Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 479

காவிரி உரிமைக்கான நடைபயணத்திற்கு அனுமதி மறுப்பு !

பத்திரிகைச் செய்தி

நாள் : 14.04.2018

14.04.18 முதல் வரை 29.04.2018 வரை கல்லணையில் தொடங்கி பூம்புகாரில் முடியும் வண்ணம் காவிரி மேலாண்மை வாரியம் கோரி நாங்கள் நடத்த இருந்த பிரச்சார நடைபயனத்துக்கு ஒருநாள் முன்னதாக 13.04.2018 அன்று இறுதி நேரத்தில் காவல் துறை தடை விதித்துள்ளது.

திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர்நடத்திய தபால் நிலைய முற்றுகை போராட்டம் (கோப்புப் படம்)

அதேபோல சென்ற மாதம் 24 ஆம் தேதி திருச்சியில் நாங்கள் நடத்திய தபால் நிலைய முற்றுகை போராட்டத்தின்போது பாடிய ஒரு பாடல் பிரதமரையும் முதல்வரையும் தாக்குவதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டி நேற்று ம.க.இ.க.வின் பாடகர் கோவனை திருச்சி நகர காவல் துறை மிருகத்தனமான முறையில் கைது செய்து இழுத்துச் சென்றது.

காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் விட மறுக்கிறது, மேலாண்மை வாரியம் அமைக்க மோடி அரசு மறுக்கிறது என்று சொன்னால் எடப்பாடி அரசின் அடக்குமுறை இவற்றை விட கொடியதாக இருக்கிறது. நாம் பிறந்து வளர்ந்த காவிரிக் கரை ஓரமாக நடந்து செல்வதே குற்றம் என்று அதற்கும் தடை விதிக்கின்றது இந்த அரசு.

காவிரி உரிமைக்கான தமிழக மக்களுடைய போராட்டங்களை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற மோடி அரசின் உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படுகின்றது இந்த பினாமி அரசு.

காவிரி உரிமைக்கான தமிழக மக்களுடைய போராட்டங்களை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற மோடி அரசின் உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படுகின்றது இந்த பினாமி அரசு. குறிப்பாக மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகமே எழுந்து நின்று நடத்திய கறுப்புக் கொடி போராட்டத்திற்குப் பின் மோடி, எடப்பாடி அரசின் அடக்குமுறை வெறி அதிகரித்துள்ளது.

எமது அமைப்பினர் மீது டெல்டா மாவட்டங்களில் பல வழக்குகள் இருப்பதால் நடை பயணத்துக்கு தடை விதிப்பதாக தனது தடை உத்தரவில் காவல் துறை குறிப்பிட்டுள்ளது. அவை எல்லாம் காவிரி உரிமைக்கான போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகளே அன்றி கொலை வழக்குகளோ பாலியல் வல்லுறவு வழக்குகளோ அல்லது ஊழல் வழக்குகளோ அல்ல. மேற்படி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களால் நடத்தப்படும் மத்திய மாநில அரசுகள் எங்களை குற்றவாளிகளாக சித்தரிப்பது நகைப்புக்கு உரியது.

இந்த சட்ட விரோத உத்தரவை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கவிருக்கிறோம். எங்களுடைய காவிரி மண்ணில் நாங்கள் நடை பயணம் செல்வதை யாரும் தடுக்க முடியாது. தடைகளை மீறி மீண்டும் நடைபயணம் செல்வோம்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்க ஆட்சியில் கூட நடை பயணத்துக்கு தடை விதிக்கும் இத்தகைய அக்கிரமம் நடந்ததில்லை. இதனை முறியடிப்போம். கோவன் தொடர்ந்து பாடுவார். தொடர்ந்து போராடுவோம் – காவிரி உரிமையை மீட்கும் வரை.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றோர்:
வழக்கறிஞர் சி.ராஜூ, மக்கள் அதிகாரம்.
தோழர் கோவன், மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தோழர் காளியப்பன், மக்கள் அதிகாரம்.
தோழர் வெற்றிவேல் செழியன், மக்கள் அதிகாரம்.
தோழர் கற்பகவிநாயகம், மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு, தொடர்புக்கு – 99623 66321.

மக்கள் பாடகர் தோழர் கோவன் கைது – தாக்குதல் !

தோழர் கோவனை கைது செய்ய போலீசு அத்துமீறல் ! மக்கள் மீது அதிரடி போலீசு தாக்குதல் !

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு பாடகரான தோழர் கோவன் அவர்களை கடந்த 13.04.2018 அன்று காலை கைது செய்வதற்காக வந்துள்ளோம் எனக் கூறிக்கொண்டு, சிலர் அவர் வசிக்கும் திருச்சி அரவானூர் பகுதிக்கு TN – 15 G – 1063 எனும் வேனில் வந்தனர்.

தோழர் கோவன் (கோப்புப் படம்)

வேனில் வந்த 15 பேரும் தங்களை போலீசு என கூறிக்கொண்டாலும் அதற்கான எந்த அடையாளத்தையும் காண்பிக்காமல் ஒரு கடத்தல் கும்பலைப் போல் செயல்பட்டனர். இந்த ஆள்கடத்தல் நிகழ்வை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவன் அவர்களின் துணைவியார் கோவன் அவர்களை காக்க முயற்சி செய்துள்ளார். அவரை கீழே தள்ளிவிட்டது அந்த கும்பல்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் திரண்டு வருவதைப்பார்த்த அந்த கும்பல் ஓடிவிட்டது. அதன்பின்னர் காவல்துறை வாகனத்தில் திருச்சி போலீசார் வந்துள்ளனர். அவர்கள் தோழர் கோவன் அவர்களை கைது செய்வதாக அறிவித்தனர். ஆனால் ஒருவரை கைது செய்யும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் போலீசு கோவன் அவர்களை பலவந்தப்படுத்தியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவன் அவர்களை காக்கும் பொருட்டு தோழர் கோவன் வீட்டினுல் போலீசு நுழையாதவாறு தடுப்பரணாக நின்றனர். இந்த சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அங்கு பத்திரிக்கையாளர்கள் குவியத்தொடங்கினர். தங்களின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அம்பலப்பட்டுபோய்விடும் என பதறிய போலீசு அதிரடிப் படைகளைக் கொண்டு அரணாக நின்ற பொதுமக்களைத் தாக்கத் தொடங்கியது.

மேலும் தோழர் கோவன் அவரது வீட்டுக் கதைவை உடைத்து அராஜகமாக கைது செய்தது. கைது செய்து அவரை அழைத்து (இழுத்து) சென்றபோதும் அவரை பத்திரிகையாளர்களிடம் பேசமுடியாதவாறு தடுத்தது போலீசு.

ஏற்கனவே ஜெயா உயிருடன் இருக்கும் போது டாஸ்மாக் பாடலுக்காக இதே போல சட்டவிரோதமாக கைது செய்து வழக்கு போட்டனர். தற்போதும் பாஜக ஆணையின் பேரில் தமிழக அரசும், போலீசும் தோழர் கோவனை கைது செய்து அவரது பாடலை முடக்கப் பார்த்தனர்.

ஆனால் இந்த தடைகளைத் தாண்டி வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் தோழர் கோவனை அன்று மாலையே பிணையில் விடுவித்தது நீதிமன்றம்.

பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தோழர் கோவன் தனது பேட்டியில் “ஏற்கனவே டாஸ்மாக் பாடலுக்காக என்னை கைது செய்து என் மனவலிமையை உடைக்கப் பார்த்தார்கள். அதே போல இப்போதும் செயல்பட்டுள்ளார்கள், உண்மையில் கைது நடவடிக்கைகளுக்கு நான் அஞ்சவில்லை. அதே போல் ஆட்சியாளர்களை விமரிசிப்பதை எனது நோக்கம், திட்டுவது அல்ல. மக்களை நேசிக்கும் ஒரு மனிதனாக எமது மக்களை அழிக்க நினைக்கும் அரசின் செயல்பாடுகளைக் கண்டு அமைதியாக இருக்கமுடியாது. அவர்களின் மொழியே எங்களது பாடல்கள்; அவர்களின் சொற்களை நாங்கள் பாடல்களில் சொல்கிறோம்.” எனக் கூறினார்.

துருக்கியின் மக்கள் கவிஞன் நசீம் இக்மத் அவர்கள் “என்று கவிதை எழுதத் தொடங்கினேனோ அன்றிலிருந்தே – கலை, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், அது நல்ல எதிர்காலம் படைக்க அவர்களை அறைகூவி அழைக்கவேண்டும் என்றே விரும்பினேன்; கலையை மக்களின் துன்பதுயரம், அவர்களின் கோபம், நம்பிக்கை, மகிழ்ச்சி, வேதனைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் – கருவியாக்கிவிட வேண்டும்.” என்று கூறியிருந்தார். அப்படி செயல்படும் ம.க.இ.க கலைக்குழுவை முடக்கவேண்டும் என்பதே அரசின் முடிவு. ஆனால் அவர்கள் இதற்கு அஞ்சப் போவதில்லை.

*****

 

மக்கள் பாடகர் கோவன் கைது – தாக்குதல் !
கருத்துரிமைக்கெதிரான அராஜகத்தை முறியடிப்போம் !

பத்திரிகைச் செய்தி

நாள் : 13/4/2018

க்கள் கலை இலக்கியக்கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், கலைக்குழு பொறுப்பாளருமான தோழர் கோவனை திருச்சி காவல்துறை கைது செய்துள்ளது. சீருடை அணியாத காவல் துறை எந்த நாகரீக, சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாது அவரது குடும்பத்தினரையும் தாக்கி, வீட்டுக்கதவை உடைத்து கைது செய்துள்ளது. பாடல் மூலம் வன்முறையை தூண்டியதாக 153A,504,505 ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அன்றாடம் சிறுபான்மை மக்களின் மீதும் பெரும்பான்மை மக்களின் மீதும் அவதூறுகளை பரப்புவதையே வேலையாகக்கொண்ட காவி பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசு , திருச்சியிலேயே தங்கி தொடர்ந்து ம.க.இ.க , மக்கள் அதிகாரம் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி வரும் தோழர் கோவனை ஏதோ பயங்கரவாதியைப் பிடிப்பது போல அநாகரீகமாகவும் அராஜகமாகவும் கைது செய்துள்ளது

ஆர்.எஸ்.எஸ்-ன் அடியாளாகவே மாறிவிட்ட தமிழக காவல்துறையின் இந்த அராஜகத்தை மிக வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழக காவல்துறை கருத்துரிமையைப் பறித்து ஆட்டம் போடுகிறது. ஆர்.எஸ்.எஸ் ரத யாத்திரிக்கைக்கு முழு பாதுகாப்பளித்து எதிர்ப்பு தெரிவித்தோரை கைது செய்து ஒடுக்கியது மட்டுமின்றி 144 தடையுத்திரவே போட்டது.

பாஜக மோடி அரசின் துரோகத்தால் கொதித்துப்போயுள்ள தமிழக மக்களின் போராட்டத்தை ஒடுக்கவும், காவிரிக்கான உரிமைப்போராட்டத்தை நசுக்கவும் அடிமை எடப்பாடி அரசு மேற்கொள்ளும் அடக்குமுறை ஒரு போதும் வெற்றிபெறாது. தற்போது தோழர் கோவன் நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அவரது விடுதலைக்குத் துணை நின்ற வழக்குரைஞர்கள். ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் எமது நன்றியையைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கோவன் மீதான தாக்குதல் என்பது கருத்துரிமை மீதான பாசிஸ்டுகளின் தாக்குதல் எனவே மக்களை நேசிக்கின்ற அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த அராஜகத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள்
தோழர். காளியப்பன்
மாநிலப் பொருளாளர்
மக்கள் அதிகாரம்

*****

தோழர் கோவன் கைதை கண்டித்து குடந்தையில் ஆர்ப்பாட்டம் !

