Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 516

திருச்சி : புத்தகங்களில் குற்றவாளி ஜெயா படம் நீக்கம் 5 தோழர்கள் கைது !

1

திருச்சி: பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகத்திலிருந்து குற்றவாளி ஜெயாவின் படத்தை அகற்றி திருவள்ளுவர் படத்தை ஒட்டிய மக்கள் அதிகாரத்தின் 5 தோழர்கள் கைது!

குற்றவாளி ஜெயாவின் படங்கள் மற்றும் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயாவின் சமாதியை அகற்றுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பு தமிழகம் தழுவிய பிரச்சாரம் மற்றும் போராட்ட  நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 20.02.2017 காலையில் திருச்சி மாநகரின் மையமான பகுதியில் அமைந்துள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி முன் நின்று மாணவர்களின் பாட புத்தகங்களில் இருந்த தீய சக்தி ஜெயாவின் படத்தை மறைத்து திருவள்ளுவர் படத்தை தந்து ஒட்டுமாறு கோரினோம். இதை ஏற்று மாணவர்களும், மாணவர்களை அழைத்து வந்த பெற்றோரும் ஆர்வமாக வாங்கி ஒட்டிக்கொண்டனர்.

ஆனால், குற்றங்களின் அம்மாவை மறைத்து திருவள்ளுவர் படத்தை ஒட்டுவதை சட்டத்தின் காவலர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மக்கள் அதிகாரம் தோழர்களின் நடவடிக்கையை உடனடியாக தடுத்து கைது செய்தனர்.

குற்றவாளியும் தீய சக்தியுமான ஜெயாவின் படம் மாணவர்களின் பாட நூல்களில் இருப்பது சரியல்ல என்று விவாதித்ததை ஏற்காமல் கைது செய்த அடாவடி செயலை கண்டித்து உடனடியாக மற்ற பிற தோழர்கள் காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு நியாயம் கேட்டனர். ஆய்வாளர் “என்னைக் கேட்காதீர்கள், இது மேலிடத்து உத்தரவு” என்றார். உதவி ஆணையரை அணுகிய போது அவரும் “என்னைக் கேட்காதீர்கள், இது மேலிடத்து உத்தரவு” என்று தெரிவித்தார். தோழர்கள், “கைது செய்தது நீங்கள், அப்படியிருக்க எந்த மேலிடத்தை கை காட்டுகிறீர்கள்” என்று கேட்டதற்கு காவல் அதிகாரிகளிடம் பதிலில்லை.

எனவே, காவல் துறையின் நடவடிக்கையை கண்டித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு அப்போதே விண்ணப்பிகப்பட்டது. தங்கள் அடாவடித்தனம் மேலும் மேலும் அம்பலமாவதை விரும்பாத காவல் துறை ‘மேலிடத்தில்’ பேசி வேறு வழியின்றி உடனடியாக தோழர்கள் 5 பேரையும் விடுவித்தது.

 

தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி. பேச:9445475157.

குற்றவாளி ஜெயா படங்களை அகற்று : தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் !

0

ஜெயா படத்தை அகற்றுங்கள்! – திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

ஏ 1 குற்றவாளி அம்மாவின் வாரிசுகள் அவரது ஆட்சியை அமைக்க சபதம் ஏற்றுக்கொண்டு சட்டமன்றத்தை சண்டைக்களமாக மாற்றிக் கொண்டிருந்த தருணத்தில், 18.02.2017 அன்று காலை 10.30 மணியளவில்

“குற்றவாளிகளுக்கு அரசு மரியாதையா? மெரினாவிலிருந்து ஜெயா சமாதியை உடனே அகற்று ! மாணவர்களே தீயசக்தி ஜெயாவின் படத்தை பாடநூலிலிருந்து அகற்றுங்கள்! மக்களே விலையில்லா பொருட்கள் கிரிமினல் போட்ட பிச்சையல்ல! ஜெயா படத்தை அகற்றுங்கள்!”

என்ற முழக்கத்தின் கீழ் திருச்சி-சத்திரம் பேருந்து நிலையத்தில் பறை ஓசையுடன் விண்ணதிரும் முழக்கங்களுடன் தொடங்கியது மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரத்தின்  மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ஆனந்த் தலைமையேற்க, மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் கண்டன உரையாற்றினர்.

அவர் உரையில்: “ஜெயா-சசி கும்பல் ஒரு புதிய வரலாற்றை தமிழகத்தில் படைத்துள்ளது. “அம்மாவின் ஆட்சியை அமைப்போம்” என ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கையில் அவரது ஆட்சி எப்படி இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் 20 வருடங்களுக்குப் பிறகு தவிர்க்க முடியாமல் சொத்து குவிப்பு வழக்கில் போட்டுஉடைத்துள்ளது. ஜெயலலிதாதான் சொத்து குவிப்பு வழக்கின் மூளையாக செயல்பட்டுள்ளார். சசி கும்பலை பயன்படுத்தி குற்றங்களிலிருந்தது தப்பித்திக்கொள்ளவே ஜெ முயற்சித்துள்ளார் என அவரது கிரிமினல் -கேடித் தனத்தை  நீதிபதி மைக்கேல் டி. குன்ஹாவின் தீர்ப்பை தொடர்ந்து அம்பலப்படுத்துயுள்ளது உச்சநீதிமன்றம்.

  • கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ஜெயாவுக்கு அரசு மரியாதையில் மெரினாவில் சமாதி இருப்பது சட்டத்திற்கு விரோதமானது. அதை உடனே அகற்ற வேண்டும்!
  • கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ஜெ வின் படங்கள் மற்றும் குறிப்புகளை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும்! அதற்கு பதிலாக தமிழகத்தின் பெருமையாக இருக்க கூடிய திருவள்ளுவர் படங்களை ஒட்ட வேண்டும்!

மக்கள்வரிப்பணத்தில் செயல்படுத்தக்கூடிய மக்கள் நலத்திட்டங்களை  , இலவசத்திட்டங்கள் என அறிவித்து தமிழக மக்களை பிச்சைகாரர்களாக கருதிய பார்ப்பன பாசிஸ்ட், ஊரறிந்த கிரிமினல் குற்றவாளி ஜெயாவின் புகைப்படங்களை தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாது நிரந்தரமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.”

காவல் துறையின் அனுமதி இன்றி நடந்ததால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி. பேச:9445475157.  

_______________

சீர்காழியில் தோழர்கள் கைது : உச்சநீதிமன்ற உத்தரவை துடைத்துப் போட்ட காகிதமாக மதிக்கும் சீர்காழி காவல்நிலையம்

“குற்றவாளிக்கு அரசு மரியாதையா? ‘மெரினாவில் இருந்து ஜெயா சமாதியை உடனே அகற்று!”
என்ற முழக்கம் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் சார்பில் சுவரொட்டியாக ஒட்டப்பட்டது. அதே முழக்கத்தை அச்சடித்து சுவரொட்டியாக சீர்காழி நகரத்தில் ஒட்டப்பட்டது. மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவியும், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் சுப்ரமணியன் அவர்களும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்தபோது சிவில் உடையில் இருந்த காவலர்கள் சுவரொட்டியையும், பசை குண்டானையும் பாய்ந்து குதறினார்கள். போலீஸ்தான் என்று தெரிந்தவுடன் போலிசை அம்பலப்படுத்தியும், தமிழகத்தில் நடைபெறும் மாபிஃயா கும்பலின் ஆட்சியையும், ஜெயா சமாதியை அகற்றும் முழக்கங்களை தோழர்கள் போட்டார்கள். 18-02-2017 காலை 08-00 மணிக்கு கைது செய்யப்பட்டு சீர்காழி காவல்நிலையத்தில் U/S 153, 504, IPC R/W  PUBLIC PLACE DISTRUBMENT ACT  ல் கைது செய்யப்பட்டு சீர்காழி நடுவர் மன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, மாலை மயிலாடுதுறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் தோழர் ரவி மீது சீர்காழி மற்றும் புதுப்பட்டினம் காவல் நிலையங்கள் சுவரொட்டி ஒட்டியதற்கு வழக்குப் பதிவு செய்து ஜாமீனில் வெளிவந்துள்ளார். சீர்காழி மற்று புதுப்பட்டினம் காவல் நிலையங்கள் ஜனநாயக விரோதமாகவும், பாசிச நடைமுறையோடும் நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி.தொடர்பு : 9843480587

_______________

 சென்னையில் ஆர்ப்பாட்டம் !

“குற்றவாளிக்கு அரசு மரியாதையா?மெரினாவில் இருந்து ஜெயா சமாதியை உடனே அகற்று!” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அண்ணா சாலை பேருந்து நிலையத்திலிருந்து முழக்கமிட்டவாறே ஆர்ப்பாட்டம் தொடங்கியது. மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில் ”ஜெயா- சசி கும்பல் குற்றவாளி என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இது பெரிய சாதனையாக பேசி கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பை வியந்து பேசிகிறார்கள். இதில் ஒரு புதிய விசயமும் இல்லை. மக்கள் ஏற்கனவே இவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு எழுதிவிட்டார்கள். இப்போது தான் நீதிமன்றம் 21 வருடங்களுக்கு பிறகு, எல்லோருக்கும் தெரிந்த விசயம் என்பதால் வேறு வழியில்லாமல் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பு சரி என்றால் ஏற்கனவே தவறான தீர்ப்பு சொன்ன குமாரசாமி, தத்துவிற்கு என்ன தண்டனை? இவர்கள் சொல்லும் சட்டப்படியே ஒரு நிரூப்பிக்கப்பட்ட குற்றவாளி அரசு துறைகளில் வேலை செய்ய கூடாது என்று இருக்கிறது. இவர்கள் சொல்லும் சட்டத்தின் படியே ஜெயலலிதாவின் சமாதி மெரினாவில் இருக்க கூடாது. மெரினா என்பது மக்களின் சொத்து. குற்றவாளிகளுக்கு அங்கு இடம் கிடையாது உடனே அகற்ற வேண்டும் இதை இந்த அரசு செய்யுமா? செய்யாது. மக்களாகிய நாம் தான் இதை செய்ய வேண்டும் அதற்கு தொடக்கமே இந்த போராட்டம் என்று பேசினார்.

அதை தொடர்ந்து பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் அவர்கள் இன்று ஜெயா-சசி கும்பல் கொள்ளையடித்தது வெறும் 66 கோடி என்று தான் தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் அவர்கள் அடித்த கொள்ளை இதை விட பல கோடி அதிகம். அ.இ.அ.தி.மு.க என்பது ஒரு கட்சியல்ல, அது ஒரு கொள்ளை கூட்ட கும்பல். இதில் சசிகலா, டி. டி. வி தினகரன், ஒ.பி.எஸ், எடப்பாடி அனைவரும் குற்ற கும்பல் தான். இன்று சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது மங்காத்தா சீட் போல் யாரை சேர்ந்தெடுப்பது என்ற சூதாட்டம் தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த பணத்தை வைத்து கொண்டு பேரம் பேசி எம். எல். ஏக்களை யார் வாங்குவது என்ற குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் எங்கேயிருந்தார்கள் இந்த எம்.எல்.ஏ க்கள் கூவத்தூரில் சொகுசு விடுதியில் கைதிகளாக வைக்கப்பட்டிந்தார்கள். எப்படி புழல் சிறையிலிருந்து வெளியே வர முடியாதோ, எப்படி பரப்பன அக்கிரக்கார சிறையில் இருந்து சசிகலா வெளியில் வர முடியாதோ? அது போல் எம்.எல்.ஏ க்களும் சொகுசு விடுதிலிருந்து வெளியே வர முடியாது. அவர்கள் உள்ளூக்குள் இருந்து கொண்டே எங்களை யாரும் அடைக்கவில்லை, கட்டாயப்படுத்தவில்லை என்று கூறுகிறார்கள். இவர்கள் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். வெளியில் விட்டால் பணம் விலையாடும், கட்சி தாவிவிடுவார்கள் என நம்பாமல் அடைத்து வைத்திருக்கிறார்கள். இவர்களா மக்கள் பிரச்சனைகளை தீர்க்க போகிறார்கள்? இனி இவர்களை நம்பி பயனில்லை. இதை மாற்ற ஒரு அறைகூவல் தான் இந்த மக்கள் போராட்டம் என்று பேசினார்.

மக்கள் அதிகம் கூடும் பகுதி என்பதாலும், வாகன போக்குவரத்து அதிகமுள்ள இடம் என்பதாலும் பலரிடம் இந்த போராட்டமும், முழக்கமும் சென்றடைந்தது. வரவேற்பை பெற்றது. குழந்தைகள் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜெயா சமாதியை அகற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்ற உறுதியோடு போராடினர்.

போலிஸ் உடனே கைது செய்ய தயாராக வேன்களை நிறுத்தி வைத்திருந்தது. உடனே போராட்டத்தை முடித்து கொள்ளும் படி போலிஸ் நெருக்கடி கொடுத்தது. அனைவரையும் போலிஸ் கைது செய்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
சென்னை. தொடர்புக்கு : 91768 01656


சென்னையின் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களின் நோட்டுப் புத்தகங்களில் உள்ள குற்றவாளி ஜெயா படத்தை திருவள்ளுவர் படம் ஒட்டி மறைக்கின்ற இந்த படம் சமூகவலை தளங்களில் வெளியாகியுள்ளது. இவர்களைப் போன்று அனைவரும் பாட புத்தகங்களில், நோட்டுக்களில் உள்ள குற்றவாளி ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும். தமிழகத்தின் சுயமரியாதை மரபு இளம் குருத்துக்களின் மத்தியில் துளிர்ப்பதை வரவேற்போம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


பென்னாகரம் : பொது இடங்களில், மக்கள் சொத்துக்களில் குற்றவாளி படங்களை வைப்பதா ?

குற்றவாளி ஜெயாவின் படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து உடனே அகற்று ! என மக்கள் அதிகாரம் தோழர்கள் 20.02.2017 அன்று காலை பென்னாகரத்தில் போராட்டம் நடத்தினர்.

தகவல் :
மக்கள் அதிகாரம், தருமபுரி

பூலோகத்தின் நரகம் : மும்பை பொதுக் கழிப்பறைகள் !

2

பிப்ரவரி 4-ம் தேதி அதிகாலை. கிழக்கு மும்பையிலுள்ள இந்திரா நகர் குடிசைப் பகுதி. அங்கிருக்கும் மூன்று ரூபாய் கட்டணக் கழிப்பறையின் முன் ஹரிஷ் டிகேதார்(40), கணேஷ் சோனி(40) மற்றும் முகமது இசாஃபில் அன்சாரி(30) ஆகியோர் வரிசையில் நிற்கின்றனர். காலை எட்டு மணிக்குச் சற்று முன்பாக திடீரென இவர்கள் நின்றிருந்த தரைத்தளம் உடைந்து நொறுங்குகிறது. மூவரும் 15 அடி ஆழ கழிவுத் தொட்டியினுள் விழுந்து மூழ்கி இறந்தனர் – பின் இறந்தவர்கள் வெறும் புள்ளிவிவரங்களாயினர்.

மும்பை பொதுக் கழிவறை

நொறுங்கிச் சரிந்த கழிப்பறையின் தரைத்தளத்தினுள் சிக்கி மலத்தொட்டியினுள் மூழ்கிய மூவரைத் தவிர சிராஜ்ஜுதின் துராட்(25) மற்றும் ரமாகாந்த் கனோஜியா(35) ஆகியோரும் அந்த விபத்தில் சிக்கிக் கொண்டனர். அதிர்ஷ்டவசமாக இவர்கள் இருவரும் உடைந்த தரையின் முனையைப் பிடித்து தொங்கியதால்  காப்பாற்றப்பட்டனர். ஐந்து பேரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தனியார் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டனர். இருபது நிமிடங்கள் கழித்தே தீயணைப்புத் துறை வந்து சேர்ந்தது. குழியில் விழுந்தவர்களை வெளியே இழுத்துப் போட்ட போது அவர்கள் அடையாளம் காண முடியாதபடிக்கு உடல் முழுக்க மலம் அப்பியிருந்தது.

”எங்கள் கால்களுக்குக் கீழே தரை நழுவிச் சென்ற போது நாங்கள் நின்று கொண்டிருந்தோம்” அச்சுறுத்தும் பழைய நினைவுகளால் நடுங்கியவாறே சொல்கிறார் துராட். ”அவர்கள் மூவரும் நேரடியாக குழியில் விழுந்து விட்டனர். எனது தோள் வரை மலச்சேற்றுக்குள் புதைந்து போனேன். அந்தச் சேறு என்னை கீழே இழுத்துச் சென்றது.. ஆனால், எப்படியோ நான் பக்கவாட்டில் இருந்த பலகையைப் பிடித்துக் கொண்டேன். யார் யாரோ என்னை மேலே பிடித்து இழுத்துப் போட்டார்கள்; அப்புறம் நான் மயங்கி விட்டேன்”

மும்பையின் சேரிகளில் மலஜலம் கழிப்பது போன்ற எளிய காரியங்களைச் செய்யவே ஒருவர் கடும் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டும். கிழக்கு மும்பையின் சேரிகளான பைன்கன்வாடி, சிவாஜி நகர், கோவந்தி, சீட்டா கேம்ப், ரஃபீக் நகர், வாஷி நாகா, மந்தாலா மற்றும் மன்குர்ட் போன்ற மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் இந்த அபாயங்கள் பன்மடங்கு அதிகம். இந்தப் பகுதிகளில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே உள்ளன.

மும்பை மாநகரின் 24 நிர்வாக வார்டுகளில் மும்பை கிழக்கும் ஒன்று. இங்கே பகுதிகளை விட ஏழ்மை அதிகம் என்பதோடு பொது வசதிகளும் குறைவு. இந்த வார்டில் உள்ள சேரிகள் தாம் மும்பையிலேயே மிகவும் மோசமான நிலைமையில் உள்ளன. மும்பை மாநகராட்சியில் உள்ள மொத்த இடங்களான 227-ல், மும்பை கிழக்கு வார்டில் மட்டும் சுமார் 15 இடங்கள் உள்ளன. மாநகராட்சி இருக்கைகளை வைத்துப் பார்த்தால் மற்ற வார்டுகளை விட மும்பை கிழக்கு தான் அளவில் பெரியது. எனினும், கழிப்பறை விபத்துகளை எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலுக்காக மட்டுமே அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

பிப்ரவரி 4-ம் தேதி நடந்த மரணங்கள் எதேச்சையானவைகளோ, எதிர்பாராதவைகளோ, விபத்தோ அல்ல. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இதே விதமான விபத்துகளில் ஏழு பேர் மரணித்துள்ளனர்.

“இது போன்ற பொதுக் கட்டிடங்களைக் கட்டுவதற்கு குறைந்தபட்சமாகவாவது விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் மரணங்களைத் தவிர்க்க முடியாது” என்கிறார் பிப்ரவரி 4-ம் தேதியன்று நடந்த விபத்தில் உயிர் பிழைத்த, இருவரைக் காப்பாற்ற உதவிய ரஸாக் ஷேக். அவரே மேலும் கூறும் போது, “ஒவ்வொரு முறையும் விபத்து நடந்து முடிந்த பின் நிவாரணத் தொகைக்கான செக்குகளுடன் எம்.பி எம்.எல்.ஏக்கள் வருவார்கள்; இந்த முறையும் சமாஜ்வாடி கட்சியின் அபு அஸீம் அஸ்மி வந்தார். இந்த நிவாரணங்களால் என்ன பயன்? மும்பையில் மனித உயிர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால், இந்தளவுக்குமா மலிவாகி விட்டது?” என்கிறார்.

