privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கந்து வட்டி முதல் டெங்கு வரை தீர்வு என்ன? ஓசூர் போராட்டம்

கந்து வட்டி முதல் டெங்கு வரை தீர்வு என்ன? ஓசூர் போராட்டம்

-

டந்த அக்டோபர் 23, அன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள காசிதர்மம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இசக்கிமுத்து 24 வயதுடைய அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் 4 வயதுடைய மதுசரண்யா, 1 வயது பிஞ்சுக்குழந்தையான அட்சய பரணிகா ஆகிய இரண்டு குழந்தைகள் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீவைக்கப்பட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். தீயில் கருகிய அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டு தற்போது நால்வருமே இறந்துப்போயினர்.

பார்ப்போர் இதயமே வெடிக்கும் அளவுக்கு நடந்த அந்த துயரச்சம்பவம் கண்டு நாட்டு மக்கள் அனைவருமே பதறிப்போயினர். இந்த துயரச் சம்பவத்திற்கு காரணமான கந்துவட்டிக்கும்பல் , கந்துவட்டிக் கும்பலுக்கு ஆதரவாக இருந்த போலீசு அதிகாரிகள், எஸ்.பி அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் 6 முறை மனுகொடுத்தும் அதனை அலட்சியப்படுத்திய எஸ்.பி, கலெக்டர் உள்ளிட்ட இந்த அரசு நிர்வாகமே குற்றவாளிகள் என தங்களின் இன்னுயிரை பலி கொடுத்து நாட்டுமக்களுக்கு இனம் காட்டிச் சென்றுள்ளனர் அந்த இசக்கிமுத்து குடும்பத்தினர்.

இந்நிலையில், இதனை பிரதிபலித்து விளக்கியும், அதற்கான தீர்வை முன்வைத்தும்… நெல்லையில் குடும்பமே தீயில் பலி! கந்துவட்டியை கட்டுப்படுத்தாத அரசுதான் குற்றவாளி!” என்ற முழக்கத்தை  முன்வைத்து ஒசூரில் செயல்பட்டுவரும் புரட்சிகர அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 26.10.2017 அன்று மாலை 4.30 மணியளவில் காமராஜர் காலனியில்  விண்ணதிரும் முழக்கங்களுடன் எழுச்சிகரமாக நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார், இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினார். திரளான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரித்துச் சென்றனர்.

தோழர் பரசுராமன் தனது கண்டன உரையில்.., “திருநெல்வேலியில் கந்து வட்டிக் கொடுமைக்கு குடும்பமே பலியாகி விட்டது. பிஞ்சு குழந்தைகளின் மரணம் நம்மை போராடவும், படுகொலையின் குற்றவாளிகளை அம்பலப்படுத்தவும் தூண்டுகிறது. நாடு முழுவதும் பல கட்சிகள் போராடுகிறது. கந்து வட்டிக் கொடுமைக்காரனை கைது செய்ய கேட்கிறார்கள். நிவாரணம், நீதி கேட்கிறார்கள். எல்லாத்துக்கும் மேலே உயர் நீதிமன்றம் விசாரணை அறிக்கை கேட்கிறது. யாரிடம் என்பது ஆட்சேபனைக்கு உரிய விசயமாக இருக்கிறது. மாவட்ட கலெக்டரிடம் கேட்கிறது, நீதிமன்றம்.

போலீசும் கலெக்டர் தான் இந்த வழக்கில் குற்றவாளிகள்.ஏன்?

எங்கள் விருப்பத்தில் இருந்து குற்றபட்டியலில் போலீசு, கலெக்டரை சேர்க்கவில்லை.
போலீசு விசாரணையில் மிரட்டல்தான் நடந்துள்ளது. அதற்கான ஆதாரம் (செல்போன் பதிவு) வெளியாகியுள்ளது. அதிகாரம் இவர்களிடம் உள்ளது. பிரச்சனையை தீர்க்கவில்லை. இவர்களின் அலட்சியம், கந்து வட்டி கொள்ளையர்களுடனான கள்ளக் கூட்டு அநியாயமாக 4 உயிர்களை பறித்து விட்டது.