மக்கள் பாடகர் தோழர் கோவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, 13.04.2018 மதியம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் குடந்தை மீன் மார்க்கெட் பகுதியில் வழக்கறிஞர் தோழர் ஜெயபாண்டியன் (மக்கள் அதிகாரம்) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
குடந்தை. தொடர்புக்கு : 97892 61624

காவிரியை மீட்க தமிழகமே கிளர்ந்தெழு ! போராட்ட செய்திகள் படங்கள் !

0

‘’காவிரியை மீட்க கிராமங்கள் தோறும் கிளர்ந்தெழுவோம்’’ என்ற முழக்கத்தை முன்வைத்து, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள சிறுநகர், சிறுகலத்தூர், கல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் தொடர் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியினர், அப்பகுதி மக்களை அணிதிரட்டி கடந்த 8.04.18 அன்று, சித்தாமுர் நான்கு வழிசாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதற்கு முன்னதாக, மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதி வழியே பேரணியாகச் சென்றனர். பேரணியில், உணர்வுப் பூர்வமாகப் பங்கேற்ற பெண்களும் குழந்தைகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ‘’தமிழகத்தை மீண்டும் மெரினாவாக்குவோம்’’ என்றும் சூளுரைத்தனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
சிறுநகர், தொடர்புக்கு : 94451 12675.

*****

காவிரி : தன்னுரிமை கேட்டால் காவிரி உரிமை வரும் !

“காவிரியை தடுக்கும் டெல்லியின் அதிகாரத்தை முடக்கு !” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 09.04.2018 அன்று காலை திருச்சி லால்குடியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு – 94454 75157, 95979 12822.

போராட்டக் காலத்தில் புதிய வினவு !

1

காலத்திற்கேற்ப வினவு தளத்தை புதுப்பிப்பது குறித்து அவ்வப்போது ஆலோசிப்போம். பிறகு அப்படி மாறினாலும் தொடர்வதற்கு நம்மிடம் பலம் இல்லையே என மறப்போம். இந்த முரண்பாடு இப்போது என்றில்லை, வினவு துவக்கம் முதலே இருக்கிறது. சமூக மாற்றத்திற்கான அனைத்து முயற்சிகளிலும் இந்த முரண்பாடு இல்லையென்றால்தான் அதிசயம். மோடி, டிரம்பின் டிஜிட்டல் படையெடுப்பை எதிர்த்து சண்டையிடுவதில் நாம் ஒரு போதும் பின்வாங்க மாட்டோம். அதே நேரம் நம்மிடம் கருவிகளும், ஆள் பலமும் போதுமானதாக இருப்பதில்லை.

ஆரம்ப காலத்தில் இருந்து வினவு தளத்தினை வளர்த்தெடுக்க நண்பர்கள், வாசகர்கள் பலர் ஆலோசனைகளை தெரிவித்திருக்கின்றனர். அவற்றில் பல நிறைவேற்ற முடியாமல் இருப்பதற்கு காரணம், முன்னர் கூறியதுதான். அதே நேரம் அந்த முரண்பாட்டை களைவதற்கான முயற்சிகள் இல்லை என்றால் இன்று வரை வினவு நீடித்திருக்காது. இப்படியும் சொல்லலாம். போராட்டத்திற்கான கருவிகள் குறைபாடுகளோடு இருந்தாலும், போராடும் உணர்ச்சியை நாம் இழந்து விடவில்லை! இழந்து விடக்கூடாது!

வினவு அன்றும் இன்றும்

மெரிக்காவில் சப் பிரைம் நெருக்கடி துவங்கிய 2008-ம் ஆண்டு, வினவு தளத்தின் துவக்கமும் கூட. அன்று சமூகவலைத் தளங்களின் ஆதிக்கம் இல்லை. இணைய பழக்கத்தின் ஆரம்ப காலமது. பிளாக் எனப்படும் வலைப்பூக்கள் பலருக்கும் எழுதும் பயிற்சியை அளித்து வந்தன. தமிழகத்தில் கருணாநிதி அரசு, ஈழத்தில் போராட்டம் என அந்த ஆண்டுகள் கடந்து கொண்டிருந்தன.

“ஐ.டி. நண்பா உனக்கு ரோஷம் வேணுண்டா” என்றொரு கட்டுரை அப்போது வெளியிட்டோம். ஐ.டி. துறையில் சங்கம் எதற்கு என்று நிறைய எதிர்வினைகள் வந்தன. பத்தாண்டுகளில் ஐ.டி. துறையில் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் போராட்டம் என்பது தவிர்க்க வியலாத ஒன்றாக மாறிவிட்டது.

இடைக்காலத்தில் மோடி அரசு வந்த பிறகு தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவும் கூட வேறு ஒரு திசையில் அடியெடுத்து வைத்திருக்கிறது. வாழ்க்கைப் பிரச்சினைகளும், சமூகத்தை நிர்வகிக்கும் அரசின் இயலாமையும் அதிகரித்து வருகின்றன. போராட்டமோ, எதிர்ப்போ இல்லாத நாளோ, செய்தியோ இல்லை.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் முகமாக நேற்று (10.04.2018) ஐ.பி.எல். கிரிக்கெட் பந்தயத்தை எதிர்த்து சேப்பாக்கம் மைதானத்தை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டனர். உள்ளேயும் ஆயிரக்கணக்கானோர் டிக்கெட்டுடன் கிரிக்கெட் விறுவிறுப்பை பார்க்கச் சென்றனர். இடையில் ஆயிரக்கணக்கான போலிசார் போராட்டக் காரர்களை அடித்தும், கலைத்தும் விரட்டினர். ஊடகங்களோ இரண்டு ‘விறுவிறுப்பையும்’ அதிரடிச் செய்திகளாக காட்டிக் கொண்டிருந்தன.

இப்படித்தான் நமது சமூகம் பிரிந்திருக்கிறது. காவிக்கறையின் ஏவலில் கறை வேட்டிகள் இரண்டு தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தாலும் சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க விதிமுறைப்படி வேட்டி கட்டுவோருக்கு அனுமதி இல்லை. வேட்டி தமிழ் மரபுதான். ஐல்லிக்கட்டும் தமிழ் மரபுதான். பார்ப்பனியத்தின் பிடியில் இருந்து காளைகளை விடுவித்த தமிழ் மக்கள் தங்களை விடுவிப்பதற்கு இன்னமும் போராடி வருகிறார்கள்.

ஐ.பி.எல். போட்டிகளை நிறுத்தினால் காவிரி நீர் வந்து விடுமா என்கிறார்கள்? டிக்கெட்டுகளை பல நூறு ரூபாய்களுக்கு வாங்கிய ரசிகர்கள். பதவி விலகினால் காவிரி வந்து விடுமா என்று பொன்.இராதாகிருஷ்ணனும் கேட்டார். அ.தி.மு.க. அமைச்சர்களும் கேட்டனர். எப்போதுதான் காவிரி வரும் என்று கேட்டு சலித்த மக்கள் இப்போது இல்லை என்றால் எப்போதுமில்லை என்று போராடுகிறார்கள்.

ஆம். இப்படித்தான் போராட்டமும், போராட வேண்டாமென்பதுமாக நம் சமூகம் பிரிந்திருக்கிறது. ஆகையால் சமூகவலைத்தளங்கள் வளர்ந்த இன்றைய நிலையில் கூட பெரும்பான்மை மக்கள் சமூக மாற்றத்திற்கான அரசியல் வெளி குறித்து அறியாத நிலையிலேயே முடக்கப் பட்டிருக்கிறார்கள்.

மெரினா ஜல்லிக்கட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர், ஐ.பி.எல். போட்டியை நிறுத்துவதில் என்ன பயன் என்று ஆர்.ஜே.பாலாஜி வீடியோவில் பேசுவதை ஏற்கலாம். வாட்சப் வதந்திகளைப் பார்த்து இலுமினாட்டி சதிகளை நம்பலாம். மோடியைத் திட்டி முழக்கமிட்டுவிட்டு பிக்பாசில் நியாயம் பேசலாம். இதன் நீட்சியில் சமூகவலைத்தளங்களை கட்டுப்படுத்தும் முதலாளித்துவம் நம்மையும் கட்டிப் போடுகிறது. தேவைக்கேற்ப ஆட்டுவிக்கிறது.

முற்போக்கு கருத்துக்கள் அதிகரித்து வருவதான இன்றைய தோற்றத்தை ஊடுருவிப் பார்த்தால் அது பெரிதும் கலங்கலாக இருக்கும். முக்கியமாக கட்சி, அரசியல், மார்க்சியம் போன்றவற்றை மறுத்து தனிநபர் நீதிபோதனைகளை ஊக்குவிக்கும் ஊடகமாக சமூகவலைத்தளங்கள் மாற்றப்பட்டுவிட்டது. அல்லது அந்த நோக்கத்திற்குத்தான் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இடத்தில்தான் வினவு தேவைப்படுகிறது.

இன்றைய இணைய வளர்ச்சியில் வினவு தளத்தின் இடமென்ன?

ணைய அரசியல் உலகில் சமூக மாற்றம் குறித்த நம்பிக்கையை மட்டுமல்ல அதன் அறிவியலையும் அயராமல் கொடுப்பதிலேயே வினவு உயிர்த்திருக்கிறது. அதன் வழி ஒரு வாசகர் தன்னை நடைமுறையில் செயல்படும் கடமையை கண்டுணர முடியும்.

தமிழ் இணைய வரலாற்றில் காத்திரமான இடத்தோடு துவங்கிய வினவு தளத்தின் இடம் முன்னிலும் அதிகமாய் தேவைப்படுகிறது. அதை ஏற்பதால்தான் நாம் இன்னமும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். என்றாலும் இன்றைய இணைய வளர்ச்சியில் வினவு தளத்தின் இடமென்ன?

பிரேக்கிங் நியூஸ் போய் இப்போது பிக் பிரேக்கிங் நியூஸ் என அதிரடி செய்திகளை கடை விரிக்கும் ஊடகங்கள் பரபரப்பை நோக்கி ஓடுகின்றன. முதல் செய்தி, முதல் காட்சி, விறுவிறுப்பான விவாதங்கள் என்பதை அளவிடும் கருவிகளாய் வைத்திருப்பதால் கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் ஒரே மாதிரி பேசுகின்றன. அந்த ஒரே மாதிரியில் சமூக மாற்றத்திற்கான இடம் அரிதான ஒன்று. அம்பானிகளும், கல்வி ’வள்ளல்களும்’, மணல் ‘முதலாளிகளும்’ ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டு ’நீதி போதனை’ பேசும் போது முன்னிலும் அதிகமாய் பேசவேண்டிய வினவு ஏன் பேசுவதில்லை என்று நண்பர்கள் பலர் அவ்வப்போது கேட்பதுண்டு.

முன்பு நாம் பேசிய போது மைதானத்தில் சில நூறுபேர் இருந்தனர். இன்றோ அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் மைதானத்தில் வந்த வண்ணம் இருக்கின்றனர். வீட்டோடு மட்டும் தமது பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று மக்கள் உணர்ந்த படியால் அவர்கள் போராட்ட வெளியை தேடி வருகிறார்கள். அதே மைதானத்தில் ஆங்காங்கே சிறு சிறு கவன ஈர்ப்புகள். யூ டியூப் காமடி வீடியோக்கள், ஃபேஸ்புக்கின் மீம்கள், வாட்ஸ் அப்பின் வதந்திகள், அன்றாடம் உருவாகும் பெயர்ப்பலகை அமைப்புகள், தனிநபரை முன்னிறுத்தும் சினிமா பிரபலங்கள், சமூக வலைத்தள பிரபலங்கள், புதிய கட்சிகள்…..

இந்தப் பிரச்சினை எமக்கு மட்டுமல்ல. தமிழில் முற்போக்கு கட்சிகள் – அமைப்பினர் சார்ந்து இணைய தளம் நடத்தி வந்த பலர் பிறகு அதன் தோல்வி காரணமாக விலகினர் அல்லது ஒப்புக்கு நடத்துகின்றனர். அதே போல இன்று ஃபேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் பலரும் தத்தமது இணைய தள முயற்சிகளை கை கழுவித்தான் வாசகர் வட்டத்தை விரித்திருக்கின்றனர்.

