கடந்த நவம்பர் 14-ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம் வி.வி.டி. சிக்னல் அருகே ஊதிய உயர்வுக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியதுடன் தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
எதிர்பாராத சாலை விபத்துகள், திடீர் தீ விபத்துகள், உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்படும் மக்களை கட்டணமின்றி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றுவதற்காக, 2008-ஆம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. ஆனால், பின்னர் 108 ஆம்புலன்ஸ் சேவைகளை நடத்துவதற்கு ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. எனப்படும் ஜி.வி.கே. அவசகரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (GVK Emergency Management And Research Institute) என்ற தனியார் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்பந்தத்தை வழங்கியது.
இந்நிறுவனத்திற்குக் கீழ் தமிழ்நாடு முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்களில் 7,000-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் இரண்டு ஷிப்டுகள் வீதம் இரவு பகலாக 12 மணி நேரம் கொத்தடிமைகளைப் போன்று பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, பெண் தொழிலாளர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படுகின்ற துன்புறுத்தல்களைச் சகித்துக்கொண்டு மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றனர். ஆனால், தனியார் நிறுவனம் இவர்களைக் கண்ணியத்துடன் நடத்தாமல், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, வேலைக்கேற்ற ஊதியம் போன்றவற்றை வழங்காமல் வஞ்சித்து வந்தது.
இதற்கு எதிரான தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனம் அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டது. அதன்படி, ஆண்டு ஊதிய உயர்வை 16 சதவிகிதத்திற்குக் கீழ் குறைக்கக்கூடாது என்ற விதிமுறை உருவாக்கப்பட்டது. அதன்படி, 2021-ஆம் ஆண்டு வரை 16 சதவிகித ஆண்டு ஊதிய உயர்வை நிறுவனம் வழங்கி வந்துள்ளது. ஆனால், 2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு தற்போது வரை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் ஊதியத்தை ஒரு சதவிகித அளவிற்குக் கூட உயர்த்தவில்லை. இதனை எதிர்த்து நான்கு ஆண்டுகளாக தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், இவர்களின் போராட்டக் குரல்களை தி.மு.க. அரசு கேட்கத் தயாராக இல்லை.
இந்நிலையில், எந்த அறிவிப்புமின்றி ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. நிர்வாகம், 2025-ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வை 16 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைத்து வழங்கியுள்ளது. 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு கோரிக்கை மீதான வழக்கு தொழிலாளர் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள போதே அடாவடியாக இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு மக்கள் மீதான தி.மு.க. அரசின் அலட்சியமும், மருத்துவத்துறையை கார்ப்பரேட்மயமாக்குகின்ற நடவடிக்கையுமே முக்கியக் காரணமாகும்.
படிக்க: தமிழ்நாடு: ஆட்குறைப்பை எதிர்த்து அரசு மருத்துவர்கள் போராட்டம்
இந்நிலையில்தான், தனியார் நிறுவனத்தின் மறைமுக ஊதிய வெட்டைக் கண்டித்தும், ஊதியத்தை உயர்த்தி வழங்காத தி.மு.க. அரசைக் கண்டித்தும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நவம்பர் 14-ஆம் தேதியன்று தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில், “தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மற்ற தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊதிய உயர்வு வழங்கும்போது, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு மட்டும் இந்த வருடாந்திர ஊதிய உயர்வைக் குறைத்து வழங்குவது அநீதி” என்று தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும், “தி.மு.க. அரசு ஊதிய உயர்வுக்கு உடனடியாக தீர்வு காணவில்லை என்றால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். அவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போது, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மட்டும் அல்லாமல், தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் தி.மு.க. அரசால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களையும், தொழிலாளர் விரோதப் போக்கினால் பாதிக்கப்பட்ட மற்ற தொழிலாளர்களையும் ஒன்றுதிரட்டி, ஒரு பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவோம்” என்று எச்சரித்துள்ளனர்.
முக்கியமாக நவம்பர் 11 அன்று தமிழ்நாடு அரசின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களின் ஆட்குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட 14 இடங்களில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் (TNGDA – Tamilnadu Government Doctors Association) ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக நீதி பேசுகின்ற தி.மு.க. அரசு மக்களைத் தேடி மருத்துவம், முதல்வர் மருந்தகம் போன்ற திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களின் நலனைக் கைகழுவிவிட்டு, மருத்துவத்துறையை கார்ப்பரேட் மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதிலிருந்துதான், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும்; ஒப்பந்த முறையை இரத்து செய்ய வேண்டும்; 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற மருத்துவர் – தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்து வருகிறது.
எனவே, தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடுகின்ற மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மருத்துவத்துறையை கார்ப்பரேட்மயமாக்கிக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு எதிராகவும் போராட வேண்டும். இதன் மூலம் தங்களின் நலனையும் தங்களை நம்பியுள்ள கோடிக்கணக்கான மக்களின் நலனையும் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தி.மு.க. அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