ஒரு வேளை இசக்கிமுத்து மனுதரவில்லை என்றால் அது வேறு கதை. மாவட்ட ஆட்சியரிடம் 6 முறை மனு கொடுத்துள்ளார். அந்த மனு மீண்டும் மீண்டும்  காவல் நிலையத்துக்கே திருப்பி இருக்கிறார்கள். போலீசும் ‘விசாரணை’ செய்திருக்கிறது. நீ ஏன் கடன் கொடுத்தாய்? கேட்கவில்லையே? பதில் பதிவாகவில்லையே? கந்து வட்டிக்காரனிடம் கேள்வி கேட்கப்படவில்லை. அவர்களை அவமானப்படுத்தவில்லை. கடன் எப்ப கட்டுவாய்? ஏன் ஒடுற? இப்படி இசக்கிமுத்து குடும்பத்தை குடைந்து திருக்கிறது, போலீசு. சுமூகமான முடிவு காணும் நோக்கம் போலீஸிடம் இல்லை. முடியவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு அனுப்பியிருக்கவேண்டும். அதை செய்யவில்லை,போலீசு. விசாரணை என்ற பேரில் நெருக்கடி கொடுத்துள்ளார்கள். போலீசு அதன் கடமையை செய்யாததால்  குற்றவாளி என்கிறோம்.

அடுத்து, கந்து வட்டிக்காரன் A1 குற்றவாளி என்றால், A2 குற்றவாளி கலெக்டர் சந்திப் நந்தூரி என்கிறோம். ஏன்? ஆதாரம் இல்லாமல் குற்றவாளி பட்டியலில் கலெக்டரை சேர்க்கக்கோரவில்லை. 6 முறை மனு வாங்கியும் பிரச்சனையை தீர்க்கவில்லை. காரணம் தகுந்த பரிசீலனை இல்லை. தன்னுடைய கீழ் நிலை அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை என்பதால் பெரும்பாலும் மக்கள் மனு கொடுக்கிறார்கள். அதே போலீசு காரர்களை விசாரணைக்கு போடுவது அறிவுள்ள செயலா?

அடுத்து, அனுபவமில்லை என்றும் ஒதுக்கிட முடியாது. இதே ஒசூரில் 2012 -ல் கூலி உயர்வு கேட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்திய குளோபல் பார்மாடெக் தொழிலாளர் மீது தடியடி நடத்தி வெளியேற்றினார். ஆக கலெக்டர்களிடம் நல்ல பண்பாடு இல்லை. இவர்கள் தொழிலாளர்கள் மனு கொடுத்தால் அதற்காக இயங்குவதில்லை. மாறாக கார்ப்பரேட்களுக்காக, சுரண்டலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். இங்குள்ள ஆறு , ஏரி, குளம், இயற்கை வளம் ஆகியவற்றை கொள்ளையடிக்க துணை நிற்கிறார்கள். இந்த ஆட்சியாளர்களால் தான் , இந்த அதிகார அமைப்பால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அடுத்து, டெங்கு வால் தமிழகம் சாகிறது. டெங்கு கொசு ஒழிக்கிறோம் என்ற பெயரில் வீட்டிற்குள் அது சரியா, இது என்ன? என மக்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். மக்களை குற்றவாளியாக்குகிறார்கள். அரசு / அதிகார அமைப்பை கேள்வி கேட்டு விடக் கூடாது என்று முந்திக் கொள்கிறார்கள். கல்வித்துறையில் தரம் உயர்த்துவதாக சொல்லி நீட் தேர்வு வைத்து  ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இல்லை என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள்.

அடுத்து, விவசாயிகளுக்கு விலையில்லை, கடன் தொல்லையால் 3 லட்சம் விவசாயிகளின் உயிர் பறிபோய்விட்டது. விலைவாசி உயர்வு பல பேரை பட்டனி சாவுக்கு தள்ளி விட்டது.
அடுத்து, தொழிலாளர்களை கசக்கி பிழிகிறார்கள். பணி நிரந்தரம் இல்லை, கூலி, போனஸ் நியாயமா இல்லை ஏன்?  கம்பெனி முதலாளிகள் சுரண்டுகிறார்கள். மனு போட்டு ஒரு தீர்வும் எட்ட முடியவில்லை. போலியான ஜனநாயக நீதிமன்ற அமைப்புகள் முதலாளிகளுக்கு ஆதரவாக இயங்குகிறது.

பண மதிப்பு நீக்கம்,GSTவரி போட்டுள்ளார்கள். கந்து வட்டி கொள்ளை போல் உள்ளது. சிறுதொழில்களை அழித்துவிட்டது. மக்களை ரோட்டுக்கு கொண்டு வந்து விட்டது. இந்த துயரம் தீர வழி காட்ட அரசு தயாரில்லை. துல்லியமாக இலக்கு வைத்து தொழில்களை அழித்து மக்களை சாகடிக்கிறது, அரசு. மக்கள் சாவை வேடிக்கையும் பார்க்கிறது.” என இந்த அரசுக்கட்டமைப்பின் சீர்குலைவை விளக்கியதுடன் இவற்றிற்கு மாற்று மக்கள் அதிகாரமே என்பதையும் விளக்கி பேசினார்.