இணைய தளமோ, சமூக வலைத்தளமோ எங்கு பேசினால் என்ன, நாம் பேசுவது அதிகம் கேட்கப்படுவதுதானே முக்கியம் என்று சிலர் கேட்கலாம். ஆனால் நாம் பேசுகிறோமா இல்லை நம்மை பேச வைக்கிறார்களா என்பதை கேம்ரிட்ஜ் அனலாட்டிகா தெளிவாக காட்டிவிட்டது. அல்லது இதையே இப்படி பெயர்க்கலாம்.

நீங்கள் முற்போக்காவே பேசினாலும் அது அரட்டை, பொழுது போக்கு, நடைமுறையில் இருந்து விலகி நிற்பது என்ற விதிகளின் படியே ஃபேஸ்புக்கில் பிரபலமாக முடியும். இன்றைக்கு வலது சாரிகள், சாதி, மதவெறியர்கள் கூட சமூகவலைத்தளங்களில் தத்தமது ஆதரவை பெருக்கிக் கொண்டுதான் வருகின்றனர். பிற்போக்கான கொள்கைகள் தம்மை கடை விரிப்பதற்கு அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. ஒரு குத்து விளக்கு பூசை மூலம் அப்பாவி பெண்களிடம் முசுலீம்கள் மீதான வன்மத்தை விதைக்க முடியும்.

எச்.ராஜாவின் ஒரு வாந்தியை வைத்துக் கூட ஊடகங்களில் ஒரு இந்துத்துவ அஜண்டாவை பேசுபொருளாக்க முடியும். கவுன்சிலர் தேர்தலில் வெல்ல முடியாத கட்சியாக கேலி செய்யப்படும் பா.ஜ.க.-வின் தலைவர் தமிழிசையின் அறிக்கைகள் மாலை நேர டி.வி. விவாதத்திற்கு கருப் பொருளாகும். மக்கள் அதிகாரம் திரட்டிய மக்களை விட மக்கள் நீதி மய்யம் குறைவாகவே மக்களை திரட்டினாலும் லைவ், ’நம்மவருக்குத்தான்’!

கொள்கையைக் கேட்டால் தலை சுற்றும் ரஜினியின் பொன் மொழிகளுக்கு கிடைக்கும் இடம் கொள்கைக்காகவே வாழ்வை அளித்தோருக்கு இருக்க வேண்டியதில்லை. ஆகவே படிப்போரை ஒரு திசை வழி நோக்கி சமூக மாற்றத்திற்கான நடைமுறையில் ஈடுபடுத்தவேண்டும் என்ற இலக்கே வினவு தளத்தின் பலம். நமது பாதையை சிரமமாக இருப்பதற்கும் காரணமும் அதுதான்.

பலர் இந்த முயற்சியில் தோற்றாலும் வினவு தொடர்ந்து பயணிக்கிறது. அதாவது வாசகர்களை தோழர்களாக மாற்றும் கடமையை விருப்பத்துடன் செய்து வருகிறது. ஆகவே பரபரப்பு, டி.ஆர்.பி., பிரபலம், அதிக ஹிட்ஸ் போன்ற போட்டிகளில் நாம் என்றும் இல்லை. ஆனால் நம் கருத்துக்களை, நோக்கத்தை பரந்து பட்ட மக்களிடம் கொண்டு சென்றே ஆக வேண்டும். அதற்கு தொழில் நுட்ப சாத்தியங்களை பயன்படுத்தியாக வேண்டும். குறிப்பாக இளைஞர்களை கவர வேண்டும். கருத்தில் இளைமைத் துடிப்பிருப்பது போல வடிவத்திலும் இருக்க வேண்டும். தத்துவத்தை எளிமையாகவும், ஆழமாகவும் விளக்குவது போல இது.

வினவு தளத்தின் புதிய பகுதிகள்

வினவு தளத்தின் இந்த புதிய வடிவமைப்பு அப்படி ஒரு முயற்சி. இதில் அன்றாடம் மாறும் புதிய பகுதிகளை சேர்த்திருக்கிறோம். இன்றைய புகைப்படம் – மேற்கோள் – வரலாற்றில் இன்று – கேலிச்சித்திரம் போன்றவை நாளுக்கொன்றாய் இடம்பெறும்.

வாசகர் விவாதங்களை எளிமைப்படுத்தும் பொருட்டு மறுமொழிகளை மட்டறுப்பதை எடுத்து விட்டோம். மின்னஞ்சல் முகவரியுடன் கணக்கு துவங்கும் எவரும் நேரடியாக மறுமொழிகளை வெளியிடலாம். (தற்போது தொழில் நுட்ப பணிகள் நிறைவடையவில்லை என்பதால் பழைய மட்டறுத்தல் முறையில் இருக்கிறது.)

குறுஞ்செய்திகள், அரசியல் கட்டுரைகள், சமூக பண்பாட்டு கட்டுரைகள், வீடியோ என அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி இந்த வடிவம் உங்களுக்கு பயனளிக்கும்.

சமூக ஊடகத்தை அரசு அதிகாரத்தின் மூலம் கண்காணிப்பதும், கட்டுப்படுத்துவதும், பொய்ச் செய்திகளைப் பரப்புவதும், தமது நோக்கத்துக்கேற்பத் திசை திருப்புவதும் மென்மேலும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் வலதுசாரிகள் மற்றும் இந்துத்துவ சக்திகளுக்கு எதிரான நமது போராட்டத்தை பயனுள்ளதாகவும் வீரியமிக்கதாகவும் மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. இணைய உலகில் இலக்கின்றித் தெறித்துச் சிதறும் முற்போக்குக் கருத்தாளர்களை இயன்றவரை ஒருமுனைப்படுத்தவும், அவர்களை சமூக செயல்பாட்டாளர்களாக மாற்றியமைக்கவும் வேண்டியிருக்கிறது.

எழுத்தாளர்கள் பங்குபெறும் கருத்தாடல் பக்கம்

தனைக் கணக்கில் கொண்டு, இளைஞர்களிடம் நமது கருத்துக்களை எளிமையாகவும், விரும்பத்தக்க வகையிலும் கொண்டு செல்லும் விதத்தில் எழுத்தாளர் சிலரின் பத்திகள் இடம்பெறுகின்ற கருத்தாடல் பக்கத்தை அறிமுகம் செய்கிறோம். ஆங்கில இணையத் தளங்களில் வரும் Opinion page போன்ற பக்கமிது.

இது இணையப் பரப்பில் திக்குத் தெரியாமல் உழலும் எண்ணற்ற இளம் தலைமுறை வாசகர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும்.   அதன் போக்கில் அவர்கள் செயல்படுபவர்களாக வளருவதையும், அவர்களிடையே ஓர் ஒருங்கிணைவு ஏற்படுவதையும் சிறிய அளவிலேனும் சாத்தியமாக்கும்.

சமூகவலைத்தளத்தின் வடிவமைப்பு காரணமாக, பலருடைய முகநூல் பக்கங்களில் எழுதப்படும் காத்திரமான விசயங்கள் கூட காலப்போக்கில் ஒரு “முற்போக்கு அரட்டையாக” காற்றில் கரைந்து பயனற்றுப் போய்விடுகின்றன. மேலும், ஆர்வமுள்ள ஒரு வாசகர் அத்தகைய எழுத்துக்களை ஒரு நூலகத்தைப் பயன்படுத்துவதைப் போலத் தேடிப் பயன்படுத்த முடிவதும் இல்லை. கருத்தாடல் பகுதியில் வெளிவரும் எழுத்தாளர்களது பத்திகள் கால வரிசைப்படி தொகுக்கப்படுவதால் மேற்கண்ட குறை நீங்கி அதன் பயன்பாடு அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.

இதற்கடுத்து புதிய வினவு தளத்தில் வரும் முக்கியமான பகுதி “மெரினா”. ஃபேஸ்புக் போன்ற வசதிகள், வடிவமைப்பில் மக்கள் பங்கேற்கும் குழும பக்கம் இது. ஓரிரு நாளில் அறிமுகம் செய்கிறோம். மெரினாவில் வினவு வாசகர்கள் பேசிக் கொள்வதற்கும், பகிர்வதற்கும், விவாதிப்பதற்கும் இது உதவியாக இருக்கும். மேலும் சமூக அக்கறையுள்ள வாசகர் வட்டத்தில் பேசிக் கொள்வதற்கும், பயின்று கொள்வதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. நாம் தனியாக இல்லை என்ற நம்பிக்கையையும் மெரினா கொடுக்குமென நம்புகிறோம்.

வினவுக்குத் தோள்கொடுங்கள்! நன்கொடை தாருங்கள்!!

புதிய வினவு தளத்தின் தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடிவடையவில்லை. உங்கள் ஆலோசனைகள் இருப்பின் தெரியப்படுத்தவும். புதிய வினவு தளத்தை ஒரு தொழிற்முறை பத்திரிகையாக மாற்றுவதற்கு நாங்கள் தயார் என்றாலும் நீங்கள் தயார் இல்லை என்றால் அது சாத்தியமில்லை.

ஆம். நிதிச் சுமை. அனைத்து துறைகளிலும் அதிக பணி செய்வதற்கு போதுமான நிதி தேவைப்படுகிறது. தற்போது பேபால் வசதி இருப்பதால் வெளிநாட்டில் இருப்போரும் நன்கொடை அளிக்கலாம். பொதுவில் தோழர்களை உள்ளிட்டு, வினவு தளத்தை தவறாமல் படிக்கும் நண்பர்களும் இந்த ஊடக வேலைக்கு பெரும் செலவு இருப்பதை உணர்வதில்லை. ஒக்கி புயல் குறித்து ஒரு ஆவணப்படம் எடுப்பதோ, உடனுக்குடன் போராட்டச் செய்திகளை நேரலை செய்வதோ, செய்தியாளர்களை பணியில் அமர்த்துவதோ, வீடியோக்கள் தயாரிப்பதோ அனைத்தும் பெரும் செலவு பிடிக்கும் பணி என்பதை அறிவீர்கள்.

ஆதரியுங்கள். ஆலோசனைகளை தெரிவியுங்கள். சேர்ந்து பயணிப்போம்.

வாழ்த்துக்களுடன்
வினவு

ஸ்டெர்லைட் – மூடுவியா மூடமாட்டியா ? கொதிக்கும் மக்கள்

1

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகை!! சாலை மறியல்!!!

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் மக்கள் 55 நாட்களைக் கடந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட்டுக்கெதிரான போராட்ட உணர்வு கிராமம் நகரம் என்பதைத் தாண்டி மாவட்டம் முழுவதும் பரவியுள்ளது.

அந்தவகையில் பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மீளவிட்டான், சில்வர்புரம், மடத்தூர், தபால் தந்தி காலனி, 3-ஆம் மைல், தெற்கு வீரபாண்டியாபுரம், கோரம்பள்ளம், மாப்பிள்ளையூரணி என்று பல பகுதிகள் ஸ்டெர்லைட்டை எதிர்த்து தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 09.04.2018 அன்று தூத்துக்குடியில் அறிவிக்கப்படாத பேரணி – முற்றுகை – சாலை மறியல் நடைபெற்றது.

வழக்கமாக திங்கள் காலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெரும் மக்கள் குறைதீர்க்கும் நாளில் பல்வேறு கிராம மக்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக மனு கொடுக்க திரண்டிருந்தனர், ”ஏற்கனவே தரப்பட்ட மனுவின் மீதான நடவடிக்கை என்ன? எப்போது ஸ்டெர்லைட்டை மூடுவீர்கள்” என்று முழக்கமிட்டவாறு கேட்கத்துவங்கினர்.

மக்களின் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஓடி ஒளிந்துகொண்டார் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்.