பூட்டப்பட்டக் கழிவறை

சம்பவம் நடந்த அன்று இந்திரா நகரில் அமைந்திருந்த அந்த குறிப்பிட்ட பொதுக்கழிவறையில் நிறைய கூட்டம் இருந்துள்ளது. அதற்கு பக்கத்திலிருந்த இன்னொரு பொதுக்கழிவறை சேதமடைந்து பூட்டப்பட்டதே இங்கே கூட்டம் அதிகளவில் கூடியதற்குக் காரணம். ஒவ்வொரு பொதுக்கழிவறைத் தொகுதியையும் சுமார் நான்காயிரத்திலிருந்து ஆறாயிரம் பேர் பயன்படுத்துகின்றனர்.

“சில நேரம் கழிவறையைப் பயன்படுத்த நாங்கள் அரை நாள் வரை வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும்” என்கிறார் ஐம்பது வயதான ஸுமைதா பானு.

மும்பை சேரிகளில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கழிவறைகளில் 78 சதவீதம் தண்ணீர் கிடையாது; 58 சதவீத கழிவறைகளில் மின்சார இணைப்பு இல்லை.. மேலும் பல கழிவறைகளுக்கு கதவுகளோ, பெண்கள் நாப்கின்களைப் போடுவதற்கான ஏற்பாடுகளோ இல்லை. பெரும்பாலான பெண்கள் கூலி வேலைகளுக்கோ, வீட்டு வேலைகளுக்கோ செல்லும் இடங்களில் உள்ள கழிவறைகளையே பயன்படுத்துகின்றனர். அதிலும் பல மேட்டுக்குடி குடும்பங்கள் தங்களிடம் வீட்டு வேலைக்கு வருகிறவர்கள் கழிவறையைப் பயன்படுத்தக் கூடாது என்கிற நிபந்தனையின் பேரில் தான் வேலைக்கே சேர்க்கிறார்கள்.

அரசியல் தொடர்புடையவர்களே கழிவறைக் காண்டிராக்டுகளை எடுக்கின்றனர். ஒருவர் ஒரு முறை கழிவறையைப் பயன்படுத்த 2 அல்லது 3 ரூபாய்களைக் கட்டணமாக கொடுக்க வேண்டும். ஒரு கழிவறைத் தொகுதியை ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் நிலையில், சாதாரணமாக மாதம் ஒன்றுக்கு சில பல லட்சங்களை காண்டிராக்டர் சம்பாதித்து விடுகிறார். எனினும், குறைந்தபட்ச வசதிகளைக் கூட செய்வதில்லை.

”மும்பை முழுவதும் உள்ள பொதுக் கழிவறைகளின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 392 கோடி ரூபாய் வசூலாகின்றன. அதாவது நாளொன்றுக்கு மும்பையைச் சேர்ந்த ஏழைகள் சுமார் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மலம் கழிப்பதற்காக மட்டுமே செலவிடுகின்றனர்” என்கிறது அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் என்கிற தனியார் சிந்தனைக் குழாம் வெளியிட்ட ஆய்வறிக்கை.

மேற்படி ஆய்வறிக்கையை எழுதிய தாவல் தேசாய் என்பவர் இதை மாபெரும் கிரிமினல் குற்றம் என்கிறார். ஆய்வுக்காக சந்தித்த மக்களில் 83 சதவீதம் பேர் தங்களால் சொந்தமாக கழிவறைகளை அமைத்துக் கொள்ள முடியுமென்றும், மாநகராட்சி நிர்வாகம் சில்லறையான காரணங்களைச் சொல்லி அனுமதி மறுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்கள் என தெரிவித்துள்ளார் தேசாய்.

சேரிகள் ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்கு நிலங்களில் அமைந்திருப்பதாக நுட்பமான சட்டவாத விளக்கங்கள் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், இதே சேரிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு மின்சார இணைப்பையும் வழங்கியுள்ளனர் – வீட்டு வரியும் வசூலிக்கப்படுகின்றது. மும்பையின் சேரிகளுக்கு அரசு தரப்பில் பின்பற்றப்படுவதாக சொல்லப்படும் இதே சட்டவாத அளவுகோள்கள் நாடெங்கும் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் கட்டப்பட்டிருக்கும் சாமியார் மடங்களுக்கோ, கல்வித் தொழிற்சாலைகளுக்கோ பொருந்துவதில்லை என்பதோடு, அரசே முன்வந்து பல லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை அடாவடியாக பிடுங்கி பன்னாட்டு தொழிற்கழகங்களுக்கு தாரை வார்த்து வருகின்றது.

இது ஒருபுறமிருக்க, மக்களே சொந்தமுறையில் கழிவறைகளை அமைத்துக் கொள்ள அனுமதிக்க மறுப்பதன் பின் வேறு காரணங்களும் உள்ளன. மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படுத்தப்படும் பொதுக் கழிவறைகளைக் நிர்மாணிப்பதற்கும் பராமரிப்பதற்குமான காண்டிராக்டுகள் வளம் கொழிக்கும் தொழிலாக இருக்கின்றது. இந்தக் காண்டிராக்டுகளை எடுக்கும் பகுதியைச் சேர்ந்த அரசியல் ரவுடிகள் யாருக்கும் பதில் சொல்லவோ, கணக்குக் காட்டவோ கடமைப்பட்டவர்கள் அல்ல.

மூன்று ஏழைகளைப் பலிகொண்ட இந்திரா நகர் பொதுக்கழிவறை சுமார் பத்தாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. சம்பவம் நடந்த பின் அதைக் கட்டிய காண்டிராக்டர் ராஜ்தேவ் ராம்நரேஷ் பாரதி கைது செய்யப்பட்டு பின் உடனடியாக விடுவிக்கப்பட்டும் விட்டார்.

சேரிகளின் நிலை இவ்வாறிருக்க, இதே கிழக்கு மும்பையைச் சேர்ந்த செம்பூர், ட்ரோம்பே போன்ற நடுத்தர மற்றும் உயர்நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதிகளுக்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் போதிய அடிக்கட்டுமான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. இதே மும்பையின் சிறுபான்மை மேட்டுக்குடியினர் வசிக்கும் பகுதிகளோ வழுக்கும் சாலைகளோடும், படாடோபமான கட்டிடங்களோடும் நரகலின் மத்தியில் சொருகப்பட்ட ரோஜாவைப் போல் பளீரிடுகின்றது.

எல்லாம் போகட்டும், மோடி பீற்றிக் கொண்ட தூய்மை இந்தியா திட்டம் என்னவாயிற்று?

“இங்கே கழிவறை மற்றும் குடிநீரின் நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், ஸ்வச் பாரத் எல்லாம் நகைப்புக்குரிய திட்டம் தான்” என்கிறார் அமிதா பிதே.

உண்மையில் அத்திட்டம் நகைப்புக்குரியதல்ல, அத்திட்டத்தின் மூலம் மோடி தலைமையிலான ஆளும் கும்பல் தான் மக்களைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றது.

மேலும் படிக்க,

– முகில்

In Mumbai’s poorest slums, water and sanitation carry a steep price tag – sometimes deat

 

பன்னீர் VS சசி : முன் விட்டையா, பின் விட்டையா ?

2

ரண்டு திருடர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது? சிரித்த முகமும் அடிமைக்குரிய பணிவும் காட்டும் பன்னீரையா? மன்னார்குடி மாஃபியாவின் தலைவியான சசிகலாவையா? பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவர்தான் முதல்வராக முடியும் என்ற அடிப்படையில் தன்னை ஆட்சியமைக்க அழைக்காமல், ஆளுநர் உள்நோக்கத்துடன் காலம் கடத்துவதாகக் குற்றம் சாட்டுகிறார் சசிகலா. தான் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாகவும் தன்னிடமிருந்து விலகல் கடிதம் மிரட்டி வாங்கப்பட்டதாகவும் கூறிக் கண்ணீர் வடிக்கிறார் பன்னீர்.

இந்த இரு கும்பல்களில் யாரொருவரும் தன்னை யோக்கியன் என்றோ, தங்களுக்கு ஒரு கொள்கை இருக்கிறது என்றோ வாய்தவறிக் கூடச் சொல்லிக்கொள்ள இயலாதவர்கள். சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர இருக்கிறது என்றால், பன்னீர் – சேகர் ரெட்டி – நத்தம் ஆகியோருக்கு எதிராகச் சில மாதங்களுக்கு முன்னர்தான் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

யாரைத் தேர்ந்தெடுப்பது? பணிவு பன்னீரையா அல்லது அல்லிராணியின் அன்புச் சகோதரியையா?

இருந்த போதிலும், சசிகலா மட்டும்தான் ஊழல் பேர்வழி என்பதைப் போலவும் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன் ஆளுநர் அவரைப் பதவியேற்க அழைப்பது நெறிகெட்ட செயல் என்பதாகவும் பாரதிய ஜனதா பேசுகிறது. ஜெயலலிதாவின் கன்டெயினர் கடத்தல் முதல் தேர்தல் தில்லுமுல்லு வரை எல்லா முறைகேடுகளுக்கும் துணை நின்ற பாரதிய ஜனதா, நல்லொழுக்கத்தின் காவலனாக நடிக்கிறது. ஜெயாவின் மரணத்தில் சசிகலா மீது விழுந்துள்ள சந்தேகத்தையும், மன்னார்குடி மாஃபியா மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பையும் பன்னீருக்கு ஆதரவாகத் திருப்பும் பணியிலும், பன்னீருக்கு ஆள் பிடிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழக மக்களால் காறி உமிழ்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பா.ஜ.க., இப்போது நடுவர் தோரணையில் பேசுகிறது. சசிகலா மீது தமிழக மக்களுக்கு, குறிப்பாக அ.தி.மு.க. வின் வாக்கு வங்கியாகிய பெண்கள் கொண்டிருக்கும் வெறுப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இரட்டை இலைச் சின்னத்தின் வாரிசாக பன்னீர் கும்பலைக் கொண்டு வந்து, அதன் வழியாக அ.தி.மு.க.வைத் தனது கைப்பாவைக் கட்சியாக்கிக் கொள்ள முனைகிறது.

பன்னீர், சசி ஆகிய இருவரில் ஒருவரைத் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டும்; அல்லது தி.மு.க. கூறுவதைப் போலச் சட்டமன்றத்தைக் கலைத்து விட்டுத் தேர்தல் நடத்த வேண்டும். இவைதான் தமிழக மக்கள் முன்னால் உள்ள தெரிவுகள் என்று கூறப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் போலீசின் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பன்னீரின் கண்ணீருக்கு நிவாரணம் வழங்க வேண்டுமா? கடன்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் தஞ்சை விவசாயிகளும், வறட்சியால் மடிந்து கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளும் சசிகலாவின் சட்டபூர்வ உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டுமா? இந்தக் கழிசடைகளா மக்களின் பிரதிநிதிகள்?

இவர்கள் காட்டுகின்ற கட்டத்தில் டிக் அடிப்பதைத் தவிர நமக்குத் தெரிவு இல்லை என்றோ, இவர்கள் கூறுகின்ற சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட தீர்வுகள் இல்லையென்றோ சிந்தித்திருப்போமானால், மெரினா எழுச்சியே சாத்தியமாகியிருக்காது. இந்த அரசும் பணிந்திருக்காது. இவர்களில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், வறட்சி, நீர்நிலைப் பராமரிப்பு, உதய் திட்டம், உணவு மானிய வெட்டு, நீட் தேர்வு, பண மதிப்பிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால், பிரச்சினைகளுக்கு காரணமானவர்களே இவர்கள்தான். இப்பிரச்சினைகளுக்கு ஏதேனும் தீர்வு உண்டென்றால், அது இவர்களுக்கு வெளியில்தான் இருக்கிறது.  இந்தக் கட்டமைப்புக்குள் சிந்திக்கும் பழக்கத்திலிருந்து நம் சிந்தனையை விடுவிப்போம். மெரினா எழுச்சியால் தலை நிமிர்ந்த தமிழகம் தலை குனிந்துவிடக் கூடாது.

-புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2017

குமாரசாமி தீர்ப்பின் போது விகடன் சொன்னது என்ன ?

7

வினவு குறுஞ்செய்திகள்:

போயஸ் தோட்டத்து பூசாரி விகடன் : அன்றும் இன்றும் 5

நீதி நின்று கொல்லும்!” – இது பிப் 22 2017 தேதியிட்ட ஆனந்த விகடனின் தலையங்கம். உச்சநீதிமன்றமே குற்றவாளிகள் என்று தண்டித்துவிட்டதால் விகடன் நிறுவனம் தைரியமாக ஜெயாவைப் பற்றி எழுதுகிறது. தலையங்கத்தில் இருந்து சில மேற்கோள்களைப் படியுங்கள்:

//தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும்' என்று அரசியல்வாதிகள் சம்பிரதாயமாகவும் சந்தர்ப்பவாதத்துக்கும் பயன்படுத்திய வார்த்தைகள் இப்போது உண்மையிலேயே அர்த்தம் பெற்றிருக்கின்றன. ஜெயலலிதா மரணமடைந்ததாலேயே அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறாரே தவிர, அவர் குற்றம் இழைக்காதவர் என்பதால் அல்ல. ஓர் அரசியல் தலைவரின் மரணத்தோடு அவரது அரசியல் தவறுகளும் முறைகேடுகளும் மறைந்து போய்விடாது.ஒரு ரூபாய்தான் சம்பளம்’ என்று ஜெயலலிதா அறிவித்த ஆட்சிக் காலத்தில்தான் இந்த அநீதியான சொத்துக் குவிப்பு நடந்தது என்பதை மறக்கவும் முடியாது… மன்னிக்கவும் கூடாது.

ஏற்கெனவே சொத்துக்குவிப்பு வழக்கில் குன்ஹா வழங்கிய தீர்ப்பை, விகடன் தலையங்கம் வரவேற்று எழுதியிருந்தது. குன்ஹா வழங்கிய தீர்ப்பு, நீதியை அடிப்படையாகக்கொண்டது என்று மனச்சாட்சியுள்ள அனைவரும் அப்போது வாழ்த்தி வரவேற்றார்கள். ஆனால், வருமானத்துக்கு அதிகமாக 10 சதவிகிதம் வரை சொத்து சேர்க்கலாம்' என்று குமாரசாமி வழங்கியநவீன’ தீர்ப்போ நீதியில் நம்பிக்கையுள்ள அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

ஆனால், நீதியின் வெற்றியைத் தள்ளிப்போடலாமே தவிர, தடுக்க முடியாது என்பதைத்தான் இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்திருக்கிறது.//

சரி, இப்போதைய உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்தவர்கள், குன்ஹாவையும் ஆதரித்திருக்கிறார்கள். எனில் விகடன் கம்பெனி குமராசாமி தீர்ப்பை கண்டித்து எழுதியிருக்க வேண்டுமல்லவா? குறைந்த பட்சம் இப்போது எழுதியிருப்பது போல அதிர்ச்சியாவது அடைந்தார்களா?

“மீதம் இருக்கும் தீர்ப்புகள்!” – இது 20 மே 2015 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழின் தலையங்கம்! குமராசாமி தீர்ப்பால் ஜெயா விடுதலை ஆனதும் எழுதப்பட்ட தலையங்கம் இது! என்ன சொல்கிறார்கள் படியுங்கள்:

// “சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது கட்சியினர் பெரும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். தங்கள் தலைவியின் வருகையைக் கொண்டாடுவது, அவர்களின் உரிமை. ஆனால் ஓர் அரசாங்கம் என்ற வகையில், இப்போது தமிழ்நாடு அரசு உடனடியாக உண்மையாக செய்ய வேண்டியது என்ன?

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ‘4 ஆண்டு சிறை,100 கோடி ரூபாய் அபராதம்’ என்ற தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்தார். ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதலமைச்சர் ஆனார். இடையில் இந்த ஏழரை மாதங்கள் மொத்தத் தமிழ்நாடும் நிர்வாகக் குளறுபடிகளால் ஸ்தம்பித்தது.

மாநிலம் முழுவதும் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் முடங்கின. ஏற்கெனவே இருந்த பல திட்டங்கள் நட்டாற்றில் விடப்பட்டன. புதிய கட்டடங்கள் பாதியில் நின்றன. தமிழ்நாடு அரசின் நிதிநிலையோ மிக மோசமானது. புதிய நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயங்குகின்றன. ஏற்கெனவே இருக்கும் முதலீடுகள் வெளியேறுகின்றன.

எதைக் கேட்டாலும் ‘அம்மா வரட்டும்… அம்மா வந்தால்தான்…’ என்றே எல்லா மட்டங்களிலும் சொல்லப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டதற்கும், இப்போது மே 11-ம் தேதி விடுவிக்கப்பட்டிருப்பதற்கும் இடையிலான 227 நாட்கள், செயல்படாத தமிழ்நாடு அரசாங்கத்தின் கறுப்பு தினங்கள்.//

ஆக குமராசாமி தீர்ப்பு குறித்து விகடன் எதிர்த்து எழுதாதது மட்டுமல்ல, கடுகளவு அதிர்ச்சியும் அடையவில்லை. அதை சரி செய்வதற்காக ஓபிஎஸ் ஆண்ட அந்த குமராசாமி தீர்ப்பால் வந்த ஆட்சியை குறித்து கவலைப்படுகிறார்கள். அந்த நாட்களில் தமிழக அரசு செயல்படவில்லை, வளர்ச்சித் திட்டங்கள் முடங்கின என்று விளக்குகிறார்கள். அதுவும் ஜெயலலிதா ஆண்டிருந்தால் இந்த முடக்கம் வராது என்று மறைமுகமாக மட்டும் கூறவில்லை. இனியாவது அவர் வளர்ச்சியை குறித்துக் கொண்டு செயல்படவேண்டும் என்று மயிலிறகால் போதனை செய்கிறார்கள்.

அப்போது ஜெயாவின் குற்றம் குறித்தோ இல்லை இதற்கு உச்சநீதிமன்றத்திலாவது நீதி வழங்கப்பட வேண்டும் என்றோ ஏன் விகடன் எழுதவில்லை? பயமா? இல்லை பாசாங்கா? இல்லை செலக்டிவ் அம்னீஷியாவா? இந்த செலக்டிவ் அம்னீஷியா கூட ஜெயலலிதா பயன்படுத்திய வார்த்தைதான். சந்தர்ப்பவாத விகடனுக்கு அது கண்டிப்பாக புரிந்திருக்கும்! நீதி, நேர்மை, அறம் போன்ற வார்த்தைகளெல்லாம் நெருக்கடியான நேரத்திலும் நாம் அப்படி வாழ்கிறோமா பேசுகிறோமா என்பவையோடு தொடர்புடையவை! விகடனோ எல்லாரும் தைரியமாக பேசும் போது கூட்டத்தோடு கூட்டமாக ஜெயாவைக் கண்டிக்கிறது. இதுதான் இவர்கள் இத்தனை ஆண்டுகள் பத்திரிகை நடத்தி ஈட்டிய நற்பெயரின் இலட்சணம்!

_________

குற்றவாளி ஜெயா கும்பலை ஆதரிக்கும் சினிமா குற்றவாளிகள்!

ஜெயா-சசி கும்பல் குற்றவாளிகளே என்று நீதிபதி குன்ஹா செப் 27, 2014 அன்று தீர்ப்பளித்தார். அப்போது குன்ஹாவுக்கு எதிராக அதிமுக பொறுக்கிகள் நடத்திய கலவரங்களை அறிவீர்கள். அதில் தமிழ் திரையுலகம் கூடுதல் பொறுக்கித்தனத்துடன் நடந்து கொண்டது. கவிராயர்களும், கலைமாந்தர்களும் நிறைந்திருக்கும் துறை என்பதால் “தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா” என்றெல்லாம் பிளக்ஸ் வைத்தார்கள்.

தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் இந்த சினிமா பொறுக்கிகளுக்கு யார் தண்டனை கொடுப்பது?
முழுக்கட்டுரை, படங்களை படிக்க பார்க்க:

கொள்ளைக்காரி ஜெயா விடுதலை ஏன்? நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் ஜெயா-சசி கும்பல் விடுதலை ஆன போது வினவு தளம் உடன் வெளியிட்ட கட்டுரை தலைப்பு இது. இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு மற்ற ஊடகங்கள் குறிப்பாக ஜெயாவுக்கு சொம்படித்த பத்திரிகைகள் ஊழலுக்கு எதிராகவும், ஜெயாவுக்கு எதிராகவும் பேசுவதாக நடிக்கின்றன. குமாரசாமி தீர்ப்பின் போதோ இவர்கள் இதே ஜெயாவை சாதனை நாயகியாக பாராட்டினர்.

ஆனால் குமாரசாமி தீர்ப்பின் போது வினவு மட்டுமே ஜெயாவை கொள்ளைக்காரி என்று அழைத்து தீர்ப்பை விமரிசித்தன. அப்போது ஜெயாவின் காட்டாட்சிதான் நடந்து கொண்டிருந்தது. இந்த தலைப்பு வைப்பதனால் வரும் அடக்குமுறைகளை எதிர்பார்த்து ஆலோசித்து விட்டே வெளியிட்டோம்.

ஊடக தர்மம், நியாயம், கொள்கை, அறம் போன்றவை மற்ற ஊடகங்களின் காலில் மிதிபடும் பொருட்கள். அதற்கு மெரினாவில் அகற்றப்பட வேண்டிய குற்றவாளியாக கொலுவிருக்கும் ஜெயாவே சாட்சி

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்.

இணையுங்கள்:

விவசாயத்தின் அழிவு வளர்ச்சியா ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2017

0

ந்தியா முழுவதும் விவசாயிகளின் தற்கொலை நடந்த காலத்தில் தமிழ கத்தில் விதிவிலக்காக சில மரணங்கள் மட்டும் இருந்தன. ஆனால் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இங்கே மரித்து விட்டனர். காவிரி டெல்டா மட்டுமல்ல, கன்னியாகுமரி தொடங்கி திருவள்ளூர் மாவட்டம் வரை, கடலூர் தொடங்கி ஒசூர் வரை எங்கும் விவ சாயம் மாபெரும் அழிவை சந்தித்து வருகிறது.

சென்ற ஆண்டு கர்நாடகத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்த நேரத்தில்தான், மோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள் குறைந்திருப்பதாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் அறிவித்தார். விவசாயிகளின் தற்கொலைகளுக்கு கடன் சுமையோ, விவசா யப் பிரச்சினைகளோ அல்ல தனிப்பட்ட குடும்ப பிரச்சினகளே காரணம் என்றார் இவர். தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் நடந்திருக்கும் விவசாயிகளின் மரணங்களுக்கும் ஒ.பி.எஸ் அரசு இப்படித்தான் வக்கிரமாக விளக்கம் சொல்கிறது.

நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும் ஏரி குளங்களை தூர்வாறுவதற்கும் கால் வாய்களை தூர்வாறுவதற்கும், அரசாங்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் கோடிக் கணக்கான ரூபாய்களை ஒதுக்குகின்றன. அந்த பணம் எங்கே? ராம் மோகன் ராவ் என்ற ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தமிழகத்தின் மணல் கொள்ளையை வடிவ மைத்தார். பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானத்திற்கு வழிவகை செய்த அவரைதலைமைச் செயலாளராக்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா.

விவசாய நிலங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கும் தரகு முதலாளிகளுக் கும் தாரை வார்ப்பதில் மோடி அரசு, காங்கிரசு அரசுடன் போட்டி போடு கிறது. விவசாயத்தின் அழிவு என்பது நதி நீர் பிரச்சினை காரணமாகவோ, பருவமழை பொய்ப்பதன் காரணமாகவோ எதிர்பாராமல் நடக்கவில்லை. கெயில் குழாயும் மீத்தேன்திட்டமும் விவசாயத்தை அழிப்பது என்ற திட்டத் தின் அடிப்படையில் நடப்பவைதான்.

“ஏர் பின்னது உலகு” என்பது வள்ளுவன் காலத்து உண்மையல்ல. இன் றைய எதார்த்தம். நமது நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாக இருப்பதும், மொத்த மக்கட்தொகைக்கும் சோறு போடு வதும் விவசாயம்தான். விவசாயிகளின் தற்கொலையும், விவசாயத்தின் அழிவும் நாடு எதிர்கொள்ளவிருக்கும் பேரழிவுக்கான அறிகுறிகள். இந்த அழிவைத்தான் வளர்ச்சி என்று கொண்டாடுகிறது மோடி அரசு.

அழிவு தமிழகத்தின் கதவைத் தட்டுகிறது. விழித்துக் கொள்வோம்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

  • அரசுப் பெருச்சாளியிடம் அவதிப்படும் விவசாயிகள்
  • மரபணு பயிர் அனுமதி: விவசாயத்தைத் தூக்கிலேற்றும் மோடி!
  • மரத்வாடா சர்க்கரை முதலாளிகள் உருவாக்கிய வறட்சி!
  • விதர்பா ! தொடரும் விவசாயிகளின் வேதனை!!
  • குஜராத் கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஒட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!
  • நம்மாழ்வார்: ஒரு இயற்கை வேளாண்மை மீட்புப் போராளி!
  • நில அபகரிப்பே – இனி விவசாயக் கொள்கை!
  • கெயில் தீர்ப்பு : ராமன் பாலத்துக்கு நீதி விவசாயி நிலத்துக்கு அநீதி!
  • விவசாயிகள் வாழ்வை அழிக்கும் G-9 வாழை விவசாயம்
  • இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்!
  • காவிரி : தேசிய ஒருமைப்பாட்டை நிறுத்து!
  • விவசாயிகள் தற்கொலை: மோடியின் பொய்யும் புரட்டும்
  • காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன்? – நேரடி ரிப்போர்ட்

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

குழந்தைக்கு நல்ல நேரம் – தாய்க்கு கெட்ட நேரம் !

0

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் ரவி. முதுகலை வேதியியல் படித்தவர், நல்லச் சம்பளத்தில் வேலை. இளங்கலை பட்டப் படிப்பு முடித்தவர் ரவியின் காதல் மனைவி. மனைவிக்கு இது இரண்டாவது பிரசவம். முதல் குழந்தை அறுவைச் சிகிச்சை மூலம் பிறந்தது. இரண்டாவது கர்ப்பம் எட்டு மாதம் முடிவதற்குள் ஏற்கனவே போட்ட ஒட்டுத்தையல் கொஞ்சம் பிரிந்து விட்டதால் வலி ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

maternity psமருத்துவரோ குழந்தை போதுமான வளர்ச்சி அடையவில்லை அதனால் இன்னும் மூன்று வாரங்களுக்கு வயிற்றில் இருந்து தான் ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறார். வலி குறைந்தால் தையல் பிரியும் அபாயம் குறைவு. இருந்தாலும் அவ்வப்போது பிரசவ வலிவரும். வலி குறைவதற்கான மருத்துவத்தை செய்து கொண்டு படுக்கையிலேயே ஓய்வெடுக்க வேண்டும். அப்போது தான் தாயும் சேயும் நலமாக இருக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

குழந்தை என்பது மக்களால் மகிழ்ச்சியின் குறியீடாக கொண்டாடப்படும் நிலையில் அந்த மகிழ்ச்சிக்குப் பெண்களால் கொடுக்கப்படும் வலி அதிகம். ஓரிரு நாள் இல்லாது ஒரு மாத காலமாக பிரசவ வலியைப் பொறுத்துக் கொண்டு இருப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஒரு பேருந்து பயணத்தில் கூட தோள் வலி தவிர்க்க தோல் பையத் பேருந்தில் பக்கத்து இருக்கையில் கொடுக்கிறோம். ஆனால் பிரவசச் சுமையை ஒரு பெண் யாரிடம் பகிர முடியும்?

பெண்களின் மறு பிறப்பு பிரசவம் என்பார்கள். அப்படி செத்துப் பிழைக்கும் நேரத்தில் கூட குழந்தை ‘நல்ல நேரத்தில்’ பிறக்க வேண்டும் என்று காட்டுமிராண்டித்தனமாக பலர் முயல்கின்றனர். அதில் ரவியும் ஒருவர். மனைவியின் உடல் நிலையைப் பற்றிக் கவலை இல்லாத ரவி இன்னும் ஒரு வார காலம் தாமதமாகக் குறிப்பிட்ட நாளில் குழந்தைப் பிறந்தால் ஜாதகப்படி ராசிபலன் அற்புதமாக இருக்கும் என்று மருத்துவரிடம் கூறியுள்ளார்.

அறிவியல் வளராத அந்தக் காலத்தில் கூட ஏழை பாழைகளிடம் இந்த கொடூரமான மூட வழக்கம் இல்லை. பண்ணையார்தனமாக வாழ்ந்தோரிடம் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம். மேலும் பெண்ணின் மதிப்பை உணராத காலமது. அரண்மனையின் ஜோதிடர் குறித்துக் குடுத்த நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்று அரச குலப்ப பெண்களுக்கு பிரசவ வலி வந்த பிறகு இயற்கைக்கு மாறாக தலைகீழாகக் கட்டிவைத்துக் குழந்தை பிறக்கும் நேரத்தைத் தள்ளி வைத்தக் கதையெல்லாம் உண்டு. ஆனால் இன்று அறிவியலும், மருத்துவ விழிப்புணர்வும் மேலோங்கிய காலத்தில் இப்படி ‘நல்ல நேரம்’ வேண்டி மனைவியின் உயிரை சூதாடும் நிலையை என்னவென்று சொல்வது?

ரவியின் மனைவிக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளதால் இந்த முறையும் அவர் இறுதி மாதங்களில் பெரும் அவஸ்தையோடுதான் இருந்துள்ளார். திரும்பிப் படுக்க முடியாது, எழுந்து உட்கார்ந்து பிறகு தான் படுக்க முடியும். ஒரு தடவை எழுந்து உட்காரப் பத்து நிமிடமாகும். எழுந்து நடந்தால் வலிக்கொஞ்சம் குறையும் ஆனால் முடியாது. கை, கால் அசைத்தாலே பழைய தையல் பிரிவது போல் இருந்ததால் பாத்ரூம் போகக் கூட யோசிக்கும் நிலையில் இருந்துள்ளார்.

சுடாது என்று தெரியும் வரை தான் கற்பூரத்தை கையில் ஏந்தும் பக்தியெல்லாம் பக்தனுக்கு இருக்கும். கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் தான் அந்தப் பெண்ணும். ஆனால் உயிர் போகும் நிலையில் ராசிபலன் பார்ப்பதை எந்தப் பெண்ணும் சகித்துக் கொள்வதில்லை. காதலித்து கல்யாணம் செஞ்சுகிட்டேன். ஒவ்வொரு நொடியும் நான் படும் வேதனையைப் பார்த்த பிறகும் பிரசவத்தைத் தள்ளிப் போடும் மனம் அவருக்கு எப்படி வந்தது. அந்தாளு மனுசனா மிருகமா என கண் கலங்கியுள்ளார் அந்தப் பெண்.

இத்தனை நாள் பொறுத்துகிட்ட இன்னும் ஒரு வாரம் தானே என்று மனைவியிடம் மன்றாடினார் ரவி. தீபாவளி கொண்டாட முடியாமல் போய்விடும், முதல் குழந்தை ஏமாந்து போய்விடுவான் எனவும் மனதை மாற்ற முயற்சித்துள்ளார். மருத்துவரும், மனைவியும் இதற்கு சம்மதிக்கவில்லை. கடைசியாகக் குலதெய்வ வழிபாடு செய்யும் வரை இரண்டு நாள் பிரசவத்தைத் தள்ளி வைத்து நினைத்ததைக் கொஞ்சமேனும் சாதித்துள்ளார்.child ps

வாடிக்கையாளர்களுக்கு வசதியாக நல்ல நாள் பார்த்து அறுவைச் சிகிச்சை செய்யும் பல மருத்துவர்களில் ரவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவரும் ஒருவர். சிறு நகரங்களில் உள்ள இவரைப் போன்ற மருத்துவர்கள் இப்படித்தான் கம்பெனி நடத்துகிறார்கள். இருந்தாலும் மிகவும் பிரச்சனை உள்ள ஒரு கேசில் இனியும் தாமதம் ஆக்க முடியாது என்பது தான் இந்த மருத்துவரது கருத்தாகஇருந்துள்ளது.

“இந்து மத நம்பிக்கைகளுக்கு பெயர் போனவர்கள் கொங்கு மண்டலத்தில் வாழும் கவுண்டர் சாதி இன மக்கள். பார்ப்பனர் – வேளாளரைப் போல கவுண்டர் சாதி மக்களும் கடவுள் மேல அதிக நம்பிக்கை வைச்சுருக்காங்க. எதைச் செய்தாலும் சடங்கு சம்பிரதாயம் பார்த்து தான் செய்வார்கள். இது போல் இந்த நேரத்தில் கூட தன் உடல்நிலைக் குறித்து முடிவெடுக்க முடியாமல் குடும்பம், கணவன் சொல்லுக்கு செவிசாய்க்க காரணம் இந்தப் பகுதியில் பெண்களுக்கு கட்டுப்பாடு அதிகம்.” என்றார் இந்த தகவலைச் சொன்ன தோழி.

மழைப் பிறப்பும், பிள்ளைப் பிறப்பும் அந்த மஹாதேவனுக்கேத் தெரியாது என்ற பழமொழியை மாற்றி அமைத்தது அறிவியல். அந்த அறிவியல் வளர்ச்சியை முறியிடிக்கும் முகமாக அழிக்க முடியாத இரவு நேரக் கொசு போல ஆன்மீகம் இன்றும் மக்களை கடித்து வருகிறது.  குழந்தை பிறந்த நேரத்தை வைத்து தான் இதுவரை ஜாதகம் எழுதப்பட்டது. இப்பொழுது அதிஷ்டத்தைத் தனதாக்கிக் கொள்ள நல்ல நேரத்தைத் தெரிவு செய்து குழந்தைப் பிறப்பை நடத்துகிறார்கள் ஆன்மீகத்தைக் கண்மூடித் தனமாக நம்பும் மக்கள்.

கரு தாயின் வயிற்றில் 300 நாள் தான் இருக்க முடியும் என்பது இயற்கை. அதுக்கு முன் ஏதாவது பிரச்சனை என்றால் மருத்துவம் கை கொடுக்க வாய்ப்பிருக்கு. 400-வது நாள் தான் நல்ல நாள் என்று தாமதப்படுத்த முடியுமா? குழந்தை என்பது மனிதனின் பரிணாம வாழ்க்கைச் சுழற்சியின் இயற்கை நிகழ்வு. மனிதனுக்கு எந்த ஆபத்தும் இல்லாது அறிவியலின் துணை கொண்டு பார்க்கத் தான் மருத்துவம். ராகு காலம், எமகண்டம், வளர்பிறை, தேய்பிறை, பாத்து பக்குவமா செய்யறதுக்கு பிரசவம் ஒன்னும் பாட்டி சுடுற பலகாரம் கிடையாது.

ஜெயலலிதாவும், சசிகலாவும் தமிழகத்தின் அனைத்துக் கோவில்களிலும் சகலவிதமான சடங்கு, யாகங்களைச் செய்திருக்கிறார்கள். ஊட்டியில் கஜ முக யாகம் முதல் திருநள்ளாற்றில் காஞ்ச மிளகாய் யாகம் வரை எதையும் விடவில்லை. ஆனால் இன்று ஜெயா சமாதியை குற்றவாளியின்  சமாதி என்றும், சசிகலா குற்றவாளியாக பெங்களூருவிலும் இருப்பதை யார் மறைக்க முடியும்?

எப்போது பிறந்தோம் என்பதல்ல, என்ன செய்தோம், எப்படி வாழ்ந்தோம் என்பதை வைத்தே மனிதர்கள் மதிப்பிடப்படுகிறார்கள். ஆகவே உங்கள் குழ்ந்தைகள் தாயின் வேதனையை குறைக்கும் நேரத்தில் பிறக்கட்டும். இல்லையேல் அதை மருத்துவம் முடிவு செய்யட்டும். மதி கெட்டு ஜோதிடம், ஜாதகம் என்று ஒரு பெண்ணின் உயிரோடு விளையாடாதீர்கள்.

-சரசம்மா
(உண்மைச் சம்பவம் – பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

ஜெயா பெயரை நீக்கு – அதிமுக சொத்துக்களைப் பறிமுதல் செய் ! மக்கள் அதிகாரம்

4

ஜெயா சமாதியில் அடித்துச் சபதம் போடும் ஆத்திரம்! தீர்ப்புக்குக் குற்றவாளி கொடுக்கும் மரியாதை இதுதான்!

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 16.02.2017 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு. தோழர்கள் கணேசன், ராஜு, கற்பகவிநாயம் செய்தியாளர்களிடம் பேசுகின்றனர்.

சொத்துக் குவிப்புக் கிரிமினல் குற்ற வழக்கில் இறந்துபோன ஜெயலலிதா உட்பட நால்வரும் குற்றவாளிகள் என அறிவித்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்குமான சிறைத் தண்டனையை உறுதி செய்திருக்கிறது, உச்சநீதிமன்றம். சிலர் வாதிடுவதைப்போல “வரலாற்றுச் சிறப்புமிக்கதோ, அரசியல்வாதிகளுக்கு ஒர் எச்சரிக்கையோ, பாடமோ, காலதாமதமானாலும் இறுதியில் நீதி வென்றதாகக் கருதி வரவேற்கத்தக்கதோ” அல்ல.

அவர்கள் நால்வரும் தண்டிக்கப்பட வேண்டிய கிரிமினல் குற்றவாளிகள்தாம் என்பது ஊரறிந்த உண்மை. வேறுவழியின்றி நாட்டு மக்களிடையே ஏற்கெனவே நீதிமன்றங்களின் மீது வேகமாகச் சரிந்து விழும் நம்பிக்கையை மீட்பதற்கான இறுதி முயற்சியின் ஒரு பகுதிதான் இந்தத் தீர்ப்பு.

தன் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் இலஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுக்களை வரம்புக்குட்பட்ட முறையில் மட்டுமே விசாரணை  நடத்தி, குறைந்தபட்ச தண்டனை மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. கணவன், மனைவி இணையாமல் குழந்தை பிறக்காது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீதிபதிகள் கூட்டு இல்லாமல் ஊழல் முறைகேடுகள் செய்திருக்க முடியாது.

ஜெய-சசி கும்பலுக்கு மட்டுமே தண்டனை; ராம் மோகனராவ், குமாரசாமி, தத்துக்களுக்கு என்ன தண்டனை? இது என்ன நீதி? இவர்கள் போட்ட சட்டத்திட்டங்கள் எடுத்த நடவடிக்கைகள் செல்லுமா? நியாயமானவையா?