மேலும் மக்கள் மத்தியில் திருநெல்வேலி : கந்துவட்டிக் கொடுமைக்கு தொழிலாளி, அவரது மனைவி, பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகினர்! என்ற தலைப்பில் ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. மக்கள் அவற்றை ஆர்வமுடன் வாங்கிப்படித்தனர்.

 ***

திருநெல்வேலி : கந்துவட்டிக் கொடுமைக்கு தொழிலாளி, அவரது மனைவி, பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகினர்!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

டனைக் கட்டியப் பிறகும் துறத்திய கந்துவட்டிக் கொடுமைக்கு, கந்துவட்டிக் கொடூரனின் சுடு சொற்களை சகிக்க முடியாமல், தலைமறைவாகி தன்மானமிழந்து வாழ பிடிக்காமல், அரசின் பாதுகாப்பு கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு, தான் மட்டும் தற்கொலை செய்தால் குடும்பமே பரிதவிக்குமே என கருதி, மனதை கல்லாக்கிக் கொண்டு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பிஞ்சு மனைவி – குழந்தைகளுக்கும் தீ வைத்து குடும்பத்துடன் தற்கொலை செய்துக்கொண்டார் கந்துவட்டியால் வாழ வழியின்றிப்போன இசக்கிமுத்து.

குழந்தைகளின் கதறல் நெஞ்சை பிளக்கிறது தீவின் சுவாலை மனதை பொசுக்குகிறது போலீசு, கலெக்டரின் அலட்சியம் -இரத்தம் கொதிக்கிறது இசக்கியை தற்கொலைக்குத் தள்ளிய இந்த சமூகத்தை சகித்துக்கொள்ள மனம் மறுக்கிறது – இன்னுமா ஒதுங்கி இருப்பது?

பலமுறை மனு கொடுத்தும் கலெக்டர், போலீசு எஸ்.பி. கண்டுக்கொள்ளவில்லை. இதற்கு முன் கந்துவட்டி கொடுமையால் பலர் தற்கொலை செய்துக்கொண்ட போதும் இந்த அதிகாரிகளுக்கு உரைக்கவில்லை. ஏன்? கந்துவட்டி என்பது பொதுமக்களின் தனிப்பட்ட பிரச்சினையல்ல. இது கந்துவட்டி கொள்ளையர்கள், போலீசு, அரசு அதிகாரிகளின் கூட்டுப்பயங்கரவாதம்.

உள்ளூர் கந்துவட்டி என்பது பழைய வகை! ஃபைனான்சு, நகைக்கடன், வீட்டுக்கடன் என்ற பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்தும் கந்துவட்டி புதிய வகை! இரண்டுக்கும் காவல் போலீசும் அரசு நிர்வாகமும்தான்! மீட்டர்வட்டி, வார வட்டி, ஸ்பீடு வட்டி என நடக்கும் கந்துவட்டிக் கொள்ளை என்பது ஒருவகை! தங்க சேமிப்பு, சிறு சேமிப்பு, ஈமு கோழி வளர்ப்பு, தீபாவளி – பொங்கல் – சாமி சீட்டு என மக்களின் சேமிப்பைக் கொள்ளையடிப்பது மற்றொருவகை!

கந்துவட்டி ஒழிப்புச் சட்டம் என்பது பம்மாத்து! அதை கடுமையாக்க வேண்டுமென்பது ஏமாத்து! கந்துவட்டிக்கு பலியான 60-க்கும் மேற்பட்ட கூலி ஏழைப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஆர். எஸ்.எஸ் காரனான பாலக்கோடு சிவராஜன் போன்ற பல குற்றவாளிகள் இந்த சட்டம் – நீதி மன்றத்தால் தண்டிக்கப்ப்ட்டதிலைல.

மக்கள் நலனில் அக்கறையின்றி, மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராக கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், கந்துவட்டி கொள்ளையர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் ஆதரவாக செயல்பட்டு தகுதி உயர்வு பெற்று வருபவர்கள் தான் அரசு அதிகாரிகள். சென்ற ஆண்டு விவசாயிகளின் தற்கொலைக்கு காரணங்களில் முக்கியமான ஒன்று இந்த கந்துவட்டி!

அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் முதல் கார்ப்பரேட் கம்பெனி தொழிலாளர் வரை அனைவரையும் ஆட்டிப் படைக்குது கந்துவட்டி! மாணவருக்கு நீட்! தமிழகத்திற்கு டெங்கு! தேசத்திற்கு ஜி.எஸ்.டி! மக்களை உயிருடன் கொள்ளிவைப்பதே அரசின் நோக்கம்!  தள்ளுவண்டி-தரைக்கடை வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளர்கள், சிறு முதலாளிகள், சிறு வணிகர்கள் என சமூகத்தின் பல பிரிவினரும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு அல்லாடுகின்றனர்.

வங்கியில் கடன் உதவி இல்லை, அரசின் நிதி உதவி இல்லை, விவசாயிகளுக்க கடன் தள்ளுபடி இல்லை, சிறு தொழில் – விவசாயம் செய்ய முதலீடு இல்லை, விலைவாசி உயர்வு – ஜி.எஸ்.டி வரி கொள்ளை, டெங்குவினால் மரணங்கள் – இவையெல்லாம் கந்துவட்டியில் மக்கள் விழ காரணம்! மக்கள் நலனை காக்க தவறியது மட்டமல்ல, இந்த அரசு மக்களுக்கு எதிர்நிலை சக்தியாகிவிட்டது!

கந்துவட்டிக் கொள்ளையை ஒழிக்க, சிறு தொழில் – விவசாயத்தை மீட்க, அனைவருக்கும் வேலை அளிக்க, கல்வி – சுகாதாரத்தை உத்திரவாதப்படுத்த மக்கள் அதிகாரத்தை நிறுவுவது ஒன்றே தீர்வு!

ஊரெங்கும் மக்கள் கமிட்டி அமைப்போம்! மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள் )
தொடர்புக்கு – 97880 11784.

***

”மக்கள் சாகிறார்கள், எதிர்கட்சி தலைவர்களே ஊடகங்களே! டெங்கு மலேரியா பிரச்சினைக்குதீர்வுகாண பேசுங்கள்! செயலற்றஅரசுதான் மரணத்திற்கு காரணம்”, “ஆளத்தகுதி இழந்துவிட்டது அரசுக்கட்டமைப்பு. இதோ, ஆளவருகுது மக்கள் அதிகாரம்” என்றமுழக்கத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம்,

நாட்றாம்பாளையம் பேருந்துநிலையம் அருகில் மக்கள்அதிகாரம் அமைப்பு சார்பாக கடந்த 23-10-2017 காலை 11.00 மணியளவில் தெருமுனைக் கூட்டம் நடத்தபட்டது. மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் முனியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனைக்கூட்டத்தில்  மக்கள் அதிகாரம் தோழர் சரவணன் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக,தோழர் துரை நன்றியுரைஆற்றினார்.

இங்கே அஞ்செட்டி அருகே உள்ள ஆற்றில் தரைப்பாலம் இடிந்துப் போனதையடுத்து, அஞ்செட்டி ஒகேனக்கல் இடையேயான பேருந்துப்போக்குவரத்து தடைபட்டு போயுள்ளது. (இதற்கு முன் எட்டு முறை பாலம் இதே போல் இடிந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.) இதனை துரித நடவடிக்கை எடுத்து தற்போது சீர் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளது அதிகார வர்க்கம். இதனால் அஞ்செட்டியிலிருந்துஒகேனக்கல் செல்லும் வழியில் உள்ள கேரட்டி, தொட்டமஞ்சி, ஜேசுராஜபுரம், நாட்ராம்பாளையம், மோட்ராகி உள்ளிட்ட100 -க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமலும் வீட்டில் இருந்து வெளியேற முடியாமலும் தவித்துவருகின்றனர்.

மழை பெய்து ஆங்காங்கே குட்டைகளாக நீர் தேங்கி வழி நெடுகிலும் கொசுக்களை உற்பத்தி செய்து சுகாதாரக்கேடுகளை உருவாக்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான உழைக்கும் மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். காய்சலினால் பாதிக்கப்பட்டு வேறெங்கும் செல்லமுடியாமல் முடங்கிப்போயுள்ளனர்.  மக்களின் வாழ்வின் மீது இந்த அதிகார வர்க்கத்திற்கு அக்கறை இல்லை. மக்களே ஒன்று திரண்டு தங்களின் அதிகாரத்தை நிறுவிக் கொள்வது ஒன்றே தீர்வு என்று சொல்லி அந்த வகையிலான போராட்டத்தை கட்டியமைக்க மக்கள் அதிகாரமாக ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை உணர்த்தி அறைகூவி பேசியது மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நாட்றாம்பாளையம், கிருஷ்ணகிரி மாவட்டம்.
தொடர்புக்கு – 89402 99026.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க