இதுவரை மனு வாங்ககூட நேரம் ஒதுக்காமல், மக்களை நேரில் சந்திக்க அனுமதிக்காமல் அலைகழிப்பது. பெயருக்கு 2 பேரை அழைத்து மனுவை வாங்கிக் கொள்வது என செயல்பட்டுவரும் ஆட்சியரின் நடவடிக்கைகள் மீது வெறுப்படைந்திருந்த மக்களை இது மேலும் ஆத்திரத்துக்குள்ளாகியது.

ஆட்சியரின் இந்த அலட்சியப் போக்கிற்கு எதிராக தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், ஆயிரத்தும் அதிகமானோர் திரண்டு திருநெல்வேலி சாலையை மறித்து  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில், மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம் எடுத்து நடத்தி வருகிறது. மேலும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டமும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராடும் மக்களுக்கு உறுதுணையாக வழக்கறிஞர்களும் களத்திற்கு வந்து சேர்ந்தனர்.

ஏற்கனவே போராடும் மக்களுடன் மக்கள் உரிமை பாதுகாப்புமைய தோழர்களும், மக்கள் அதிகாரம் தோழர்களும் களத்தில் இணைந்துள்ளனர். இது ஆளும்வர்க்கங்களுக்கு பீதியுண்டாக்கியுள்ளது.

இவ்வாறு இப்போராட்டத்தின் பரிமாணம் விரிவடைந்து செல்வதை கண்டு பதறியடித்துக்கொண்டு வந்த ஆட்சியர் வெங்கடேசன் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

போராட்டக் களத்தில் இருந்த பெண்கள் “இதுவும் தலைக்கு வெச்சு தூங்கத்தான் போகும்” என்று தங்கள் அனுபவத்தில் இருந்து நேரடியாக விமர்சித்தனர். பதில் சொல் “மூடுவியா – மூடமாட்டியா?” என்று கொதித்துக் கேட்டனர்.

முதல்முறை கலெக்டரை வெளியே வரவழைத்த இப்போராட்டதில் இருந்து, இது போன்ற போராட்டங்கள்தான் பிரச்சினைகளுக்கு தீர்வு என்பதை உணர்ந்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
தூத்துக்குடி.

திருச்சி இந்தி பிரச்சார சபா முற்றுகை ! மக்கள் அதிகாரம் தோழர்கள் சிறையிலடைப்பு !

1

திருச்சி ’இந்தி பிரச்சார சபா’ முற்றுகை – மோடி படம் எரிப்பு – பிஜேபி கொடி எரிப்பு – ஹிந்தி எழுத்துக்கள் அழிப்பு

“காவிரியைத் தடுக்கும் டெல்லியின் அதிகாரத்தை முடக்கு” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம், திருச்சி மண்டலத்தின் சார்பில் இன்று (07.04.2018) காலை 11 மணியளவில் இந்தி பிரச்சார சபா முற்றுகையிடப்பட்டது. முன்னதாக திருச்சி முழுவதும் பரவலாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதனால் அப்பகுதியில் காலை முதலே, நூற்றுக்கணக்கான போலீசை குவித்து பரபரப்பை ஏற்படுத்தியது அரசு.

பறையிசை, முழக்கங்களுடன் பேரணியாக வரும் வழியில் தோழர்களை போலீசு தடுத்து நிறுத்தியதால், அங்கேயே போராட்டம் நடத்தப்பட்டது. மோடியின் படத்தையும், பிஜேபி-யின் கொடியையும் எரிப்பதற்காக வெளியில் எடுத்ததை பார்த்தவுடன், அதிர்ச்சியடைந்த போலீசு பாய்ந்து பிடுங்க முயற்சித்தது. அதையும் மீறி, மோடியின் படத்தை செருப்பைக் கொண்டு அடித்ததுடன், எரிக்கவும் செய்தனர்.

தன் எஜமானின் படத்தை கிழித்ததைக் கண்டு ஆத்திரமடைந்த போலீசு, மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் உள்ளிட்டு அனைத்து தோழர்களையும் அடித்து தர தரவென இழுத்து கைது செய்தது.

ஹிந்தியின் மீது அடிக்கப்பட்ட கருப்பு மை

காவல்துறை, தோழர்களை வன்முறையாக கைது செய்து கொண்டிருந்த சூழலில், ஏற்கனவே திட்டமிட்டபடி இரண்டு தோழர்கள் பாலத்தின் மீதிருந்தபடி இந்தி பிரச்சார சபாவின் போர்டின் மீது கருப்பு மையை அடித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

கீழே இருந்த மற்றொரு போர்டில் கருப்பு மை அடிக்க முயற்சித்த போது காவல்துறை தடுத்து நிறுத்தியதால் தோழர் சரவணன் தடுப்பு சுவர் மீது ஏறி போர்டை கிழித்து எறிந்தார். அதை பார்த்த இளைஞர்கள் விசில் அடித்தும், கை தட்டியும் ஆரவாரம் செய்தனர். இதைக் கண்டு பொறுக்காத அடிமை எடப்பாடியின் எடுபிடி போலீசு, அவரைக் கீழே தள்ளி, அடித்து – உதைத்து சித்ரவதை செய்தனர்.

இதைக் கண்ட பொதுமக்கள் “ அவரை அடிக்காதே, அடிக்காதே ” எனக் கத்தினர். இதனிடையே பத்திரிக்கையாளர்களுக்கும், காவல்துறைக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல் செய்தனர். ஹிந்தி எழுத்துக்களை அழித்ததை, பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்ததால் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. “இவங்க செய்வாங்கன்னு எதிர்பார்த்தோம். அதே மாதிரி செஞ்சிட்டாங்க” என போலீசுகாரர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க, அவற்றின் மீது அழுத்தவும்)

போராட்டத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 80-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.  அனைவரின் மீதும் கடுமையான தாக்குதலை நடத்தி கைது செய்தது போலீசு. டில்லியின் அடிமை எடப்பாடி அரசின் உத்தரவின் பேரில், கைது போராட்டத்தில் பங்கெடுத்த அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியிருக்கிறது போலீசு. அனைவர் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்குப் போட்டு சிறையில் அடைக்கத் துடிக்கிறது எடப்பாடி அரசு. தோழர்களோ சிறைக்கு அஞ்சாமல் தமது போராட்டத்தை தொடர்கின்றனர். கடைசிச் செய்தியின் படி 13 தோழர்களை ( 11 ஆண், 2 பெண்) சிறையில் அடைத்திருக்கின்றனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி மண்டலம்.

அரசியல் அனாதையல்ல தமிழகம் ! காவிரி போராட்ட செய்திகள் !

0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 05-04-2018 அன்று தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை உள்ளிட்ட வியாபாரிகள் சங்கமும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். இந்தப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் கலந்து கொண்டது.

நேற்று நடைபெற்ற பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததுடன், தமிழகம் தழுவிய அளவில் பரவலாக சாலைமறியல், ஆர்ப்பாட்டம், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்கள் என தமிழகமே போர்க்கோலம் பூண்டது. இதில் மக்கள் அதிகாரம் பங்கேற்றதோடு, சென்னை மெரினாவை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தியது. சென்னை மட்டுமல்லாது, தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் மற்றும் ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு., பெ.வி.மு. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டப் பதிவுகளை இங்கே தொகுத்து தருகிறோம்.

விருத்தாச்சலம்

மக்கள் அதிகாரம் விருதை வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். அனைத்து கட்சிகளுடன் இணைந்து சாலை மறியல் போராட்டம் நடத்தியதோடு பேருந்து நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.

***

உடுமலைப்பேட்டை

***

சிதம்பரம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின்  விருதை – சிதம்பரம் செயலாளர் தோழர் மணியரசன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்திய மாணவர் சங்கத்தை சார்ந்த மாணவர்கள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.

***

மோடியா நாமளா ரெண்டுல ஒண்ணு பாப்போம் ! மக்கள் கருத்து – படங்கள் !

0

காவிரி உரிமைக்காக நேற்று 05.04.2018 நடந்த வேலை நிறுத்தத்தை ஒட்டி சென்னை செனாய் நகர மக்கள் என்ன கருதுகிறார்கள்? வினவு செய்தியாளர்கள் நடத்திய நேர்காணல்!

ராஜேஸ்வரி, குப்பம்மாள் – பாதையோர வியாபாரிகள், சொந்த ஊர் செய்யாறு.
மெட்ராஸ் வந்து பல வருசமாயிருச்சு. காய்கறி மார்கெட்டிலிருந்து தள்ளு (கழிவு) காயி வாங்கி வந்து கூறுகட்டி விப்போம். ஒரு நாளைக்கு 100, 150 ரூபாய் கிடைப்பதே கஷ்டம். இன்னிக்கு அதுகூட இல்ல. எங்களுக்கு வியாபாரம் போனாலும் பரவாயில்லை. காவிரிக்காக போராட்டம் நடத்துறது சரிதானே. நமக்கெல்லாம் சோறு போடுறது அந்த விவசாயிங்கதானே?

அம்பிகா.
மோடி ஆட்சியில ஒவ்வொரு பிரச்சினையா வருது. பணம் செல்லாதுன்னு சொன்னப்போ, இருந்த வியாபாரமும் போச்சு. இப்ப தண்ணியும் இல்லங்கிறாய்ங்க. இனி, எங்கேதான் போறதுன்னே தெரியல.

கண்ணதாசன், லோடு ஆட்டோ உரிமையாளர், புல்லா அவென்யூ, செனாய் நகர், சென்னை.
மக்களுக்குத்தானே அரசு, கோர்ட், ஆட்சி. ஆனா, இப்ப எதுவுமே நமக்கு இல்லன்னு ஆச்சு. தமிழ்நாட்டுலதான் மருத்துவ படிப்புக்கான சீட்டு நிறைய. அதை “நீட்”ட காமிச்சி புடுங்கிக்கிட்டானுக. மோடி கட்சிக்காரனுங்க தமிழ்நாடு வேலைக்காகாதுன்னு தெரிஞ்சிக்குனானுங்க. அதனால, ஒவ்வொன்னா கைவச்சி, கடைசியில காவிரியையும் புடுங்கப் பாக்குறாணுக. நாம விடக்கூடாது. விவசாயி இல்லேன்னா சாப்பிட முடியுமா? அதனால போராட்டம்தான் ஒரே வழி. மோடியா நாமளா ரெண்டுல ஒண்ணு பாத்துடுவோம்.

பிரதீப், ஐ.டி துறை ஊழியர்.
யாருகிட்டயும் ஒற்றுமையில்ல சார். இப்பகூட தனித்தனியா போராடிக்கிட்டிருக்காங்க. இது வேஸ்டு. ஒரு நாளு ஆளும் கட்சி உண்ணாவிரதம், இன்னொரு நாளு எதிர்க்கட்சிங்க ரயில் மறியல் – கடையடைப்பு. தனித்தனியா போராடுறத விட்டுட்டு, கட்சி பாகுபாடு இல்லாம ஒற்றுமையா இருந்து போராடுனாதான் சார் சாதிக்க முடியும்.

பிரசாந்த், அரியலுர்
நாங்க 4 பேரு சென்னைய சுத்திப் பார்க்கலாமுன்னு வந்தோம். எனக்கு தெரிஞ்சே எங்க ஊருல 40 அடியில இருந்த தண்ணி இப்ப 400 அடியிலயும் காணல. அங்க பொழைக்க வழியுமில்ல. போராட்டம் தேவை. போராடுனாத்தான் விவசாயிங்க பொழைக்க முடியும்.

எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் செனாய் நகர் புல்லா அவென்யூ மார்க்கெட் பகுதி.

நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்

இந்தியா யாரு நம்மள கட்டுப்படுத்த ? மக்கள் கருத்து – படங்கள் !

0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத டெல்லி மோடி அரசுக்கு எதிராக திரண்டெழுந்த தமிழகம். சென்னை கோயம்பேட்டில் மக்கள் கருத்து:

சென்னை கோயம்பேடு மைய பேருந்து நிலையம்,  பிரிபெய்டு ஆட்டோ நிறுத்தம்.