மிகப்பெரிய ஊழல், முறைகேடு புரிந்த ஒரு கிரிமினல் குற்றவாளி தண்டனையின்றி 21 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தையும், உல்லாச ஊதாரி சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து, நாட்டையே கொள்ளையிட்டு, மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாங்கிக் குவித்துள்ளார். அதனால்தான், சாதாரண கிரிமினல் குற்றவாளிகளே சிறைச்சாலைகளை ஐந்து நட்சத்திர விடுதிகளாக மாற்றிக்கொண்டு, அங்கிருந்தவாறே குற்றக்கும்பல் தலைவர்களாகி ஆதிக்கம் புரியும் இந்த அமைப்பில், சிறை செல்லும்போதுகூட ஜெயா-சசி கும்பல் நெஞ்சை நிமிர்த்துகொண்டு, தனது பரிவாரப்படைகள் புடைசூழ சிறைத் தண்டனைகளுக்கு அஞ்சமாட்டோம் என்று சவால்விட்டுப் போகிறது.

ஆனால் இந்த தீர்பைத்தான் ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை, பாடம் என்றெல்லாம் நம்பச் சொல்லுகிறார்கள். பொதுச்சொத்துகளை மட்டுமல்ல, தான் ஆசைப்படும் தனியார் கட்டுமானங்கள், வியாபாரங்கள், தொழில்கள், நிலங்கள் எல்லாவற்றையும் உருட்டி மிரட்டி அபகரித்துக் கொண்டார்கள். ஜெயா-சசி கும்பலின் குரூரமான ஆட்சியதிகாரத்தால் போலி மோதல்களால் பலர் கொல்லப்பட்டனர்; பலர் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். பலரது வாழ்வும் சிதைக்கப்பட்டன. உடலும் மனித உரிமைகள் காலில்போட்டு மிதிக்கப்பட்டன. இந்த தேசத்தின் ஆறுகள், மலைகள், கடற்கரைகள், குடிநீர் உட்பட அனைத்து இயற்கை வளங்களும் சூறையாடப்பட்டு, இந்த சமூகத்தையே போதையில் தள்ளி, இதன் பகுத்தறிவும் பண்பாடும் சீரழிக்கப்பட்டன.

இத்தகைய பகற்கொள்ளை வேட்டைக்காகவே அரசிலும், வெளியிலும், கட்சியிலும் திட்டமிட்டு ஒரு தொழில் முறைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த ஊழல்-கிரிமினல் கொள்ளைக் கும்பல் அரசுக் கட்டமைப்போடு கலந்து அதற்கு இணையாகத் தம்மை எதிர்ப்போரும் கேட்போரும் அஞ்சும் நிலையை உருவாக்கிவிட்டனர். அந்தக் கும்பலிடம் காலில் விழுந்து நத்திப் பிழைப்பது மட்டுமே முடியும். எந்த உரிமையும் போராடிப் பெறமுடியாது என்ற பயபீதியை, அவநம்பிக்கையை அடிவரை பரப்பி விட்டார்கள்.

ஓட்டுக்கட்சி வரம்புக்குள், சட்டவரம்புக்குள், இந்த அரசமைப்புக்குள் தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பி மக்கள் சிந்திப்பதும், காத்திருப்பதும், ஏமாந்து போவதும் தான் பிரச்சனை. இனி, ஒரு அநீதி நடக்கும்போது, இன்னொரு கும்பலிடம் போய்த்தான் நியாயத்தை முறையிட வேண்டும் என்ற நிலையை மாற்றி, மக்களே நேரடியாகத் தலையிட்டுத் தட்டிக்கேட்கும் துணிவையும், நீதியையும் நிலைநாட்ட முடியும் என்ற நம்பிக்கையையும் சமூகத்துக்கு ஏற்படுத்த வேண்டும்.

இனி ஒரு முறை இதுபோல கிரிமினல் குற்றங்கள் செய்துவிட்டு யாரும் தப்பித்துகொள்ள முடியாது என்று பயபீதி கொள்ளும் வகையிலான தண்டனையை மக்களே நேரடியாக வழங்க வேண்டும். அத்தகைய அதிகார முறையைக் கொண்டுவரவேண்டும்.

மாணவர்களே, இளைஞர்களே வாருங்கள்! தமிழகத்தை மெரினாவாக்குவோம்!

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட வேண்டும்.

ஜெயாவின் சின்னத்தை வைத்து போற்றுவது எதிர்கால சமூகத்திற்கு தவறான சமிக்ஞை ஆகிவிடும்.

  •  மெரினாவில் அரசு மரியாதையுடன் உள்ள ஜெயா சமாதியை உடனே அகற்ற வேண்டும்.
  • அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயா புகைப்படத்தை நீக்க உத்தரவிட வேண்டும்.
  • மாணவர்கள் தங்கள் பாட நூல்களில் உள்ள கிரிமினல் ஊழல் குற்றவாளி ஜெயாவின் படத்தை திருவள்ளுவர் படத்தை ஒட்டி மறைக்க வேண்டும்.
  • விலையில்லாப் பொருட்களில் உள்ள ஜெயா படத்தை மக்கள் அழிக்க வேண்டும்.
  • ஜெயா சசியின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
  • அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சொத்துக்கள், மற்றயம் ஜெயா காலத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளின் சொத்துக்கள் இவை அனைத்தும் பொது தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.இது தனிநபர் மீதான வெறுப்பு அல்ல. தமிழகத்தை கொள்ளையடித்த, சீரழித்த ஒரு கொள்ளை கும்பலின் தலைமை ! ஜெயா-சசி கும்பலை தமிழகத்தின் தீய சக்தியாக கருத வேண்டும். ஊழல் செய்பவர்களுக்கு மக்களின் இந்த செயல்தான் பாடமாக அமையும். நீதிமன்றத் தீர்ப்புக்களை கண்டு எந்த ஊழல்வாதியும் பயப்பட போவதில்லை.

இவண்
வழக்குரைஞர் சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 99623 66321

இரட்டிப்பாவது விவசாய வருமானமா? விவசாயிகள் சாவா?

0

fiscal-budget-7591ருவமழை எதிர்பார்த்த அளவிற்கும் மிகக்குறைவாக பெய்திருப்பதாலும், மற்றும் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும் நாடு முழுவதும் விவசாயமும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களைப் போலவே பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களிலும் விவசாயிகளின் சாவு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. கோதுமைக் களஞ்சியமான பஞ்சாப்பில் கடன் நெருக்கடியால் இரண்டு நாளுக்கு மூன்று விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என பத்திரிகை செய்திகள் வெளிவரும் இச்சூழ்நிலையில் மோடி அரசு 2017-18–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்திருக்கிறது !

“விவசாயிகள் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம்” என்று சவடால் அடிக்கும் மோடி அரசு, இந்தப் பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்காக மொத்தம் 51,026 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. இது மொத்த பட்ஜெட்டில் வெறும் 2.3%தான்!

நீர்பாசனம் மற்றும் நீராதாரங்கள் திட்டங்களுக்காக கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கிய 20,000  கோடியில் என்னென்ன திட்டங்கள் நடந்தது என்ற விளக்கமேதும் இல்லாமலே, இந்த பட்ஜெட்டிலும் 20,000 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள் ! இப்போதும் கூட இத்தொகை எப்போது, எங்கு, என்னென்ன திட்டங்களுக்காக செலவிடப்படும், எந்த அரசு அமைப்பின் கீழ் கண்காணிக்கப்படும் என்று எந்த விவரமும் பட்ஜெட்டில் சொல்லப்படவில்லை ! இந்த லட்சணத்தில் நடுத்தர, நுன்பாசனத் திட்டங்களுக்கான நிதியம் அமைக்க தனியாக 5,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது ! இவ்வாறு ஒதுக்கப்படும் பல்லாயிரம் கோடிகள் எங்கு போகிறது என்பது மோடி வகையறாவுக்கே வெளிச்சம்!

punjab-farmer
வறட்சியின் பிடியில் பஞ்சாப் விவசாயி

விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கு 10 லட்சம் கோடிரூபாய் இலக்கு தீர்மானித்திருப்பதாகக் கூறும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடன் மானியத்திற்கு என 15,000 கோடி ரூபாயை ஒதுக்கி மானியத்திற்கும் வரம்பு நிர்ணயித்திருக்கிறார். இதை மாநிலவாரியாகப் பிரித்தால் சராசரியாக ஒரு மாநிலத்திற்கு 460 கோடிதான் மானியமாக கிடைக்கும். அப்படியானால் எத்தனை பேருக்கு மானியக் கடன் கிடைக்கும்? இதில் சிறுகுறு விவசாயிகள் எத்தனைபேருக்கு வழங்கப்படும்? எந்தெந்த வகைக்கடனுக்கு இந்த மானியம் பொருந்தும்? அல்லது பொருந்தாது என்று எவ்வித வரையறையும் பட்ஜெட்டில் விளக்கப்படவில்லை ! மேலும், விவசாயிகளுக்கு கடன் வழங்கப்போவதாக சொல்லும் 10 லட்சம் கோடிரூபாய் என்பது மத்திய அரசு நேரடியாக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகையல்ல. இது வங்கிகள் வழங்கும் விவசாயக் கடனுக்கான இலக்குதான்! வங்கிகள் வழங்கும் இந்தக் கடனுக்கான மானியமாகத்தான் 15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது! அதாவது இத்தொகையை அரசு நேரடியாக வங்கிகளுக்கு செலுத்திவிடும்! எனவே இந்த மானியத்தை அனுபவித்தவர்கள் சிறு குறு விவசாயிகளா அல்லது விவசாயிகள் பெயரில் செயல்படும் வேளாண் வர்த்தக நிறுவனங்களா என்ற விவரம் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டுவிடும்!

வங்கிகளை தனியார் மயமாக்கும் நோக்கத்தில், “பொதுத்துறை வங்கிகள் லாபகரமாக இயங்குவதை சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகங்கள் உத்தவாதம் செய்துகொள்ளவேண்டும்” என்று ஏற்கனவே, மத்தியஅரசு உத்தரவிட்டுள்ள நிலையில், யாருக்கு எவ்வளவு கடன் வழங்குவது? வழங்கக்கூடாது என்பதை வங்கிகளின் கிளை மேலாளர்கள்தான் நடைமுறையில் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள்! சாதாரணப் பயிர்கடன் பெறுவதற்கே “வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும்! இரண்டுவருட கணக்குப் பராமரிப்பும், குறைந்தபட்ச இருப்புத் தொகையும் கணக்கில் இருக்க வேண்டும்!” என்று கறார் காட்டுவார்கள். இதற்கும் மேலாக கிளைமேலாளரின் கடைக்கண் பார்வையும் இருந்தால்தான் கடன்பெற முடியும்!

டிராக்டரை விற்பதாக சந்தையில் நிற்த்தி வைத்திருக்கும் தல்வாண்டி (பஞ்சாப்) விவசாயிகள்
டிராக்டரை விற்பதாக சந்தையில் நிற்த்தி வைத்திருக்கும் தல்வாண்டி (பஞ்சாப்) விவசாயிகள்

நிலத்தை ஈடுவைத்து கடன் வாங்க வேண்டுமானால், போர்வெல் இருக்கிறதா? எத்தனை அடியில் தண்ணீர் இருக்கிறது? அதில் எத்தனை மணிநேரம் பாய்ச்சல் இருக்கும்? என்ன பயிர் இருக்கிறது? அதன் ஆண்டுவருமானம் எவ்வளவு? விவசாயம் தவிர வேறு என்னென்ன வருமானங்கள் இருக்கிறது? குடும்பத்தில் எத்தனை பவுன் நகை உள்ளது? சொந்தவீடா வாடகைவீடா ஒத்தியா? சொந்தவீடு என்றால் அது யார் பெயரில் இருக்கிறது? எத்தனை சதுரஅடி? அதன் சந்தை மதிப்பு எவ்வளவு? இதுதவிர, நிலத்திற்கு 32 வருட வில்லங்க சான்றிதழ், நோட்ரிபப்ளிக் சான்று, பட்டா, சிட்டாஅடங்கல், என்று தனிப் புத்தகம் போடுமளவுக்கு உத்தரவாதம் காட்டவேண்டும்! இதற்கெல்லாம் பிறகு நிலத்தை நான்கு, ஐந்து முறையாவது  வங்கி அதிகாரிகள் பார்வையிட்டுத்தான் கடன் தருவதற்கு சம்மதமே தெரிவிப்பார்கள்! இறுதியாக, விவசாயி தனது சொந்த செலவில் நிலத்தை வங்கிக்கு கிரையம் செய்து கொடுக்க வேண்டும் ! இதற்கே ஆறு மாதங்கள் ஓடிவிடும்! நடுத்தர விவசாயிகள் கூட இந்த நடைமுறை சிக்கலுக்கு பயந்தே பாதிப்பேர் வங்கிக்கடன் வாங்குவதைக் கைவிட்டுவிட்டு தனியார் பைனான்ஸ் கும்பலிடம் அடைக்கலமாகி விடுகிறார்கள்!

இந்த எதார்த்தத்தைக் கடந்து எத்தனை விவசாயிகளால், மோடி சொல்லும் 10 லட்சம் கோடியை கடனாக பெறமுடியும்? ரிலையன்ஸ் ஃபிரஷ், ருச்சி, டாபர் போன்ற ஏற்றுமதிக்கான நவீன விவசாயம் செய்பவர்களும், குளிர்பதனக் கிடங்கு நடத்துபவர்களும், வேளாண் தரகுத்தொழில் செய்பவர்களும்தான் பெருமளவில் விவசாயக் கடன் பெறுகிறார்கள் ! உண்மை என்னவென்றால் இவர்கள் யாரும் கிராமங்களில் தொழில் செய்வதில்லை. பெரு நகரங்களில்தான் செயல்படுகிறார்கள் ! “மராட்டிய மாநிலத்தில் கடந்த வருடம் வழங்கப்பட்ட வேளாண் கடனில் 40% மும்பை நகரில் உள்ள இத்தகைய நிறுவனங்களுக்குத்தான் சென்றிருக்கிறது” என்கிறார் பொருளாதார ஆய்வாளர் பிரபாட் பட்நாயக் ! ஆனால், சிறுகுறு விவசாயிகளில் 40% பேர் வங்கிக்கடன் பெற வசதியின்றி  தவிப்பதாக மத்திய அரசே வெட்கமின்றி கூறிவருகிறது!

தண்ணீரின்றி காய்ந்துபோன நெற்கதிரை மாட்டுதீவனத்திற்காக அறுத்து செல்லும் உ.பி விவசாயி

பயிற்காப்பீட்டு திட்டத்திற்காக இந்த பட்ஜெட்டில் 9,000  கோடியை ஒதுக்கியுள்ள ஜெட்லி, நாட்டின் 40% விவசாயிகளை இதில் இணைக்கப் போவதாக பெருமையுடன் கூறுகிறார் ! ஆனால் உண்மை என்ன? கடந்த 2016-17 பட்ஜெட்டில் இதே திட்டத்திற்காக 5,500 கோடி ஒதுக்கப்பட்டது. இது ஆண்டு முடிவில் (திருத்தப்பட்ட மதிப்பீட்டின் படி)  13,500 கோடியாக உயர்ந்துவிட்டது! இதன்மூலம் நாட்டின் 26% விவசாயிகள் இணைக்கப்பட்டதாக நிதியமைச்சர் கூறுகிறார். 26% பேருக்கு 13,500 கோடி செலவாகியிருக்கும்போது நடப்பு பட்ஜெட்டில் 40% பேருக்கு 9000 கோடி ஒதுக்கீடு என்பது எந்த ‘குமாரசாமி’யின் கணக்கு என்று தெரியவில்லை!

9000 கோடி, 13,500 கோடி என்பதெல்லாம், தாங்கள் காப்பீடு செய்துள்ள தொகைக்கு விவசாயிகள் செலுத்தும் பிரிமியத் தொகைக்கு, மத்தியஅரசு கொடுக்கம் மானியத் தொகைகள். இத்தொகை முழுவதும் பயிர் காப்பிட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசால் நேரடியாக வழங்கப்பட்டுவிடும் என்பதே உண்மை! ஏற்கனவே அரசு காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டுவந்த இடத்தில், ICICI LAMBARD, IFFCO-TOKIYO, HDFC போன்ற 16 அன்னிய தனியார் காப்பீட்டு நிறுவனங்களை பயிர் காப்பீட்டுத் துறையில் செயல்பட மோடி அரசு அனுமதி வழங்கியுள்ளது ! விவசாயிகளின் நலனுக்காக அல்ல, இந்நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காகவே ஒவ்வொரு ஆண்டும் இத்தொகையை அதிகரித்து வருகிறது மத்திய அரசு!

mp-young-farmers-lost-job
விவசாய வேலை இழப்பால் பாதிக்கப்பட்ட ம.பி கிராம இளைஞர்கள்

“விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்தி செலவுடன், 50% லாபமும் சேர்த்து விலை நிர்ணயம் செய்யவேண்டும்” என்ற M.S.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமுல்படுத்தக் கோரும் விவசாயிகள் சங்கங்களின் கோரிக்கையை, இன்றுவரை கிடப்பில் போட்டுவைத்துள்ள மோடி அரசு, ரிலையன்ஸ் ஃபிரஸ் போன்ற வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமான டிஜிட்டல் வேளாண் சந்தைகளை 585 ஆக உயர்த்தப்போவதாக அறிவித்திருக்கிறது! மேலும் பால்பொருள்கள் பதப்படுத்தும் தொழில் வளர்ச்சிக்காக நபார்டு வங்கிமூலம் நிதியம் அமைப்பதற்காக 8,000 கோடியை ஒதுக்கியுள்ளனர்!  ஆவின் போன்ற உள்நாட்டு பால்நிறுவனங் களை ஒழித்துக்கட்டிவிட்டு அன்னிய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கே இந்த நிதியம் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

மொத்தத்தில், விவசாயத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களை வரையறையின்றி அனுமதித்து, விவசாயத்தை அவர்களின் வேட்டைக் காடாக்குவதே மத்திய மாநில அரசுகளின் திட்டமாக இருந்து வருகிறது. இதையே தனது பட்ஜெட்டிலும் உறுதி செய்திருக்கிறார்கள் மோடியும், ஜெட்லியும்!

இந்த வேசித்தனத்தை மூடிமறைப்பதற்காக , “2019-க்குள் ஒருகோடி ஏழைகளை வறுமையிலிருந்து மீட்கப்படும், வீடில்லாத ஒருகோடி ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும், வறட்சியை சமாளிக்க 10 லட்சம் குளங்கள் வெட்டப்படும்” என்று சில வாசனைத் திரவியங்களைத் தெளித்து விட்டிருக்கிறார்கள்!

“இந்தியா விவசாயக் குடும்பங்களின் சராசரி மாதவருமானம் 3,800 ரூபாய்! விவசாயிகளின் சராசரி கடன்அளவோ 47,000 ரூபாய்! (சில மாநிலங்களில் இது ஒரு லட்சத்திற்கும் மேல் !) நாட்டின் 52% விவசாயக் குடும்பங்கள் கடனில் சிக்கித்தவிக்கின்றன !” என்று பல்வேறு அரசுக் குறிப்புகளே கூறுகிறது!

4.பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்ட குஜராத் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்ட குஜராத் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

“தினமும் 2000 விவசாயிகள் தனது விவசாய அடையாளத்தை இழந்து வெளியேறுகிறார்கள்.  ஒவ்வொரு மணிநேரமும்  சராசரியாக 47 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்!” என்கிறார் பிரபல வேளாண் ஆய்வாளர் திரு.சாய்நாத்!

மோடி கூறுவதுபோல, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகவில்லை! மாறாக, விவசாயிகளின் வறுமையும், கடனும், விவசாயத்தின் அழிவும், தற்கொலைச் சாவுகளுமே இரட்டிப்பாகி வருகிறது! விவசாயிகள் இரட்டிப்பு வருமானத்தைக் கேட்கவில்லை. கண்ணியமாக வாழ்வதற்கான வருமானத்திற்கு உத்தரவாதம் தாருங்கள் என்றுதான் கேட்கிறார்கள்! பன்னாட்டுக் கம்பெனிகளின் பாதுகாவலனான மோடியின் காதுகளில் விவசாயிகளின் குரல் ஒலிக்கும் என நம்புவது அப்பாவித் தனமல்லவா!

