.

ஆனாலும், மாற்று இடம் ஏற்பாடு செய்த தொழிலாளர்கள் ஒற்றுமையோடு உறுதியாக இருந்து களத்தில் நின்று போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு) சார்பில் இந்த போராட்டக்களத்துக்குச் சென்று எமது ஆதரவைத் தெரிவித்தோம். வடக்கு மண்டலச் செயலாளர் தோழர் ம. சரவணன் அவர்கள் உரையாற்றினார். ஆலைகள் கடந்து, சங்கங்கள் கடந்து தொழிலாளி வர்க்கமாக அணி திரள்வோம் என்பதே எமது அறைகூவல்!

MRF தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்! வெற்றி பெறச் செய்வோம்!

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு),
தமிழ்நாடு.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க