அங்கு 430-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தக் காட்சி.

சுரேஷ், சந்திரபோஸ், மாசிலாமணி, பொன்னுசாமி ஆட்டோ ஓட்டுநர்கள்:

விவசாயிகளுக்கு வாழ்வாதாரமே போய்விட்ட பிறகு ஒரு நாள் போராட்டம் பண்ணுறது பெரிய விசயம் இல்லை. மோடி அரசுக்கு காது கேக்காது என்பது எங்களுக்குத் தெரியும். இதோட விடமாட்டோம். எச்.ராஜா, தமிழிசை தமிழருங்கன்னு சொல்றதுக்கே எங்களுக்கு வெட்கமா இருக்கு.

சசிக்குமார், அரசு பேருந்து நடத்துனர்.

காவிரி போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்கணுங்கறதுல எங்களுக்கும் ஆசைதான். ஆனால், ஏற்கெனவே நாங்க போராடுனப்ப 8 நாளு சம்பளம் புடிச்சிட்டாங்க. அதைப் பத்தி யாரும் வாய் திறக்கல.நேத்துகூட யாரும் லீவு எடுக்கக் கூடாதுன்னு வாய்வழி உத்தரவு போட்டாங்க. அப்படி லீவு எடுத்தா சம்பளம், இன்கிரிமென்ட் கட் பண்ணுவோமுன்னு அதிகாரிங்க சொல்றாங்க. என்ன பண்ணுறது. ஆனா, பயணிங்க இல்லாமதான் வண்டி ஓட்டுறோம்.

சாய், அரவிந்த் – சென்னை மீனாட்சி  பொறியியல் கல்லூரி மாணவர்கள்.

போராட  வேணான்னு பி.ஜே.பி காரங்க சொல்றது ரொம்ப தப்பு. போராடும் போதே நம்ம பிரச்சினையை காதுல வாங்க மாட்டேங்குறாங்க. இந்த மாதிரி போராட்டம் பண்ணலேன்னா மத்திய பி.ஜே.பி அரசு  அப்படியே ஆஃப் பண்ணிருவாங்க.

நாகராஜ், சுந்தர் – தச்சு தொழிலாளிகள்.

விவசாயிகள் போராட்டத்துக்கு உண்ணாவிரதம் இருக்குறோமுன்னு அ.தி.மு.க காரங்க ஏமாத்துனாங்க. நிறைய எம்.பி.க்களை கையில வச்சிக்கிறவங்க மோடியை பணிய வைக்க முடியாதா? இவ்வளவு நாளா விவசாயிங்கள பாக்கக் கூட மோடிக்கு நேரமில்ல! அவரு வந்து இந்தப் பிரச்சினையை தீர்த்திடுவாருன்னு எப்படி நம்பச் சொல்றாங்க?

தமிழ்நாட்டுக்கு இது வாழ்வா சாவா பிரச்சினை. அண்ணா தி.மு.க. கட்சித் தலைவனுங்கல்லாம் பதவியை காப்பாத்திக்கிறதுக்குதான் இருக்குறாங்க. நாம போராடுறதுதான் சரியான வழி.

மழுவேந்தி, அண்ணாதுரை – தி.மு.க தொழிற்சங்கம்.

அண்ணா தி.மு.க. காரங்க உண்ணாவிரதம் இருக்குறோமுன்னு உப்புசப்பில்லாத பிரச்சினையா ஆக்கிட்டாங்க. ஆனால், மக்கள் போராட்டத்தால்தான் பிரச்சினையே வெளியே வந்திருக்கு. இதபாருங்க ரெகுலரா ஒரு ட்ரிப்புக்கு 800 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரைக்கும் கலெக்சன் ஆகும். ஆனால், இன்னிக்கு 200 ரூபாய்தான் வந்திருக்கு. நாங்க பயந்துகிட்டே வேலைக்கு வந்திருக்கோம். ஜனங்க பயப்படாம போராடிகிட்டுதான் இருக்காங்க.

சாஜன், அரசுப் பேருந்து நடத்துனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி ஜனங்களெல்லாம் சேர்ந்தா நாங்களும் வந்துதான் ஆகணும்.

நவீன், சுடலைக்குமார், மருந்து விற்பனை பிரதிநிதிகள்.

நீட், காவிரி, ஸ்டெர்லைட், நியூட்ரினோ – இப்படி எந்த பிரச்சினையையும் மத்திய அரசு தீர்க்கல. இந்தியா யாரு நம்மள கட்டுப்படுத்த? நம்ம பிரச்சினைய நாமளே பாத்துக்கலாம். தமிழ்நாடு தனியா போறது தப்பில்ல.

வெறிச்சோடி கிடக்கும் கோயம்பேடு மார்கெட் சாலை.

நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்

காவிரியை தடுக்கும் டெல்லியை முடக்கு ! போராட்டச் செய்தி – படங்கள்

3

04.04.2018

பத்திரிக்கை செய்தி
மத்திய அரசின் செயல்பாடுகளை முடக்கும்
மக்கள் எழுச்சி
யை தமிழகத்தில் உருவாக்குவோம்!

காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் உச்ச நீதி மன்றம் கொடுத்த இறுதித் தீர்ப்பு, தமிழர்கள் மீது தில்லி தொடுத்துள்ள போர்தான். எந்த சட்ட நியதிகளுக்கும், மரபுகளுக்கும் மதிப்பளிக்காமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கிறது மோடியின் அரசு. காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக, டம்மியான ஓர் அமைப்பை அமைக்கப் பார்க்கிறது. அதையும் இப்போது அமைத்தால் கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும் என்று முடக்குகிறது. ”சட்டம் ஒழுங்கைக் காக்க முடியா விட்டால் பதவி விலகு” என்று நீதிபதிகள் சொல்லவில்லை. அதை ஆமோதிப்பது போல் நடந்து கொள்கிறார்கள். ஆக, தமிழக உரிமைகளை நசுக்குவதில் நீதித்துறையும், மோடி அரசும் கூட்டாளிகளாகவே செயல்படுகின்றன. தமிழகத்தின் மீது டெல்லி கொண்டுள்ள இந்த வஞ்சத்திற்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள், கட்சிகள் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

தில்லிக்கு எதிராக தமிழகத்தில் எழுந்திருக்கும் எல்லா போராட்டங்களும் தில்லியின் அதிகாரத்தை முடக்கும் வகையில் இருக்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களை செயல்படாமல் முடக்குவது, ரயிலில் டிக்கெட் எடுக்காமல் இருப்பது, சுங்க சாவடிகளில் வரி கொடுக்க மறுப்பது உள்ளிட்ட மத்திய அரசின் செயல்பாடுகளை முடக்கும் மக்கள் எழுச்சி தமிழகத்தில் உருவாக வேண்டும்.

காவிரி நீரில் தமிழகத்திற்குள்ள உரிமையை மறுக்கும் கர்நாடக மாநிலக் கட்சிகள்,  இயக்கங்கள் அனைத்தும் ஒரே குரலில் பேசுகின்றன. காவிரியில் எல்லா நியாயங்களையும் உரிமைகளையும் வைத்துள்ள நாம் ஏன் தனித்தனியே போராடிக் கொண்டிருக்க வேண்டும்? ஒரே அணியில் திரண்டு, தமிழகத்தின் மீது தில்லி தொடுத்திருக்கும் இந்தத் தாக்குதலை முறியடிக்க முன்வருமாறு கட்சிகளையும், தமிழ் மக்களையும் கேட்டுக் கொள்கிறோம். காவிரி உரிமை போராட்டங்கள் அனைத்தையும் மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் நடக்கும் தில்லிக்கு எதிரான போராட்டங்களையும் மக்கள் அதிகாரம் ஆதரிக்கின்றது. ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று காவிரிக்கான போராட்டங்கள் அனைத்திலும் மக்கள் சாதி, மதம், கட்சி வேறுபாடுகளைக் கடந்து பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தங்கள்
வழக்கறிஞர்.சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்

***

திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்கு துரோகமிழைத்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து தோழர் செழியன் தலைமையில் ம.க.இ.க தோழர் கோவன் மற்றும் செயலர் ஜீவா மற்றும் தோழர்கள், பெண்கள் குழந்தைகளுடன்  மறியலில் ஈடுபட்டனர். பு.ஜ.தொ.மு-வின் கிளைச் சங்கமான  ‘அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம்’ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசு, எடுபிடி இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அரசைக் கண்டித்து, தரைக்கடைகளில் கருப்புக் கொடி கட்டி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கக்கினர்  பந்தில் முழுமையாக பங்கேற்றுள்ளனர். மேலும் தி.மு.க மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தலைமைத் தபால் நிலையம் அருகே நடத்திய மறியல் போராட்டத்தில் தி.மு.க முன்னாள் அமைச்சர் நேரு உட்பட பலரும் கைதாகியுள்ளனர். மக்கள் அதிகாரம் மற்றும் தோழமை அமைப்பு தோழர்களும் மறியல் செய்து கைதாகியுள்ளனர்.
வேடிக்கை பார்க்கும் தமிழினமே வீதிக்கு வந்து போராடு !
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்
மக்கள் அதிகாரம்
திருச்சி
***

காவிரி பிரச்சனையை ஒட்டி ”காவிரியை தடுக்கும் டெல்லியை முடக்கு” என்ற தலைப்பில் குடந்தை வழக்கறிஞர் சங்கம் சார்பாக கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் இன்று (05/04/18) நடைப்பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
குடந்தை – 97892 61624

***

”காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும்” என்ற முழக்கத்தை முன்வைத்து அனைத்து கட்சியினர் சார்பாக கோத்தகிரியில் சாலை மறியல் இன்று (05.04.2018) நடத்தப்பட்டது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். சாலை மறியலில்  மக்கள் அதிகாரம் கோத்தகிரி ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் உரையாற்றினார். இதில் சுமார் 300 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
கோத்தகிரி

***

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்கு துரோகமிழைத்த மத்திய மோடி அரசையும், மாநில ஒபிஎஸ், ஈபிஎஸ் அரசையும் கண்டித்து  சென்னையில் மெரினா கடற்கரையில் மக்கள் அதிகார தோழர்கள் மறியலில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
சென்னை

***

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து  கோவையில் மக்கள் அதிகார தோழர்கள் 50க்கும் மேற்ப்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
கோவை.

***

காவிரி மேலண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தருமபுரியில் அனைத்து கட்சிகளுடன் மக்கள் அதிகாரம் இணைந்து இன்று (05-04-2018) தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று  இரயில் மறியல்  போராட்டம் நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி.

டெல்லியை முடக்குவோம்! காவிரி போராட்டச் செய்திகள் !

3

“காவிரியை மறுக்கும் டெல்லியின் அதிகாரத்தை முடக்கு!”  என்ற முழக்கத்தின் கீழ் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக காவிரியை மறுக்கும் பா.ஜ.க வை கண்டித்து கும்மிடிப்பூண்டி தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் கடந்த 03-04-2018 அன்று நடத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் தோழர் விகந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முற்றுகையில் ஈடுபட்ட தோழர்களைக் கைது செய்தது போலீசு.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
தொடர்புக்கு: 94444 61480

*****************

“டெல்லி அதிகாரத்தை முடக்கு” என்ற முழக்கத்தின் கீழ் கடந்த 04-04-2018 அன்று கடலூர் மக்கள் அதிகாரம் தோழர்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போராட்டம் மற்றும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

காலை 6.00 மணிக்கு விழுப்புரம் பேசஞ்சர் ரயிலில் கடலூர் மக்கள் அதிகாரம் தோழர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். “டெல்லி அதிகாரத்தை முடக்கு”, “டோல்கேட் கட்டணம் கட்டாதே”, “ரயிலில் கட்டணம் கட்டாதே” என்று பிரச்சாரத்தையும், டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.