– மாறன்,
விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்.

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2017 மின்னிதழ்

0

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. பன்னீர் எதிர் சசி:  முன் விட்டையா, பின் விட்டையா?
இரண்டு திருடர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது? சிரித்த முகமும் அடிமைக்குரிய பணிவும் காட்டும் பன்னீரையா? மன்னார்குடி மாஃபியாவின் தலைவியான சசிகலாவையா?

2. மிக்சர் பன்னீரா? மிஸ்டர் பன்னீரா?
தலை முதல் கால் வரை கிரிமினல்மயமாகிவிட்ட இந்த அரசமைப்புக்குள் யாராவது ஒருவரை அதிகாரத்தில் அமர்த்திவிட்டு, பிறகு ஏமாந்துவிட்டதாகப் புலம்பியது போதும். “அதிகாரத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்வதுதான் ஜனநாயகம்” என்று புரிந்து கொண்டோமானால், புதிய புதிய வாயில்கள் திறக்கும்.

3. மக்கள் அதிகாரம் விடுத்த மெரினா பிரகடனம்!
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான தோழர் ராஜு 22.1.17 அன்று மெரினாவில் திரண்டு போராடிய மக்களிடையே ஆற்றிய உரை(சுருக்கப்பட்ட வடிவம்).
ஜல்லிக்கட்டு கோரிக்கை என்பது ஒரு குறியீடு மட்டுமே என்று வலியுறுத்தி, தமிழக மக்களின் மெரினா போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் சார்பாக 11 கோரிக்கைகளை உள்ளடக்கிய மெரினா பிரகடனம் வெளியிடப்பட்டது.

4. மெரினா எழுச்சி : அடித்தாலும் அடங்காது இது வேறு தமிழ்நாடு!
போராட்டமென்றும் கொண்டாட்டமென்றும் பலவாறாக விளக்கப்படுகின்ற மெரினா எழுச்சி என்பது தனியொரு கோரிக்கைக்கான போராட்டமல்ல. இது ஒரு உணர்வெழுச்சித் தருணம். ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தின் ஒரு மனநிலை.

5. விவசாயி பயிரை வளர்க்கவில்லை, பிள்ளையை வளர்க்கிறான்!
தொழில் நொடித்து, கடனாளியாகும் ஏனைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் கொத்துக்கொத்தாகத் தற்கொலை செய்து கொள்ளாதபோது, விவசாயிகள் மட்டும் உயிரை மாய்த்துக் கொள்ளும் காரணம் இதுதான்.

6. வறட்சி நிவாரணம்: வரும், ஆனா வராது!
தமிழக அரசு அறிவித்திருக்கும் பயிர் இழப்பீடு தொகையும், காப்பீடு தொகையும் கைக்குக் கிடைப்பதற்குள் விவசாயிகள் செத்துச் சுண்ணாம்பாகி விடுவார்கள்.

7. புதிய பயிர்க் காப்பீடு: விவசாயிகளை வஞ்சித்த மோடி!
மோடி அரசு கொண்டுவந்திருக்கும் தேசிய வேளாண் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்குச் சுண்ணாம்பையும், தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு வெண்ணெயையும் வழங்குகிறது.

8. நுண்கடன் நிறுவனங்கள் – மகளிர் சுய உதவிக் குழுக்கள்: தனியார்மயம் உருவாக்கிப் பரப்பும் விஷக்கிருமிகள்!
பண்ணையார்களுக்கும் கங்காணிகளுக்கும் பயந்து நடுங்கிய மக்கள், இப்பொழுது நுண்கடன் நிறுவனங்களின் வட்டிப் பணம் வசூலிக்கும் துரைமார்களைக் கண்டுதான் அச்சப்படுகிறார்கள்.

9. விவசாயி வீட்டில் இழவு: யார் குற்றவாளி? இயற்கையா? அரசின் உதாசீனமா?
சாகுபடி பரப்பு குறையக்கூடாது, உற்பத்தி குறையக்கூடாது என உத்தரவிடும் அரசு, விவசாயத்திற்கு அடிப்படையான பாசன வசதிகளை, நீர்நிலை பராமரிப்பைத் திட்டமிட்டு புறக்கணிக்கிறது, அழிக்கிறது.

10. போலீசு ராஜ்ஜியம்! எழுந்து நின்ற தமிழகமே, எதிர்த்து நில்!

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

மெரினா எழுச்சியின் அனுபவத் தொகுப்பு – தோழர் மருதையன்

3

மெரினா எழுச்சி : அடித்தாலும் அடங்காது இது வேறு தமிழ்நாடு !

ந்த மாபெரும் மக்கள் எழுச்சியை கண்ணால் பார்ப்பதற்காகவேனும் இன்னும் சில நாட்கள் ஜெயலலிதா வாழ்ந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. மெரினா எழுச்சியின் நாட்களில், ஜெயலலிதாவின் கல்லறை அங்கு இருப்பதை கடற்கரையே மறந்து விட்டது. “அம்மா இருந்திருந்தால் கிழித்திருப்பார்” என்று தொலைக்காட்சி விவாதத்தில் பேசுவதற்குக்கூட ஒரு அடிமையோ கைக்கூலியோ இல்லை. “தமிழகத்தின் சுக துக்கங்கள் அனைத்தையும் நிர்ணயிப்பது தான் மட்டுமே” என்றெண்ணி இறுமாந்திருந்த ஒரு சர்வாதிகாரி, குப்பையைப் போல தமிழ் மக்கள் தன்னை ஒதுக்கித் தள்ளியதைப் பார்க்காமலேயே போய் விட்டாரே என்று நினைக்கையில் கொஞ்சம் வருத்தமாக்தான் இருக்கிறது.

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்தப் போராட்டமே நடந்திருக்காது என்று கருதுவோர் உண்டு. ஏனென்றால், தன்னுடைய தைரியத்திலும் அறிவாற்றலிலும் கருணையிலும்தான் தமிழகம் பிழைத்திருப்பதைப் போன்ற தோற்றத்தை ஜெயலலிதா தொடர்ந்து ஏற்படுத்தி வந்தார். உண்மை அவ்வாறில்லை. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களில் சுமார் 25% தமிழகத்தில்தான் நடந்திருக்கின்றன. சென்ற ஆண்டு நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சி என்பது சமீபத்திய சான்று.

இருப்பினும், ஈழம், காவிரி, முல்லைப் பெரியாறு, கூடங்குளம், மூவர் தூக்கு, கெயில், மீதேன் உள்ளிட்ட பிரச்சினைகள் அனைத்திலும், மக்கள் போராட்டத்தின் மீது ஜெயலலிதா சவாரி செய்தார். அப்போராட்டங்களின் புரவலராகத் தன்னைக் காட்டிக்கொண்டே அவற்றைச் சீர்குலைத்தார். இதனை ஆமோதித்துக் கூவுவதற்கு நத்திப் பிழைக்கும் கட்சிகளும் தலைவர்களும் இருந்த காரணத்தினால் இந்தப் பொய்மை உண்மையானது.

ஜெயலலிதாவை  “மாநில உரிமைப் போராளி”யாக சித்தரிப்பதன் வாயிலாக, பார்ப்பன-இந்து தேசியத்துக்கு எதிரான திராவிட இயக்க அரசியலை அடியறுப்பதும், தமிழ் மக்களை அடிமை மனநிலையிலேயே இருத்தி வைப்பதும் ஆளும் வர்க்கத்தினரின் நோக்கமாக இருந்தது. நெடுஞ்சாண் கிடையாக காலில் விழுந்து கிடக்கும் அ.தி.மு.க. அடிமைகள், வளைந்து நெளியும் அதிகார வர்க்கம், சுயமரியாதையற்ற ஊடகங்கள், இலவசத் திட்டங்கள், வாக்குகளை விற்கப் பயிற்றுவிக்கப்பட்ட வாக்காளர்கள் என்று எல்லாத் திசைகளிலிருந்தும் தமிழ்ச் சமூகத்தின் மனதில் அடிமை மனோபாவமும் திணிக்கப்பட்டது. இவையனைத்தையும் மீறி நடந்தவைதான் தமிழக மக்களின் போராட்டங்கள்.

அ.தி.மு.க. என்ற கொள்ளைக் கூட்டத்துக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கிளர்ந்தெழுவதற்கான காரணங்கள் தமிழ் மக்களுக்கு ஏராளமாக இருந்தன. எனினும், இந்த எதிர்வினையின் பரிமாணம் வியக்கத்தக்கது.  இது, தமிழ்ச் சமூகத்தின் உடல் முழுவதிலும் அட்ரீனலின் பொங்கிப் பாய்ந்ததைப் போன்றதொரு எழுச்சி! அடிமைத்தளையில் புழுங்கிக் கொண்டிருந்த சமூகம், தானே அறிந்திராத ஒரு கணத்தில் அதனை அறுத்தெறிந்து மேலெழும்பியது போன்றதொரு நிகழ்வு. தன்னிடம் இப்படி ஒரு உள்ளுறை ஆற்றல் இருப்பது கண்டு வியப்புற்ற சமூகம், இது நனவுதானா என்று தன்னைத்தானே கிள்ளிப்பார்த்து உறுதி செய்து கொண்ட ஒரு தருணம்.

போராட்டமென்றும் கொண்டாட்டமென்றும் பலவாறாக விளக்கப்படுகின்ற மெரினா எழுச்சி என்பது தனியொரு போராட்டமல்ல. இது ஒரு உணர்வெழுச்சித் தருணம். ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தின் ஒரு மனநிலை (mood). ஒரு நீண்ட நிகழ்ச்சிப்போக்கில்தான் இந்த மனநிலையை வந்தடைந்திருக்கிறது தமிழகம். எனினும், வெடித்துக் கிளம்பாமல் குக்கர் குண்டு போல தமிழகத்தை அழுத்திக் கொண்டிருந்தது இரும்புப் பெண்மணியின் சர்வாதிகாரம். இரும்புக் குண்டு அகன்றிருக்கவில்லையெனில், மக்கள் போராட்டத்தால் அது அகற்றப்பட்டிருக்கும்.

000

ல்லிக்கட்டு என்பது, காவிரி, முல்லைப்பெரியாறு, கூடங்குளம், மீதேன், கெயில், ஜி.எஸ்.டி, நீட் போன்றவற்றோடு  ஒப்பிடுகையில், ஒரு ‘ஆபத்தில்லாத’ பண்பாட்டுக் கோரிக்கை. ஆளும் வர்க்கத்தினரே கூட அங்கீகரிக்கும் ஒரு கோரிக்கை. பீட்டா என்ற அரூபமான அந்நிய சக்தியை எதிரியாகக் காட்ட முடிவதாலும், கிறித்தவ என்.ஜி.ஓ. சதி என்று பேசுவதற்கான வாய்ப்பு இருப்பதாலும், மோடியின் காலைக் கையைப் பிடித்தாவது சாதித்துவிட இயலும் என்ற நம்பிக்கை இருந்ததனாலும் இக்கோரிக்கையைத் தமிழக பாரதிய ஜனதா தனது கையில் எடுத்துக் கொண்டது.

காவிரி போன்ற பல பிரச்சினைகளில் மோடி அரசு தமிழகத்துக்கு இழைத்த துரோகத்தை மறைப்பதற்கும், “இந்துப் பண்பாடு” எடுபடாத தமிழகத்தில், தன்னை தமிழ்ப் பண்பாட்டின் காவலனாகக் காட்டிக் கொள்வதற்கும் இதைவிட மலிவான வாய்ப்பு கிடைக்காது என்ற காரணத்தினால், “தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு என்று ஒன்று நடந்தால் அதன் பெருமை மோடியை மட்டுமே சாரும்” என்று அடித்துப் பேசிக்கொண்டிருந்தார் பொன்.ராதாகிருஷ்ணன். நடக்காமல் போனால் அதற்கும் மோடிதான் அடிவாங்க வேண்டியிருக்கும் என்று சிந்திப்பதற்கு, அதிக மூளை தேவையில்லை. என்றாலும் பொன்னார் அப்படி சிந்திக்கவில்லை. மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை வீரவசனம் பேசுவதற்குத் தோதான “அடையாளக் கோரிக்கை” என்பதால், வறட்சி, காவிரி முதலான பிரச்சினைகளைக் காட்டிலும் ஜல்லிக்கட்டு அவர்களது கைக்கு அடக்கமானதாக இருந்தது.

தமிழகமெங்கும் சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைக்கும் அதிர்ச்சி மரணத்துக்கும் தள்ளப்பட்டு வந்த சூழலில், விவசாயத்தின் அழிவு, காவிரி உரிமை, நீர் மேலாண்மை, வறட்சி நிவாரணம் ஆகியவையே தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளாக இருந்தன. “உழவன் வீட்டில் இழவு – உனக்கும் எனக்கும் எதற்குப் பொங்கல்?” என்ற முழக்கத்துடன் பொங்கலை கருப்பு நாளாக கடைப்பிடிக்கும்படி அறைகூவல் விட்டிருந்தது “மக்கள் அதிகாரம்”.

இத்தகைய சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் ஒப்பீட்டளவில் கையாள்வதற்கு எளியது என்று மத்திய, மாநில அரசுகள் கணக்குப் போட்டிருக்கலாம். மெரினாவில் கூட்டம் கூடவிடாமல் தொடக்கத்திலேயே அரசும் போலீசும் தடுக்காததற்கு சசிகலா – பன்னீர் அதிகாரப்போட்டி என்பது உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தப் போராட்டத்தை அதன் தொடக்க நாட்களில் அனுமதித்ததற்கும், பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கருதியதற்கும் ஆளும் வர்க்கத்திடமும் அதிகார வர்க்கத்திடமும் பல கணக்குகள் இருந்திருக்கும். பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில்தான் காளையும் கூட அவிழ்த்து விடப்படுகிறது. எனினும், மெரினாவில் “காளை” தப்பிவிட்டது.

இதனைச் சாவி கொடுத்து இயக்கப்பட்ட போராட்டம் என்று புரிந்து கொள்வது அபத்தமானது. மக்களின் சீற்றத்துக்கான தூண்டுதல்கள்தான் போராட்டத்தின் நெம்புகோல்களாக இருந்தன. ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களில் காளை வளர்ப்போரிடமும் ஜல்லிக்கட்டு வீரர்களிடமும் போலீசு கெடுபிடி செய்தது. “மாடுகளை அவிழ்க்க மாட்டோம்” என்று எழுதி வாங்கியது. “மோடி அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்” என்று வீர விளையாட்டுக் குழு தலைவர்களும் கட்சிகளும்  வழக்கம்போல புலம்பினார்கள். ஆனால், அவசரச் சட்டத்துக்காக வழக்கம்போல மக்கள் காத்திருக்கவில்லை என்பதுதான் மாறிவிட்ட புதிய நிலைமைக்கு அறிகுறியாக இருந்தது.

மடிப்புக் கலையாத வெள்ளுடையுடன், வெயில் படாத ஷாமியானாக்களின் கீழ், வரிசை குலையாத நாற்காலிகளில் அமர்ந்து கட்சிக்காரர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, எல்லா இடங்களிலும் தடையை மீறி மக்கள் நடத்திய ஜல்லிக்கட்டுகள் தமிழகமெங்கும் புழுதி கிளப்பின. குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு, அதன் உண்மையான பொருளில், தமிழகம் முழுவதன் கோரிக்கையாக உருவெடுத்து விட்டது. சேலத்திலும் மதுரையிலும் ரயிலைப் பிணையக் கைதியாகப் பிடித்தார்கள் மாணவர்கள். ஜல்லிக்கட்டு டில்லிக்கட்டாக மாறத் தொடங்கிவிட்டது.

000

“விவசாயிகள் துயரத்துக்காகப் போராடாத தமிழ்ச்சமூகம் ஜல்லிக்கட்டுக்காகப் போராடும்போது அதனை ஆதரிப்பதா?” என்றொரு கேள்வி இதனையொட்டி எழுப்பப்படுகிறது. ஒரு பிரச்சினையை மற்றொன்றுடன் எதிர்நிலைப்படுத்தி ஒப்பீடு செய்து எடை போட்டுப் பார்க்கும் இந்தப் பார்வை, பல சந்தர்ப்பங்களில் அறிவியல் வகைப்பட்ட அணுகுமுறையாக இருப்பதில்லை.

சாதி, மதம், மொழி, இனம், பாலினம், வர்க்கம் – எனப் பலவாறாகப் பிளவு பட்டுள்ள இந்திய சமூகத்தில், ஒன்றைப் பேசும்போது “இன்னொன்றை ஏன் பேசவில்லை” என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கவியலாது. இது, இந்தச் சாதிய சமூகத்தில் நாம் எதிர்கொள்ளும் ஒரு கசப்பான எதார்த்தம். ஒன்றின் வழியாக இன்னொன்றிற்கு மக்களை எப்படி இட்டுச் செல்வது என்ற கோணத்தில்தான் இதற்கு நாம் விடை காண வேண்டும்.

இதனை வேறு ஒரு கோணத்தில் பார்ப்போம். அரசு, போலீசு, நீதிமன்றம், கட்சிகள் என்று பல்வேறு முனைகளிலும் வெவ்வேறு விதமாகத் தாக்கப்படும் மக்கள் குமுறிக் கொண்டுதானிருக்கிறார்கள். காவிரி உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதால் மோடி மீது வெறுப்பும் கொண்டிருக்கிறார்கள். பண மதிப்பழிப்பு காரணமாக ஆத்திரமடைந்திருக்கிறார்கள். இவை ஒவ்வொன்றுக்காகவும் சிலர் போராடுகிறார்கள், பலர் போராடாமல் இருக்கிறார்கள்.

இப்பிரச்சினைகள் அனைத்துக்குமான காரணத்தை ஒருங்கிணைந்த முறையில் புரிந்து கொள்ள முடிந்தவர்கள், இவை அனைத்துக்குமான அரசியல் தீர்வு குறித்து சிந்திக்கிறார்கள். பெரும்பான்மை மக்கள் அவ்வாறு அறிவுபூர்வமாக ஆய்வு செய்வதில்லை. இருப்பினும், அவர்களுடைய மனதில் குமுறிக் கொண்டிருக்கும் கோபம், அவர்களுடைய அரசியல் உணர்வுக்குப் பொருத்தமான பிரச்சினையில், பொருத்தமான தருணத்தில் கருத்தாய் உருவெடுக்கிறது. போராட்டமும் பொருத்தமானதொரு வடிவத்தை எடுக்கிறது.

வாழ்க்கையிலும் இது இப்படித்தான் தொழிற்படுகிறது. ஒரு பெண் மணவிலக்கு என்ற முடிவுக்கு வருவதற்கான குறிப்பிட்ட சம்பவத்தைத் தனியே எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால், அது அற்பமானதாகத் தோன்றக்கூடும். ஆனால் அது “அச்சை முறிக்கின்ற மயிற்பீலி” யாக இருக்கும். இதய நோயாளியாக அறியப்பட்ட ஒருவரது மரணம் மாரடைப்பினால்தான் நிகழவேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவுபூர்வமானதல்ல. ஒரு சாதாரணக் காய்ச்சல் கூட அந்த நோயாளியின் மரணத்திற்கான பாதையைத் திறந்து விடலாம்.