நூற்றுக்கணக்கான இரயில்  பயணிகளிடையே இந்த போராட்ட வழிமுறை பெருத்த வரவேற்பை பெற்றது.  மாணவர்கள் சிலரும் தோழர்களுடன் இணைந்து கொண்டு பேசினார்கள்.  பொதுமக்களிடையே காவேரியில் உச்சநீதிமன்றத்தின் கேடுகேட்ட தீர்ப்பு என்பது தமிழகத்தின் டெல்டாவை பாலைவனமாக்கும் சதி.  மத்தியில் ஆளும் பா.ஜ.க. மோடி கும்பல் திட்டமிட்டு தமிழகத்தை கொலைவெறியோடு தாக்கி வருகிறது.

எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் போராடி வருகின்ற சூழ்நிலையில் கர்நாடக தேர்தலை முன்வைத்து தான் இப்படி தீர்ப்பளித்துள்ளதாக சொல்வது தவறு.  ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ், மீத்தேன், நிலக்கரிக்காக, அம்பானி, அதானி கொள்ளையடிக்க நாம் தண்ணீர் இல்லாமல் சாக வேண்டுமா? இது விவசாயிகள் பிரச்சனை அல்ல.  தமிழினத்தின் மீதான தாக்குதல்.

நீட் திணிப்பு, இந்தி சமஸ்கிருத திணிப்பு, நியுட்ரினோ, ஸ்டெர்லைட், நெடுவாசல், காவேரி தடுப்பு என்று தமிழகத்தையே மரண பூமியாக மாற்றுகிறது மத்திய அரசு. டெல்லியோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.  தமிழக மக்களே களம் இறங்கி போராடுங்கள்! மக்கள் அதிகாரத்தோடு வாருங்கள் என அறைகூவல் விடுக்கப்பட்டது.

விழுப்புரம் முதல் மயிலாடுதுறை வரை மற்றும் மயிலாடுதுறை முதல் விழுப்புரம் வரை ரயிலில் பிரச்சாரம் செய்யப்பட்டது.  கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் ரயில் நிலையத்தில் இடைமறித்த ரயில்வே அதிகாரிகள் டிக்கெட் எடுக்காதது தவறு என எழுதிக் கொடுக்குமாறு கேட்டனர். ” நாங்கள் எழுதி கொடுக்க மாட்டோம், உங்களுக்கு ஒத்துழைக்க மாட்டோம் இது எங்கள் போராட்ட முறை.  நீங்கள் வழக்கு போடுங்கள், காவல் நிலையமானாலும், ரயில் நிலையமானாலும், நீதிமன்றமானலும், சிறையானாலும் நாங்கள் இந்த அரசியலைதான் பேசுவோம்” என்று தொடர்ச்சியாக முழக்கமிட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.  கூட்டம் கூடியது.  ரயில்வே போலிசார் வந்தார்கள். பின்னர் தமிழ்நாடு போலிசுகாரர்கள் வந்தார்கள்.

ஒரு கட்டத்தில் போன் அலைபேசியில் யாரிடமோ பேசிவிட்டு, தோழர்களைக்கைது செய்யாமல் விட்டுவிட்டுச் சென்றது போலீசு. தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் மத்திய அரசுக்கு எந்த ஒத்துழைப்பும் கொடுக்க கூடாது என்று பேருந்துகள், ரயில்கள், பொது இடங்களில் மக்கள் அதிகாரம் தொண்டர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தகவல்:

மக்கள் அதிகாரம்
கடலூர்.

*******

சென்னை ஆவடியில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் இரயில் மறியல் போராட்டம் இன்று (05-04-2018) நடத்தப்பட்டது. மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் அப்பகுதி மக்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தகவல்:

மக்கள் அதிகாரம்,
சென்னை.

காவிரி : எந்தப் போராட்டம் வெற்றியடையும் ? கருத்துக் கணிப்பு

3

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோமென உறுதியாக இருக்கும் மத்திய அரசை எதிர்த்து தமிழகமெங்கும் கடந்த ஒரு வாரமாக போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. தொலைக்காட்சி விவாதங்களுக்கு வரும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க நிலைய வித்வான்கள் தமிழகத்தின் எதிர்ப்பு குறித்து கொஞ்சம் கூட பயப்படுவதில்லை. முப்பதாண்டு வழக்கில் காவிரி உரிமை பறிபோனதற்கு காரணம் தாங்களல்ல, மற்ற கட்சிகள் என்று திசைதிருப்புவதிலேயே கவனமாக இருக்கின்றனர்.

உச்சநீதிமன்றமோ மோடி அரசின் சட்ட விளையாட்டிற்கு மனப்பூர்வமாக ஆதரவளித்து சேவைகள் பல செய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் எப்படி நடக்கவேண்டும், எது தீர்வைக் கொண்டு வருமெனக் கருதுகிறீர்கள்? வாக்களியுங்கள்!

காவிரிக்கான தமிழக மக்கள் போராட்டம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?
(மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்)

  • மத்திய அரசின் அதிகாரம் தமிழகத்தில் செல்லாது எனும் நிலையை உருவாக்குதல்.
  • பாரதிய ஜனதாக் கட்சி தமிழக மக்களால் தடை செய்யப்பட வேண்டும்.
  • எடப்பாடி அரசு, எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள் பதவி விலகச் செய்தல்.
  • மேலாண்மை வாரியம் அமையாத வரை உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்க மறுக்க வேண்டும்.
  • கமல், ரஜினி போன்ற கோழைகளை போராட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.

கள ஆய்வு : புதுச்சேரி எல் & டி ஆலையில் நவீன கொத்தடிமை தொழிலாளர்கள் !

0

சிய நாடுகளிலேயே முதன் முதலாக எட்டு மணி நேரவேலையை போராடி பெற்ற புதுச்சேரியில் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்று எப்படிப் பயணிக்கிறது? கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த அளவு பொறுப்புணர்வுடன் உள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு ஆய்வினை மேற்கொண்டோம்.

சேதராப்பட்டு தொழிற்பேட்டை பகுதியில் எல் & டி ஆலையில் தொழிலாளர்கள் போராடி வருவதைக் கண்டு அங்கு சென்றோம்.

இந்த தொழிற்பேட்டை பகுதியில் சுமார் 300 ஆலைகள் இயங்குகின்றன. எல் & டி போன்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் கணிசமான அளவில் உள்ளன.

இங்கு வேலையில் சேர்வதற்கான முதல் நிபந்தனையே 12 மணி நேரம் வேலை செய்வதற்கு தயார் என்றால் தான் வேலையே கிடைக்கும். 3 ஷிப்ட் என்பதெல்லாம் பொய்யாய், பழங்கனவாய்ப் போய் விட்டன. வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனம், நல்ல சம்பளம் கிடைக்கும் என நம்பி வேலையில் சேர்ந்தவர்களுக்கு முதல் பேரதிர்ச்சியே கேசுவல் தொழிலாளி (Casual Labour) என்பதுதான். அந்த கொடுப்பினை கூட இன்றைக்கு இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சி.எல். என சேர்த்தவர்கள் தற்போது ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணிக்கு சேர்க்கப்படுகின்றனர்.

12 மணி நேரம் வேலை செய்த 9 ஆண்டு அனுபவம் உள்ள, ஐடிஐ முடித்த ஒப்பந்தத் தொழிலாளி வாங்கிய கூலி 180 அல்லது 190 மட்டுமே. 4 மாதம் முன்பு வரை இதுதான் நிலைமை. 15 ஆண்டுகள் வேலை பார்த்த சிஎல் தொழிலாளி வாங்கிய கூலி இதிலிருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் அந்த சிஎல் தொழிலாளி தற்போது ஒப்பந்தத் தொழிலாளியாகி விட்டார். இந்த ரசவாதம் எப்போது நிகழ்ந்ததென அவருக்கே தெரியவில்லை.

இந்த பன்னாட்டு கார்ப்பரேட் ஆலையில் இ.எஸ்.ஐ., பிஎஃப் என்பதெல்லாம் இன்று தொழிலாளிக்குத் தெரியாது. அந்த சிஎல் தொழிலாளிக்கு ஆரம்பத்தில் இ.எஸ்.ஐ. அட்டை தரப்பட்டிருந்தது. நோய்வாய்ப்பட்டபோது அங்கு சென்று மருத்துவம் பார்த்து வந்துள்ளார். சமீபத்தில் அப்படி ஒரு நிலைமையில் அங்கு சென்ற போது உன்னுடைய ஒப்பந்ததாரர் உனக்கு இ.எஸ்.ஐ. பணம் செலுத்தவில்லை. எனவே உனக்கு இங்கு மருத்துவம் பார்க்க முடியாது என திருப்பி அனுப்பி விட்டனர்.

புதுச்சேரியில் அமைந்துள்ள எல் & டி ஆலை

நேராக வந்து நிர்வாகத்திடம் கேட்ட போதுதான் தான் ஒப்பந்தக் கூலியாக மாற்றப் பட்டதும் அந்த ஒப்பந்ததாரர் சேலம் இ.எஸ்.ஐ.யில் பணம் செலுத்துவதாகவும் அவருக்குத் தெரிய வந்துள்ளது. இனி அவர் மருத்துவம் பார்க்க வேண்டுமென்றால் ஒன்று சேலம் போகவேண்டும் அல்லது தனியார் மருத்துவரிடம் 250ரூ கொடுத்து, அவர் சொல்லும் மருந்துகளுக்கு மேற்கொண்டு 500, 700 என செலவளிக்க வேண்டும்.

2017 -ம் ஆண்டின் இடையில் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு கூலியை உடனே கொடு எனப் போராடினர். அப்போதைக்கு வேலை நடக்க வேண்டும் என உடனடியாக கூலியைக் கொடுத்த நிறுவனம் அடுத்த மாதத்திலிருந்தே வழக்கம் போல கூலி தராமல் இழுத்தடித்து எப்போதாவது கொடுப்பது என மீண்டும் தொடங்கினர். அதே நேரம் ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்துவது என தொடங்கினர். இதுவும் வழக்கமான ஒன்றுதான். தொடர்ந்து வேலை தரவில்லை எனில் கேள்வி கேட்கும் தொழிலாளர்களை இலக்கு வைத்து வேலையிலிருந்து நிறுத்தி நிலைமைக்கேற்ப ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது சில மாதங்கள் கழித்து மீண்டும் வேலைக்கு சேர்ப்பார்கள். ஆபத்தானவர்கள் என நிர்வாகம் கருதினால் அவர்களை மீண்டும் வேலையில் சேர்க்கவே மாட்டார்கள். 3 மாதம் பொறுத்திருந்த தொழிலாளர்கள் உடனடியாக AICCTU தொழிற் சங்கத்தைத் தொடங்கினர்.

சங்கத்தின் முதல் கோரிக்கையே கூலி உயர்வும் உரிய தேதியில் கூலி தர வேண்டும் என்பதும் தான். பல சுற்று பேச்சு வார்த்தைக்குப் பின் பத்து ஆண்டுகள் அனுபவம் உள்ள திறன் மிக்க ஒரு தொழிலாளிக்கு 8 மணி நேர வேலைக்கு 120ரூ கொடுத்தவர்கள் 180,190 என சற்றே உயர்த்தியுள்ளனர். ஆனால் அதே நேரம் சங்கம் வலுவாக உள்ள அலு ஃபார்ம் பிரிவிலிருந்த 147 தொழிலாளர்களையும் சிறுது சிறிதாக நிறுத்தி பிப்ரவரி இறுதிக்குள் மொத்தப் பேரையும் நிறுத்தி, அந்த பிரிவையே மூடிவிட்டனர். கடந்த ஒரு மாதமாக அந்தத் தொழிலாளர்கள், நிர்வாகத்தின் சட்ட விரோத வேலை நிறுத்தத்திற்கெதிராக ஆலை வாயில் முன் போராடி வருகின்றனர்.