2013-இல் வங்கதேசத்தில் இசுலாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த “ஷாபாக் எழுச்சி”யை எடுத்துக் கொள்வோம். அங்கே அடிப்படைவாதிகளின் அட்டகாசம் தொடங்கி வெகுகாலம் ஆகிவிட்டது. பல பகுத்தறிவாளர்கள் “கேட்பாரின்றி” கொல்லப்பட்டிருக்கிறார்கள். இருப்பினும், இந்த அநீதியைக் “கேட்பார்” வருவதற்கு ஒரு அழைப்பு தேவைப்பட்டது. பகுத்தறிவாளர்கள் விடுத்த அழைப்புக்கு மக்கள் வரவில்லை. 1971-இல் பாக். இராணுவத்துடன் சேர்ந்து வங்க மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை நடத்திய ஜமாத் ஏ இசுலாமி அமைப்பின் தலைவன் அப்துல் காதர் முல்லாவுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று நாடே எதிர்பார்த்தது.  ஆனால் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவுடனே, போலீஸ் வேனில் இருந்தபடி “வெற்றி” என்று அலட்சியமாக இரண்டு விரல்களைக் காட்டினான் அந்தக் கிழவன். அடுத்த கணமே ஷாபாக் மக்கள் எழுச்சி தொடங்கியது.

“நம் ஊரில், நம்முடைய மாட்டை வைத்து மாடு பிடி நடத்தக் கூடாது என்று உத்தரவு போடுவதற்கு மோடி யார்?” என்ற கோபம், தமிழகத்தின் ஒரு சாதாரணக் குடிமகனுக்கு ஏற்பட்ட உணர்வு. இந்தக் கோபத்தைக் கொஞ்சம் உரசிப் பார்த்தால் அதன் அடித்தளத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, மீதேன், கூடங்குளம், கெயில், நியூட்ரினோ, நீட் தேர்வு, சி.பி.எஸ்.இ. திணிப்பு, இந்தி-சமஸ்கிருத திணிப்பு, மீனவர் பிரச்சினை – என டில்லிக்கு எதிராக ஆத்திரம் கொள்வதற்கான நியாயம் எல்லாத் தரப்பு மக்களிடமும் இருந்தது. பண மதிப்பழிப்பு தோற்றுவித்த பேரழிவும், பொங்கல் விடுமுறைப் பிரச்சினையும் மோடியின் மீது தாங்கொணாக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. போதாக்குறைக்கு “மோடி பொங்கல், மோடி ஜல்லிக்கட்டு” என்று, வாயால் வடை சுடுபவரான மோடிக்கு, தன் வாயாலேயே குழி வெட்டி வைத்திருந்தார் பொன்னார்.

000

மிழகம் எனும் கோட்டைக்குள் நுழைவதற்கு ஜல்லிக்கட்டு விவகாரத்தை ஒரு “டிரோஜன் காளை”யாகப் பயன்படுத்த முனைந்தது பாரதிய ஜனதா. ஆனால், இந்த டிரோஜன் காளைக்குள்ளிருந்து குதித்துக் கிளம்பிய முழக்கங்கள் மோடியையும், இந்து தேசியத்தையும் மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனங்களையும் ஓட்டுக் கட்சிகளையும் நீதிமன்றத்தையும் அதிகார வர்க்கத்தையும் தாக்கின.

“தமிழன்டா” என்ற முழக்கம், டில்லிக்கு எதிரான முழக்கமாக, தமிழ்ப் பெருமிதத்தின் வெளிப்பாடாக, இந்த அரசதிகாரத்தின் மீதான இளைஞர்களின் வெறுப்பாக … என்று ஒரே நேரத்தில் பலவிதமான அர்த்தங்களைக் கொடுத்தது. எனினும், எல்லா அர்த்தங்களும் சங்கப் பரிவாரத்துக்கு மட்டும் அனர்த்தமாகவே இருந்தது. புரட்சிகர – ஜனநாயக அமைப்புகளும் தமிழுணர்வாளர்களும் பகுத்தறிவாளர்களும் விதைத்த விதைகள் மெரினாவின் மணற்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்கத் தொடங்கி, யாரும் எதிர்பார்த்திராதவொரு கணத்தில் திரும்பிய திசையெல்லாம் சில்லென்று பூத்தன.

முகநூல்கள் “முகமற்ற” நூல்களாயின. தன்னை முன்நிறுத்துவதற்காக முன்தள்ளப்பட்ட சமூக ஊடக வடிவங்கள், சமூக உள்ளடக்கத்தை முன்நிறுத்தின. தனக்கான நுகர்பொருளைத் தேடித் தெரிவு செய்ய அலைபாய்ந்தவர்கள், “தமக்கான” முழக்கங்களிலிருந்து “தனக்கான” முழக்கமொன்றைத் தெரிவு செய்து கையில் ஏந்துவதற்காக அலைபாய்ந்தார்கள். தனி மனிதன் பெருந்திரளில் கரைவதும்,  தன்னைத் தனித்து அடையாளப்படுத்திக் கொள்வதும் முயங்கிக் கலந்த விசித்திரத் தருணமாய் விரிந்திருந்தது கடற்கரை.

எந்தப் பாடலுக்காக கோவன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டாரோ, அந்த “ஊருக்கு ஊரு சாராயம்” என்ற பாடலை மெரினா கடற்கரை மேடையில் மீண்டும் மீண்டும் பாடச் சொன்னார்கள் மக்கள்.  தனியார்மயத்துக்கும் இந்து மதவெறிக்கும் பெப்சி-கோக்குக்கும் எதிரான பாடல்களைக் கொண்டாடினார்கள். பன்னீர், சசிகலா, சு.சாமி, மோடி போன்றோரை எள்ளி நகையாடும் பாடல்களுக்கு சன்னதம் கொண்டவர்கள் போல் ஆடினார்கள். “ஜல்லிக்கட்டு பிரச்சினையைத் தவிர மற்றவற்றைப் பேசக்கூடாது” என்ற கருத்தை கேள்விக்குள்ளாக்கி, தோழர் ராஜு (மக்கள் அதிகாரம்) ஆற்றிய உரையைக் கூர்ந்து கவனித்தார்கள். எண்ணற்றோர் பேச வாய்ப்பு கேட்டு பொறுமையாகக் காத்திருந்தார்கள். மெரினாவெங்கும் இதுவரை மேடையேறாதவர்கள் ஏறினார்கள் என்று கூறலாம். மேடை என்பதே அகன்றது என்றும் கூறலாம்.

“யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேச முடிந்தவரை பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த காட்சி கண் கொள்ளாக் காட்சி. நாடகக் கூடங்களில், பள்ளிகளில், சோவியத் கூட்ட மண்டபங்களில், தொழிற்சங்கங்களில், ரயில்களில், டிராம்களில் எங்கும் பேச்சுப் பெருவெள்ளம், விவாதம்” .. என்று 1917 ரசிய நவம்பர் புரட்சியின் “உலகைக் குலுக்கிய பத்து நாட்களை” பரவசத்துடன் விவரிப்பார் ஜான் ரீடு. ஒரு நூற்றாண்டுக்குப் பின் மெரினாவில் அது நிகழ்ந்தது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பிரிட்டனிலும் அது நிகழ்ந்திருக்கிறது. திருச்சபைக்கு எதிராக பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கம் நடத்திய போராட்டத்தை மார்க்ஸ் விவரிக்கிறார்.

தொழிலாளி வர்க்கத்தின் மீது கிறித்தவ நல்லொழுக்கத்தை நிலைநாட்டும் பொருட்டு 1855-இல் பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த சட்டம், ஞாயிற்றுக் கிழமைகளில் பொழுதுபோக்கு கூடங்கள், பீர் விடுதிகள் அனைத்தையும் மூடுவதாக அறிவித்தது. இதற்கெதிராக பல்லாயிரக் கணக்கான தொழிலாளிகள் நடத்திய போராட்டம், மாட்சிமை தங்கிய மகாராணியையும் திருச்சபையையும் எள்ளி நகையாடியதையும், அந்தப் பேரணியில் திரண்ட தொழிலாளர்கள் கிளப்பிய ஊளைச் சத்தம், விசில், கூச்சல்களையும் களிப்புடன் விவரிக்கிறார் மார்க்ஸ். அந்தக் கிளர்ச்சியை “அநாகரிகமானது, அவமானகரமானது, சட்ட விரோதமானது, ஆபத்தானது” என்றெல்லாம் சாடி எழுதிய பிரபுக்குல எழுத்தாளரையும் எள்ளி நகையாடுகிறார். மோடியின் சூப்பர்மேன் பிம்பத்தில் ஊசியைக் குத்திய மாணவர்களின் முழக்கங்கள், மோடியின் “கடி” டயலாக்குகளால் புண்பட்டு நொந்திருந்த மக்களுக்கு இதமாக அமைந்தன.

மாபெரும் மக்கள் எழுச்சிகள் கொண்டாட்டமாக, போராட்டமாக, கல்விக்கூடமாக … அனைத்துமாகவும்தான் பரிணமிக்கின்றன. தேச எல்லைகளும் நூற்றாண்டுகளும் கடந்து அவற்றிடையே தெரியும் ஒற்றுமை நம்மை கர்வம் கொள்ள வைக்கிறது. எதிரிகளின் எதிர்வினையும் கூட அதிசயிக்கத்தக்க விதத்தில் ஒத்ததாகவே இருக்கிறது.

பேரணியில் சென்ற தொழிலாளிகளுக்கு தேவனின் ஆசீர்வாதத்தை வழங்கும் பொருட்டு, குதிரை வண்டியில் சென்று கொண்டிருந்த ஒரு சீமாட்டி பைபிள் புத்தகங்களை விநியோகித்ததாகவும், “அதை உன் குதிரைக்குக் கொடு” என்று தொழிலாளிகள் கூச்சலிட்டதாகவும் எழுதுகிறார் மார்க்ஸ். மெரினாவிலும் கூட கூட்டத்தினர் மத்தியில் தேசியக் கொடியைக் கொண்டு வந்து ஆட்டினார்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள். அது யாருக்கும் தேசபக்தியை உருவாக்கவில்லை. மாறாக, தேசியக் கொடிக்கு எதிரான ஆத்திரத்தையே உருவாக்கியது.

கருப்பு சட்டையை எதிர்ப்பின் குறியீடாகத்தான் போராடியவர்கள் அணிந்திருந்தனர். ஆனால் பா.ஜ.க.வுக்கு அது “பெரியார் கலராக” தெரிந்திருக்கிறது. கடற்கரை முழுதும் செல்பேசி ஒளியை அசைத்தது போல, குடியரசு தினத்தன்று இந்தக் கூட்டம் சட்டையைக் கழற்றி “இருட்டை” அசைத்தால், தெற்கே ஒரு காஷ்மீர் உருவான தோற்றம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சிய பா.ஜ.க. வினர், போலீசு வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு, குடியரசு தினப் புறக்கணிப்பில் தமிழகம் காஷ்மீரை விஞ்சுமாறு செய்தனர்.

000

தான் மட்டும் இல்லாவிட்டால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து நாடே செயலற்று நின்றுவிடும் என்று கருதிக் கொண்டிருந்த போலீசையும் அரசு எந்திரத்தையும் மெரினா போராட்டம் நிலைகுலைய வைத்தது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, உணவு-தண்ணீர் விநியோகம், துப்புரவுப் பணி உள்ளிட்ட அனைத்தையும் முன்வந்து செய்தார்கள் இளைஞர்கள். அவர்களில் கணிசமானோர் பெண்கள். இதுநாள்வரை “தவிர்க்க இயலாதவர்கள்” என்று தாங்களே நம்பிக்கொண்டிருந்த போலீசார் தேவையற்றவர்கள் என்பதை மக்கள் தம் அனுபவத்தில் உணர்ந்தார்கள். அநேகமாக மெரினாவில் மைக்கைப் பிடித்த அனைவரும் பலத்த கைதட்டல்களுக்கிடையே இந்த உண்மையை உரைத்தார்கள். இனம்புரியாத ஒரு கர்வம் மக்களைப் பற்றிக்கொண்டு விட்டது. சமூகத்தின் மீது ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தாங்கள் தவிர்க்கவியலாதவர்கள் என்று நிரூபிக்கும் வெறியை இது போலீசாரிடம் தோற்றுவித்திருக்க வேண்டும்.

சினிமாக் கழிசடைகளால் சிதைக்கப்பட்ட ஆண்-பெண் உறவின் மாண்பை மெரினா மீட்டது. நள்ளிரவிலும் பெண்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தனர். பேசினர், பாடினர், ஆடினர். பறை இசையின் தாள கதிக்கு ஆண்களும் பெண்களும் ஆடிக்கொண்டிருக்க, அந்தச் சூழ்நிலையால் உந்தப்பட்ட பர்தா அணிந்த ஒரு இசுலாமியப் பெண், தன் கணவனின் கையைப் பற்றியபடியே வெட்கத்துடன் மெல்ல நடனமாடிய காட்சி மறக்கவொண்ணாதது. எந்த இசைக்கருவியை தீண்டாமைக்குரிய குறியீடாக பார்ப்பனியம் ஒதுக்கி வைத்திருந்ததோ, அந்தப் பறையின் தாளத்துக்கு தமிழ்ச் சமூகமே தன்னை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்தது.

ஒரு மக்கள் திரள் எழுச்சி இயல்பிலேயே சுயநல மறுப்பைத் தனது பண்பாடாக்கிக் கொள்கிறது. “சுயநலன் பேணுதல்தான் மனிதனின் மாற்றவொண்ணாத இயல்பு” என்கிற முதலாளித்துவக் கருத்து, மக்கள் மனதிலிருந்து நழுவி மெரினாவில் மணற்பரப்பில் வீழ்ந்து மிதிபட்டுக் கொண்டிருந்தது. தம்மால் இயன்ற அளவு உணவோ தேநீரோ தண்ணீரோ பழங்களோ கொண்டு வந்து, சொந்தப் பிள்ளைகளுக்குக் கொடுப்பதைப் போன்ற வாஞ்சையுடன் முகம் தெரியாத அந்தக் கூட்டத்துக்கு விநியோகித்து விட்டு, நன்றி என்ற ஒரு சொல்லைக்கூட எதிர்பார்க்காமல் சென்று கொண்டிருந்தார்கள் பல எளிய மனிதர்கள்.

கையிலிருந்த உணவுப் பொட்டலங்களை உணவு கிடைக்காதவர்களின் கையில் திணித்து விட்டுச் சென்று கொண்டிருந்தார்கள் சில மாணவர்கள். “புகல்வேன் உடைமை மக்களுக்குப் பொது, புவியை நடத்து, பொதுவில் நடத்து” என்று ஆணையிட்ட பாரதிதாசனின் சிலைக்குக் கீழே, யாரோ குவித்திருந்த  வாழைப்பழங்களையும் தண்ணீர் பாக்கெட்டுகளையும் பார்த்தபடியே பலர் கடந்து சென்றனர். தேவைப்படாதவர்கள் நெருங்கவில்லை. தேவைப்படுவோர் தேவைக்கு மேல் ஒன்றைக் கூட எடுக்கவில்லை.

“பாரடா உனது மானிடப் பரப்பை” என்ற பாரதிதாசனின் கவிதை வரிகள் மேடையில் இசைக்கப்பட்டபோது, அடிமை மனநிலையை உதிர்த்திருந்த தமிழகம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒளிர்ந்த கைபேசி விளக்குகளால் “மேதினிக்கு ஒளி” செய்து கொண்டிருந்தது. ஜனநாயகத்துக்கான மக்கள் திரள் போராட்டம், பல பத்தாண்டு கருத்துப் பிரச்சாரம் சாதிக்க முடியாதவற்றைச் சாதிக்கும். புதிய மனிதர்களையும் புதிய விழுமியங்களையும் உருவாக்கும் என்ற உண்மையை மெரினா நிரூபித்தது. மீனவர்களும், குடிசைவாழ் மக்களும், அலங்காநல்லூரின் விவசாயிகளும் தோழமைக்கும் வீரத்துக்கும் புதிய இலக்கணத்தை தமிழ்ச் சமூகத்திற்கு அறியத் தந்தார்கள்.

நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான குறியீடாக மாட்டைப் பயன்படுத்தியது சங்க பரிவாரம். சமூகத்தை ஒன்றுபடுத்துவதற்கான குறியீடாக மாட்டை நிறுத்தியது தமிழ் மக்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். “உன் கோமாதாவுக்கு எதிராகக் எங்களது காளை. உன் வழிபாட்டுக்கு எதிராக எங்களது விளையாட்டு. உன் ஆதிக்கத்துக்கு எதிராக எங்கள் சகோதரத்துவம்!” – இதுதான் தமிழகம் விடுத்த செய்தி.

000

“கலைந்து செல்லுங்கள்!” என்று கூறியவுடனே மக்கள் கூட்டம் கலைந்து சென்றுவிடும் என்று அரசு எண்ணியது. “முடியாது!” என்று சொன்னவர்கள் “தீவிரவாத, பிரிவினைவாத” அமைப்பினராக இருந்திருந்தால் போலீசார் அதிர்ச்சியடைந்திருக்க மாட்டார்கள். ஆனால், “சட்ட நகலைக் காட்டு; படித்துப் பார்த்துவிட்டு சொல்கிறோம்!” என்ற பதில் காக்காய் கூட்டம் என்று அவர்கள் கருதியிருந்த மக்களிடமிருந்து வந்தது. தங்களுடைய அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தைரியம் மக்களுக்கு வந்துவிட்டது என்ற எதார்த்தத்தை போலீசால் சீரணிக்க முடியவில்லை.

மோடி அரசின் ஆணவம், உச்ச நீதிமன்றத்தின் அலட்சியம், மாநில அரசின் கையாலாகாத்தனம் ஆகிய அனைத்தையும் பல்வேறு பிரச்சினைகளில் மக்கள் கண்டிருக்கிறார்கள். இந்தப் பட்டறிவு தோற்றுவித்த உள்ளுணர்வுதான் “நம்பாதே” என்று அவர்களை எச்சரித்தது. கடலை நோக்கிச் சென்ற சில ஆயிரம் மக்களை ஒரு குழுவோ, சில குழுவினரோ தலைமை தாங்கி அழைத்துச் செல்லவில்லை. இந்த அரசின் மீதான நம்பிக்கையின்மைதான் அவர்களுக்குத் தலைமை தாங்கியது. இந்த உண்மையைக் காண விரும்பாத ஊடக அறிவாளிகள் சதிக் கோட்பாடுகளைக் கண்டுபிடித்துப் பரப்புகிறார்கள்.

ஊடக வித்தகர்கள், போலீசு அதிகாரிகள், சங்க பரிவாரத்தினர் மற்றும் ஆதி – லாரன்சு போன்ற மொக்கைகள் – இவர்களுடைய மூளைகள் வியக்கத்தக்க விதத்தில் ஒரே மாதிரியாக இயங்குகின்றன. “தங்களது ரசிகர்களின் அறிவு தங்களுடையதைவிட மேம்பட்டதாக உயர முடியாது” என்று ஆதியும் ஆர்.ஜே. பாலாஜியும் கருதியிருப்பார்கள். அவர்கள் அரசின் கூற்றை நம்பச் சொன்னார்கள். மாணவர்களோ நம்ப மறுத்து அவர்களை விரட்டினார்கள். ஒரே வாரத்தில் தாங்கள் செல்லாக்காசாக்கப்பட்டதற்குப் பின்னால் யாரேனும் சதி செய்திருக்க வேண்டும் என்பது அவர்கள் கற்பித்துக் கொண்ட நியாயம்.

ஊடக அறிவாளிகளின் கோணமும் ஏறத்தாழ இதுதான். அன்றாடம் அரசியலில் உழலும் தாங்களே “வயிற்றால் சிந்திப்பவர்களாக” இருக்கையில், வெறும் ஒரு வார காலம் மட்டுமே அரசியலுக்கு அறிமுகமான நடுத்தர வர்க்கத்தினர் தம்மைவிட மேம்பட்ட முறையில் எங்ஙனம் சிந்திக்க இயலும்? சதிகாரர்கள்தான் மூளைச்சலவை செய்து அவர்களை தைரியசாலிகளாக மாற்றியிருக்க வேண்டும் என்பது ஊடக வித்தகர்கள் கற்பித்துக் கொண்ட நியாயமாக இருந்திருக்கும்.

பா.ஜ.க.வினரைப் பொருத்தவரை, மோடியைத் தமிழகமே கழுவி ஊற்றியது என்ற உண்மையை அவர்கள் மறைக்கவும் மறக்கவும் விரும்பினார்கள். “தேசவிரோதிகளின் சதி” என்று கூச்சலிட்டதன் வாயிலாகத் “தீவிரவாதிகளையும் பிரிவினைவாதிகளையும்” ஒடுக்குவதற்கான முகாந்திரத்தை உருவாக்கியது மட்டுமல்ல, “மோடியை கழுவி ஊற்றியது தமிழக மக்கள் அல்ல, தீவிரவாதிகள்தான்” என்று இருட்டில் தனியே வழி நடப்பவனைப் போல தமக்குத்தாமே சத்தமாகப் பாடிக் கொண்டார்கள்.

போலீசையும் உளவுத்துறையையும் பொருத்தவரை “தீவிரவாதிகளுக்கு மட்டுமே உரியது” என்று அவர்கள் கருதுகின்ற அரசியல் முழக்கங்களை இலட்சோப லட்சம் தமிழ் மக்களும் தம் சொந்த முழக்கமாக எடுத்துக் கொண்டதை அவர்களால் நம்ப முடியவில்லை. “போலீசின் அதிகாரத்தை மக்கள் நிராகரிக்கிறார்கள்” என்ற எதார்த்தத்திற்கு அவர்களால் முகம் கொடுக்கவும் இயலவில்லை. அவர்களுக்கும் “தீவிரவாதிகளின் சதி” தேவைப்பட்டது.

இது தோல்வியடைந்துவிட்ட, அதே நேரத்தில் அதை ஒப்புக் கொள்ள மறுக்கின்ற ஆளும் வர்க்கத்தின் உளவியல். மெரினாவில் மக்கள் புரட்சிக்காரர்களாக போராட்டக் களத்துக்கு வரவில்லை. அந்த மாபெரும் மக்கள் திரளுக்கு யாரோ சில புரட்சிக்காரர்கள் தலைமை தாங்கி வழிநடத்தவும் இல்லை. டில்லியின் மீதான வெறுப்பும், இந்த அரசமைப்பின் மீதான அவநம்பிக்கையும்தான் மக்களை வழிநடத்தியது. அவர்களில் பலருக்கு இந்த அரசமைப்பின் மீது மிச்சமிருந்த நம்பிக்கையையும் தகர்க்கும் பொறுப்பை போலீசு ஏற்றுக்கொண்டது. “பல சந்தர்ப்பங்களில் போலீசுதான் தொழிலாளி வர்க்கத்தை அரசியல் படுத்துகிறது” என்பார் லெனின்.

சென்னை-மெரினாவில் நடந்த குடியரசு தின அணிவகுப்பு சீந்துவாரின்றி முடிந்தது.

அது உண்மைதான். எனினும், அவநம்பிக்கையும் எதிர்மறை அனுபவங்களும் மட்டுமே சமூக மாற்றத்துக்கான தூண்டுதல்களாகிவிடுவதில்லை. அவற்றிலிருந்து நேர்மறையான கண்ணோட்டங்கள் தானாகவே பிறந்து விடுவதுமில்லை. சில நேரங்களில் இவை கிளர்ச்சி மனோபாவத்தைத் தூண்டுகின்றன என்ற போதிலும், பல நேரங்களில் சோர்வடைந்து நிலவுகின்ற அரசமைப்பிடம் தஞ்சமடைகின்றன.

நிலவுகின்ற அமைப்பில் தங்களுடைய நிலை குறித்து ஒவ்வொரு பிரிவு மக்களும் – ஒரு விவசாயி, மாணவன், மீனவன், ஐ.டி. ஊழியன், தொழிலாளி – வெறுப்பு கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அத்தகையதொரு வெறுப்புதான் ஜல்லிக்கட்டுக்குத் தொடர்பற்றவர்களையும் மெரினாவை நோக்கி ஈர்த்திருக்கிறது. மேலோட்டமானதொரு பார்வையில் இந்த வெறுப்பு, அரசமைப்புக்கு எதிரான வெறுப்பு போன்றதொரு தோற்றத்தைத் தரக்கூடும். அது தோற்றம் மட்டுமே.

மெரினாவின் உணர்வெழுச்சி என்பது தமிழ்ச் சமூகத்தின் ஒரு மனநிலை. மனநிலைகளைச் சார்ந்து ஒரு தனிமனிதனால் கூடத் தன் வாழ்க்கையின் திசையை நிர்ணயித்துக் கொள்ளவியலாது எனும்போது, சமூக மாற்றத்திற்கு “மனநிலை”யை எந்த அளவிற்கு சார்ந்திருக்க முடியும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

மெரினாவின் மக்கள் திரள் எத்தனை சமூக – அரசியல் பிரச்சினைகளைப் பேசிய போதிலும், அதற்கு ஒரு அரசியல் திசையோ, அமைப்போ இல்லை. அப்படி ஒன்று இல்லாமலிருப்பதே தமது பலம் என்று பலரும் கருதிக் கொண்டனர். இல்லாமலிருத்தல் என்பதன் பொருள் நிலவுகின்ற அமைப்பிடம் சரணடைதல் என்பதேயாகும்.

“சரணடைய முடியாது” என்ற புள்ளியில்தான் தொடங்கியது இந்தப் போராட்டம். மாநில அரசு, மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் என்று பந்தாடப்பட்ட ஜல்லிக்கட்டு பிரச்சனையில், தமிழக மக்களின் எழுச்சி அரசமைப்பையும் அதன் அதிகாரத்தையும் பணிய வைத்தது. எனினும், அரசமைப்பு அப்படியேதான் இருக்கிறது.

தமிழ் மக்களின் மீள் வருகைக்காக மெரினா காத்திருக்கிறது.

-மருதையன்.
புதிய ஜனநாயகம் பிப் 2017

ஜல்லிக்க்கட்டு தொடர்பாக 2008-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட முந்தையக் கட்டுரைக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழுவின் மறு பரிசீலனை விளக்கம்.

ஜல்லிக்கட்டு : தமிழர் பாரம்பரியமா ? ஆதிக்கசாதி அடையாளமா ?

தினமணி வைத்தி- புதிய தலைமுறை மாலன் : போயஸ் பூசாரிகள் அன்றும் இன்றும்

6

வினவு குறுஞ்செய்திகள்

தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் – போயஸ் தோட்டத்து  பூசாரி அன்றும் இன்றும்

தினமணி வைத்தியநாதன்

ன்று ஜெயா சசி கும்பலின் சொத்துத் திருட்டு வழக்கில் தீர்ப்பு வந்ததும் அ.தி.மு.க அடிமைகள் சாலைகளில் குத்தாட்டம் போட்டனர். ஊடக அடிமைகளோ தலையங்கங்களில் எழுத்தாட்டம் போட்டனர். அதில் தினமணியின் வைத்தி முதன்மையானவர். அன்று அவர் எழுதிய தலையங்கத்தின் (12-05-2015) இறுதியில் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளைப் பாருங்கள்.

//இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவைக் குற்றவாளியாக்கித் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து 29-09-2014-ல் வெளியான “தினமணி’ தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததை இங்கே மறுபடியும் பதிவு செய்ய விரும்புகிறோம்.

“ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஒரு ராசியுண்டு. மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு படுமோசமான தோல்வியும், படுமோசமான தோல்வியைத் தொடர்ந்து மிகப்பெரிய எழுச்சியும் தான் ஜெயலலிதா இயற்காட்சியின் (பினாமினன்) தனித்தன்மை. ஐந்து முறை தமிழக முதல்வராகப் பதவி ஏற்றவர் என்கிற கருணாநிதியின் சாதனையை, மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதல்வராவதன் மூலம் ஜெயலலிதா சமன் செய்தால் வியப்படையத் தேவையில்லை” என்பது தான் அது.

இப்போது அதில் இன்னொரு வரியையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆறாவது முறையாகவும் முதல்வர் பதவி ஏற்று அவர் சரித்திரம் படைக்கக் கூடும்!”//

தினமணி (மே 5, 2015 தலையங்கம்):

இன்று தினமணி வைத்தியின் தலையங்கம் “சட்டம் கடமையைச் செய்யட்டும்!” அதிலிருந்து சில மேற்கோள்கள்:

இன்று,

//நாட்டில் ஊழல் மேலிருந்து அடிமட்டம் வரை புரையோடிப் போய்விட்டிருக்கிறது என்றும், சட்டம் பண பலம் படைத்தோரையும், அதிகாரத்தில் இருப்பவர்களையும் எதுவும் செய்து விடாது என்றும் பரவலாகப் பேசப்பட்டாலும், யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. முதல்வராகப் பதவியில் இருக்கும்போதே ஜெயலலிதாவே தண்டிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டார் என்பதும், இப்போது மேல்முறையீட்டிலும், உச்சநீதிமன்றம் அந்த தண்டனையை உறுதிப்படுத்தி இருக்கிறது என்பதும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்றுச் சுவடுகள்.

ஜெயலலிதா மறைந்து விட்டார் என்பதால் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் செயல்படுத்தாமல் விட்டு, ஏனைய மூன்று குற்றவாளிகளான வி.கே. சசிகலா, ஜெ. இளவரசி, வி.என். சுதாகரன் ஆகிய மூவரும் எஞ்சியிருக்கும் தண்டனைக் காலத்தை சிறையில் கழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், இப்போது நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்தால் சற்று வேதனையாகத் தான் இருக்கிறது. இப்படியொரு அவமானத்தை எதிர்கொள்ளாமல் அவர் மறைந்தது கூட நல்லது தான் என்று கூறத் தோன்றுகிறது.//

தினமணி ( பிப் 15, 2017):

பரவாயில்லை தினமணி வைத்தியாவது உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்தாலும், விசுவாசம் காரணமாக ஜெயாவின் சிறை வாசம் போகும் அதிர்ஷடம் அவரது மரணம் காரணமாக மறைந்து விட்டது என்று மனதுக்குள் ஆர்ப்பரிக்கிறார்.

வைத்தி – தினமணியின் ஆசிரியர், போயஸ் தோட்டத்தின் ஆஸ்தானப் பூசாரி!

புதிய தலைமுறை மாலன் – போயஸ் தோட்டத்து ஊடக பூசாரி

புதிய தலைமுறை மாலன்

குமாரசாமி தீர்ப்பு வந்ததும் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தின் வாடி என் ராசாத்தி பாட்டைப்போட்டு கொண்டாடியவர் மாலன். அன்று முழுவதும் அவர் ஃபேஸ்புக்கில் ஏகப்பட்ட பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டார். அடுத்த நாளும் அவரது கொண்டாட்டம் தொடர்ந்தது. அதில் ஒன்று கீழே:

மாலன் நாராயணன் may 12 2015 , 9:23am

குன்ஹா எங்கு தவறு செய்தார் என்பதை நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விளக்கியுள்ளார்:

இந்த வழக்கில் ஆதாரங்களை ஆய்வு செய்யும் போது கீழ்க்கோர்ட்டு ஒரு தவறான முடிவுக்கு வந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதில் சட்ட தடைகள் இல்லாதது மட்டுமல்ல, நீதியின் நலன் கருதி குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த வழக்கில் வருமான வரி விவகாரங்களை ஒரு குறைந்தபட்ச மதிப்பாக கூட எடுத்துக் கொள்ள கீழ்க்கோர்ட்டு மறுத்துவிட்டது.

திருமண செலவு:

சுதாகரன் திருமண செலவு ரூ 3 கோடி என்று கீழ்க்கோர்ட்டு மதிப்பிட்டு இருக்கிறது. இந்தச் செலவை ஜெயலலிதா செய்ததாக எந்த ஆதாரமும் இல்லாமல் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

ஆதாரங்கள் இல்லை

சாட்சிகள் பல்வேறு கட்டங்களில் பலவிதமான சாட்சியங்களை அளித்ததால் அது நம்ப தகுந்தது அல்ல. ஒட்டுமொத்த விஷயங்களையும், ஆவணங்களையும் கவனத்தில் கொள்ளும் போது, கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பும், அதற்கான ஆதாரமும் பலம் குறைந்து காணப்படுகிறது என்பது எனது கருத்து. கீழ்க்கோர்ட்டு கூறிய ஆதாரங்கள் சட்டப்படி வலிமையாக இல்லை.

நன்றி: இன்றைய தினத்தந்தி

குன்ஹா தீர்ப்பு வெளியான போதே அது சட்டத்தின் பார்வையில் பிழைகள் கொண்டது எனக் கூறியிருந்தேன். என் கருத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாலன் (மே 13 2015):

இன்று……

குன்ஹா தீர்ப்பு பிழை என்று அன்றே கூறியதாக மார் தட்டும் மாலன் இன்று என்ன கூறியிருக்கிறார்? அன்று போல பதிவுகளை தொடர்ச்சியாக மட்டுமல்ல நேற்று முழுவதும் ஒன்று கூட போடவில்லை. இன்று காலையில் ஒன்று மட்டும் வெளியிட்டுள்ளார். அதுவும் ஆங்கிலத்தில்…..

Very many discussions are on FB about the verdict of Jaya’s DA case. But most of them are on the political implications and legal processes. The verdict has a social dimension, which is discussed by Justice Amitava Roy in the supplement

What ought to have been discussed, apart from political and legal fall outs is this supplement ( A brilliant one, though not unfamiliar view. I wish somebody translates into Tamil and publish in FB or elese where. Dinamani? Hindu Tamil?)

Justice Roy says ” the militant dominance of this sprawling evil, that majority of the sensible, rational and discreet constituents of the society imbued with moral values and groomed with disciplinal ethos find themselves in minority, besides estranged and resigned by practical compulsions and are left dejected and disillusioned. A collective, committed and courageous turnaround is thus the present day imperative to free the civil order from the suffocative throttle of this deadly affliction”

Has Tamilnadu finally arrived at this “present day imperative”?

ஃபேஸ்புக்கில் விவாதிக்கப்படும் ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் அதிகம் பேர் இந்த தீர்ப்பின் அரசியல் பாதிப்பு குறித்தும், சட்ட நடைமுறை குறித்து மட்டுமே பேசுவது குறித்து வருந்துகிறார் மாலன். என்ன இருந்தாலும் அறிஞர் அல்லவா? தீர்ப்பு இணைப்பில் நீதிபதி அமித்தவா பேசியிருக்கும் கருத்தின் சமூக பரிமாணங்கள் குறித்து பேசுவோம் என்று அதை  தி இந்துவோ இல்லை தினமணியோ மொழிபெயர்க்க வேண்டுமென்று கோருகிறார். சுருங்கச் சொன்னால் நீதிபதியின் கருத்தை “ ஊழல் பிசாசுவின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுதலை செய்ய வேண்டும்” என்று பொருள் கொள்ளலாம்.

அப்படி எனில் பச்சமுத்துவின் அவைப் புலவர் மாலன் போன்ற அறங்கொன்ற அறிஞர்களிடமிருந்து தமிழகம் விடுதலை பெற வேண்டுமே?


கைதி எண் 10711 சில குறிப்புக்கள்:

சசிகலா நடராஜன்

ரப்பன அக்ரகாரா சிறையில் சின்னம்மாவுக்கு கைதி எண் 10711-ம், இளவரசிக்கு கைதி எண் 10712-ம் ஒதுக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் எண்ணைக் கூட்டினால் இறுதியில் 1 வருகிறது. அவரது ராசியான எண் என்ன என்று தெரியவில்லை. இருவரும் பெண் கைதிகளின் பிரிவில் பொது சிறையிலேயே அடைக்கப்படுகிறார்கள். மூன்று சேலை, ஒரு குடிநீர் குவளை, ஒரு பெரிய மக், ஒரு தட்டு, ஒரு போர்வை ஆகியவை அவர்களுக்கு வழங்கப்படும்.

தனக்கு நீரிழவு நோய் மற்றும் ரத்த அழுத்தமும் இருப்பதால் வீட்டுச் சாப்பாடு தவிர வேறு எதுவும் ஒத்துக்கொள்ளாது என்று சிங்கம் தனி நீதிபதியிடம் கோரினாலும் நீதிபதி அவற்றை மறுத்து விட்டார். சின்னம்மாவுக்கு சிறப்புச் சலுகைகள் ஏதும் சிறையில் கிடையாது என்று கன்னட செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. எனினும் சிறையில் சின்னம்மாவுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் வரையில் ம.நடராசன் அங்கேயே டோரா போடுவார் என்று குருவிகள் தெரிவிக்கின்றன.

சிறையில் அன்றாட வேலையாக ஊதுபத்தி தயாரிப்பது, மெழுகுவர்த்தி செய்வது ஆகியவற்றில் ஏதாவது ஒன்று சின்னம்மாவுக்கு ஒதுக்கப்படும். இதற்கு நாளொன்றுக்கு ரூ.50 ரூபாய் கூலி ஜாஸ் சினிமாசின் ஓனருக்கு வழங்கப்படும்.

சசிகலா கூட வந்த கார்களில் ஐந்து கார்கள் அங்கே இருந்த அதிமுக காரர்களால் தாக்கப்பட்டன. காரணம் சின்னம்மாதான் அம்மாவை 33 வருடங்களாக ஏமாற்றி விட்டாராம்.

இதன்படி பார்த்தால் இரட்டை இலை சின்னம் சசிகலா கும்பலிடமே இருப்பது நல்லது. அப்போதுதான் அந்த சின்னம் தோற்றுவித்திருக்கும் மூடநம்பிக்கை மக்களிடம் ஒழியும். இறுதியில் இரட்டை இலையும் மறையும்.

வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்

இணையுங்கள்:

ஏழை இந்தியர்களும் பில்லியனர் இந்தியர்களும் – ஒரு பார்வை

0
billionares in india
இந்தியாவில் பில்லியனர்கள்

ஆக்ஸ்பாம் அறிக்கை: இந்தியா – ஏற்றத்தாழ்வின் இருப்பிடம்

ந்தியாவின் 58 விழுக்காடு சொத்துக்களை இங்குள்ள பெரும்பணக்காரர்களில் ஒரு விழுக்காட்டினர் வைத்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. இஃது உலக சராசரியான 50 விழுக்காட்டையும் விட அதிகம். இந்தியாவின் முதல் 57 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பும் 70 விழுக்காடு ஏழை இந்திய மக்களின் சொத்து மதிப்பும் ஒன்றுதான். அதாவது 14,47,200 கோடி ரூபாய் சொத்துக்களை 57 பேர்கள் வைத்திருக்கின்றனர்.  பெருகிவரும் இந்திய சமூக ஏற்றத்தாழ்வின் இழிநிலையை இந்த ஆய்வறிக்கை பறைசாற்றுகிறது.