தொழிற்துறையில் (தொழிலாளர் நலத் துறை என்ற பெயரையே அரசு மாற்றி விட்டது) முறையிட்டுள்ளனர். நிர்வாகம் இதுவரை பேச்சு வார்த்தை நடத்தக் கூட முன்வரவில்லை.
எல் & டி யின் கட்டுமானத்திற்கு தேவையான மர, அலுமினிய கருவிகளை உற்பத்தி செய்யும் ஆலையான இந்த ஆலை 1996 முதல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

  • அலு ஃபார்ம் I,
  • அலு ஃபார்ம் II,
  • உற்பத்திப் பிரிவு,
  • மர பிரிவு

என 4 பிரிவுகளைக் கொண்ட இந்த ஆலை கட்டுமானப் பணிகளுக்கான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த 4 பிரிவுகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள் திறன் மிக்க தொழிலாளர்களே. இவர்களின் உழைப்பு இல்லாமல் இந்த ஆலையில் உற்பத்தியே நடக்காது. ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, +2 என கல்வித் தகுதியுடன் தான் ஆகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு சிலர் மட்டுமே பத்தாவது படித்து வேலை பழகி அவர்களும் திறன்மிக்க, அனுபவம் மிக்கவர்களாக உள்ளனர்.

சுமார் 600 பேர் வேலை செய்யும் இந்த ஆலையில் 5 பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்கள். மற்றவர்கள் அனைவருமே எந்நேரமும் நிறுத்தப்படும் நிலைமையில் உள்ள சிஎல், தினக் கூலி அல்லது ஒப்பந்தத் தொழிலாளிகள். ஆனால் இவர்களது உழைப்பு இல்லாமல் ஆலையில் எந்தப் பொருளும் உற்பத்தி ஆகாது.

சம வேலைக்கு சம ஊதியம் என சட்டம் சொல்கிறது. ஆனால் இங்கு 8 மணி நேரம் வேலை செய்யும் நிரந்தரத் தொழிலாளிக்கு மாதத்திற்கு 35,000 -க்கு மேல் கூலி வழங்கும் நிர்வாகம் 12 மணி நேரம் அதே வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளிக்கு 180 முதல் 350 வரை தினக்கூலி தருகிறது. தினமும் 12 மணி நேரம் வேலை செய்வதாக கணக்கிட்டாலும் அதிக பட்ச மாதச் சம்பளம் ரூ. 10,000 -த்தைத் தாண்டாது. 12 மணி நேரத்தையும் தாண்டி கூடுதலாக ஓவர் டைம் வேலை செய்தால் மட்டுமே ஒரு கவுரவமான வாழ்க்கை நடத்துமளவு கூலி வாங்க முடியும்.

ஓவர் டைம் என்பது 4 மணி நேரமாயிருக்கலாம் அல்லது அடுத்த 12 மணி நேரமாகவும் இருக்கலாம் மறுநாளுக்கான ஷிஃப்ட்ஐ அவரே செய்ய வேண்டும் என்பதால் அடுத்த நாள் பகல் ஷிஃப்ட் 12 மணி நேரமாகவும் இருக்கலாம். இப்படி 36 மணி நேரம் வேலை வங்கும் நிர்வாகம் அந்தத் தொழிலாளிக்குத் தருவது மிக மிக அற்பக் கூலியே.

ஓவர் டைம் செய்தால் இரு மடங்கு கூலி தர வேண்டும் என சட்டம் சொல்கிறது. கார்பரேட்டுகளும் முதலாளிகளும் எந்த சட்டத்தை மதிக்கிறார்கள்? தொழிலாளர் ஆய்வாளருக்கு இது தெரிந்தேதான் இந்த சட்டம் கேலிக்கூத்தான ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறது.

சராசரியாக ஒரு தொழிலாளி, அவரது மனைவி, இரு குழந்தைகள் கொண்ட குடும்பம் என எடுத்துக் கொண்டால் இன்றைய நிலைமையில் ஒரு மாத செலவு எவ்வளவு என கேட்ட போது தொழிலாளிகள் கூறியது: மிக மிக குறைந்த வீட்டு வாடகை ரூ. 2000. மின்கட்டணம், தண்ணீருக்கு ரூ.500. 10-க்கு 15 அடி கொண்ட ஒரு அறைதான் இது. இதன் ஒரு மூலையில் மேடை போல ஒரு ஏற்பாடு செய்து கொண்டு அடுப்பு வைத்துக் கொள்ள வேண்டும். சமையலறை, வரவேற்பறை, படிப்பறை, படுக்கையறை எல்லாமும் இது ஒன்றுதான். இந்த வீடும் முதன்மைச் சாலையை விட்டு உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் தான் கிடைக்கும்.

அந்த ஊரில் ஆரம்பப் பள்ளி தவிர ஏதும் இருக்காது. உயர்நிலைப் பள்ளி என்றால் தூரமாகப் போகவேண்டும். வேலை நிலைமைகளில் கொண்டு சென்று விட வாய்ப்புகள் மிகக் குறைவு. தனியார் பள்ளி என்றால் கல்வியும் தரமாயிருக்கும், பள்ளிக்கூட வேனிலேயே அவன் வந்து அழைத்துச் சென்று விடுவான். சிக்கல் இல்லை என தனியார் பள்ளியிலேயே குழந்தைகளைச் சேர்க்கின்றனர். ஒரு குழந்தையின் ஒரு மாதப் படிப்புச் செலவு மட்டும் போக்குவரத்து, கல்விக் கட்டணம் உட்பட ரூ.4000. 2 குழந்தைகளின் படிப்புச் செலவு என்றால் ரூ. 8000 ஆகிவிடும். 4 பேருக்கான உணவு செலவு மட்டும் ரூ.3500 ஆகும். இதுவே ரேசன் அரிசியும் குருனை அரிசியும் என கலந்து செய்வதால்தான். மருத்துவச் செலவு மாதத்திற்கு சராசரியாக ஆயிரம் வரை ஆகும். இங்கு எரிவாயு உருளை வெளிச் சந்தையில்தான் வாங்க வேண்டும்: அதற்கு மாதம் 1500 ஆகும். மொத்தமாகப் பார்த்தால் 12,500 முதல் 16,500 வரை ஆகும். இது மிக மிகக் குறைவாகப் போடும் கணக்கு.

வெளியூர் தொழிலாளி என்றால் மாதம் ஒரு முறையாவது ஊருக்குப் போகும் செலவு வரும். அருகாமை என்றால் ரூ. 500-ம் தூரமான ஊர் என்றால் ரூ. 1000 -ம் வரையும் ஆகும். பேருந்துக் கட்டணம் கூடிய பின் ஊர் போவது பற்றி யோசிக்கின்றனர். ஆக கார்ப்பரேட் கம்பனியில் வேலை செய்வதாக பேரு. நல்லது கெட்டதுக்கு ஊருக்குக் கூடப் போக முடியாத அவலத்தில் வாழ்க்கை.

இப்படி நொந்து, நொம்பலப்பட்டு தினம்தினம் செத்து மடிவதற்கு பதில் ஊருக்குப் போய்விடலாமா என்றால் அங்கு ஒன்றுமேயில்லை. காவிரியின் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வந்து ஆண்டுகள் பல ஓடிவிட்டன. விவசாயமே இல்லை. ITI முடித்து விவசாய வேலையும் இல்லாமல் டீக்கடையில் வேலை பார்த்த இளைஞர் ஒருவர் எல் & டியில் வேலை என விண்ணப்பிக்க, வேலைக்கு எடுத்த நிர்வாகம் பயிற்சியும் தந்து ஒப்பந்தத் தொழிலாளியாகச் சேர்த்துள்ளது. கொஞ்ச காலம் கழித்து நிரந்தரமாக்குவார்கள் என நம்பி, திருமணமும் செய்து கொண்ட அந்த இளைஞர் இன்று தெருவில் நிற்கிறார்.

ஆலையின் அருகில் உள்ள இளைஞர்களோ, “சிறப்புப் பொருளாதார மண்டலம் வருகிறது. நிலம் கொடுத்தால் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையும் கிடைக்கும் என புதுச்சேரி அரசு சொன்னதை நம்பி 14 ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தைக் கொடுத்து விட்டோம். இன்று வரை சிறப்புப் பொருளாதார மண்டலமும் வரவில்லை. அரசு வேலையும் இல்லை. நிலத்தைக் கொடுத்து விட்டதால் விவசாயமும் இல்லை. வேறு வழியின்றி ஆலையில் வேலைக்குச் சேர்ந்தோம். 10,12 ஆண்டுகள் ஆகிவிட்டன. எங்களுக்கு சொந்த வீடு என்பதால் வாடகையில்லை. மற்றபடி எல்லா செலவுகளும் எங்களுக்கும் உண்டு. முன்பு சொந்த நிலத்தில் வேலை செய்தோம். இன்று அடிமைகளாக உழல்கிறோம்” என போராட்டத்தில் குதித்துள்ளனர்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக திறன் மிக்க தொழிலாளியாய் உள்ளவரின் நிலைமையும் இதேதான்.

அதில் ஒரு தொழிலாளி சொல்கிறார்; “ 15 ஆண்டுக்கும் மேலாகிறது. இந்த ஓட்ட டிவிஎஸ்50 வண்டியை மாற்ற வக்கில்லை. ஊருக்குள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள்” என நொந்து போய் சொல்கிறார். 16 வருடமாக வேலை செய்யும் ஒரு தொழிலாளிக்கு இன்று இரு வருடமாக இ.எஸ்.ஐ. கிடையாது. பி.எஃப். 70,000ரூ இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை.

2014 வரை நிர்வாகம் தனது சி.எல்., ஒப்பந்தத் தொழிலாளிகள் யாருக்கும் போனசே கொடுத்ததில்லை. தொழிலாளர்கள் தொடர்ந்து நிர்ப்பந்தித்ததன் பின் 1200 – 1500 கொடுத்துள்ளனர். 2017-ல் சங்கம் கட்டிய பின் பேச்சு வார்த்தை நடத்திய நிர்வாகம் அடாவடியாக 8.33% தான் கொடுப்பேன் என போனசு கொடுத்துள்ளது. ஆனால் நிரந்தரத் தொழிலாளிக்கு இந்த ஆண்டு 20% போனசு கொடுத்துள்ளது. ஆனால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளியை விட ஒன்றரை மடங்கு அதிகமாக உற்பத்தி கொடுக்க வேண்டும். அப்படி தரவில்லை என்றால் வேலையிலிருந்து விரட்டி விடுவார்கள்.

கடந்த 20 ஆண்டில் மட்டும் இப்படி விரட்டப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,000 என நிர்வாகமே கூறுகிறது. அலு ஃபார்ம் தொழிலாளிகளை சங்கம் வைத்ததற்கு வேலையிலிருந்து நிறுத்தியதால் அந்தத் தொழிலாளர்கள் தொழிலாளர் வாரியத்தில் முறையிட்டபோது நிர்வாகத்தின் வாக்கு மூலமாக “ 20 ஆண்டுகளில் 10,000 பேரை நிறுத்தியுள்ளோம். அவர்களும் வந்து வேலை கொடு எனக் கேட்டால் வேலை தர முடியுமா?” என நிர்வாகம் ரைட் ராயலாக சட்டம் பேச தொழிலாளர் அதிகாரியோ இதை அங்கீகரித்து புன்முறுவல் பூத்து நிர்வாகத்தின் கைகூலிகள் தான் என நிரூபித்துள்ளனர்.

உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் கதியே இதுதான் என்றால் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் கதி என்னவாயிருக்கும்? அப்படி வந்த பெண்களிடம் பேசிய போது: “2009-ம் ஆண்டிலிருந்து வேலை செய்யறம். மொத 3 வருசத்துக்கு 8 மணி நேரம் வேலை செஞ்சா கூலியா 50 ரூபா தந்தாங்க. பொறவு அடுத்த 3 வருசத்துக்கு கூலி 120 ரூவான்னு நிர்வாகம் சொல்லிச்சு. ஆனா ஒப்பந்தகாரரு இந்தக் கூலியை ஒரு வருசங் கழிச்சிதான் தந்தாரு. அதுவரைக்கும் பழைய 50-ததான் தந்தார். நாங்க கேட்டால் அதை மதிக்கிறதேயில்லை. நிர்வாகமும் கண்டுக்குறதில்ல. அடுத்த மூனு வருசங் கழிச்சி நிர்வாகம் கூலி 140-ன்னு சொல்லிச்சு. வழக்கம் போல ஒப்பந்தக்காரரு ஒரு வருசத்துக்கு பழைய 120 கூலிதான் கொடுத்தார். சங்கம் வச்ச பொறவு 258 என கூலி கூடுனாலும் பிடிச்சம் போக கையில் கெடைக்றது 210 தான்.

மாதிரி படம்

ESI, PF பிடிக்கிறதா சொல்றாங்க. ஆனா ESI ஆஸ்பத்திரிக்குப் போனப்ப உங்களுக்கு இல்லைன்னு சொல்லிட்டாங்க. நிர்வாகத்துகிட்ட கேட்டப்ப ஒப்பந்தக்காரரக் கேளுன்ட்டாங்க. அவரோ ஒங்களுக்கு சேலத்தில்தான் ஆஸ்பத்திரி என சொல்லிட்டாரு. பி.எஃப். பத்தி கேட்டப்போ கட்றோம்னு சொல்றாங்க. அதுக்கு எந்த ஆதாரமும் எங்ககிட்ட இல்ல. இப்ப 2009 -லிருந்து 27 பேர் வேலை செய்யரம். அதுக்கு முன்னாடி 10 வருசமா வேல செஞ்ச 49 பேர நிறுத்திட்டுதான் எங்க 27 பேர வேலைக்கு எடுத்தாங்க. இன்னிக்கு பாதிப் பேருக்கு வேலைன்னா மறுநா அடுத்த பாதிப் பேருக்கு வேலன்னு மாசத்துல பாதி நா…தான் வேலை கெடைக்கும். ஊருக்குள்ள நெலத்தயெல்லாம் அரசாங்கத்துக்கு கொடுத்துட்டதால அங்க எந்த வேலயுமில்லனுதான் கம்பெனிக்கு வந்தம்.”

“இங்க நிக்கவிடாம வேல வாங்குறாங்க. சீக்கிரமா மிசினு பக்கம் கூட்டி முடிச்சுட்டம்னா மரம் வெட்டு, புல்லு வெட்டுன்னு சொல்றது மட்டுமில்லாம கக்கூசு கூட கழுவச் சொல்வாங்க. செய்யலன்ன வேலைய விட்டு தொரத்திடுவாங்க. இப்ப ஒரு 3 வருசமாத்தான் போனசுன்னு 1500 ரூபா கொடுத்தாங்க. அதுக்கு முன்னாடி பைசா… கெடையாது. இப்ப சங்கம் வச்ச பின்னாடி இந்த வருசம் 6000ரூ போனசு கெடச்சது.”

“3000 -க்குள்ள சம்பளம் வாங்கி எப்படி குடும்பம் நடக்குதுன்னு கேக்கறீங்களா? ஏதோ ரேசன்ல போட்ற அரிசிய வச்சி கஞ்சி வச்சி காலத்த ஓட்றம். இப்ப இங்க ரேசன்ல அரிசி போடாததால தமிழ்நாட்லருந்து காசு கொடுத்து வாங்கறம். பிள்ளங்களயெல்லாம் அரசாங்கப் பள்ளிகூடத்துல விட்ருக்கம். ஊருக்குள்ள அரசாங்கம் தந்த சொந்த வீடு. இப்ப இந்தக் கஞ்சிக்கும் கேடு வரும் போலருக்கு. 10 பேர வேலயவிட்டு நிறுத்தரதா சொல்லிட்ருக்காங்க… சங்கத்துல சொல்லியிக்கம்” என தங்களின் வேதனைகளை பகிர்ந்து கொண்டதோடு போராடிப் பார்ப்பது என உறுதியுடன் உள்ளனர். இந்தப் பெண்களில் சிலரது கணவன்மார்கள் டாஸ்மாக் புண்ணியத்தில் குடும்பத்தை சீரழித்து வருவதாக வேதனையுடன் கூறினர்.

ஒப்பந்த தொழிலாளியாக இங்கே வேலைக்கு வந்து கருங்காலிகளாக நிர்வாகத்துக்கு சேவை செய்து அதற்கான பரிசு போல அதிகாரிகளின் பினாமிகளாக உள்ளவர்கள்தான் தற்போதைய ஒப்பந்தகாரர்கள். யாரிடமும் லைசன்ஸ் கிடையாது. 2011 -ல் தொடர்ச்சியாக 4 ஒப்பந்தக்காரர்கள் சம்பளம் தராமலே ஓடிவிட்டனர். நிர்வாகமும் கைவிரித்து விட்டனர். ஒப்பந்தக் கூலிகளாக சேர்ந்தால் முதல் மாதம் சம்பளம் தரமாட்டார்கள். 2-வது மாதத்திலிருந்துதான் சம்பளம் கிடைக்கும். இதையெல்லாம் கேட்டால் வேலையிலிருந்து விரட்டிவிடுவார்கள்.

இந்தப் போராட்டத்தைக் கூட கொச்சைப் படுத்தும் வகையில் கொத்தனார் வீட்டைக் கட்டுவதால் அவர் அந்த வீட்டிலேயாவா குடியிருக்க முடியும்? போ… என்றால் போய்விட வேண்டும். இதுதான் சட்டம் என மோடி இருக்கும் தைரியத்தில் அதிகாரிகள் பேசுகிறார்கள். இவர்களின் யோக்கியதை என்ன? Ultra. Dt. என்கிற 2 இயந்திரங்கள் ரிப்பேராகி நின்றுபோய் விட்டன. முன்பென்றால் தொழிலாளர்களே அதை சரி செய்து உற்பத்தி பாதிக்காத வண்ணம் தொடர்ந்து இயக்குவார்கள்.

ஏனென்றால் வேலை நடக்கவில்லை எனென்றால் வேலை இல்லை என்றால் கூலி இல்லை. குடும்பம் சிக்கலாகும். இப்போதும் அதை சரி செய்யும்படி கூறியதற்கு தொழிலாளர்களோ எங்களுக்கும் தெரியாது என கூறி விட்டனர். ஏன்? இனிமேலும் கொத்தடிமைகளாக இருக்கக் கூடாது என்பதற்குதான். மெத்தப் படித்த மேதாவிகளான அந்த பொறியியல் வல்லுனர்கள் சம்பந்தப்பட்ட இயந்திரங்களின் கம்பனிகளுக்கு ஃபோன் செய்து அங்கிருந்து ஆட்கள் வந்து ரிப்பேர் செய்து கொண்டே………… இருக்கிறார்கள். வேலை தான் முடியக் காணோம்.

சேதராப்பேட்டை தொழிற்பேட்டைப் பகுதியில் இந்த L&T கார்ப்பரேட் நிறுவனம் தான் மற்றெல்லா ஆலைகளுக்கும் கொடூரமான பகாசுரக் கொள்ளைச் சுரண்டலுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது.

இந்த L&T கட்டுமான ஆலை தவிர முதன்மையான L&T TLT என்ற நிறுவனம் ஆயிரக்கணக்கானவர்களை 20, 30, ஆண்டுகளாக கொடூரமாக தினக் கூலி, ஒப்பந்தக் கூலி, சி.எல். என சுரண்டிக் கொழுத்து வருகிறது. ஒப்புக்கு சில தொழிலாளர்களை நிரந்தரமாக வைத்துள்ளது. இவர்களில் பலரும் இதேபோல சி.எல்.-ஆக வேலைக்குச் சேர்ந்து, விரட்டப்பட்டு, பிறகு போராடி, வழக்கு நடத்தி நிரந்தரமானவர்களே. இன்று அதே போலப் போராடும் இந்தத் தொழிலாளிகளுக்கு ஆதரவு கூட தரத் தயாராயில்லாத மனநிலைக்கு தொழிற்சங்க வாதம் அவர்களை பாட்டாளி வர்க்க உணர்வற்றவர்களாக மாற்றி வைத்துள்ளது. இந்த ஆலையில் ஒரிசா மாநிலத் தொழிலாளர்கள் கூடுதலாக உள்ளனர்.

சமீபத்தில் இந்த ஆலையில் வேலை செய்த ஒரு ஒரிசா ஒப்பந்தத் தொழிலாளி வேலையின் போதே மாரடைப்பால் இறந்து போனார். அவருக்கான நட்ட ஈடு தர வேண்டும் என வேலை இழந்த கட்டுமான உற்பத்தி பிரிவு தொழிலாளர்கள் போராடி 15 லட்சம் வாங்கித் தந்துள்ளனர். அவர்கள் இணைந்துள்ள AICCTU சங்கத்தின் இந்தப் போராட்டத்தில் நிரந்தரத் தொழிலாளர்களின் சங்கம் பங்கேற்கவில்லை. இது பாமக கட்சியின் வழிகாட்டலில் உள்ள சங்கம். வெறும் பொருளாதாரப் போராட்டங்கள் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வைத் தராது என்பதற்கு இந்த நிகழ்வே சான்று.

எனவே லெனின் கூறியது போல சங்கங்கள் தொழிலாளர்களைப் பயிற்றுவிக்கும் புரட்சிப் பள்ளிகளாகச் செயல்பட வேண்டிய அவசர அவசியம் இன்றுள்ளது. இல்லை என்றால் தொழிலாளர் நலச் சட்டங்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு, அமர்த்து – துரத்து ( HIRE&FIRE ) என்கிற அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் சட்டமே இங்கும் எதிர்ப்பின்றி அரங்கேற்றப்பட்டு விடும்.

120 வருடங்களுக்கு முன் இதே சுரண்டல் நிலைமைகளில் வாழ்ந்த ரசிய தொழிலாளி வர்க்கம் ரஷ்ய மன்னருக்கும் , முதலாளிகளுக்கும் எதிராக போராடி புரட்சி நடத்தியதன் மூலம் ஆலைகளை தனதாக்கி கொண்டது. அதன் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் தலைவர் வி. சுப்பையா தலைமையில் புதுச்சேரியில் 8 மணி நேர வேலைக்காக நடத்திய போராட்டத்தால், 1936 ஜூலை 30-ல் 12 ஜவுளித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் 8 மணி நேர வேலைக்கான சட்டத்தை ஃபிரான்ஸ் இயற்றியது. 82 வருடங்கள் கடந்த நிலைமைகளில் அப்படிபட்ட போராட்ட களத்திற்கு மீண்டும் புதுச்சேரி காத்துக்கொண்டிருக்கிறது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.

காவிரி : தன்னுரிமைக்காக போராடும் தமிழகம் !

0

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர் போராட்டம்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றால் தமிழகத்தின் தன்னுரிமைக்காக போராடுவதே ஒரே தீர்வு என்ற முழக்கத்தை முன் வைத்து, கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் 3.4.2018 அன்று பு.மா.இ.மு தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
குடந்தை.

*****

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் போராட்டம்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து 3.4.2018 அன்று நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.

*****

சென்னை பல்கலைக்கழக மாணவர் போராட்டம்…

காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்காததையும் ஸ்டெர்லைட், நியூட்ரினோ, ONGC, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள்விரோத திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது எனவும். மத்திய – மாநில அரசை கண்டித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட (APSC) மாணவர்கள் 3.4.2018 அன்று நண்பகல் 2:00 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தது போலீசு.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.

*****

கும்பகோணம் வழக்கறிஞர்கள் போராட்டம்…

காவிரி பிரச்சனையையொட்டி குடந்தை வழக்கறிஞர் சங்கம் சார்பாக 3.4.2018 அன்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
குடந்தை. தொடர்புக்கு : 97892 61624.

*****

காஞ்சிபுரம் பு.ஜ.தொ.மு. பிரச்சாரம்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட பு.ஜ.தொ.மு. சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. பெரும்பான்மையான பயணிகளும், சிறு கடை வியாபாரிகளும் நின்று ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம் மாவட்டம்.

*****