டாவோசில்(Davos) நடைபெற்ற உலகப் பெரும்பணக்காரர்கள் கலந்து கொண்ட உலகப் பொருளாதார மன்ற (World Economic Forum) ஆண்டுக் கூட்டத்தில் “99 விழுகாட்டு மக்களுக்கான பொருளாதாரம் (An economy for the 99 per cent)” என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆக்ஸ்பாம்(Oxfam) என்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு இதனை வெளியிட்டிருக்கிறது. இப்படி தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் இந்த ஏற்றத் தாழ்வு கவலைகள் பொதுவாக கார்ப்பரேட் நன்கொடையுடன், கார்ப்பரேட் நிறுவனங்களை மனிதாபிமான முகத்துடன் காட்டும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. எனினும் அதற்காகவாவது இவர்கள் இந்த உண்மையை ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்.

130 கோடி இந்திய மக்களின் மொத்தச் சொத்துமதிப்பு 2,077 இலட்சம் கோடி ருபாய் என்கிறது ஆக்ஸ்பாமின் அறிக்கை. முகேஷ் அம்பானி, திலிப் ஷங்வி மற்றும் அசிம் பிரேம்ஜி உள்ளிட்ட 84 பெரும்பணக்காரர்களிடம் மட்டும் 16,61,600 கோடி ருபாய் சொத்து இருக்கிறது. உலகின் பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு இந்தச் சொத்துக்களை மட்டுமல்ல அவற்றின் பூஜ்ஜியங்களின் எண்ணிக்கையைக் கூட எண்ணுவதற்கு கடினமாக இருக்கும்.

உலகின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 1,71,319 இலட்சம் கோடி ரூபாயாகும். அவற்றில் 4,355 இலட்சம் கோடி ருபாய் பெரும்பணக்காரர்களிடம் மட்டும் இருக்கிறது. பில்கேட்சிடம் 5,02,500 கோடியும் ஸ்பெயினின் அமென்சியோ ஒர்தேகாவிடம் (Amancio Ortega) 4,48,900 கோடியும் வாரன் பஃபெட்டிடம் 4,07,360 கோடியும் இருக்கிறது. உலகின் 8 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பும் உலகின் கடைக்கோடி 50 விழுக்காடு ஏழை மக்களின் சொத்துமதிப்பும் ஒரே அளவிலானதாக இருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்சின் சொத்துமதிப்பின் அதிவேக வளர்ச்சி தொடருமாயின் இன்னும் 25 ஆண்டுகளில் உலகின் முதல் டிரில்லியனராக (670 இலட்சம் கோடி) அவர் இருப்பார் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் வெறும் 500 தனிநபர்களிடம் மட்டும் 1,407 இலட்சம் கோடி ருபாய் குவிந்துவிடும். 130 கோடி மக்கள் வாழும் இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இது அதிகம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

உலகின் பாதிக்கும் மேற்பட்ட வறிய மக்களின் சொத்து மதிப்பானது முன்பு கருதியதை விடக் குறைவானதாகவே இருக்கிறது. சீனா, இந்தோனேசியா, இந்தியா, லாவோஸ், பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா போன்ற நாடுகளின் பணக்கார 10 விழுக்காட்டினரின் வருமானம் 15 விழுக்காட்டிற்கும் அதிகமாக அதிகரித்து இருக்கிறது. அதேநேரத்தில் வறிய 10 விழுக்காடு மக்கள் தங்களது வருமானத்தில் 15 விழுக்காட்டிற்கும் அதிகமாக இழந்துள்ளனர்.

பாலினப் பாகுபாட்டின் காரணமாக ஆண்களின் வருமானத்தில் 70-90 விழுக்காடு மட்டுமே ஆசியப் பெண்களுக்குக் கிடைக்கிறது. ஊதியம் வழங்குவதில் 30 விழுக்காட்டிற்கும் அதிகமாகப் பாலின வேறுபாடு இருப்பதாகவும் பாலின அடிப்படையிலான ஊதிய வேறுபாட்டில் உலக அளவில் இந்தியா ஒரு மோசமான நிலையில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறிகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்ட உலக ஊதிய அறிக்கை 2016-17-யின் அடிப்படையில் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.

இந்தியப் பெண்களில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் மிகக்குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர். வெறும் 15 விழுக்காட்டுப் பெண்கள் மட்டுமே அதிக ஊதியம் பெறுகின்றனர். அதிக வருமானம் ஈட்டும் இந்தியர்களில் குறைவான எண்ணிக்கையில் இருப்பது மட்டுமல்ல கடைக்கோடி இந்தியப் பொருளாதாரத்தில் பாலின அடிப்படையிலான ஊதிய வேறுபாட்டையும் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். இந்நிலை தொடருமாயின் இன்னும் 170 ஆண்டுகள் கழித்துதான் ஆண்களுக்குச் சமமான ஊதியத்தைப் பெண்கள் பெற வாய்ப்பிருக்கிறது

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்த பட்டியல்களை பாலியல் சார்ந்து பிரிப்பதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. எனினும் ஏழைகள் என்று வரும் போது இந்த பாலின பேதம் வர்க்க ரீதியாகவே பாதிப்பு ஏற்படுத்துகிறதே அன்றி பாலின ரீதியாக மட்டும் அல்ல. சான்றாக ஏழைகள் அனைவரும் குழந்தைகளையும் உள்ளிட்டு அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் அந்த குடும்பத்த தலைவரின் வருமானம் போதுமானதாக இருக்கவில்லை என்ற உண்மையை அடிப்படையாக வைத்து எழுகிறது.

கிராமப்புறங்களில் வாழும் 40 கோடி இந்தியப் பெண்களில் 40 விழுக்காட்டினருக்கும் அதிமானோர் விவசாயம் அல்லது தொடர்பான வேலைகளில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலான இந்தியப் பெண்களுக்கு நிலத்தின் மீதான உரிமைகள் இல்லாததால் விவசாயிகளாகக் கருதப்படுவதில்லை. இதன் காரணமாக அரசின் திட்டங்கள் மற்றும் கடன்கள் எதுவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. மாறாக வெறுமனே விவசாய உற்பத்தியில் ஈடுபடுவதோடு நின்றுவிடுகின்றனர். இதனால்தான் விதர்பாவில் தற்கொலை செய்து கொள்ளும் பெண் விவசாயிகளை ஏதோ குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்வதாக அரசு பதிவு செய்கிறது. ஆகவே இந்த பாலின பேதம் ஆளும் அரசுகளுக்கு தமது குறைகளை மறைக்கவும் பயன்படுகிறது.

இந்திய கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களும் கூட ஏற்றத்தாழ்விற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் அவர்களது நிறுவனங்களின் கடைநிலை ஊழியர் ஒருவரை விட 400 மடங்கிற்கும் அதிகமாக கூட ஊதியம் பெறுகிறார்கள்.

அமெரிக்காவில் பெரும்பணக்காரர்கள் அடிக்கடி நட்டத்தைச் சந்திப்பது மட்டுமல்லாமல் அவர்களது சொத்தும் நீண்ட காலத்திற்கு நிலைப்பதில்லை. அமெரிக்காவில் பில்கேட்ஸ் போன்ற சிலர் மேலும் மேலும் அதிக பணக்காரர்களாக ஆகும் போது இந்த போட்டியில் குறைந்த அளவு பணக்காரர்கள் தோற்பது இயல்பானதே. இதற்கு முரணாக இந்தியா மற்றும் சிங்கப்பூரில் தலைமுறைகள் கடந்தும் பெரும்பணக்காரர்களாக பலர் நீடித்து இருக்கின்றனர். காரணம் இந்நாடுகளில் சிறு, நடுத்தர முதலாளிகளின் அழிவு என்பது அதிவேகமானதாக இருக்கிறது. ஒன்றை அழிக்காமல் மற்றொன்று வளர்வதில்லை.

இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பணக்காரர்கள் பலர் தங்களது வாரிசுகளுக்குச் சொத்துக்களை மடைமாற்ற இருக்கின்றனர். எனவே சொத்துக்களைக் கடத்தும் இந்த வாரிசுரிமைக்கு எதிராக வரி வசூலிக்ககூடிய ஓர் அமைப்பு முறையை உருவாக்க வேண்டியது கட்டாயமாகிறது என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. அதாவது இந்த ஏற்றத் தாழ்வின் கோபத்திலிருந்து பணக்காரர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அவர்களின் பினாமி முயற்சிகளுக்கும் வரி வசூலிக்க வேண்டும் என இதை நாம் புரிந்து கொள்ளலாம்.

உலகின் பெரும்பாலான பெரிய ஆடை நிறுவனங்களுக்கு இந்தியப் பருத்தி-நூற்பு ஆலைகளுடன் நெருங்கியத் தொடர்புள்ளது. இந்திய நூற்பாலைகள் தொடர்ந்து சிறுவர்களை வைத்துக் கட்டாயவேலை வாங்குவது குறித்தான சான்றாதாரங்கள் இருக்கின்றன என்று அந்த அறிக்கைக் கூறுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின்படி இந்தியாவில் 58 இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்தக் குழந்தை உழைப்பு குறித்த கவலையும் கூட ஒரு  என்ஜிவோ கவலைதான். ஏனெனில் வயது வந்தோர் ஏழைகளாக இருக்கும் போது அவர்கள் வீட்டு குழந்தைகள் வேலை செய்ய வேண்டியிருப்பது என்பது ஒரு நிர்ப்பந்தமே அன்றி ஏதோ அந்த குழந்தைகளின் உழைப்பை பெற்றோர்கள் பறித்துவிட்டனர் என்பதல்ல.

பங்குதாரர்களுக்கு இலாபத்தை அதிகரித்துக் கொடுப்பது தான் உலகில் பெரும்பாலான பகுதிகளில் பெருநிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான ஒரே தாரக மந்திரமாக இருக்கிறது. இங்கிலாந்தில் 1970 ஆம் ஆண்டுப் பங்குதாரர்களுக்குக் கிடைத்த இலாபம் 10 விழுக்காட்டில் இருந்து தற்போது 70 விழுக்காடாக எகிறியிருக்கிறது.

இந்திய நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பங்குதாரர்களுக்குக் கொடுக்கும் ஈவுத்தொகையை 2014-15 ஆண்டில் இந்தியாவின் 100 பெரிய தனியார் நிறுவனங்கள் 34 விழுக்காடாக அதிகரித்துவிட்டன. அவற்றில் 12 க்கும் அதிகமான நிறுவனங்கள் தமது இலாபத்தில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக ஈவுத்தொகையைக் கொடுக்கின்றன. இதன்படி இந்த அறிக்கையை வைத்து பங்கு சந்தைகளில் பிரச்சாரத்தை நடத்தி பல நிறுவனங்களின் பங்குகளை அதிகம் விற்பதற்கும், விலை அதிகரித்து நடுத்தர மக்கள் தலையில் கட்டுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

நிலக்கரியை எரிப்பதன் மூலமாக ஏற்படும் காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் ஏறத்தாழ ஒரு இலட்சம் அகால மரணங்கள் ஏற்படுகின்றன. “இந்தியாவும் தென் கிழக்காசிய நாடுகளும் நிலக்கரிச் சுரங்கங்களை கணிசமான அளவிற்கு வைத்திருந்தாலும் மின் இணைப்புக்கான வாய்ப்புகள் ஒரு பகுதி மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இந்தியாவில் 75 விழுக்காடு மின்சாரம் நிலக்கரி மூலமாகவேப் பெறப்படுகிறது. நிலக்கரி செறிவாக இருக்கும் பகுதிகள் கூட குறைவான அளவே மின்சார வசதியைப் பெற்றிருக்கின்றன” என்று அந்த ஆய்வு மேலும்  கூறுகிறது. நிலக்கரியை எரித்து மண்ணையும், நீரையும் மாசுபடுத்து நாம் தயாரித்து அனுப்பும் கார்களும், சட்டைகளும் மேலை நாடுகளுக்கு தேவை. பாதிப்போ நம் தலைமையில்.

ஒரு விழுக்காட்டினருக்காக மட்டுமல்ல அனைத்து மக்களுக்குமானப் பொருளாதாரத் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டிய நேரமிது என்று இந்த ஆய்வறிக்கையில் ஆக்ஸ்பாம் வலியுறுத்துகிறது. ஒரு சிலரின் கைகளில் தீவிரமாகக் குவியும் சொத்துக்களைத் தடுப்பதன் மூலம் வறுமையை ஒழிக்குமாறு இந்திய அரசிடம் இந்நிறுவனம் கேட்டுள்ளது. வாரிசுரிமை வரியை அறிமுகப்படுத்தவும் சொத்துவரியை அதிகரிக்கவும் அந்நிறுவனம் கேட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வரி வருவாயில் இந்த வரிகளின் பங்கு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. பணக்காரர்கள் அதிக பட்சம்30% வரி கட்டினால் போதும் என்ற நிலைமை தொடரும் போது இந்த ஏற்றத்தாழ்வு இன்னும் அதிகரிக்கும். பணக்கார்களுக்கான வரியை 75% போட்டால் மட்டுமே ஓரளவு அந்த ஏற்றத்தாழ்வின் வேகத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதைச் செய்யுமாறு இந்த அறிக்கை கோரவில்லை, கோராது.

“வரித் தள்ளுபடியை இந்திய அரசாங்கம் கண்டிப்பாக நிறுத்த வேண்டும் மற்றும் பெருநிறுவனங்களுக்கான வரியின் அளவை மேலும் குறைக்கக் கூடாது. தனது தொழிலாளர்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே அரசாங்கம் உதவி செய்ய வேண்டுமே ஒழிய பங்குதாரர்களுக்கு மட்டும் நன்மை செய்யும் நிறுவனங்களுக்கு அல்ல.” என்று ஆக்ஸ்பாம் கூறியுள்ளது. பெரு நிறுவனங்களுக்கான வரியின் அளவை மேலும் குறைக்க கூடாது என்றுதான் இந்த அறிக்கை சொல்கிறதே அன்றி கூட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. அந்த வகையில் முதலாளிகள் ஏதாவது தாமே பார்த்து ஏழைகளுக்கு செய்ய வேண்டும் என்று இந்த அறிக்கை மறைமுகமாக  கோருகிறது போலும்.

வியாபாரத்திற்கும் அரசியலுக்கும் உள்ள நெருங்கிய உறவை இந்நிறுவனம் கடுமையாகச் சாடி இருக்கிறது. பெருநிறுவனங்களின் முன்னாள் அதிகாரிகள் தான் அரசின் துறை சார்ந்த பொறுப்புகளை வகிக்கிறார்கள். இன்னும் குறிப்பாக சொல்வதானால் பெருநிறுவனங்களின் பங்குதாரரர்கள் தான் கட்சிகளையும் அரசுகளையும் வழி நடத்துகிறார்கள். இதனால் முதலாளிகள் யாரும் இனி நேரடி அரசியலில் இறங்க கூடாது என்று சட்டம் போட முடியுமா? மல்லையா போன்றவர்கள் காங்கிரசு, பாஜக ஆதரவால் எம்.பி ஆவதைத்தான் தடுக்க முடியுமா?

வரி ஏய்ப்பின் காரணமாக வளரும் நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 6,70,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பைச் சந்திப்பதாக வர்த்தக மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாட்டு கருத்தரங்கு (The UN Conference on Trade and Development) கணக்கிட்டுள்ளது.

“வரி ஏய்ப்புச் செய்யும் நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரி ஏய்ப்பாளர்களின் புகலிடமாக இந்தியா இருப்பதை இந்திய அரசு தடுக்க வேண்டும். பொது சுகாதாரத்திற்கும் கல்விக்கும் தேவையான நிதியை அரசுக் கண்டிப்பாக உருவாக்க வேண்டும். சுகாதரத்திற்கான ஒதுக்கீட்டுத் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின்(GDP) ஒரு விழுக்காட்டில் இருந்து 3 விழுக்காடாகவும் கல்விக்கான ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3 லிருந்து 6 விழுக்காடாகவும் அரசு அதிகரிக்க வேண்டும்.” என்று அந்நிறுவனம் மேலும் கூறியிருக்கிறது. கல்வி, சுகாதாரத் துறையில் தனியார் மயம் கோலேச்சும் காலத்தில் அரசு இவ்வளவு ஒதுக்கத் தேவையில்லை என்பது ஒருபுறமிருக்க, தனியார்மயத்தை தடை செய்யாமல் இந்த ஒதுக்கீட்டை எப்படி உயர்த்த முடியும்? இதைப் பற்றி அறிக்கை பேசவில்லை, பேசாது.

ஆக்ஸ்பாம் போன்ற முதலாளித்துவ நிறுவனங்கள் ஏற்றத்தாழ்வை உருவாக்குபவர்களிடமே அதனை ஒழிப்பதற்கு முறையிடுவது நகைப்பிற்குரியது. ஒரு விழுக்காடு பணக்காரர்களுக்கு சேவை செய்யும் இந்த அமைப்பு முறையை 99 விழுகாட்டினருக்கு சேவை செய்வதற்கானதாக மாற்றுவது என்பது இந்த முதலாளித்துவ அமைப்பை வீழ்த்துவதன் வாயிலாகவே நடந்தேறும்.

ஆம். வரலாற்றில் உழைக்கும் மக்களின் போராட்டத்திற்கு வடிகாலாக இருந்த மக்கள் நலம்புரி அரசுகளுக்கான (welfare states) காலம் முடிந்துவிட்டது. தனியார்மய தாராளமய திட்டங்களை செயல்படுத்திய பிறகு பெயரளவிற்கு இருந்த கவர்ச்சித் திட்டங்களும் காற்றில் பறந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. மீண்டும் அரசுகளிடம் மன்றாடுவதன் மூலம் வரலாற்றை பின்னோக்கி இழுக்க முடியாது.

ஒருவேளை ஆக்ஸ்பாம் கூறுவது போல பில்கேட்ஸ் டிரில்லியனர் கூட ஆகலாம். எனில் அந்த வரலாற்றுப் பிழைக்கு 99 விழுக்காட்டு மக்களுக்காக போராடும் புரட்சிகர சக்திகளும் சமூக இயக்கங்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

– சுந்தரம்

மேலும் படிக்க…

மெரினாவில் குற்றவாளி ஜெயா சமாதியை உடனே அகற்று ! மக்கள் அதிகாரம்

10

குற்றவாளிக்கு அரசு மரியாதையா ?

_______________

மெரீனாவை களங்கப்படுத்தும் ஜெயா !


_______________

எங்கு காணினும் தீய சக்தியடா!

_______________

தூய்மையான தமிழகம் வேண்டுமா ஜெயாவின் சின்னங்களை அகற்று!

_______________

அம்மாவுக்காக எரிக்கப்பட்ட மாணவிகளின் ஆன்மாவுக்கு என்ன பதில்!

_______________

ரத்ததின் ரத்தங்களே! மொட்டை, பால்குடம், தீச்சட்டை, மண்சோறு எதுவும் சின்னமாவுக்காக இல்லையா?

_______________

இனி மிச்சமிருப்பது நீயும் நானும் தான்!

_______________

அ.தி.மு.க மூளையே 420 என்றால் கட்சி…?

_______________

ஜெயா – சசிகலாக்கள் உருவாவதை இந்தத் தீர்ப்புகள் தடுக்குமா ?

 

_______________

இதுவா நீதி ?

_______________

உடனே தீர்வு வேண்டுமா ? உதை !

தகவல் :
மக்கள் அதிகாரம்.
சென்னை, பேச : 91768 01656

பா.ஜ.க -வின் ஐஎஸ்ஐ அவதாரம் : கேலிச்சித்திரங்கள்

0

பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல்கள் : வடக்கும் தெற்கும் !

கருத்துப் படம் : சர்தார்

______________

 

நந்தினி குடும்பத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன் ஆறுதல் !

 

ஓவியம் : முகிலன்
palachennaitn@gmail.com
பேச: 95518 69588


இணையுங்கள்: